மனோஇச்சையை எதிர்ப்பதே சிறந்த ஜிஹாத்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

”ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (போரிலிருந்து திரும்பிய) போர் வீரர்கள் குழு வந்தனர். அப்போது நபியவர்கள் நீங்கள் சிறிய ஜிஹாதிலிருந்து பெரிய ஜிஹாதின் பக்கம் வருகை அளித்துள்ளீர்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் பெரிய ஜிஹாத் என்றால் எது என்று கேட்க ஒரு அடியான் தனது மனோ இச்சையை எதிர்த்து போர்புரிவதே (பெரிய ஜிஹாத்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.”

நூல் : பைஹகீ அவர்களின் ஸூஹ்துல் கபீர் பாகம் 1 பக்கம் 388

தப்லீக் ஜமாஅத்தவர்கள் குறிப்பாக சூஃபியாக்கள் இதை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மக்களுக்கு மத்தியில் சொல்கின்றனர்.

இது பைஹகீ அவர்களின் ஸூஹ்துல் கபீர் மற்றும் தாரீகு பக்தாத் எனும் நூலிலும் 7345 ஆவது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இதன் இறுதியில் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடரைக் கொண்ட செய்தி என்று விமர்சித்துள்ளார். 

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றிருக்கும் லைசு பின் அபீ சுலைம் ஹதீஸ் கலை அறிஞர்களால் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்கள். இவரது ஹதீஸ்கள் பலவீனமானவையாகும். இவர் உறுதியானவர் அல்ல என்று அபூஇஸ்ஹாக் அல்ஜவ்ஸஜானீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

(நூல் அஹ்வாலுர் ரிஜால் 1 91)