6) மனித உரிமை பேணுதல்
மனித உரிமை பேணுதல்
இன்னும் இஸ்லாத்தின் தனித்தன்மையை ஆராய்ந்தால் கடவுளுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் சில இருக்கின்றன. மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்ய வேண்டிய காரியங்களும், கடமைகளும் இருக்கின்றன. இதில் மனிதனுக்குச் செய்ய வேண்டிய காரியங்களில் கடவுள் தலையிடவே மாட்டார் என்று இஸ்லாம் அறிவிக்கிறது.
ஒரு மனிதனுக்கு நான் துரோகம் செய்து விட்டால் அதைக் கடவுள் மன்னிக்கவே மாட்டான். எப்போது மன்னிப்பான்? யாருக்கு நான் துரோகம் செய்தேனோ அவனிடத்தில் அந்தத் துரோகத்திற்கு மன்னிப்புக் கேட்டு, அவன் திருப்தி அடைந்த பின்பு தான் கடவுள் என்னை மன்னிப்பான்.
ஒருவன் தொழாமல் இருக்கின்றான். இது மனிதன் சம்பந்தப்பட்டது அல்ல. கடவுளுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமை. இந்தக் கடமை (தொழுகை)யை ஒருவன் செய்யாமல் இருக்கின்றான். இது கடவுளுக்கும், மனிதனுக்கும் சம்பந்தப்பட்ட விஷயமாகும். தவறாகச் செய்து விட்டேன் என்ற சொல்கிறாயா? இனி மேல் ஒழுங்காக நடப்பேன் என்கிறாயா? சரி என்று இறைவன் நாடினால் மன்னிக்கின்றான்.
நோன்பு என்பது ஒரு கடமை. இது கடவுளுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமை. நோன்பு வைப்பதால், அல்லது வைக்காமல் இருப்பதால் இன்னொரு மனிதனுக்கு இதில் நன்மையோ, தீமையோ இல்லை. இந்த நோன்பை ஒருவன் 10 வருடமாக வைக்கவில்லை. பின்பு திருந்தி நான் இனி மேல் நோன்பு ஒழுங்காக நோன்பு வைக்கிறேன். கடவுளே என்னை மன்னித்து விடு என்று கேட்டால் கடவுள் நாடினால் மன்னித்து விடுவான்.
அதே நேரத்தில் ஒரு மனிதனுக்கு நான் மோசடி செய்திருக்கின்றேன்; ஏமாற்றி இருக்கின்றேன்; களவு செய்திருக்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம். மனிதன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நான் தலையிட்டிருந்தால் ‘கடவுளே! நான் திருடி விட்டேன்; என்னை மன்னித்து விடு! என்று கேட்டால் இறைவன் மன்னிக்கவே மாட்டான்.
கடவுளிடம் ஒரு காலத்திலும் மன்னிப்பு கிடைக்காது. காலமெல்லாம் நின்று தொழுதாலும், தவம் செய்தாலும் மன்னிப்புக் கிடைக்காது. கணவன் மனைவிக்குச் செய்த குற்றம், மனைவி கணவனுக்குச் செய்த குற்றம், தாய் மகனுக்கும், மகன் தாய்க்கும் செய்த குற்றம் ஆகியவற்றைச் சம்மந்தப்பட்டவர்கள் மன்னிக்காத வரை கடவுள் மன்னிக்கவே மாட்டான் என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம் ஒன்றே.
மதங்களைச் சிலர் வெறுப்பதற்குக் காரணம் என்ன? எல்லா அக்கிரமும் செய்கின்றான். பின்பு கடவுளே என்னை மன்னித்து விடு என்கிறான். தேங்காயை உடைத்தால் கடவுள் மன்னித்து விடுவான் என்கிறான். இது மனிதனைப் பண்படுத்துமா?
ஆனால் இஸ்லாம் இப்படிச் சொல்லவில்லை. இஸ்லாத்தைப் பொறுத்தவரை மனிதனுக்குச் செய்கின்ற கடமைகளில் கடவுள் தலையிடுவது கிடையாது. இவ்வளவு சுயமரியாதை தருகின்ற மார்க்கம் இஸ்லாம் ஒன்றே!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழி ஞாபகத்திற்கு வருகிறது.
மறுமை நாளில் சில பேர் விசாரணைக்கு வரும் போது ஒருவன் அதிகமாக தர்மம் செய்து, ஹஜ் கடமையையும் நிறைவேற்றி, இன்னும் இஸ்லாம் கூறும் அனைத்துக் காரியங்களையும் ஒன்று விடாமல் செய்திருப்பான். இப்படி ஏராளமான நன்மைகளைப் பெற்றவனாக மறுமை நாளில் வந்து நிற்பான். அதே நேரத்தில் இந்த உலகத்தில் வாழும் போது ஒருவனை அநியாயமாக ஏசியும், அநியாயமாக ஒருவனுடைய பொருட்களைச் சுரண்டியும் இருப்பான். இப்படி இவனால் பாதிக்கப்பட்டவர்களும் வந்து நிற்பார்கள். இந்த நேரத்தில் அவனுக்கு நீதி வழங்கும் கடவுள் என்ன செய்கிறான் தெரியுமா? இவன் எனக்காக காலமெல்லாம் வழிபட்டவன். எனக்காகவே நேரத்தை ஒதுக்கியவன். எனக்கென்று தன்னையே அர்ப்பணித்தவன் என்று இறைவன் பார்ப்பதில்லை. மாறாக இவனுடைய நன்மைகளையெல்லாம் பிடுங்கி யாருக்கு இந்த உலகத்தில் அக்கிரமம், அநியாயம் செய்தானோ, அவனுக்குக் கொடுக்கிறான். எல்லா நன்மைகளையும் இழந்து வெறுங்கையோடு நிற்பான் என்று நபி (ஸல் அவர்கள் கூறினார்கள். எவ்வளவோ தொழுது நோன்பு வைத்து இன்னும் ஏராளமான நன்மைகளைச் சுமந்து வருபவன் இன்னொரு மனிதனுக்கு அக்கிரமம் செய்தவனாக வந்து நின்றால் அந்த அக்கிரமத்தினால் பாதிக்கப்பட்டவன் கடவுளிடம் முறையிட்டால் அவனுக்கு நீதி வழங்குவது கடவுளுடைய கடமை.
அங்கு காசு பணம் செல்லாது. அங்கு எது மனிதனுக்கு வெற்றியளிக்கும்? அவன் செய்து வந்த நல்லறங்கள் ஒன்றே வெற்றியளிக்கும். ஆக அந்த உலகத்தில் எது செல்லுமோ அந்த நல்லறங்களையே பரிசாகக் கொடுத்து விடுகிறான்.
உன்னைத் துன்புறுத்தினானா? இந்த அளவுக்கு இவனுடைய நன்மையை நீ வைத்துக் கொள்! உன்னுடைய பொருளை ஏமாற்றினானா? அந்த அளவுக்கு இவனுடைய நன்மையை எடுத்துக் கொள்! இறைவன் அவனுக்கு நீதி வழங்குவான்.
இவன் செய்த நன்மைகள் இப்படியே கரைந்து, எந்த நன்மையும் கைவசம் இல்லாதவனாக நிற்பான். அதற்குப் பின் சிலர் வந்து எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்பார்கள். உன்னுடைய தீமையைத் தூக்கி உனக்குத் துரோகம் இழைத்த இவன் தலையில் வை! என இறைவன் கூறுவான். இப்படிப்பட்ட விதி முறைகளைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம்.
கடவுளின் பெயரால் வரம்பு மீறுதல்
யாருக்குச் செய்ய வேண்டிய கடமையாக இருந்தாலும் அதில் சரியாக நடந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கு வழிபாடு செய்கிறேன் என்ற பெயரில் மனைவி மக்களுக்குச் செய்யும் கடமைகளில் இருந்து கூட ஒருவன் விலகக் கூடாதென்று சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம். கடவுளை நான் வழிபடுகிறேன். பள்ளிவாயிலில் 24 மணி நேரமும் இருக்கின்றேன் என்று கூறிக் கொண்டு மனைவியைத் தெருவில் விட்டுவிட்டுச் சென்றால் அவன் கூட இஸ்லாமியப் பார்வையில் ஒரு குற்றவாளியே.
உன்னுடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமையை மனிதன் செய்ய வேண்டும். கடவுளை வழிபடுகிறேன் என்று கூறிக் கொண்டு 24 மணி நேரமும் தூங்காமல் விழித்திருக்கக் கூடாது.
உன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
இதுவும் கூட அல்லாஹ்வுக்காகச் செய்யும் மார்க்கக் கடமை தான். தொழுகை, நோன்பு போல் இதையெல்லாம் நீ செய்ய வேண்டும். செய்யாவிட்டால் அல்லாஹ் விசாரிப்பான் எனக் கூறும் மார்க்கம் இஸ்லாம்.
ஏனைய மதங்களில் இது போல் பார்க்க முடியாது. மனைவியை ஒழுங்காகக் கவனிக்கவில்லை என்றால் அது அவனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள விஷயம் என்று ஏனைய மதங்கள் கூறும். ஆனால் இஸ்லாம் என்ன கூறுகின்றது தெரியுமா? மனைவியை ஒழுங்காகக் கவனிக்கவில்லையென்றால் அதற்கும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும். ஒழுங்காக நடந்தால் பரிசும் ஒழுங்காக நடக்கவில்லையென்றால் தண்டனையும் தருகின்ற மார்க்கம் இஸ்லாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
வாகனத்தில் ஏறியிருக்கும் ஒரு மனிதன் தனது சாட்டையைக் கீழே போட்டு விடுகிறான். அதை இன்னொருவன் எடுத்துக் கொடுக்கிறான். இதுவும் ஒரு நல்லறம். உன் மனைவியின் வாயில் ஊட்டும் ஒரு கவள உணவு இருக்கின்றதே அதற்குக் கூட நன்மை இருக்கின்றது.
மனைவியை ஒழுங்காகக் கவனித்துக் கொண்டால் அதுவும் தொழுகை போல இறைவனிடம் பரிசு வாங்கித் தரும். ஒழுங்காக மனைவியைக் கவனிக்கவில்லையென்றால் தண்டனையைப் பெற்றுத் தருகின்றது. இப்படி ஒரு சித்தாந்தம் இந்த உலகில் இருந்தால், இதை மக்கள் எல்லோரும் பின்பற்ற ஆரம்பித்தால் எல்லாத் துறையும் சீராகுமா? ஆகாதா?
கடவுளுக்காக ஒருவன் ஆண்மையை இழக்கக் கூடாது. இஸ்லாத்தில் துறவறம் மேற்கொள்வதற்குத் தடை இருக்கின்றது. ஏன்? துறவறத்தை மேற்கொள்வதனால் கடவுளுக்கு என்ன நன்மை? துறவறத்தை மேற்கொள்பவனுக்கும் நன்மை இல்லை. கடவுளுக்கும் நன்மை இல்லை.
உனக்கு ஒரு ஆண்மை என்ற பாக்கியத்தைத் தந்திருந்தால் அந்த ஆண்மையை அனுபவி! உனக்குப் பெண்மை என்ற பாக்கியத்தைத் தந்திருந்தால் அந்தப் பெண்மையை அனுபவி! மனித சக்திக்கு அப்பாற்பட்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன் என்றிருந்தால் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயத்தில் நீ தவறிழைக்க முற்பட்டு விடுவாய் என்று இஸ்லாம் அறிவுரை பகர்கின்றது.
ஒருவன் கடவுளுக்கென்று தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க அர்ப்பணிக்க அவனது மதிப்பு எல்லா மதங்களிலும் உயரும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை கடவுளுக்கு வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கின்றேன். உலகத்தைப் புறக்கணிக்கின்றேன் என்றால் அவனுடைய பதவி இறங்கும். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்திற்கும், அவனுக்கும் சம்பந்தமே இல்லை.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மூன்று நபர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நான் இனி மேல் இரவில் தூங்க மாட்டேன்; விழித்திருந்து வணங்கிக் கொண்டிருப்பேன் என்றார். மற்றொருவர் நான் திருமணம் செய்யாமலே என் வாழ்க்கையைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப் போகிறேன் என்றார். இன்னொருவர் நான் எப்போதும் நோன்பு நோற்றுக் கொண்டு இருக்கப் போகின்றேன் என்றார்.
இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர்களிடம் ‘நான் தொழவும் செய்கிறேன். தூங்கவும் செய்கிறேன். நோன்பும் நோற்கிறேன். நோன்பு நோற்காமலும் இருக்கிறேன். திருமணமும் செய்திருக்கின்றேன். எவன் ஒருவன் என்னுடைய இந்த வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல! என்று கூறினார்கள்.
கடவுளைத் திருப்திப்படுத்துகிறோம் என்ற பெயரில் நெருப்புக் குண்டத்தில் இறங்குவதும், உடம்பைக் காயப்படுத்திக் கொள்வதும், தன்னைத் தானே பல விதங்களில் வேதனைப்படுத்திக் கொள்வதும் இஸ்லாத்தில் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
மனிதன் கடவுளாக முடியாது
இஸ்லாத்தின் மற்றொரு பகுதி முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்று ஒருவன் நம்ப வேண்டும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். அவர்கள் கூட அல்லாஹ்வுடைய செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்பவர் தானே தவிர அல்லாஹ்வாக முடியாது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான்.
ஆனால் நாம் இன்று பார்க்கிறோம். ஒரு மனிதன் ஆன்மீகத்தில் கூடுதலான ஈடுபாடு வைத்திருந்தால் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டது என்று பலரும் நினைக்கின்றனர். அவரை வழிபடவும் துணிந்து விடுகின்றனர்.
ஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் சரி மனிதன் கடவுளாக ஆக முடியாது. மனிதன் எந்த நிலையிலும் மனிதனாகத் தான் இருக்க முடியும் என்று இஸ்லாம் கூறுகின்றது.
ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் கடவுளாகவோ, கடவுளின் அம்சம் பெற்றவராகவோ ஆக முடியும் என்றால் நபிகள் நாயகத்தை இஸ்லாம் அவ்வாறு அறிமுகம் செய்திருக்கும். ஆனால் அவர்களைச் சிறந்த மனிதர் என்றும், அல்லாஹ்வின் தூதர் என்றும் தான் இஸ்லாம் நம்பச் சொல்கிறது.
நபிகள் நாயகம் அவர்களிடம் பிரார்த்தனை செய்யவோ, வணக்கம் செலுத்தவோ இஸ்லாத்தில் அனுமதி இல்லை. அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது என்ற கொள்கையில் நபிகள் நாயகம் விலக்குப் பெற்றவர்கள் அல்ல என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.
ஏகத்துவக் கொள்கையை சொல்லித் தந்த காரணத்தால், கடவுளுடைய சட்ட திட்டங்களை அவர்கள் மூலம் நாம் அறிந்து கொண்ட காரணத்தால் அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்பது தான் அவர்களைப் பற்றி இஸ்லாத்தின் நிலை.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மார்க்கம் என்ற பெயரில் எதையெல்லாம் தந்தார்களோ அவை அனைத்தும் நம்மைப் படைத்த அல்லாஹ்விடம் இருந்து நமக்குத் தரப்பட்டவை என்ற நம்ப வேண்டும். இப்படி நம்புவது இஸ்லாத்தின் அடுத்த பாதியாகும்.