மனிதரில் மாணிக்கம்
கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
உலக மக்களுக்கு ஓர் அருட்கொடையாம் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியைப் பின்பற்றி, அவர்களுடைய புகழை உலகமெங்கும் பரவச் செய்வது முஸ்லிம்களிலுள்ள ஆண், பெண் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
இவ்வுலகத்தில் எத்தனையோ மனிதர்கள் தலைவர்கள் என்ற பெயரில் வாழ்ந்து மறைந்துள்ளார்கள். ஆனால் அவர்களுடைய புகழெல்லாம் அவர்கள் உயிருடன் இருந்ததோடு சரி!
ஒரு சில தலைவர்கள் மட்டும் வருடத்தில் ஒரு முறையோ, இரு முறையோ நினைவஞ்சலி, பிறந்த நாள் என்ற பெயரில் புகழப்படுகின்றார்கள். அதுவும் அதைக் கொண்டாடுபவர்கள் ஏதாவது ஒரு சுயநலத்திற்காகவே அந்த நாளைக் கொண்டாடுகின்றார்கள். ஆனால் இது போன்று போலியான முறையில் புகழப்படாமல் உண்மையான முறையில் புகழப்படும் ஒரே தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டும் தான்.
உமது புகழை உயர்த்தினோம்.
அல்லாஹ் எந்த அளவுக்கு அவர்களுடைய புகழை உயர்த்தி வைத்துள்ளான் என்றால் நபி (ஸல்) அவர்களை இறைவனுடைய தூதர் என்று ஏற்றுக் கொள்ளாத கிறித்தவ மதத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் மைக்கேல் ஹார்ட் என்பவர், தான் எழுதிய நூறு பேர் என்ற புத்தகத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு முதல் இடத்தைக் கொடுத்துள்ளார். இதற்கெல்லாம் காரணம் நபி (ஸல்) அவர்களுடைய அப்பழுக்கற்ற, தூய்மையான வாழ்க்கை தான். அவர்களுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருந்தது.
கோடான கோடி முஸ்லிம் மக்களின் இதயத்தில் இடம் பிடித்த நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களைப் பற்றியும், அவர்களுடைய சிறப்பைப் பற்றியும் பிற மக்களுக்கு விளக்குவது அவசியமாகும். ஏனெனில்
நபி (ஸல்) அவர்கள், என்னைப் பற்றி ஒரு செய்தி கிடைத்தாலும் அதை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறினார்கள்.
நூல்: (புகாரி: 3461)
இன்றைய காலத்தில் தலைவர்கள் என்று சொல்லக் கூடியவர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் சொன்னதைக் காற்றில் பறக்க விட்டு விடுகின்றார்கள். ஒரு சில தலைவர்கள் சொன்னதைச் செய்வதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு சிலவற்றைச் செய்து காட்டுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் தாம் மக்களுக்கு எதை ஏவினார்களோ அதன்படி செயல்படுத்தி, அதனால் எவ்வளவு தொல்லைகள் வந்தாலும், எவ்வளவு பெரிய இழப்புகள் வந்தாலும் அவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்து காட்டினார்கள்.
தொழுகையைப் பற்றி மக்களுக்கு ஏவினார்கள். இன்னும் அதைப் பற்றி வலியுறுத்தியும் உள்ளார்கள். மக்களுக்கு ஏவியபடியே தானும் செயல்பட்டு வந்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் தமது இறுதிக் கட்டத்தில் எழுந்து வர முடியாத ஒரு சூழ்நிலையில் கஷ்டப்பட்ட போது கூட, இரு மனிதர்களின் உதவியுடன் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களின் நோய் அதிகமாகி அதனால் வேதனை கடுமையான போது, என்னுடைய வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக மற்ற மனைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் அனுமதி வழங்கினார்கள். அவர்கள் வெளியில் வரும் போது, இரண்டு பேர்களுக்கு இடையில் தொங்கியவாறு (தொழுகைக்கு) வந்தார்கள். அப்போது அவர்களது கால் விரல்கள் பூமியில் கோடிட்டுக் கொண்டிருந்தன.
நூல்: (புகாரி: 665)
கடுமையான நோயுற்றிருந்த சமயத்திலும் எதையும் காரணம் காட்டி சமாளிக்காமல் தாம் சொன்னதைச் செய்து காட்டியவர்கள் தான் நபி (ஸல்) அவர்கள்.
இறைவனை அஞ்சி நடக்கும் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அதிகமாக உபதேசம் செய்துள்ளார்கள். மரண வேதனை, மண்ணறை வேதனை, மறுமை வேதனை போன்றவற்றைக் கொண்டு இறையச்சத்தைப் போதித்தார்கள்.
இதிலும் சற்றும் பிசகாமல் தமது வாழ்க்கையில் செயல்படுத்திக் காட்டினார்கள். இறையச்சம் என்பது இறைவனுக்கு மட்டும் தெரியக் கூடிய ஒரு விஷயமாகும். அதாவது இறையச்சம் என்பது மனிதன் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக செய்யும் காரியமல்ல! சுயநலத்திற்காக செய்யும் காரியமும் அல்ல! மாறாக இறைவனுக்காக மட்டுமே செய்யப்படும் காரியம் தான் இறையச்சமாகும். இதிலும் நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே செய்து காட்டியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுது விட்டு உடன் விரைந்து வீட்டினுள் சென்று தாமதிக்காமல் வெளியே வந்தார்கள். அப்போது அவர்களிடம் அதற்கான காரணம் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “நான் எனது வீட்டில் தர்மப் பொருளான தங்கக் கட்டியை வைத்திருந்தேன். அப்பொருளுடன் இரவைக் கழிக்க நான் விரும்பவில்லை. எனவே அதைப் பங்கிட்டுக் கொடுத்து விட்டேன்” என்று கூறினார்கள்.
அறி: உக்பா பின் ஹாரிஸ் (ரலி)
நூல்: (புகாரி: 1430)
இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தவுடன் வேகமாகச் சென்றது என்ன காரணத்திற்காக என்று அவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களிடம் தர்மப் பொருளான தங்கக் கட்டி இருந்ததும் யாருக்கும் தெரியாது. நபித்தோழர்கள் கேட்ட பிறகு தான் தெரிந்து கொண்டார்கள். இருப்பினும் தம்மிடம் இருந்த பொருளை ஏழைகளிடம் ஒப்படைப்பதில் அதிகக் கவனம் எடுத்துள்ளது அவர்களின் இறையச்சத்தைக் காட்டுகின்றது.
நபி (ஸல்) அவர்களின் நேர்மையை நன்கு விளங்கி வைத்திருந்த அன்றைய கால மக்கள் சந்தேகப்பட மாட்டார்கள். மேலும் நபி (ஸல்) அவர்களின் குடும்பமும் மிகவும் வறுமையில் தான் இருந்தது. அப்படியிருந்தும் அவர்கள் இறையச்சத்தைப் பேணி நடந்ததை நாம் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளோம். நபி (ஸல்) அவர்களின் இறையச்சத்தை எடுத்துக் காட்டும் மற்றொரு செய்தியைப் பார்ப்போம்.
அறுவடை செய்யும் போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுடைய பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறி விடும். (சிறுவர்களான) ஹஸன், ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலோடு விளையாடுவார்கள்.
ஒருநாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்து விட்டு, “முஹம்மதின் குடும்பத்தினர் ஸகாத் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” என்று கேட்டார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 1485)
சிறுவர்கள் செய்யும் தவறுகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதிலும் தலைவர் வீட்டுக் குழந்தைகள் செய்யும் தவறுகள் பெரியதாக இருந்தாலும் அதைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இது போன்ற நேரத்திலும் கூட நபி (ஸல்) அவர்கள் இறையச்சத்தைப் பேணியுள்ளது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.
நீதம் செலுத்தும் விஷயத்தைப் பற்றி மக்களிடம் சொல்வது எளிது. ஆனால் அதை நிறைவேற்றுவது மிகக் கடினம். அதுவும் நமது குடும்பத்தார் விஷயத்தில் நீதம் செலுத்துவது மிகவும் கடினம். நீதத்தைப் பற்றிப் பேசக் கூடியவர்கள் தடுமாறக் கூடிய இடம், தன்னுடைய குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு, அதில் தீர்ப்பு சொல்லும் நேரம் தான். நமக்குப் பிடித்தமானவர்களுக்காக தீர்ப்பை மாற்றிச் சொல்லவும் தயங்க மாட்டோம். நியாயம் என்று தெரிந்தும் கூட அநியாயத்திற்குச் சாதகமாக தீர்ப்பு சொல்பவர்களையும் நாம் பார்க்கிறோம்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் தமக்கு மிகவும் விருப்பமான உஸாமா (ரலி) அவர்கள் வந்து, தண்டனையை மாற்றச் சொன்ன போது மிகக் கடுமையான கோபத்தை வெளிப்படுத்துவதுடன் நீதத்தை நிலை நாட்டினார்கள்.
குரைஷ் கோத்திரத்தின் உட்பிரிவான மக்ஸூமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷிக் குலத்தவருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணுக்கு திருட்டுக் குற்றத்திற்காக கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது.)
இது பற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர். “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும்?” என்று கருதினார்கள். உஸாமா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரை செய்கின்றீரா?” என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள்.
“உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் தான் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்” என்று பிரகடனம் செய்தார்கள்.
அறி: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 3475)
நபி (ஸல்) அவர்கள் சிறுவர்கள் விஷயத்திலும் நீதம் செலுத்தினார்கள். சிறுவர்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளப்படாத கால கட்டத்தில் வாழும் நாம் நபி (ஸல்) அவர்கள் நீதம் செலுத்தும் விஷயத்தில் சிறுவர், பெரியவர் என்ற வித்தியாசம் பாராமல் நீதம் செலுத்திய செய்தி நம்மைப் பிரமிக்க வைக்கின்றது.
நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் பானம் கொண்டு வரப்பட்டால் அதை அருந்தி விட்டு மீதத்தை வலதுபுறத்தில் இருப்பவருக்குத் தருவார்கள். ஆனால் ஒரு முறை பெருமானாரிடத்தில் குவளையில் பானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்களின் வலதுபுறம் சிறுவனும் இடது புறம் பெரியவர்களும் அமர்ந்திருந்தார்கள்.
பெரியவர்களுக்கு முதலில் தர வேண்டும் என்று எண்ணி அந்தச் சிறுவனிடத்தில், “இதை நான் இந்தப் பெரியவர்களுக்குத் தரட்டுமா?” என்று அனுமதி வேண்டினார்கள். ஆனால் அந்த சிறுவன், “அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்கு கிடைக்கக் கூடிய மீதத்தை நான் எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் அதை அச்சிறுவனுடைய கையில் வைத்து விட்டார்கள்.
அறி: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: (புகாரி: 2351)
ஒரு மனிதனுடைய உண்மையான செயலைத் தெரிந்து கொள்வதற்கு மிகத் தகுதியான இடம் அவனுடைய வீடு தான். ஏனெனில் ஒருவன் வெளியிடங்களில் நல்ல முறையில் நடக்கலாம். மற்றவருக்குப் பயந்தோ அல்லது புகழை விரும்பியோ அச்செயலைச் செய்யலாம். ஆனால் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வான். யாரும் அவனை எதுவும் கேட்க முடியாது.
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஏவியபடியே தமது வீட்டிலும் நடந்துள்ளார்கள். வெளியிடங்களிலும் நற்குணத்துடன் நடந்து கொண்டார்கள். அவர்களுடைய வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் வந்ததில்லை.
நபி (ஸல்) அவர்கள் கெட்ட பேச்சு பேசுபவர்களாகவோ, கெட்ட செயலைச் செய்யக் கூடியவர்களாகவோ இருந்ததில்லை.
அறி: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: (புகாரி: 6069)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திட்டக் கூடியவர்களாகவோ, கெட்ட வார்த்தைகள் பேசக் கூடியவர்களாகவோ, சபிக்கக் கூடியவர்களாகவோ இருந்ததில்லை.
அறி : அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: (புகாரி: 6046)
நான் நபி (ஸல்) அவர்களுடன் சென்றேன். அவர்கள் மீது ஓரம் கடினமான நஜ்ரான் தேசத்து ஆடை இருந்தது. அப்போது ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து அவர்களுடைய மேலாடையைப் பிடித்துக் கடுமையாக இழுத்தார். அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் நபி (ஸல்) அவர்களுடைய தோளில் காயம் ஏற்பட்டதை நான் பார்த்தேன். பிறகு அந்தக் கிராமவாசி, “முஹம்மதே! உம்மிடம் இருக்கின்ற அல்லாஹ்வின் பொருளை எனக்குக் கொடுப்பீராக!” என்று கூறினார். நபியவர்கள் அவரை திரும்பிப் பார்த்துச் சிரித்து விட்டு, அவருக்குப் பொருளைக் கொடுக்கச் சொன்னார்கள்.
அறி: அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல்: (புகாரி: 6088)
இன்றைய கால கட்டத்தில் தலைவர்கள் செய்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டால் கூட குறி வைத்துத் தாக்கக் கூடியவர்களைப் பார்க்கிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் தர்மப் பொருளைக் கேட்கும் கிராமவாசி இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டபோதும் அவரை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்காமல் மென்மையாக நடந்துள்ளார்கள்.
خَدَمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَشْرَ سِنِينَ فَمَا قَالَ لِي أُفٍّ ، وَلاَ لِمَ صَنَعْتَ ، وَلاَ أَلاَّ صَنَعْتَ
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து வருடம் வேலை செய்துள்ளேன். என்னை “சீ” என்றோ, “(இதை) ஏன் செய்தாய்?” என்றோ, “நீ (இப்படி) செய்திருக்கக் கூடாதா?” என்றோ அவர்கள் சொன்னதில்லை.
அறி : அனஸ் (ரலி)
நூல் : (புகாரி: 6036)
வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களை ஆடு, மாடுகளை விடக் கேவலமாக நடத்தும் நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த அரிய பண்பைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
“நபி (ஸல்) அவர்கள் தமது வீட்டில் என்ன செய்வார்கள்?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “தம் குடும்பத்திற்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருப்பார்கள். தொழுகை நேரம் வந்ததும், தொழுகைக்காக சென்று விடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அறி : அஸ்வத்
நூல்: (புகாரி: 676)
மனைவி என்பவள் தேவைக்குப் பயன்படும் ஒரு பொருள் என்று நினைப்பவர்களும், அவள் என்ன செய்தாலும் குறை கண்டுபிடித்து, திட்டிக் கொண்டே இருப்பவர்களும், சமையல் வேலைக்காகவே அவள் படைக்கப்பட்டதைப் போன்று நினைப்பவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இந்தக் குடும்பவியல் நடைமுறையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் அந்நியப் பெண்களிடத்தில் ஒழுக்கம் உடையவர்களாக நடந்து கொண்டார்கள். இன்று நாம் பார்க்கிறோம். ஆன்மீகம் என்ற பெயரில் தான் பல பெண்களுடைய கற்பு சூறையாடப்படுகின்றது. இன்னும் ஏகப்பட்ட தலைவர்கள் சறுகும் விஷயம் இந்தப் பெண்கள் விஷயம் தான். இதை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் நபியாக ஆவதற்கு முன்பும் சரி! நபித்துவம் பெற்ற பின்பும் சரி! ஒழுக்க சீலராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் நபியாவதற்கு முன்புள்ள காலம் எப்படிப்பட்டது என்றால் அன்று விபச்சாரம் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. யாரும் யாரையும் வைத்துக் கொள்ளலாம். யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அப்படியொரு மோசமான காலத்திலும் அவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார்கள்.
இதை நாம் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த எதிரிகள் மூலமே தெரிந்து கொள்ளலாம். எப்படியென்றால் நபியவர்களை இறைவனுடைய தூதர் என்று ஏற்றுக் கொள்ளாத மக்கள் அவர்களை சூனியக்காரர், பைத்தியக்காரர், கவிஞர் என்று பலவிதமாக விமர்சனம் செய்தார்கள்.
ஆனால் நபியவர்கள் பெண்கள் விஷயத்தில் மோசமானவர்கள் என்று கூறவில்லை. அவர்கள் நபியான பின்னரும் எந்தவொரு அந்நியப் பெண்ணின் கையைக் கூடத் தொட்டதில்லை.
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُبَايِعُ النِّسَاءَ بِالْكَلاَمِ بِهَذِهِ الآيَةِ {لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا} قَالَتْ وَمَا مَسَّتْ يَدُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم يَدَ امْرَأَةٍ إِلاَّ امْرَأَةً يَمْلِكُهَا
நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் உறுதிமொழி வாங்கினால் கைகளைத் தொட்டு வாங்க மாட்டார்கள். அவர்களுடைய கை அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (மனைவிகளை) தவிர வேறு எந்தப் பெண்ணின் கையையும் தொட்டதில்லை.
அறி : ஆயிஷா (ரலி)
நூல் : (புகாரி: 7214)
இந்த இடத்தில் ஒரு ஐயம் எழலாம். நபி (ஸல்) அவர்கள் அழகில்லாமல், பெண்கள் வெறுக்கும் தோற்றத்தில் இருந்திருக்கலாம். அல்லது பெண்கள் மீது நாட்டமில்லாமல் இருந்திருக்கலாம். அதனால் அவர்கள் பெண்கள் விஷயத்தில் ஒழுக்கமாக இருந்திருப்பார்கள் என்று யாரேனும் கூறினால் அது தவறாகும்.
நபி (ஸல்) அவர்கள் ஆணழகராகவும், முப்பது பேருடைய சக்தி கொண்ட வீரமுள்ள ஆணாகவும் திகழ்ந்தார்கள்.
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدُورُ عَلَى نِسَائِهِ فِي السَّاعَةِ الْوَاحِدَةِ مِنَ اللَّيْلِ وَالنَّهَارِ وَهُنَّ إِحْدَى عَشْرَةَ ، قَالَ : قُلْتُ لأَنَسٍ أَوَكَانَ يُطِيقُهُ قَالَ : كُنَّا نَتَحَدَّثُ أَنَّهُ أُعْطِيَ قُوَّةَ ثَلاَثِينَ
“நபி (ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தமது மனைவிகளிடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களுக்குப் பதினொரு மனைவிமார்கள் இருந்தனர்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள். அப்போது நான், “அவர்கள் அதற்குச் சக்தி பெறுவார்களா?” என்று கேட்டேன். “நபி (ஸல்) அவர்களுக்கு முப்பது ஆண்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் பேசிக் கொள்வோம்” என்று அனஸ் (ரலி) பதிலளித்தார்கள்.
நூல்: (புகாரி: 268)
நபி (ஸல்) அவர்கள் பருத்த கைகள், பருத்த கால்கள் உடையவர்களாகவும், அழகிய முகம் உடையவர்களாகவும் இருந்தார்கள். அவர்களைப் போன்ற (அழகான) மனிதரை நான் பார்த்ததில்லை. அவர்களது உள்ளங்கைகள் விசாலமானதாக இருந்தன.
அறி : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 5907)
அனஸ் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முடியைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்களது தலைமுடி அலை அலையானதாக இருந்தது. படிந்த முடியாகவோ, சுருண்ட முடியாகவோ இல்லை. அவர்களின் காது மடல்களுக்கும், அவர்களது தோள்களுக்கும் இடையே தொங்கிக் கொண்டிருந்தது” என்று பதில் அளித்தார்கள்.
அறி : அபூகதாதா (ரஹ்)
நூல் : (புகாரி: 5905)
இப்படி ஆணழகராக, வீரமுள்ள ஆண் மகனாக இருந்த போதும் நபி (ஸல்) அவர்கள் உத்தமராக, ஒழுக்க சீலராக வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக ஆவதற்கு முன்பு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள். தன்னை நபியென்று மக்களிடம் பிரகடனப்படுத்தியதும் எண்ணிலடங்கா தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களே அவர்களைத் துன்புறுத்தினார்கள். ஒரு மனிதனால் மறக்க முடியாத கொடுமைகளை எல்லாம் செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அனுமதியால் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற போதும் போர் மூலம் அவர்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரலி) அவர்களை உஹதுப் போரில் கொடூரமாகக் கொன்று அவர்களுடைய ஈரலைக் கடித்துத் துப்பியவர்களும் உண்டு. இப்படிப்பட்ட கொடூரச் செயல் செய்தவர்களைக் கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மன்னித்தார்கள். அதுவும் மக்காவை வெற்றி கொண்டு, மாபெரும் தலைவராக, அரசராக இருந்த நேரத்தில் மன்னித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்தவர்களும் மக்காவை வெற்றி கொண்ட போது நபி (ஸல்) அவர்களது முன்னிலையில் நிறுத்தப்பட்டார்கள். அம்மக்கள் தங்களுக்கு என்ன நடக்குமோ? என்று பயந்து கொண்டிருந்த நிலையில், அவர்கள் செய்த அனைத்து அநியாயங்களையும் மறந்து மன்னித்தார்கள். தன்னை விஷம் வைத்துக் கொல்ல நினைத்த யூதப் பெண்ணையும் தண்டிக்காமல் மன்னித்தார்கள்.
யூதப் பெண்ணொருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் கலந்த ஆட்டிறைச்சியை பொறித்துக் கொண்டு வந்தார். அதை நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். உடனே அவள் பிடித்துக் கொண்டு வரப்பட்டாள். “நாங்கள் அவளைக் கொன்று விடவா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “வேண்டாம்” என்று அவர்கள் பதிலளித்தார்கள். அந்த விஷத்தின் பாதிப்பை அவர்களது உள் வாயின் மேற்பகுதியில் நான் பார்த்தேன்.
அறி : அனஸ் பின் மாலிக்(ரலி)
நூல் : (புகாரி: 2617)
இது போன்ற காரியங்களில் தலைவராக இருப்பவர்களை விடுங்கள். சாதாரண மனிதர்கள் கூட மன்னிப்பதில்லை. தனக்குப் பாதிப்பு ஏற்படுத்தியவனை உடனே பழி வாங்க வேண்டுமென விரும்புவான். அல்லது சமயம் வரும் போது பழி தீர்ப்பான். இதை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
அதிகமாகக் கொலைகள் நடப்பதற்குக் காரணமே முன் விரோதம் தான். இது சாதாரண மனிதனின் நிலை. இதுவே தலைவராக இருந்தால் அவருடைய நடவடிக்கையே வேறு விதமாக இருக்கும். தனக்குப் பாதிப்பு ஏற்படுத்தியவனைக் கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு, அதற்கான தடயமே இல்லாமல் மறைத்து விட்டு, தலைவர்கள் என்ற போர்வையில் உலா வருவார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்களோ தமக்குத் தீங்கிழைத்த எத்தனையோ பேரை மன்னித்து, அழகிய முன் மாதிரியாகத் திகழ்கின்றார்கள்.
இன்னும் நபி (ஸல்) அவர்கள் எல்லா விஷயத்திலும் ஒப்பற்ற ஒரு தலைவராக, மனிதருள் மாணிக்கமாக வாழ்ந்தார்கள். அவர்களைப் பின்பற்றி வாழ நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
மனிதரில் மாணிக்கம். எஸ்.கே. மைமூனா பி.ஐ.எஸ்.சி.