மனித உரிமைகளை மதிப்போம்! சொர்க்கம் பெறுவோம்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1
முன்னுரை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இறந்த பிறகு இறைவனிடத்தில் சுவனம் பெறவேண்டும் என்பதற்காக வாழ்க்கை முழுவதும் தொழுகையை நிறைவேற்றுகிறோம். பெரும் பொருளாதாரத்தை செலவு செய்து ஹஜ் செய்கிறோம். ரமலான் மாதம் வந்துவிட்டாலே மாதம் முழுவதும் பட்டினி கிடக்கிறோம். இப்படி நாம் பசி பட்டினியுடன் நோற்கும் நோன்பு, கஷ்டப்பட்டு செய்யும் வணக்கங்களின் முழு கூலி நமக்கு கிடைக்க வேண்டுமானால், மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும்.

இல்லையேல், நாம் மனிதர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறிய காரணத்தால் அல்லது மற்ற மனிதர்களின் உரிமையை பறித்த காரணத்தினால், இந்த வணக்கங்களால் நமக்கு கிடைக்கும் அளப்பெறும் நன்மைகளை பாதிக்கப்ட்டவர்களுக்கு மறுமையில் அள்ளித்தர வேண்டியது இருக்கும். மனிதர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் சம்பந்தமான சில நபிமொழிகளை கீழே தொகுத்து தந்துள்ளோம்.

எனவே, குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் மனித உரிமைகளை தெரிந்து, அவற்றை செயல்படுத்தி, நாம் செய்யும் செயல்களுக்கு முழு கூலியை பெற வேண்டும்.

அநீதி இழப்பதை தவிர்ப்போம்!
عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
لِمُعَاذِ بْنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ إِنَّكَ سَتَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ فَإِذَا جِئْتَهُمْ فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَفَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللهِ حِجَابٌ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீர் வேதமுடையவர்களிடம் செல்கிறீர். அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என்று (ஏகத்துவத்திற்கு) சாட்சியம் சொல்லும்படி அவர்களை அழைப்பீராக!

இதற்கு அவர்கள் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால், “அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான்’ என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்கு கட்டுப்பட்டுவிட்டால் “நிச்சயமாக அல்லாஹ் அவர்களில் செல்வந்தர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படுகின்ற ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான்’ என அவர்களுக்கு அறிவிப்பீராக!

அவர்கள் இதற்கும் (இசைந்து) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் சிறந்தவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும்! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பும்போது நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : (புகாரி: 1496) 

எப்படி ஒரு அடியான் இறை வணக்கத்தின் மூலம் அல்லாஹ்வை நெருங்குகிறானோ, அதைப்போலவே பாதிக்கப்பட்ட ஒருவனின் பிராத்தனைக்கும் அல்லாஹ்விடம் மிக்க நெருக்கம் இருக்கிறது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நபிமொழியில் சுட்டிகாட்டுகிறார்கள்.

எனவே, சொல்லாலும் செயலாலும் மற்றவர்களுக்கு அநீதி இழைக்காமல், இறைவனின் கோபப்பார்வையிலிருந்து தப்பிக்க முயற்சிப்போம்.

பிறர் மானம் காப்போம்
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، عَنْ أَبِيهِ ذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم

قَعَدَ عَلَى بَعِيرِهِ وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ ، أَوْ بِزِمَامِهِ- قَالَ أَيُّ يَوْمٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ قَالَ أَلَيْسَ يَوْمَ النَّحْرِ قُلْنَا بَلَى قَالَ فَأَىُّ شَهْرٍ هَذَا فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ فَقَالَ أَلَيْسَ بِذِي الْحِجَّةِ قُلْنَا بَلَى قَالَ فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ بَيْنَكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ.

அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ்) (ரலி) அவர்கள் கூறியதாவது:(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். “இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்’ என்றோம்.

அடுத்து “இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் “இது துல்ஹஜ் மாதமல்லவா?” என்றார்கள். நாங்கள் “ஆம்’ என்றோம்.

நபி (ஸல்) அவர்கள் “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று கூறிவிட்டு, “(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில்கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்” என்றார்கள்.

நூல் : (புகாரி: 67) 

மனிதர்களின் உழைப்பிற்கு கண்ணியம் வழங்குவோம்.
عَنِ الْمَعْرُورِ قَالَ
لَقِيتُ أَبَا ذَرٍّ بِالرَّبَذَةِ ، وَعَلَيْهِ حُلَّةٌ ، وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ ، فَقَالَ : إِنِّي سَابَبْتُ رَجُلاً فَعَيَّرْتُهُ بِأُمِّهِ ، فَقَالَ : لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَا أَبَا ذَرٍّ أَعَيَّرْتَهُ بِأُمِّهِ إِنَّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيَّةٌ إِخْوَانُكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَإِنْ كَلَّفْتُمُوهُمْ فَأَعِينُوهُمْ.

மஉரூர் பின் சுவைத் அவர்கள் கூறியதாவது:
நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) “ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எசமானரும்
ஒரேபோல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

“நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக்கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசிவிட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் “அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்!

அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்” என்று கூறினார்கள்.

நூல் : (புகாரி: 30) 

 سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ فَلْيُنَاوِلْهُ أُكْلَةً ، أَوْ أُكْلَتَيْنِ ، أَوْ لُقْمَةً ، أَوْ لُقْمَتَيْنِ فَإِنَّهُ وَلِيَ حَرَّهُ وَعِلاَجَهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக்கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு “ஒரு பிடி அல்லது இரு பிடிகள்’ அல்லது “ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக்கொண்டார்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 5460) 

வியாபார மோசடி அருள் வளத்தை நீக்கும்
 قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم :
الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ، أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا – فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மைபேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய்சொல்யிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்!

அறி : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி)
நூல் : (புகாரி: 2079) 

அநீதி இழைத்தவன் மன்னிப்பு கோரட்டும்
 عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم

مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَحَدٍ مِنْ عِرْضِهِ ، أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ ، وَلاَ دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.

தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளி காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.

அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 2449) 

அநீதம் இழைக்கப்பட்டவனுக்கு ஆதாரவாக அல்லாஹ்
عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
قَالَ اللَّهُ ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِ أَجْرَهُ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்குரைப்பேன் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டு, அதில் மோசடி செய்தவன்; இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!

அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 2227) 

இறைவனிடத்தில் நன் மக்களாய் நம் அனைவரும் இருப்போமாக.! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.! வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

தொகுப்பு : இப்னு சாபிரா