121) மரணத்தை நெருங்கியவர் இறுதியாகச் செய்ய வேண்டியது
மரணத்தை நெருங்கியவர் கடைசியாக லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசிச் சொல்லாக இந்தக் கொள்கைப் பிரகடனம் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தை நெருங்கிய போது தமது கைகளைத் தண்ணீருக்குள் விட்டு முகத்தில் தடவிக் கொண்டு லாயிலாஹ இல்லல்லாஹ், மரணத்தினால் கடும் துன்பம் ஏற்படுகிறது எனக் கூறினார்கள். பின்னர் தமது கைகளை ஊன்றி ஃபிர் ரஃபீகில் அஃலா (மிகச் சிறந்த நண்பனை நோக்கி…) என்று கூறிக் கொண்டிருக்கும் போது உயிர் கைப்பற்றப்பட்டது. அவர்களின் கை சாய்ந்தது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது ஃபிர் ரஃபீகில் அஃலா என்று கூறலானார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் அல்லாஹும்ம ஃபிர்லீ வர்ஹம்னீ வஅல்ஹிக்னீ பிர்ரஃபீக் என்று கூறியதை நான் காது கொடுத்துக் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
இறைவா என்னை மன்னித்து அருள் புரிவாயாக! நண்பனுடன் என்னைச் சேர்ப்பாயாக! என்பது மேற்கண்ட துஆவின் பொருள்.