மன அழுத்தம் தரும் தேர்வுகளும் மார்க்கம் தரும் தீர்வுகளும்
மன அழுத்தம் தரும் தேர்வுகளும் மார்க்கம் தரும் தீர்வுகளும்
எல்லாம் வல்ல ரஹ்மான் தன்னுடைய மார்க்கத்தில் மனித வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து சட்ட திட்டங்களையும் லேசாக்கி வைத்துள்ளான். ஆனால் நாம் தான் அதன் விதிமுறைகளை மாற்றி, செயல்களைக் கடினமானதாக்கி, நமக்கு நாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம்.
இது தேர்வுக் காலம். பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வுகள் எழுதப்பட்டு முடிவுக்காக மாணவர்கள் காத்திருக்கிறார்கள். மாணவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதை விடப் பெற்றோர்கள் காத்திருக்கிறார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.
குறிப்பாக, நம் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பெற்றோர்கள் சமீப காலமாக இதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பள்ளியிலேயே முதல் மாணவனாக நம் பிள்ளை வரவேண்டும் என்ற சிந்தனை ஒரு ஆசையாக இல்லாமல் வெறியாகவே மாறிக்கொண்டு வருகிறது.
பிள்ளைகளால் எது இயலுமோ அதுதான் அதற்கு வரும் என்ற சிந்தனையே மழுங்கிப் போய்விடுகிறது. அவனை விட இவன், இவளை விட அவள் 100/100 மதிப்பெண் எடுத்து முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும். எல்லோரும் இன்னார் மகன் என்று பாராட்ட வேண்டும். ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி, புகைப்படம் வர வேண்டும் என்று மிகுந்த ஆவல் கொள்கிறோம். எல்லோரும் தன் பிள்ளையைப் புகழ வேணடும் எனப் பேராசை கொள்கிறோம்.
ஆனால் என்றாவது ஒரு நாள் நம் பிள்ளைகளைத் தொழச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறோமா? தேர்வுக் காலங்களில் இரவு 12 மணியாகட்டும், விடியற்காலை 3, 4 மணியாகட்டும். படி, படி என படிக்கச் சொல்கிறோமே, ஒரு இஷாவையாவது, ஒரு ஃபஜ்ரையாவது தொழச்சொல்லி எழுப்பி விடுகிறோமா? பிள்ளை தூங்கட்டும் என்று விட்டு விடுகிறோம்.
உலக வாழ்விற்காக எல்லா சிரமங்களையும் மேற்கொள்ளும் நாம், மறுமை வாழ்விற்காக நம் பிள்ளைகளைத் தயார் செய்யும் வேலைகளை சுணக்கத்துடன் தள்ளி, ஒதுக்கி வைத்து விடுகிறோம்.
நம் பிள்ளைகளுக்கு மதிப்பெண்கள் சற்றுக் குறைந்தாலும் மாய்ந்து போய் அந்தத் துன்பத்தை நம்மால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. இப்படி நாம் கவலைப்படுவது தான் நமது பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பெரும் பின்விளைவுகள் ஏற்படக் காரணமாக அமைந்து விடுகின்றது.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்…
அல்லாஹ் உமக்கு துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாரும் இல்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால், அவன் அனைத்து பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.
என்னமோ பெரிய பெரிய படிப்பு படித்தவர்கள் மட்டும் தான் அதிகம் சம்பாதிக்கிறார்கள்; அவர்கள் தான் எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு எளிய தீர்வு சொல்வார்கள்; உலகம் மதிக்க வாழ்வார்கள் என நாம் கற்பனையில் மிதக்கிறோம்.
அப்படியல்ல! மெத்தப் படித்தவர்களின் வாழ்க்கை வழிமுறை, அவர்களின் செயல்பாடுகள் எல்லாம் எத்தனை முட்டாள்தனமானதாகவும், கேவலமானதாகவும் இருக்கிறது என்பதை நாம் கண்கூடாகக் காணத்தானே செய்கிறோம். பெரிய விஞ்ஞானி என்போர் கூட போலிச் சாமியார்களின் கால்களில் வீழ்ந்து கிடப்பதைப் பார்க்கிறோம்.
முதல், இடை, கடை என்று மாணவர்களின் தர வரிசை அமைந்திருகிறது. முதல் நிலையில் உள்ளவன் முதலிலேயே எப்பொழுதும் இருக்க முடியுமா? அவனுக்கு சரிவே ஏற்படாதா? இடைநிலையில் இருப்பவன் முன்னேறி முதல் நிலையை அடைய முடியாதா? கடை நிலையில் இருப்பவன் எதற்கும் இலாயக்கற்றவனாக இருந்து விடுவானா?
எதுவுமே நம் கையில் இல்லை. முயற்சி மட்டுமே நம் கையில் உள்ளது. முடிவு எல்லாமே படைத்த ரஹ்மானின் வசம் உள்ளது. விதியின் அமைப்பில் அல்லாஹ் எதனை நாடுகிறானோ அது தான் நடந்தேறும்.
அல்லாஹ் கொடுப்பதைத் தடுப்பவன் எவரும் இல்லை.
அல்லாஹ் தடுப்பதைக் கொடுப்பவன் எவரும் இல்லை.
அல்லாஹ் நாடுவதை அப்படியே எவன் ஒருவன் எடுத்துக் கொள்கிறானோ அவனே அல்லாஹ்வுக்கு விருப்பமான ஒரு நல்லடியானாக இருக்க முடியும்.
தனி மனித வாழ்வின் ஒரு சிறு பகுதியாக இருப்பது தான் கல்வி. அந்தக் கல்வியின் முடிவுகளே அவனது வாழ்க்கைத் தரத்தைப் பெரும்பாலும் மாற்றிவிட முடியும் என எண்ணக் கூடாது.
அதிகம் படிக்காத எத்தனையோ அறிஞர்கள் நேர்வழியில் இறையச்சத்துடனும் புகழுடனும் வாழ்ந்துள்ளார்கள், வாழ்ந்து கொண்டும் உள்ளார்கள். அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.
உங்களுக்குத் தவற விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தினான். கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
தான் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் வரவில்லை என்றால் பெற்றோர்கள் பிள்ளைகளைப் படுத்தும் பாடு சொல்லி மாளாது. கோபத்தின் உச்சிக்கே சென்று அவர்களை ஏசுவதும், திட்டுவதும், சபிப்பதும், ஏன்? அடி உதை கொடுப்பதும் தேர்வு முடிவுகள் வரும் நேரத்தில் சகஜமாகிவிட்டது. இந்தத் துன்புறுத்தலினால் பிள்ளைகள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுத்து விடுகிறார்கள்.
வீட்டை விட்டு ஓடிப் போவது, தவறான நண்பர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு அவர்களின் ஆலோசனையின் படி, தகாத செயல்களில் ஈடுபடுவது, பெற்றோர்களைத் துன்புறுத்த எதனை வேண்டுமானாலும் செய்வது, அதிகப்பட்சமாகத் தன் உயிரையே மாய்த்துக் கொள்வது போன்ற பெரும் பாவங்களைச் செய்யத் துணிகிறார்கள். எத்தனை செய்தித் தாள்களில் என்ன என்ன செய்திகளை நாம் படித்துள்ளோம்.
கண்ணுக்குக் கண்ணாக, பாசத்தையும் பணத்தையும் கொட்டி வளர்த்த நம் பிள்ளை, நிரந்தர நரகத்தில் கொண்டு சேர்க்கும் பெரும் பாவத்தைச் செய்ய நாமே தூண்டுகோலாக இருக்கலாமா? நாமும் மார்க்கத்தின் படி வாழவும், நம் பிள்ளைகளை அதன் படி வளர்க்கவும் நாம் முயற்சி எடுக்க வேண்டும். பொறுமையை மேற்கொண்டால் அல்லாஹ்வின் அருள் நம்மை நிச்சயமாக வந்தடையும்.
தம் மக்களுக்கு உலகக் கல்வியை மட்டுமே அளித்து அவன் ஒரு சிறந்த மாணவனாக ஆவதை விட, உலகக் கல்வியுடன் சேர்த்து மார்க்கக் கல்வியையும் போதித்து, இறைவன் வழங்கியதைப் பொருந்திக் கொள்ளக் கூடிய, இறையச்சமுடைய ஒரு நல்லடியானாக உருவாக்க ஒவ்வொரு பெற்றோரும் முயல்வோமாக! வல்ல ரஹ்மான் அதன் வழியை நமக்கு எளிதாக்கி வைப்பானாக!