3) மனிதனை மற கடவுளை நினை
2. மனிதனை மறந்து விட்டு கடவுளை நினைத்தல்
மதங்கள் அர்த்தமற்றவை’ என்று விமர்சனம் செய்யும் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு வாதம் ‘மதங்கள் கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்கின்றன’ என்பதாகும்.
அன்றாடம் உண்பதற்கு உணவில்லாத கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் போது கோவில் உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய்கள் போடப்படுகின்றன.
ஒரு மூக்குத்திக்குக் கூட வழியில்லாத ஏழைப் பெண்கள் கோடிக் கணக்கில் இருக்கும் போது சிலைகளும், கலசங்களும், தேர்களும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. செல்வந்தர்கள் இதற்காக வாரி வழங்குகின்றனர்.
தேவையுள்ள மனிதர்களுக்குச் செலவிடாமல் எந்தத் தேவையுமற்ற கடவுளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப் படும் மனித நேயமற்ற காரியங்களைப் பார்க்கும் சிந்தனையாளர்கள் ‘மதங்கள் அர்த்தமற்றவை’ என்று கருதுகின்றனர்.
இஸ்லாத்தைப் பொருத்த வரை இந்த விமர்சனமும் பொருந்தாது. ஏனெனில் இது போன்ற காரியங்களையும் இஸ்லாம் மறுக்கிறது.
கடவுளுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்கள் இரு வகைகளாக இஸ்லாத்தில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
ஒன்று உடலால் செய்வது.
மற்றொன்று பொருளாதாரத்தால் செய்வது.
தொழுகை, நோன்பு போன்றவை உடலால் செய்யப்படும் வணக்கங்களாகும்.
உடலால் செய்யும் வணக்கங்களை இறைவனுக்காக மட்டுமே செய்ய வேண்டும். வேறு எவருக்காகவும் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.
மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள்’ என்ற விமர்சனம் இதில் எழாது.
பொருளாதாரத்தைச் செலவிடுவதில் தான் மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனம் எழும். இது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
மனிதர்கள் நோய் வாய்ப்படுகிறார்கள்.
வறுமையில் உழல்கிறார்கள்.
மன நிம்மதியை இழக்கிறார்கள்.
குழந்தைச் செல்வம் கிடைக்காமல் கவலைப்படுகிறார்கள்.
இது போன்ற துன்பங்களைச் சந்திக்கும் போது ‘கடவுளே எனக்கு இந்தக் குறையை நிவர்த்தி செய்தால் நான் உணக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவிடுகிறேன்’ என்பது போல் மனிதர்கள் நேமிதம் (நேர்ச்சை) செய்து கொள்கிறார்கள்.
அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறினால் எந்தக் கடவுளுக்கு நேர்ச்சை செய்தார்களோ அவரது ஆலயத்தில் அந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர்.
துன்பத்திலிருப்பவன் இறைவனுக்காக இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாமும் அனுமதிக்கின்றது.
ஆனால் இறைவனுக்காக பொருளாதாரம் குறித்த எந்த நேர்ச்சையைச் செய்தாலும் அவற்றைப் பள்ளிவாசல் உண்டியலில் போடக் கூடாது.
மாறாக ஏழைகளுக்குத் தான் செலவிட வேண்டும்.
கடவுளே உனக்காகப் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்கிறேன்’ என்று ஒருவர் முடிவு செய்தால் ஏழைகளின் உணவு, உடை, மருத்துவச் செலவு போன்றவற்றுக்காகத் தான் அதைச் செலவிட வேண்டும்.
கடவுளுக்காக நேர்ச்சை செய்த பணத்தில் பள்ளிவாசல் கட்டுவதோ, பள்ளிவாசலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதோ கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை.
சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பது போல் ‘கடவுளின் பெயரால் எந்தப் பொருளாதாரத்தையும் செலவிடாதே’ என்று ஒருவனிடம் கூறினால், அதை ஏழைக்குத் தான் அவன் செலவிடுவான் என்று கூற முடியாது.
கடவுளுக்கும் செலவிடாமல் ஏழைக்கும் செலவிடாமல் இருந்து விடுவான்.
ஏழைக்குச் செலவிடுவது தான் கடவுளுக்குச் செலவிடுவது’ எனக் கூறும் போது கண்டிப்பாக ஏழைகள் பயன் பெற்று விடுவார்கள்.
சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பதை விட இது சிறந்ததாக அமைந்துள்ளது.
இவ்வுலகத்தை இறைவன் ஒரு நாள் அழித்து விட்டு எல்லா மனிதர்களையும் மீண்டும் உயிர்ப்பித்து விசாரணை நடத்துவான். மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பரிசுகளையோ, தண்டனைகளையோ இறைவன் வழங்குவான்’ என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. இது நியாயத் தீர்ப்பு நாள் எனப்படுகிறது.
நியாயத் தீர்ப்பு நாளில் நடைபெறவுள்ள விசாரணையின் ஒரு காட்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றனர்.
மனிதனே! நான் நோயுற்றிருந்த போது நோய் விசாரிக்க ஏன் நீ வரவில்லை’ என்று நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் கேட்பான். ‘என் இறைவா! நீயோ அகிலங்களைப் படைத்துப் பராமரிப்பவன். உன்னை நான் எப்படி நோய் விசாரிக்க முடியும்?’ என்று மனிதன் பதிலளிப்பான். ‘எனது அடியான் ஒருவன் நோயுற்றதை நீ அறிந்தும் அவனை நீ நோய் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நோய் விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடத்தில் என்னைக் கண்டிருப்பாய்’ என்று இறைவன் கூறுவான். ‘மனிதனே! உன்னிடம் நான் உணவு கேட்டு வந்த போது எனக்கு உணவளிக்க மறுத்து விட்டாயே?’ என்று இறைவன் மீண்டும் கேட்பான். ‘நீயோ அகிலத்தையும் படைத்துப் பராமரிப்பவனாக இருக்கிறாய். நான் உனக்கு எவ்வாறு உணவளிக்க இயலும்?’ என்று மனிதன் கூறுவான். ‘என் அடியான் உன்னிடம் உணவு கேட்டு வந்த போது அவனுக்கு நீ உணவளிக்க மறுத்தது உனக்குத் தெரியாதா? அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய்’ என்று இறைவன் கூறுவான். ‘மனிதனே! உன்னிடம் நான் தண்ணீர் கேட்டு வந்த போது எனக்குத் தண்ணீர் தர மறுத்து விட்டாயே?’ என்று இறைவன் மீண்டும் கேட்பான். ‘என் இறைவா! அகிலத்தின் அதிபதியான உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?’ என்று மனிதன் கூறுவான். ‘எனது அடியான் ஒருவன் உன்னிடம் தண்ணீர் கேட்டு வந்த போது அவனுக்கு நீ தண்ணீர் புகட்டவில்லை. அவனுக்குத் தண்ணீர் புகட்டியிருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய்’ என்று இறைவன் கூறுவான். இவ்வாறு நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மனிதனுக்கு உதவுவது தான் இறைவனுக்குச் செய்யும் வணக்கம்’ என்பதை இறைவனின் இந்த விசாரணை முறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாத்தில் தொழுகை, நோன்புக்கு அடுத்த கடமையாக ஸகாத் எனும் கடமை உள்ளது.
வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தனது சொத்துக் கணக்கைப் பார்த்து, அதில் இரண்டரை சதவிகிதம் வழங்க வேண்டும். வயல்களில் உற்பத்தியாகும் பொருட்களில் மானாவாரிப் பயிர்களாக இருந்தால் ஐந்து சதவிகிதமும் மற்ற பயிர்களில் பத்து சதவிகிதமும் வழங்க வேண்டும். ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளிலும் குறிப்பிட்ட சதவிகிதத்தை வழங்க வேண்டும். இதுவே ஸகாத் எனப்படுகிறது.
இதை யாருக்கு வழங்க வேண்டும்? பள்ளிவாசல் கட்டுவதற்கோ, மராமத்துச் செய்வதற்கோ, அதன் நிர்வாகப் பணிகளுக்கோ செலவிட வேண்டுமா? செலவிடக் கூடாது என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய (முஸ்லிமல்லாத)வர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
இந்த எட்டு வழிகளில் தான் அதைச் செலவிட வேண்டும். இந்த எட்டுமே மனிதர்களுக்கானது தான். மனிதர்களுக்கு உதவுவதை மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் ஆக்கியுள்ளது.
செலவிட வேண்டிய எட்டு வழிகளில் முஸ்லிமல்லாத மக்களுக்கு வழங்குவதையும் குறிப்பிட்டு மதம் கடந்த மனித நேயத்தை இஸ்லாம் பேணுகிறது.
கடவுளை மற! மனிதனை நினை!’ என்பார்கள்.
மனிதனை நினைப்பதற்கு கடவுளை மறக்கத் தேவையில்லை. கடவுளை இஸ்லாம் கூறுகிற படி நினைத்தால் ஏழைகள் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
திருமறைக் குர்ஆனில் பிறருக்கு வாரி வழங்குவது பற்றி அதிகமான அளவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
(சொத்தைப்) பங்கிடும் போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்து விட்டால் அதில் அவர்களுக்கும் வழங்குங்கள்! அவர்களுக்கு நல்ல சொல்லையே கூறுங்கள்!
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்!
உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம் என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்.
அவனை (அல்லாஹ்வை) நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக் கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும்நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்’ (எனக் கூறுவார்கள்.)
(அல்குர்ஆன்: 76:8) ➚,9,10)
குற்றவாளிகளிடம் ‘உங்களை நரகத்தில் சேர்த்தது எது?’ என்று (நல்லோர்) விசாரிப்பார்கள். ‘நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை’ எனக் (குற்றவாளிகள்) கூறுவார்கள்.
(அல்குர்ஆன்: 74:40) ➚41, 42, 43, 44)
அவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை இருக்கும்.
எனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்! யாசிப்பவரை விரட்டாதீர்!
கடன் வாங்கிய) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.
அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்கு வான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செல விட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.
தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத் தோட்டம் இருமடங்காக அதன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழா விட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்.
தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். ‘நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக் காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்’ எனக் கூறுவீராக!
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.
மனிதர்களுக்கு உதவுவது தான் கடவுளுக்குச் செய்யும் வணக்கம் என்பதை மேற்கண்ட வசனங்களிருந்து அறியலாம். எனவே கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்யும் குற்றத்தை இஸ்லாம் செய்யவில்லை