மன்னிப்புக் கேட்போம் மழை பெறுவோம்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

மன்னிப்புக் கேட்போம் மழை பெறுவோம்

என்ன தான், மனிதன் ஆகாயத்தை முட்டுகின்ற அறிவியல் வளர்ச்சி கண்டிருந்தாலும், விண்ணைத் தொடுகின்ற வியக்கத்தக்க விஞ்ஞானப் புரட்சி படைத்தாலும் வானிலிருந்து ஒரு சொட்டு மழையை அவனால் இறக்க முடியாது. இதோ அல்லாஹ் தனது திருமறையில் கேட்கிறான்.

اَفَرَءَيْتُمُ الْمَآءَ الَّذِىْ تَشْرَبُوْنَؕ‏  ءَاَنْـتُمْ اَنْزَلْـتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ‏

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா?

(அல்குர்ஆன்: 56:68,69)

இது எக்காலத்துக்கும் பொருந்துகின்ற இறை சவாலாகும்.

மழை என்பது வல்லமை மிகு அல்லாஹ்வின் கையில் இருக்கும் தனி அதிகாரமும், ஆற்றலும் ஆகும். வானிலிருந்து மழை பெய்யவில்லை எனில் மண்ணில் உயிர் வாழ்க்கை இல்லை. இதையே திருக்குர்ஆன் கூறுகின்றது.

وَفِى السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ‏

வானத்தில் உங்கள் உணவும், நீங்கள் வாக்களிக்கப்பட்டதும் உள்ளன.

(அல்குர்ஆன்: 51:22)

ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு பொழியவில்லை. தென்மேற்குப் பருவமழை தான் கர்நாடகாவுக்கு நீர்வளத்தைத் தருகின்றது. அங்கிருந்து காவிரிக்கு நீர்வரத்து கிடைக்கின்றது.

இதுபோல் கேரளாவில் பொழிகின்ற தென்மேற்குப் பருவமழையினால் குமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு நீர் ஆதாரம் கிடைக்கின்றது.

இப்போது தென்மேற்குப் பருவமழை பொய்த்து விட்டதால் இந்த மாவட்டங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக மக்களின் முதன்மை உணவான அரிசி விளைச்சல் இல்லை. குறுவை பயிரிட முடியாத அளவுக்கு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாயினர். அரிசியைப் போன்றே இதர தானியங்களும் விளைச்சல் இல்லை.

அரிசி விலை இப்போதே வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலையும் ஏறியிருக்கின்றது. வறட்சியின் இந்தக் கோரப்பிடி தொடருமானால் ஒட்டுமொத்த இந்தியாவும் கடுமையான பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படும்.

ஏற்கனவே கோடை வெயிலிலும் மின்வெட்டிலும் தவிக்கின்ற, தகிக்கின்ற, தமிழக மக்கள் நீரினால் கிடைக்கும் மின்சாரத்தை இழந்து தற்போது தமிழகம் இருள்மயமாகக் கிடக்கின்றது.

இப்படிப்பட்ட கால கட்டத்தில் மழை ஒன்று தான் மக்களுக்குத் தீர்வு! இது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கைவசம் உள்ள ஆற்றலாகும்.

இன்று இந்த நாட்டில் உள்ள மக்கள் தங்கள் போலி தெய்வங்களிடம் மழை கேட்டுப் பிரார்த்திக்கின்றனர். முஸ்லிம்கள் உண்மையான, ஏகனான, தனித்தவனான, ஒரே ஒருவனான அல்லாஹ்விடம் மழை வேண்டிப் பிரார்த்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் மழை தேடுவதற்காக, “ஸலாத் அல்இஸ்திஸ்கா’ என்ற மழைத் தொழுகையை நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள். இதன்படி நமது ஜமாஅத்தினர் மழைத் தொழுகை தொழுவோமாக! மழை வேண்டுவதற்காக நபி (ஸல்) அவர்கள் சில சிறப்பு துஆக்களையும் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள். அந்தத் தொழுகை மற்றும் துஆக்கள் மூலம் அல்லாஹ்விடம் மழை வேண்டிப் பெறுவோமாக!

அத்துடன் அல்லாஹ்விடம் அதிகமதிகம் பாவ மன்னிப்புத் தேடிக் கொள்வோமாக! ஏனெனில் நபி நூஹ் (அலை) அவர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்ற போது, மழை வேண்டுமானால் பாவ மன்னிப்புத் தேட வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள்.

فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْؕ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۙ‏ يُّرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا ۙ‏

“உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்”

(அல்குர்ஆன்: 71:10,11)

நூஹ் நபியின் இந்த அறிவுரைப்படி அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடி, பருவ மழையைப் பெறுவோமாக!

தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பல்வேறு கிளைகள் மழைத் தொழுகையை அறிவித்து நிறைவேற்றி வருகின்றன. இதன் எதிரொலியாகத் தமிழகத்தில் மழைக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன. இந்நிலை நீடித்து, பருவமழை பொய்க்காமல் பொழிவதற்கு வல்ல ரஹ்மானிடம் தொடர்ந்து பாவமன்னிப்புத் தேடுவோம்.

மலை இல்லாமல் மழை இல்லை

காற்று இல்லாமல் மழை இல்லை என்று அடித்துச் சொல்லலாம். காரணம், பஞ்சு மிட்டாய்களைப் போன்று பிய்ந்து, பிய்ந்து கிடக்கும் குட்டி மேகங்களை ஒன்று திரட்டுவதற்கும் சில்லறை சில்லறையாகச் சிதறிக் கிடக்கும் மேகத் துண்டுகளை ஒன்று சேர்ப்பதற்கும் உரிய வேலையைக் காற்று தான் செய்கின்றது.

ஈரத் துளிகளை மேக மூட்டமாய், மேகக் கூட்டமாய் ஒன்று திரட்டி சூல் கொண்ட காற்று இமய மலை அளவிலான ஒரு கர்ப்பிணிப் பெண்ணாக, செங்குத்தாக வானை நோக்கி எழுகின்றது. அந்தரத்தில், ஆகாயத்தை நோக்கி அங்கே இவ்வளவு கனமான உருவத்தில் செல்வது யார்? என்று அதைப் புவி ஈர்ப்பு விசை சுண்டி இழுக்கின்றது. அதன் வெளிப்பாடு தான் கொட்டோ கொட்டென்று கொட்டுகின்ற மழையின் புறப்பாடு! இதை அல்லாஹ் தனது திருமறையில் அழகாகச் சொல்லிக் காட்டுகின்றான்.

وَاَرْسَلْنَا الرِّيٰحَ لَوَاقِحَ فَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَسْقَيْنٰكُمُوْهُ‌ۚ وَمَاۤ اَنْتُمْ لَهٗ بِخٰزِنِيْنَ‏

சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.

(அல்குர்ஆன்: 15:22)

இதன் அடிப்படையில் கருக் கொள்கின்ற காற்றில்லாமல் உருக் கொள்ளும் மழை இல்லை என்று அடித்துச் சொல்லலாம். ஆனால் மலை இன்றி மழை இல்லை என்று சொல்ல முடியுமா? ஆம் என்று தான் சொல்ல வேண்டும். அது எப்படி?

அல்லாஹ்வின் அற்புதத்தை அறிந்து கொள்ள, அவனது படைப்பின் நுணுக்கத்தைத் தெரிந்து கொள்ள மழையின் உருவாக்கத்தைப் பற்றியும், அதற்கு மலையின் உதவியைப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவைப் பொறுத்தவரை மலை இன்றி மழை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் இரண்டு பருவ மழைகள் பொழிகின்றன. ஒன்று தென்மேற்குப் பருவமழை! மற்றொன்று வடகிழக்குப் பருவமழை! இவ்விரண்டும் முறையே தென்மேற்கு, வடகிழக்குப் பருவக் காற்றுகளால் ஏற்படுகின்றன.

وَهُوَ الَّذِىْ يُرْسِلُ الرِّيٰحَ بُشْرًۢا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ ‌ؕ حَتّٰۤى اِذَاۤ اَقَلَّتْ سَحَابًا ثِقَالًا سُقْنٰهُ لِبَلَدٍ مَّيِّتٍ فَاَنْزَلْنَا بِهِ الْمَآءَ فَاَخْرَجْنَا بِهٖ مِنْ كُلِّ الثَّمَرٰتِ‌ؕ كَذٰلِكَ نُخْرِجُ الْمَوْتٰى لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏

தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தவர்களையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக் கூடும்.

(அல்குர்ஆன்: 7:57)

இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்வது போன்று பருவக் காற்றுகள் மழைக்குக் காரணமாக அமைகின்றன.

இவ்விரு பருவக் காற்றுகளும் எப்படி உருவாகின்றன?

தென்மேற்குப் பருவக்காற்று

தென்மேற்குப் பருவக் காற்று உருவாக்கத்தைப் பார்ப்பதற்கு முன்னால், கடலிலிருந்து, நிலத்திற்குப் பெயர்ச்சியாகும் காற்று பற்றியும் அதற்கான காரணத்தையும் பார்ப்போம்.

கோடை காலத்தில் நிலம் அதிகமாகச் சூடாகி, வெப்ப அளவு 45 டிகிரி சென்டிகிரேட் அளவை விடத் தாண்டி விடும். பூமி உள்வாங்கிய இந்த வெப்பம், காற்றையும் சூடுபடுத்துகின்றது. வெப்பமடைந்த காற்று மேல் நோக்கி உயர்கின்றது. இதனால் அங்கு குறைந்த அழுத்தம் ஏற்படுகின்றது. இந்தக் கால கட்டத்தில் கடலின் வெப்பம் 20 டிகிரி என்ற அளவில் இருக்கும். கடலில் உள்ள இந்தக் குளிர் காற்று, குறைந்த அழுத்தத்தை ஈடு செய்வதற்காக நிலத்தை நோக்கிப் பெயர்ச்சி ஆகின்றது. இந்த விளக்கத்தைப் பின்னணியாகக் கொண்டு இப்போது பருவக்காற்றுகளைப் பார்ப்போம்.

பூமத்திய ரேகை அல்லது புவி இடைக்கோட்டிற்கு வடக்கே இந்தியா அமைந்திருப்பதை நாம் அறிவோம். மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை சூரியன் வட அரைக் கோளத்தில் பிரகாசிப்பதால் இந்தியாவில் கோடை காலம். இதனால் இம்மாதங்களில் வடமேற்கு இந்தியா மிக மிக அதிகமாக வெப்பமடைகின்றது. இவ்வாறு அதிக வெப்பமாகும் போது இங்குள்ள காற்று வெப்பமடைந்து, விரிவடைந்து உயரே செல்கின்றது. எனவே இங்கே குறைந்த அழுத்த மையம் உருவாகின்றது.

இதே காலத்தில் தென் அரைக்கோளத்தில் குளிர்காலம் நிலவுகின்றது. எனவே தென் அரைக் கோளத்தில் உயர் அழுத்த மையம் ஏற்படுகின்றது. வடமேற்கு இந்தியாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தத்தை ஈடுசெய்ய தென் அரைக்கோளத்தில் உள்ள அதிக அழுத்த மையத்திலிருந்து காற்று வடக்கு நோக்கி வீசுகின்றது.

இதற்கு எடுத்துக்காட்டாக, தார் பாலைவனம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இந்தியாவின் வட மற்றும் நடுப்பகுதிகள் சூடாவதால் அங்கு குறைந்த அழுத்த மையம் ஏற்படுகின்றது. அதாவது காற்று சூடாகி, விரிந்து மேல்நோக்கி எழுகின்றது. இதனால் ஒரு வெற்றிடம் ஏற்படுகின்றது. இந்த வெற்றிடத்தை நிரப்பவும் ஈடுகட்டவும் இந்தியப் பெருங்கடலிலிருந்து ஈரப்பதமிக்க, மழை நீரைக் கருக் கொண்ட காற்றுக்கள் பெயர்ச்சி செய்து புறப்படுகின்றன.

திசை மாறும் காற்றுக்கள்

வட அரைக்கோளத்தை (அதாவது தார் பாலைவனத்தை) நோக்கித் தான் இந்தக் காற்றுக்கள் புறப்பட்டு வருகின்றன. ஆனால் புவியின் சுழற்சி காரணமாக தென்மேற்காக திசை திருப்பப்படுகின்றன.

இவ்வாறு திசை மாறும் தென்மேற்குப் பருவக்காற்றுக்கள் என்ன செய்கின்றன? இங்கு தான் அல்லாஹ்வின் அழகிய படைப்பின் அதி அற்புத ரகசியமும் ரசனையும் பளிச்சிடுகின்றது. அவனை நம்புகின்ற அடியார்களைப் பரவசத்திற்கும் பக்தி வசத்திற்கும் ஆட்படுத்துகின்றது.

فَقَدَرْنَا ۖ فَنِعْمَ الْقٰدِرُوْنَ‏

நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள்.

(அல்குர்ஆன்: 77:23)

அல்லாஹ் சொல்வது போன்று அவனது சிறப்புமிகு படைப்புத் தன்மை இங்கு புலனாகின்றது.

وَّجَعَلْنَا فِيْهَا رَوَاسِىَ شٰمِخٰتٍ وَّ اَسْقَيْنٰكُمْ مَّآءً فُرَاتًا ؕ‏

அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.

(அல்குர்ஆன்: 77:27)

மலைகளை, மதுரமான மழை நீருடன் தொடர்புபடுத்திப் பேசுகின்ற அவனது தொழில் நுட்பமும் துலங்குகின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையும் மழையும்

மேற்குத் தொடர்ச்சி மலை என்பது அல்லாஹ்வின் அற்புதத்தையும் ஆற்றலையும் பறை சாற்றுகின்ற மாபெரும் படைப்பு என்றே கூற வேண்டும்.

இந்த மலைத் தொடர் மராட்டியம், குஜராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்குத் தெற்கே துவங்கி, மராட்டியம், கோவா, கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று தமிழகத்தின் கன்னியாகுமரியில் முடிவடைகின்றது. இதன் நீளம் சுமார் 1600 கிலோ மீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலையின் பரப்பளவு 60,000 சதுர கிலோ மீட்டர்கள்.

தமிழகத்தில் இம்மலைத் தொடர் ஆனைமலை, நீலகிரி மலைத் தொடர் எனவும், கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலைத்தொடர் எனவும் அழைக்கப்படுகின்றது. இம்மலைத் தொடரின் உயரமான சிகரம் கேரளாவில் உள்ள ஆனைமுடியாகும். இதன் உயரம் 2695 மீட்டர் ஆகும்.

இதேபோன்று வட இந்தியாவில் அமைந்திருக்கும் ஹிமாலயா மலைத் தொடரும் அல்லாஹ்வின் அளப்பெரும் அரிய ஏற்பாடாகவும், ஆற்றல்மிகு தொழில்நுட்பமாகவும் அமைந்துள்ளது.

பூமி சுழற்சி காரணமாக தென்மேற்காகத் திருப்பப்பட்ட காற்று தென் முனையைத் தொடுகின்ற போது இந்தியாவின் தீபகற்ப அமைப்பின் காரணமாக இரண்டு கிளைகளாகப் பிரிந்து செல்கின்றது. ஒன்று அரபிக் கடல் கிளையாகவும் மற்றொன்று வங்கக் கடல் கிளையாகவும் பிரிந்து செல்கின்றது.

இங்கு தான் மேற்குத் தொடர்ச்சி மலையின் வேலையையும், இமய மலையின் வேலையையும் உணர முடியும். இவ்விரு மலைகளும் மிகப் பெரிய தடுப்புச் சுவரைப் போன்று செயல்படுகின்றன. இந்த இரு மலைகள் மீது பருவக்காற்றுகள் மோதி மேலெழுகின்றது. வேறு வழியில்லாமல் மழையாகப் பொழிகின்றது.

முதன்முதலில் தென்மேற்குப் பருவக்காற்று முட்டுவதும் மோதுவதும் மேற்குத் தொடர்ச்சி மலையில் தான். இந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் பயனாக கேரளா, கர்நாடகா, மும்பை, குஜராத், கொங்கன், கோவா, டெல்லி போன்ற இடங்கள் அதிகப்பட்சமான மழையைப் பெறுகின்றன.

இவ்வாறு மழையைப் பொழிவித்த காற்று வறண்ட காற்றாக மாறுகின்றது. இந்த வறண்ட காற்று மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியைக் கடந்து அதன் மறு சரிவான கிழக்குப் பகுதியின் வழியே, அதாவது தக்காண பீடபூமியில் இறங்குகின்றது. வறண்ட காற்று மழையைத் தராது. எனவே இந்தப் பகுதி மட்டும் மழை பெறாத, மழை மறைவுப் பகுதியாகும். இதைத் தவிரவுள்ள மற்ற பகுதிகள் அதிகமான மழை பெறும் பகுதிகளாகும்.

வங்கக் கடல் கிளைக் காற்று

இந்த வங்கக்கடல் கிளைக் காற்று, வங்கக் கடலில் உள்ள ஈரப்பதத்தையும் மேலதிகமாக எடுத்துக் கொண்டு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மழை பொழிவிக்கின்றது. மேகலாயாவின் சிரபுஞ்சி எனுமிடத்திலிருந்து 16 கி.மீ. மேற்கிலுள்ள மாசின்ரம் என்னுமிடம் தான் உலகிலேயே அதிகமான மழை பெறும் இடமாகும்.

ஏற்கனவே இந்தக் காற்று, தார் பாலைவனத்தில் உள்ள வெப்பத்தை ஈடுகட்ட வந்த காற்று என்பதை நாம் அறிந்தோம். இதுதான் இமயமலை என்ற மாபெரும் இயற்கை மதில் சுவரால் தடுக்கப்பட்டு இந்தக் காற்று மேற்கு நோக்கித் திருப்பப்பட்டு, கங்கைச் சமவெளி முழுவதிலும் மழை பொழிவிக்கின்றது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிகள் மழை மறைவுப் பகுதிகள் என்பதை அறிந்தோம். அங்கு மழை இல்லாததால் நீர்வளம் ஏதுமில்லை என்று எண்ண வேண்டியதில்லை. மழை பெய்த பகுதிகளிலிருந்து மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடும் ஆறுகள் இந்தப் பகுதிக்குச் சென்றடைந்து அந்தப் பகுதிகளை வளமாகவும் செழிப்பாகவும் ஆக்குகின்றன. இதுவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அழகிய அருமையான ஏற்பாடாகும்.

வடகிழக்குப் பருவக்காற்று

இந்தியப் பெருங்கடலிலிருந்து புறப்பட்டு, பூமியின் சுழற்சியில் திசை திருப்பப்பட்ட காற்று தான், அதாவது நீரிலிருந்து நிலத்திற்குப் பெயர்ச்சியாகும் காற்று தான் தென்மேற்குப் பருவக்காற்று என்றால், வடகிழக்குப் பருவக்காற்றானது நிலத்திலிருந்து நீரை நோக்கி வரும் காற்றாகும்.

அக்டோபர் முதல் மார்ச் வரை சூரியன் தென் அரைக்கோளத்தில் பிரகாசிக்கின்றது. இதனால் அங்கு கோடை காலம் நிலவுகின்றது. இப்போது தென் அரைக்கோளத்தில் குறைந்த காற்று அழுத்த மையம் உருவாகின்றது. தென் அரைக்கோளத்தில் கோடை காலம் என்றால் வட அரைக்கோளத்தில் குளிர்காலம். இங்குள்ள குளிர் காற்று அதைச் சரிகட்டப் புறப்பட்டுச் செல்லும் போது புவி சுழற்சி காரணமாக வடகிழக்காகத் திசை திருப்பப்படுகின்றது.

அவ்வாறு திசை திருப்பப்பட்ட இந்தக் காற்று வங்கக் கடல் வழியாக பயணிக்கின்றது. அப்போது கிழக்குத் தொடர்ச்சி மலை ஒரு தடுப்புச் சுவர் போல் செயல்படுகின்றது. கிழக்குத் தொடர்ச்சி மலை, மேற்குத் தொடர்ச்சி மலையைப் போன்றது கிடையாது. இதில் அதிகமான இடைவெளிகள் உள்ளன. இருந்தாலும் அது ஒரு தடுப்புச் சுவராகத் திகழ்கின்றது. இதுவும் அல்லாஹ்வின் மகத்தான, மாபெரும் ஏற்பாடாகும். இதன் விளைவாக இந்தக் காற்றுகள் மூலம் தமிழகம், ஆந்திரம், ராயல்சீமா, பாண்டிச்சேரி, இலங்கையின் கிழக்குப் பகுதிகள் போன்றவை மழையைப் பெறுகின்றன.

தென்மேற்குப் பருவக்காற்று மூலம் மிகக் குறைந்த அளவு மழையைப் பெறும் தமிழகக் கடலோரப் பகுதிகள், வடகிழக்குப் பருவக்காற்றினால் 60% மழையைப் பெறுகின்றன. தமிழகத்தின் உட்பகுதிகள் 40 முதல் 60% வரை மழையைப் பெறுகின்றன.

தென்மேற்குப் பருவக்காற்றினால் பயனடைந்த கர்நாடகம், கேரளம், லட்சத்தீவுகள் போன்றவை வடகிழக்குப் பருவக்காற்றின் மூலம் 20% மழையைப் பெறுகின்றன. தென்மேற்குப் பருவ மழையில் மழை மறைவுப் பகுதியாக இருந்த தக்காண பீடபூமி கூட வடகிழக்குப் பருவமழையைப் பெற்று விடுகின்றது.

தமிழகத்தின் தலைவிதியையும் தானிய விதியையும் நிர்ணயிப்பதே வடகிழக்குப் பருவமழை தான். தமிழகத்திற்கு உணவைத் தரும் உயிர்நாடியாக வடகிழக்குப் பருவமழை அமைந்திருக்கின்றது.

ஆக மொத்தத்தில் தென்மேற்குப் பருவமழைக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளும், வடகிழக்குப் பருவமழைக்குக் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் காரணிகளாக அமைந்திருக்கின்றன.

மலைத் தடுப்புகளுக்கு ஆங்கிலத்தில் (Mountain barriers) என்று சொல்லப்படும். இமயம் போன்ற மலையெனும் இயற்கைத் தடுப்புகள், பாதுகாப்பு மதில் சுவர்கள் இல்லையென்றால் இந்தக் காற்றுக்கள் சீனாவுக்கும், ஆப்கானுக்கும் ரஷ்யாவுக்கும் பறந்து போய்விடும். இந்தியா மழையை மறந்து போய்விட வேண்டும்.

மலைகள் நதிகளின் பிறப்பிடம்

இதுவரை பார்த்த விளக்கங்களிலிருந்து மலையின்றி மழையில்லை என்பது உறுதியாகின்றது. அப்படித் தான் அல்லாஹ் மலைகளை அமைத்திருக்கின்றான்.

அத்துடன் மேற்குத் தொடர்ச்சி மலையானாலும், இமயமலைத் தொடரானாலும் அவை ஆறுகளில் பிறப்பிடமாக அமைந்துள்ளன.

கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி எல்லாமே மேற்குத் தொடர்ச்சி மலையின் பிள்ளைகள் தான். இந்த வகையில் மலைகள் அல்லாஹ்வின் அரும்பெரும் அருட்கொடைகள் என்றே கூற வேண்டும். எல்லாவற்றுக்கும் மூல முதற்காரணமாக காற்று அமைந்திருக்கின்றது.

மரம் ஓர் அருட்கொடை

மழை பெறுவதற்கு ஏதுவாக மலைகளை அருட்கொடையாக அல்லாஹ் ஆக்கியிருப்பது போன்று மரங்களை மற்றொரு காரணியாக ஆக்கியிருக்கின்றான். மரங்கள் தாம் தம் இலைகள் மூலமாக நிலத்தடி நீரை சூரிய ஒளியின் மூலம் உறிஞ்ச வழிவகுக்கின்றன.

பருவக் காற்றைக் கொண்டு வருவதிலும் மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மறு சுழற்சியில் மழை வருவதற்குத் துணை நிற்கின்றன. மரங்களின் வேர்கள் மழை நீரைப் பிடித்து வைப்பதன் மூலம் நிலத்தடிக்குக் கீழே உள்ள நீர்ப்படுகைகள் நீரை மறுசேமிப்பு, சேகரிப்பு செய்வதற்கு உதவுகின்றன.

நன்கு அடர்த்தியான தேக்கு மரக் காடு, ஆயிரம் மழைத் துளிகள் அடங்கிய பரிமாணங்களை வழங்குகின்றது. வெப்ப மண்டலத்தில் கடல்கள் செயல்படுவதைப் போன்று, வளி மண்டலத்தில் நன்கு அடர்ந்து செறிந்த காடுகள் செயல்படுகின்றன.

அதாவது வளி மண்டலத்தில் நீராவியை வெளியிட்டுப் பின்னர் மழையினால் அதை நிரப்பிக் கொள்கின்றன.

அல்லாஹ் வழங்கிய அருட்கொடையான இந்த மரங்களை, காடுகளிலும் நகரங்களிலும் பெருமளவு அழித்து, மனிதன் தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொண்டிருக்கின்றான்.

நீர்வளம்

மழை பெறுவதற்கு மலைகளும் மரங்களும் காரணியாகத் திகழ்வது போன்று நீர்வளமும் முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்கள் இந்தியத் துணைக் கண்டத்தை வளையமிட்டிருப்பது இங்கு வாழும் மக்களுக்கு ஒரு பாக்கியமாகும்.

மழை பொழிவிற்கு அடிப்படைக் காரணமான ஈரப்பதத்தை, காற்றுக்கள் தன்னகப்படுத்துவதற்கு இக்கடல்கள் அற்புத ஆதாரங்களாக அமைந்திருக்கின்றன.

புவியின் சுழற்சி

சுழலும் பூமியும் காற்றைத் திசை திருப்புவதற்கு ஒரு சூத்திரதாரியாகத் திகழ்கின்றது. இதுதவிர இந்தியத் துணைக்கண்டம் புவியியல் வரைபடத்தில் வட அரைக்கோளத்தில் அமைந்திருப்பது. இவை அத்துணை காரணிகளும் இணைந்து தான் இந்தியத் துணைக்கண்டத்தில் மழையைப் பொழிவிக்கின்றன.

மவ்சிம் – மான்சூன்

இந்தப் பருவக்காற்றுக்களுக்கு அரபியர்கள் மவ்சிம் என்று பெயர் வைத்தனர். மவ்சிம் என்றால் பருவக் காலம் என்று பெயர்.

இந்த மவ்ஸிம் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது தான் மான்சூன் (monsoon) என்று அனைவரும் ஒருமித்துக் கூறுகின்றனர்.

அரபியர்கள் முற்காலத்தில் பாய்மரக் கப்பல்கள் மூலம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டனர். பிறகு வடகிழக்குப் பருவக்காற்றின் போது தங்கள் தாயகம் திரும்புவார்கள். அதனால் இதற்கு வணிகக் காற்றுக்கள் (Trade winds) என்று பெயர் வழங்கப்பட்டது.

கப்பல்கள் கடல்களில் நகர்வது அல்லாஹ்வின் மாபெரும் அற்புதமாகும்.

وَمِنْ اٰيٰتِهِ الْجَوَارِ فِى الْبَحْرِ كَالْاَعْلَامِؕ‏

மலைகளைப் போன்று கடலில் செல்லும் கப்பல்களும் அவனது சான்றுகளில் உள்ளவை.

(அல்குர்ஆன்: 42:32)

இந்த அடிப்படையில் இந்தக் காற்றுக்கள் மக்களின் பொருளாதாரத்திற்கு உதவி செய்வதைப் பார்க்கிறோம். இன்றைய கால கட்டத்தில் காற்று, மின் உற்பத்திக்கு ஆதாரமாகத் திகழ்கின்றது.

மழை பொழிவதற்கு அல்லாஹ்வின் பல்வேறு அருட்கொடைகளைப் பார்த்தோம். இந்த அருட்கொடைகள் அனைத்திற்காகவும் அல்லாஹ்வுக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அதில் குறிப்பாக, காற்று ஸ்தம்பித்து விட்டால் கடலில் மட்டுமல்ல, மண்ணிலும் மனித வாழ்வே ஸ்தம்பித்து விடும்.

اِنْ يَّشَاْ يُسْكِنِ الرِّيْحَ فَيَظْلَلْنَ رَوَاكِدَ عَلٰى ظَهْرِهٖؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّـكُلِّ صَبَّارٍ شَكُوْرٍۙ‏

அவன் நினைத்தால் காற்றை நிறுத்தி விடுகிறான். உடனே அது அதன் (கடலின்) மேற்பரப்பில் நின்று விடுகின்றது. சகிப்புத் தன்மையும், நன்றியுணர்வும் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன்: 42:33)

அறிவியல் பேருண்மைகள் மூலம் வெளிச்சத்திற்கு வரும் இந்த அருட்கொடைகளுக்கு என்றென்றும் நன்றி செலுத்துகின்ற நல்லடியார்களாக வாழ்வோமாக!