மனிதர்களில் சிறந்தவர்கள்
முன்னுரை
மனிதர்கள் தங்களுக்கு இருக்கும் வாழ்க்கை நிலையில் மட்டுமல்ல, பண்புகளிலும் பழக்க வழக்கங்களிலும் வேறுபட்டும் வித்தியாசப்பட்டும் இருக்கிறார்கள். ஆகையால், ஒருவரை சிறந்தவர் என்று முடிவு செய்வதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள். வேறுபாடான வித்தியாசமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.
ஒருவருடைய காரியத்தையோ பண்பையோ காரணமாக வைத்து அவரைச் சிறந்தவர் என்று சொல்வது ஒருவருடைய பார்வையில், கண்ணோட்டத்தில் சரியாக இருக்கும். அதேசமயம், மற்றவர்களின் பார்வையில் தவறாக இருக்கும். காரணம், ஒருவரிடம் தாங்கள் விரும்பும் எதிர்பார்க்கும் பண்பு இருப்பதைப் பொறுத்து அவரை நல்லவர் என்று முடிவு செய்கிறார்கள். தங்களது சுய விருப்பு வெறுப்புகளை அடிப்படையாக வைத்து தீர்மானம் செய்கிறார்கள்.
நம்மைப் பற்றி முழுமையாக அறிந்திருக்கும் ஏகஇறைவனும் அவனிடம் இறைச்செய்தியைப் பெறும் இறைத்தூதரும், ஒருவரைச் சிறந்தவர் என்று சொல்வது இவ்வாறு இருக்காது. உண்மையில் அவர்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
மக்களிடம் இருக்கும் எண்ணங்கள் மற்றும் செயல்களை மையமாக வைத்து அவர்களில் சிறந்தவர்கள் யார்? என்பது குறித்து மார்க்கம் கூறும் சில தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
ஏக இறைவனை நம்பியவர்கள்
காரணமில்லாமல் காரியமில்லை என்று சொல்வார்கள். எந்தவொரு செயலுக்குப் பின்னாலும் ஏதாவதொரு காரணம் கண்டிப்பாக இருக்கும். மிகப் பிரமாண்டமாக இருக்கும் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அதன் சீரான இயக்கத்திற்குப் பின்னாலும் காரணக் கர்த்தாவாக ஒரேயொரு இறைவன் இருக்கிறான். இத்தகைய இறைவன் ஒருவன் இருப்பதை ஒப்புக்கொள்ள மறுக்கும் மக்கள், ஏராளமாக இருக்கிறார்கள்.
அவன் கொடுத்திருக்கும் பகுத்தறிவைச் சரியாக முறையாகப் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். ஆகையால், அவனுடைய இடத்தில் படைப்பினங்களை வைத்து அவனுக்கு இணைக் கற்பிக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் சிலர், ஏக இறைவன் ஒருவன் இருக்கிறான் என்றும், அவன் மட்டுமே அனைத்து ஆற்றல்களையும் அதிகாரங்களையும் கொண்டவன் என்றும் நம்பிக்கைக் கொண்டு வாழ்கிறார்கள்.
இத்தகைய மக்கள், இவ்வாறு இல்லாத மற்ற மக்களைக் காட்டிலும் சிறந்தவர்கள்; உயர்ந்தவர்கள் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இதைப் பின்வரும் வேதவரிகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ ۖۚ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளைவிட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்!
இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவுதான் கவர்ந்தாலும் அவனைவிட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ், தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன் தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
இறையச்சம் கொண்டவர்கள்
ஒவ்வொரு மனிதனும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நம்புவதோடு அவனுக்குப் பயந்து வாழ்வது அவசியமாகும். இத்தகைய இறையச்சம் என்பது அனைவரிடமும் இருக்க வேண்டிய இன்றியமையாத பண்பாகும். தனிமனிதனும் சமுதாயமும் நன்றாக இருப்பதற்கு இந்தப் பண்பு முக்கியமான ஒன்று.
அனைத்தும் அறிந்திருக்கும் அகிலத்தின் இரட்சகனுக்கு அஞ்சி வாழும் மனிதர்கள், எல்லா விதமான காரியத்திலும் நல்ல முறையில் நடந்து கொள்வார்கள். எல்லா நேரத்திலும், இடத்திலும் இறைவனால் கவனிக்கப்படுகிறோம்; அவனால் கண்காணிக்கப்படுகிறோம் என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்படும் மக்கள், எப்போதும் நல்வழியில் வாழும் நல்லவர்களாக சிறந்தவர்களாகத் திகழ்வார்கள்.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
“அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “அவர்களில் இறையச்சம் உடையவரே” என்று பதிலளித்தார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 3490) , 3353
நற்காரியங்களைச் செய்பவர்கள்
அனைத்து விதமான அருட்கொடைகளையும், வாய்ப்புகளையும் மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அளிக்கவில்லை. மாறாக, அவன் சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் கொடுத்து இருக்கிறான். இந்நிலையில், ஏக இறைவன் நமக்குக் கொடுத்திருப்பதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, நற்காரியங்களைச் செய்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.
இறைவனை நம்பிக்கை கொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல், அவனது பாதையில் அதிகம் அதிகமாக நல்ல அமல்களைச் செய்வதன் மூலம், மனிதர்களிலேயே சிறந்தவர்கள் என்ற உயர்வான, உன்னதமான நிலையை அடைந்து கொள்ள இயலும்.
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ وَ الْمُشْرِكِيْنَ فِىْ نَارِ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَا ؕ اُولٰٓٮِٕكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ ؕ
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۙ اُولٰٓٮِٕكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ؕ
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.
கிராமவாசி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்? என்று கேட்டார். அதற்கு, மனிதர்களில் சிறந்தவர் எவரது ஆயுள் நீண்டதாகவும், நல்லமல்கள் அழகானதாகவும் இருக்கின்றதோ அவர்தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறி : அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி),
நூல் : (திர்மிதீ: 2329) (2251), அஹ்மத் (19519)
நன்மை ஏவி தீமையைத் தடுப்பவர்கள்
மனிதகுலம் வாழ்வும் வளர்ச்சியும் பெறுவதற்குரிய நன்மையான காரியங்களை இஸ்லாம் தெளிவாகப் போதித்து இருக்கிறது. அதுபோன்று அதை இகழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தள்ளுக்கிற அனைத்து விதமான தீமைகளையும் குறித்து எச்சரிக்கை செய்திருக்கிறது. இருப்பினும், அதிகமான மக்கள் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளைச் செய்வதில் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். நன்மையான செயல்களை மறந்தவர்களாக அல்லது அவற்றைப் புறக்கணித்தவர்களாக இருக்கிறார்கள்.
ஆகையால், அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த சத்தியத்தின் அடிப்படையில் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். இது இறைவனிடம் இருக்கும் சிறந்தவர்களின் பட்டியலில் நம்மை இடம் பெறச் செய்யும்.
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! வேதமுடையோர் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.
மார்க்கத்திற்காகப் போராடுபவர்கள்
படைத்தவனின் மகத்தான கிருபையால் இந்த இஸ்லாமிய மார்க்கம் நமக்குக் கிடைத்திருக்கிறது. நாம் முஸ்லிம்களாக இருக்கிறோம். நமக்குக் கிடைத்திருக்கும் சத்திய நெறிமுறைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற தூய எண்ணமும் அதற்குத் தோதுவான செயல்பாடுகளும் நம்மிடம் இருக்க வேண்டும்.
இந்த கருத்தினைப் பிரதிபலிக்கும் வகையில், சத்திய மார்க்கம் மேலோங்க செய்வதற்காக உளமாற உழைப்பவர்கள் இருக்கிறார்கள். அதற்காக தங்களிடம் இருக்கும் அனைத்தையும் அர்ப்பணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வாறு, இறைவனின் போதனைகளை பாதுகாப்பதற்கு போராடும், எட்டு திக்கும் பரப்புவதற்கு பாடுபடும் மக்கள், என்றும் சிறந்தவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அதற்கு, “அல்லாஹ்வின் பாதையில் தமது உயிராலும் பொருளாலும் போராடுகின்ற இறைநம்பிக்கையாளரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள்.
“பிறகு யார்?” என்று அந்த மனிதர் கேட்டார். அதற்கு, “பிறகு (மக்களில் சிறந்தவர் யாரெனில், குழப்ப நேரங்களில்) மலைக் கணவாய்களில் ஒன்றில் ஒதுங்கி, தம் இறைவனை வழிபட்டவாறு தம்மால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருகின்ற இறைநம்பிக்கையாளர் ஆவார்” என்று விடையளித்தார்கள்.
அறி : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : (புகாரி: 2786) , 3836
தூய உள்ளம் கொண்டவர்கள்
அனைத்துச் செயல்களும் எண்ணங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன என்று போதிக்கும் மார்க்கம் இஸ்லாம். எந்தவொரு காரியத்தையும் மறுமையில் இறைவனிடம் நற்கூலியைப் பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற தூய நோக்கத்துடன் செயல்படுத்த வேண்டும். ஏதேனும் ஒரு நற்காரியத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தாலே அதற்கும் நமக்காக நன்மை பதிவு செய்யப்படும். எனவே எந்நேரமும் நமது உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எந்த வகையிலும் தீமையான எண்ணங்களை, நோக்கங்களை குடியேற விடாமல் விழிப்புடன் வாழ வேண்டும். இவ்வாறு, தீய உணர்வுகளை சிந்தனைகளை தவிர்த்து விட்டு உள்ளத்தை தூய்மையாக வைத்துக் கொள்பவர்கள், மக்களில் உயர்ந்தவர்கள் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
நபி (ஸல்) அவர்களிடம் மக்களில் சிறந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவர் என்று பதிலளித்தார்கள். அப்போது மக்கள் உண்மை பேசுபவரைப் பற்றி அறிவோம். ஆனால் தூய உள்ளம் கொண்டவர் என்றால் யார்? என்று வினவினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் தூய உள்ளம் கொண்டவர் யாரெனில் அவரது உள்ளத்தில் பாவமோ, அநியாயமோ, குரோதமோ, பொறாமையோ இருக்காது என்றார்கள்.
அறி : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : (இப்னு மாஜா: 4216) (4206)
நற்குணம் கொண்டவர்கள்
ஒருவர் எல்லா வகையிலும் சிறந்தவராக இருக்க வேண்டும் என்றால், அவர் நற்குணம் நிறைந்தவராக இருக்க வேண்டும். நற்குணம் இல்லாதவர் எண்ணற்ற திறமைகளை ஆற்றல்களை கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் அர்த்தமற்றதாக ஆகிவிடும்.
நற்குணங்களை நடைமுறையில் தொலைத்துவிட்டு, எவ்வளவுதான் சத்தியக் கொள்கையைக் குறித்து உரக்கக் கூறினாலும், அவை அனைத்தும் வீணாகிவிடும். எனவே, சத்தியத்தை ஏற்று, அதை அழகிய முறையில் செயல்படுத்தி, அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்லும் பணியில் இருக்கும் நாம் நற்குணங்களைப் பிரதிபலிக்கும் நன்மக்களாக இருக்க வேண்டும். அவை, நம்மை சிறந்தவர்களாக மிளிர வைக்கும்.
நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. “உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே” என்று அவர்கள் கூறுவார்கள்.
அறி: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : (புகாரி: 3559)
حِينَ قَدِمَ مَعَ مُعَاوِيَةَ إِلَى الْكُوفَةِ فَذَكَرَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ لَمْ يَكُنْ فَاحِشًا ، وَلاَ مُتَفَحِّشًا وَقَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : إِنَّ مِنْ أَخْيَرِكُمْ أَحْسَنَكُمْ خُلُقًا.
மஸ்ரூக் பின் அஜ்தஉ அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்களுடன் (இராக்கிலுள்ள) கூஃபா நகருக்கு வந்திருந்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்து, “அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை” என்று கூறிவிட்டு, “நற்குணமுடையவரே உங்களில் மிகவும் சிறந்தவர்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றும் கூறினார்கள்.
நூல் : (புகாரி: 6029)
பிறருக்குத் துன்பம் தராதவர்கள்
நமது வாழ்நாளில் அனைத்து காரியங்களும் நன்றாக இருக்க வேண்டும்; எப்போதும் இன்பமாக சந்தோசமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எந்தவொரு நிகழ்விலும் தீமை ஏற்பட்டு விடக்கூடாது; துன்பத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று நினைக்கிறோம். இதே எதிர்பார்ப்பும் எச்சரிக்கை உணர்வும் அடுத்தவர் விஷயத்திலும் நமக்கு இருக்க வேண்டும்.
பிற மக்களுக்கு நம்மால் முடிந்த நன்மை செய்பவர்களாக இருக்க வேண்டும். நன்மைகளைச் செய்யாவிட்டாலும், ஒருபோதும் தீமையைச் செய்துவிடக் கூடாது. இவ்வாறு பிறருக்கு எந்த விதத்திலும் தொல்லைகள், இடையூறுகள், தீங்குகள் தாராமல் வாழ்பவர்கள், சமூகத்தில் இருக்கும் சிறந்த மனிதர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவருடைய நாவிலிருந்தும் கரத்தில் இருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள்.
அறி : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : (புகாரி: 11) ,(முஸ்லிம்: 64)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அமர்ந்திருக்கும் மக்களுக்கு முன்னால் வந்து நின்று, உங்களில் சிறந்தவர் யார்? கெட்டவர் யார்? என்பதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் அமைதியாக இருந்தார்கள். எனவே, நபியவர்கள் அதே வார்த்தையை மூன்று முறை மீண்டும் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிறந்தவர் யார், கெட்டவர் யார் என்பதை எங்களுக்கு அறிவியுங்கள் என்று கூறினார்.
அதற்கு, உங்களில் எவரிடம் இருந்து நன்மையான காரியங்கள் (மக்களிடம்) எதிர்பார்கப்படுமோ, தீமையான காரியங்கள் குறித்து பயப்படப்படாதோ அவர்தான் உங்களில் சிறந்தவர். மேலும், உங்களில் எவரிடம் இருந்து நன்மையான காரியங்கள் (மக்களிடம்) எதிர்பார்க்கப்படாதோ, தீமையான காரியங்கள் பயப்படப்படுமோ அவர்தான் உங்களில் கெட்டவர் என்று நபியவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (திர்மிதீ: 2263) (2189)
பதவியை வெறுப்பவர்கள்
உலக இன்பங்கள் மனிதனை, மார்க்கத்தை மறந்து வாழும் மோசமான நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. அத்தகைய சுகபோகங்களுள் முக்கிய ஒன்றாக இருப்பது பதவி. பதவி சுகமும், அதை அடைவதற்காக இருக்கும் அளப்பறிய ஆசையும் மனிதர்களை மார்க்கத்தின் வரம்புகளை மீற வைக்கின்றன.
நாலுபேராவது நமக்குக் கீழே கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற பேராசை, அவர்களைப் பொறுப்பில் அல்லது பதவியில் அமரத் துடிக்க வைக்கிறது. நாளடைவில் அதற்காக அநியாயமான காரியங்களில் கூட சகஜமாக இறங்கிவிடுகிறார்கள். எனவே, பதவி மோகத்திற்கு அடிமையாகி விடாமல், அதற்காக அலைந்து திரிபவர்களாக இல்லாமல், தங்களது கடமைகளை சரிவர செய்யும் சிறந்தவர்களாக நாம் இருக்க வேண்டும்.
மக்களை நீங்கள் சுரங்கங்களாகக் காண்கிறீர்கள். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாக இருப்பார்கள்; மார்க்க அறிவைப் பெற்றுக் கொண்டால்.
இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள், அவர்களில் அதிமாக இதை வெறுப்பவர்கள் தாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: (புகாரி: 3493)
கடனைத் திருப்பிச் செலுத்துபவர்கள்
இறைவழியில் உயிரை இழந்த தியாகியாக இருந்தாலும், தாம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாதவராக இருந்தால், அவர் சொர்க்கம் செல்ல இயலாது என்று இஸ்லாம் எச்சரிக்கிறது. இதன் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது எந்தளவிற்கு மிகப்பெரும் குற்றம் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே, நாம் பிறரிடம் பெற்றிருக்கும் கடனை அழகிய முறையில் திருப்பித் தருபவர்களாக இருக்க வேண்டும்.
நமக்கு உதவிய நல்லுள்ளம் கொண்டவர்களை ஏமாற்றாமல், அவர்களிடம் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்தும் நாணயமான மக்களாக இருக்க வேண்டும். இந்தச் சிறப்புக்குரிய செயலை செய்பவர்கள், இறைவனின் பார்வையில் சிறந்தவர்கள் ஆவர்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு, குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகம் ஒன்றை (கடனாகப் பெற்றதைத் திருப்பிச் செலுத்தும் வகையில்) கொடுக்க வேண்டியிருந்தது. அதை அவர் (திருப்பிச் செலுத்தும்படி) கேட்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) அவருக்கு அதைக் கொடுத்து விடுங்கள்!” என்றார்கள். அந்த வயதுடைய ஒட்டகத்தைத் தேடிய போது, அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தான் தோழர்கள் கண்டார்கள்.
அதை கொடுத்துவிடுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அம்மனிதர், எனக்கு நீங்கள் நிறைவாகத் தந்துவிட்டீர்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு நிறைவாகத் தருவான்’ என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 2390) , (2609)
குழப்பங்களைத் தவிர்ப்பவர்கள்
குழப்பம் விளைவிப்பது கொலையைவிடக் கொடியது என்பது குர்ஆனின் போதனை. இதன் மூலம் குழப்பத்தின் கோரமுகத்தை, அதன் விஷத்தன்மையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. குழப்பம் என்பது குடும்பம், நாடு, சமுதாயம் என்று எந்த இடத்தில் இருந்தாலும் அதை அடியோடு பாழ்படுத்திவிடும். இதையறிந்தும், தங்களது ஆதாயங்களுக்காக மக்களுக்கு மத்தியில் பிரச்சனைகளை, பிணக்குகளை கிளப்பிவிடுபவர்கள் இருக்கிறார்கள். தங்களது சுயநலத்துக்காக குழப்பங்களை ஏற்படுத்துபவர்கள் அல்லது இருக்கும் குழப்பத்தை வளர்த்துவிடுபவர்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு, நம்பிக்கையாளர்கள் ஒருபோதும் இருந்துவிடக் கூடாது. குழப்பமான தருணங்களின்போது அதைத் தீர்ப்பதற்கு, நீக்குவதற்கு முடிந்தளவு முயல வேண்டும். இல்லாவிடின், அதை வளர்த்து விடாமல் அதைவிட்டும் விலகிக் கொள்ள வேண்டும். இது மார்க்கம் காட்டும் சிறப்பான வழிமுறை ஆகும்.
விரைவில் நிறையக் குழப்பங்கள் தோன்றும். (அந்த நேரத்தில்) அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் (அவற்றுக்காக) எழுந்து நிற்பவனை விடச் சிறந்தவன் ஆவான். அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் (அவற்றை நோக்கி) நடந்து சென்று விடுபவனை விடச் சிறந்தவன் ஆவான்.
அப்போது நடந்து சென்று விடுபவன் (அவற்றை நோக்கி) ஓடுபவனை விடச் சிறந்தவன் ஆவான். எவர் அதை அடைகின்றாரோ அது அவரை வீழ்த்தி அழித்துவிட முனையும். அப்போது எவர் புகலிடத்தையோ, அபயம் தரும் இடத்தையோ பெறுகின்றாரோ அவர் அதைக் கொண்டு பாதுகாப்பு பெற்றுக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 3601)
ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அதற்கு, “அல்லாஹ்வின் பாதையில் தமது உயிராலும் பொருளாலும் போராடுகின்ற இறைநம்பிக்கையாளரே (மக்களில் சிறந்தவர்)” என்று பதிலளித்தார்கள். “பிறகு யார்?” என்று அந்த மனிதர் கேட்டார்.
அதற்கு, “பிறகு (மக்களில் சிறந்தவர் யாரெனில், குழப்பமான நேரங்களில்) மலைக் கணவாய்களில் ஒன்றில் ஒதுங்கி, தம் இறைவனை வழிபட்டவாறு தம்மால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருகின்ற இறைநம்பிக்கையாளர் ஆவார்” என்று விடையளித்தார்கள்.
அறி : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : (புகாரி: 2786) , 3836
குர்ஆனைக் கற்றுக் கொடுப்பவர்கள்
மனிதர்களை நேர்வழியில் அழைத்துச் செல்வதற்கு அல்லாஹ்வினால் இறுதித் தூதராக நியமிக்கப்பட்டவர் மும்மது நபி (ஸல்) அவர்கள். அல்லாஹ்விடம் இருந்து அவர்களுக்கு அருளப்பெற்ற அற்புதங்களில் மிகவும் சிறந்தது, திருமறைக் குர்ஆன். இது, சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டும் ஒப்பற்ற வேதம். திருக்குர்ஆன் போதிக்காமல் மீதமாக விட்டிருக்கும் வழிகாட்டுதல் என்று ஏதுமில்லை.
ஆன்மீகம், அரசியல், அறிவியல் என்று அது அனைத்துத் துறைகளைப் பற்றியும் பேசுகிறது. வழிகேடு எனும் இருந்து மீண்டு நேர்வழி பக்கம் பயணிப்பதற்கு ஒளிவீசும் கலங்கரையாக இருக்கும் குர்ஆனைக் கற்று, பிறருக்குக் கற்றுத்தரும் சிறந்த மக்களாக நாம் இருக்க வேண்டும்.
குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தவரே உங்களில் சிறந்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி),
நூல் : (புகாரி: 5028)
இணக்கம் கருதி சலாம் சொல்பவர்கள்
நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கும் மத்தியில் ஏதாவதொரு விஷயத்திலும் எந்தவொரு மனஸ்தாபமும் வரவே வராது என்று எவராலும் உறுதியிட்டு கூற முடியாது. காரணம், மனிதர்கள் என்ற அடிப்படையில் நம்மிடம் இருக்கும் குறைகளால் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இதுபோன்ற தருணங்களில் ஒருவருக்கொருவர் குரோதம் கொண்டு பழிவாங்கும் காரியங்களில் இறங்குபவர்கள் இருக்கிறார்கள். பல நாட்கள் பகைமை கொண்டு வழியில் முறைத்துக் கொள்கிறார்கள்; உறவை, நட்பை முறித்துக் கொள்கிறார்கள். பல நாட்கள் பேசாமல் இருக்கிறார்கள். இவ்வாறு இல்லாமல், தவறை மறந்து மன்னித்து முதலில் சலாம் சொல்பவர் சிறந்தவர் என்று மார்க்கம் கூறுகிறது.
ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட தன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரை விட்டு அவரும், அவரை விட்டு இவரும் முகம் திருப்பிக்கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது.) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவர் ஆவார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி),
நூல் : (புகாரி: 6077) , (6237)
படைத்தவனைத் துதிப்பவர்கள்
ஏழு வானங்கள், பூமி மற்றும் அவற்றுள் இருக்கின்ற அனைத்துக்கும் உரிமையாளனாக இருக்கும் ஏக இறைவன், மிகப் பெரியவன். அவனது அனுமதி இல்லாமல் அணுவும் அசையாது. ஆதலால், அவனே அனைத்துப் புகழுக்கும் உரித்தானவன்; தகுதியானவன். அவன் அனைத்து விதமான தேவைகள், பலவீனங்களை விட்டும் பரிசுத்தமானவன்; தூயவன்.
இதை நினைவில் கொண்டு முஃமின்கள் அவனது திருப்பெயர்களை குறிப்பிட்டு துதிக்க வேண்டும். அவனது அரும் பெருமைகளை மறக்காமல் போற்றிப் புகழ வேண்டும். நித்திய ஜீவனை நினைவு கூறும் பண்பினை கொண்டவர்கள், வாழும் மக்களிலேயே மிகச் சிறந்தவர்கள் என்பதை கீழ்வரும் நபிமொழி மூலம் அறியலாம்.
ஏழைகள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்)கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் தங்களது அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ரா செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவளிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே)” என்று கூறினர்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்த சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட (செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம். உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர (அவர்களாலும் அச்சிறப்பை அடைய முடியாது.)
(அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை தஸ்பீஹ் (ஸுப்ஹானல்லாஹ்) சொல்லுங்கள்; 33 தடவை தஹ்மீத் (அல்ஹம்துலில்லாஹ்) கூறுங்கள்; 33 தக்பீர் (அல்லாஹு அக்பர்) சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாக கருத்து வேறுபாடு கொண்டோம். எங்களில் சிலர் ஸுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை கூறவேண்டும்” என்றனர். ஆகவே நான் நபி (ஸல்) அவர்களிடமே திரும்பி (ச் சென்று இதுபற்றி வினவி)னேன். நபியவர்கள், “ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ் தூயவன்; அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்; அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவை கூறியதாக அமையும்” என்று பதிலளித்தார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 843)
மனைவியரிடம் சிறந்தவர்கள்
ஒருவர், தாம் அவ்வப்போது சந்திக்கிற சமுதாய மக்களிடம் தமது சுய குணங்களை மறைத்து விடலாம். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசி போலியாக நடிக்க முடியும். ஆனால், எப்போதும் தொடர்பு கொள்கின்ற, அடிக்கடி சந்திக்கின்ற தமது குடும்பத்தாரிடம் இப்படி இருக்க முடியாது. அவர்களிடம் தமது உண்மையான பண்புகளை வாழ்நாள் முழுவதும் மறைத்து விட இயலாது.
அந்த வகையில், ஒருவருடைய இயல்புகள் குறித்து பிற மக்களை காட்டிலும் அவருடைய வாழ்க்கை துணைவியாக இருப்பவர், அதிகமாக முழுமையாக அறிந்து வைத்திருப்பார் என்பதே உண்மை. இந்த நிலையில், தமது மனைவியிடம் சிறந்த பண்பாளர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் ஒருவர் நிச்சயம் சிறந்தவர்தான்.
இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!’என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (திர்மிதீ: 1162) (1082)
உண்மையைப் பேசுபவர்கள்
உண்மை என்பது நன்மையின் பக்கம் வழிகாட்டும்; நன்மை என்பது சொர்க்கத்திற்கு வழிகாட்டும் என்பதை என்றும் நினைவில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். உண்மைக்கு புறம்பாக பொய்யை மட்டுமே மூலதனமாக கொண்டு வாழ்பவர்கள் உலகெங்கும் இருக்கிறார்கள். உலக வாழ்வின் நலனுக்காக வேண்டி, உண்மையை மறைத்து பொய்யை பேசுபவர்கள், அதைப் பரப்புகிறவர்கள் எங்கும் உள்ளார்கள்.
இவர்களுக்கு மாற்றமாக, எந்தச் சூழ்நிலையிலும் இக்கட்டான நிலையிலும் உண்மையை உரைப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதை மறுக்க இயலாது. இதனால் இவர்கள் இறைவனிடம் சிறந்த நிலையை அடைவதைப் போன்று நாமும் திகழ, உண்மையை பேசுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களிடம் மக்களில் சிறந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உண்மை பேசும் ஒவ்வொருவரும் மற்றும் தூய உள்ளம் கொண்டவரும் ஆவர் என்று பதிலளித்தார்கள்.
அறி : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : (இப்னு மாஜா: 4216) (4206)
மனவலிமை கொண்டவர்கள்
அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்தும் நடக்கும் என்ற ஆழமான நம்பிக்கை நம்மிடம் இருக்க வேண்டும். அவனது அனுமதியின்றி எந்தவொரு துன்பமும் சிக்கலும் நம்மை அணுகாது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். முழுமையான நம்பிக்கையாளர்கள், எந்தவொரு பிரச்சனைகள் வந்தாலும் துவண்டு விடாமல் தளர்ந்து விடாமல் படைத்தவனின் மீது ஆதரவு வைத்து செயல்படுவார்கள்.
எனவே, நமது வாழ்வில் நடந்து முடிந்த துன்பத்தை நினைத்து கவலையில் வீழ்ந்துவிடாமல் மன வலிமை கொண்டவர்களாக இருக்க வேண்டும். எல்லா நிலையிலும் மனதளவிலும் செயலளவிலும் உறுதியாக வலிமையாக இருப்பதற்கு இன்றே சபதம் ஏற்போமாக.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலமான இறை நம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரைவிடச் சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான வரும் ஆவார். ஆயினும், அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்குப் பயனளிப்பதையே நீ ஆசைப்படு.
இறைவனிடம் உதவி தேடு. நீ தளர்ந்துவிடாதே. உனக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும்போது, “நான் (இப்படிச்) செய்திருந்தால் அப்படி அப்படி ஆயிருக்குமே!” என்று (அங்கலாய்த்துக்) கூறாதே. மாறாக, “அல்லாஹ்வின் விதிப்படி நடந்துவிட்டது. அவன் நாடியதைச் செய்துவிட்டான்” என்று சொல்.
ஏனெனில், (“இப்படிச் செய்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே’ என்பதைச் சுட்டும்) “லவ்’ எனும் (வியங்கோள் இடைச்)சொல்லானது ஷைத்தானின் செயலுக்கே வழி வகுக்கும்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : (முஸ்லிம்: 5178)
தங்கள் மீது நல்ல கண்ணோட்டம் கொண்டிருக்கும் மக்களிடம் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக தங்களை அவர்களுக்கு தோதுவாக மாற்றிக் கொள்ளும் மக்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இதற்காக மார்க்கத்திற்கு மாற்றமாக அவர்கள் விரும்பும் காரியங்களையும் செய்யத் துணிந்து விடுகிறார்கள்.
இத்தகையவர்கள் இதன் மூலம் இவ்வாறு ஒரு சில மனிதர்களிடம் பாராட்டினைப் பெறலாம். அதேநேரம், இதற்காக இவர்கள் செய்யும் தீமையான, அநியாயமான, மோசமான காரியங்களின் காரணத்தால் மறுமையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் முன்னிலையில் பழிப்புக்கும் இகழ்ச்சிக்கும் ஆளாவார்கள்.
எனவே, மார்க்கம் கூறும் செயல்களைச் செய்வதில்தான் உண்மையான சிறப்பு இருக்கிறது. இதன் மூலம் மட்டுமே அல்லாஹ்வும் அவனது தூதரும் ஈருலகிலும் அங்கீகரிக்கும் சிறந்தவர்கள் எனும் பாராட்டும் பாக்கியமும் கிடைக்கும். இதை உணர்ந்து நன்முறையில் வாழ்வோமாக.
எம். மும்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) மங்கலம்