மனிதநேய மார்க்கம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2
முன்னுரை

இஸ்லாம் என்ற சொல்லுக்கு சாந்தி, சமாதானம் பரப்புதல் என்று பொருள். பெயரில் மாத்திரம் அல்ல போதனைகளிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தான் பொதிந்திருக்கின்றது.

இத்தகைய இஸ்லாத்துடன் தீவிரவாதம் எனும் சொல்லாடல் இணைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறுவது முரண்பாடான, பொருத்தமற்ற இணைப்பாகும். மனிதர்களுக்கிடையில் சாந்தியை பரப்புவதே இஸ்லாத்தின் நோக்கமே தவிர சண்டையைப் பரப்புவது அதன் நோக்கம் அல்ல.

மனிதர்களுக்கிடையில் அன்பும், சகோதரத்துவமும் தழைத்தோங்க வேண்டும், மனித நேயம் மிளிர வேண்டும் என்றே இஸ்லாம் விரும்புகிறது. அதனாலேயே எல்லா மதங்களை விடவும் அதிகமாகவே இஸ்லாத்தின் போதனைகளில் மனித நேயம் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றது.

அவற்றை அறியும் போது இஸ்லாம் தீவிரவாதத்தைப் பரப்பும் மார்க்கம் அல்ல, மனித நேயத்தை மற்ற மதங்களை விடவும் அதிகம் பரப்பும் மார்க்கம் என்பதை சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

ஒரு தாய் மக்கள்

மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதற்கு அடிப்படைத் தேவை சகோதர உணர்வு. நாம் அனைவரும் சகோதரர்கள், ஒரு தாய் மக்கள் என்ற உணர்வு எழுந்தாலே ஒரு இணைப்பு, நெருக்கம் உண்டாகும். இந்த உணர்வு இல்லையாயின் யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன? என்று சக மனிதனை கண்டுகொள்ளாத மனிதநேயமற்ற நிலை மனிதர்களிடம் உண்டாகிவிடும்.

இஸ்லாம் அத்தகைய சகோதர உணர்வைத் தவறாது ஏற்படுத்தி விடுகிறது.

மக்கள் அனைவரும் ஜாதி, மதப் பாகுபாடின்றி ஒரு தாய், தந்தைக்குப் பிறந்தவர்களே என்று கூறி அன்பு செலுத்துவதற்கான அடிப்படை உணர்வை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا‏

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.

எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:1)

يٰۤاَيُّهَا النَّاسُ اِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ ذَكَرٍ وَّاُنْثٰى وَجَعَلْنٰكُمْ شُعُوْبًا وَّقَبَآٮِٕلَ لِتَعَارَفُوْا‌ ؕ اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன்: 49:13)

இஸ்லாம் கூறும் ஒரு தாய் மக்கள் என்ற இந்தச் சித்தாந்தம் தீவிரவாதத்தை அடியோடு அடித்து நொறுக்கும் சித்தாந்தமாகும். அனைவரும் சகோதரர்கள். சகோதரர்களுக்குள் வெட்டுக் குத்து, சண்டை சச்சரவு இருக்கக் கூடாது என்பதே இந்தச் சித்தாந்தம் வலியுறுத்தும் கருத்தாகும்.

பிறருக்கு உதவு

சிரமப்படும் மக்கள் யாராக, எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சகோதர உணர்வோடு அவர்களுக்கு உதவிட வேண்டும் என்றும் அது மிகச்சிறந்த தர்மம் என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي بُرْدَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ فَقَالُوا يَا نَبِيَّ اللهِ فَمَنْ لَمْ يَجِدْ قَالَ يَعْمَلُ بِيَدِهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ يُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالُوا فَإِنْ لَمْ يَجِدْ قَالَ فَلْيَعْمَلْ بِالْمَعْرُوفِ وَلْيُمْسِكْ ، عَنِ الشَّرِّ فَإِنَّهَا لَهُ صَدَقَةٌ

“தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் கூறியதும் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?” எனக் கேட்டனர்.

அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்?” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள்.

தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்?” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும் இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.

நூல்: (புகாரி: 1445)

ஒருவரது பொருளை அவரது வாகனத்தில் ஏற்றி விடுவதும் வழி தெரியாமல் தடுமாறுபவருக்கு சரியான வழியைக் காட்டுவதும் இஸ்லாம் இயம்பும் இனிய பண்புகளாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ
كُلُّ سُلاَمَى عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ يُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ يُحَامِلُهُ عَلَيْهَا ، أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ وَكُلُّ خَطْوَةٍ يَمْشِيهَا إِلَى الصَّلاَةِ صَدَقَةٌ وَدَلُّ الطَّرِيقِ صَدَقَة

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதனின் (உடலிலுள்ள) ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும்.

நல்ல சொல்லும், தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், (வழியறியாமல் தடுமாறும் ஒருவருக்குச் சரியான) பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 2891) 

முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் தமது தேவை போக எஞ்சியதை, தேவையுள்ளவர்களுக்குக் கொடுத்து உதவுமாறு நபிகள் நாயகம் போதித்துள்ளார்கள். இதில் முஸ்லிம் முஸ்லிமல்லாதோர் என்று வித்தியாசம் கிடையாது. தேவையுள்ளோர் யாராக இருந்தாலும் அவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்பதே இஸ்லாத்தின் போதனை.

بَيْنَمَا نَحْنُ فِي سَفَرٍ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَ رَجُلٌ عَلَى رَاحِلَةٍ لَهُ، قَالَ: فَجَعَلَ يَصْرِفُ بَصَرَهُ يَمِينًا وَشِمَالًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ مَعَهُ فَضْلُ ظَهْرٍ، فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لَا ظَهْرَ لَهُ، وَمَنْ كَانَ لَهُ فَضْلٌ مِنْ زَادٍ، فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لَا زَادَ لَهُ»،

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது ஒரு (ஏழை) மனிதர் தமக்குரிய (பலவீனமான) ஓர் ஒட்டகத்தில் வந்து, வலப் பக்கமும் இடப் பக்கமும் தமது பார்வையைச் செலுத்தி (பார்வையாலேயே உதவி கேட்டு)க்கொண்டிருந்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தம்மிடம் தேவைக்கு அதிகமான வாகனம் வைத்திருப்பவர் வாகனமில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்! தம்மிடம் தேவைக்கு அதிகமான உணவு வைத்திருப்பவர் உணவில்லாதவருக்கு அதைக் கொடுத்து உதவட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி),
நூல்: (முஸ்லிம்: 3562) 

ஏழையும் இறைவனும்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பார்கள். இதையும் தாண்டி இஸ்லாம் மனிதனுக்கு உதவி செய்வது இறைவனுக்கு உதவி செய்வதைப் போன்றது எனவும், மனிதர்களை உதாசீனப்படுத்துவது படைத்த இறைவனையே புறக்கணிப்பதைப் போன்றது எனவும் போதிக்கின்றது. இது இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

மனிதனுக்கு உதவுவதை இறைவனுக்கே உதவுவதைப் போன்று ஒப்பீடு செய்யும் இதை மிஞ்சிய மனிதநேயம் வேறென்ன இருக்கின்றது?

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِى. قَالَ يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ. قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِى فُلاَنًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِى عِنْدَهُ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِى. قَالَ يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ. قَالَ أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِى فُلاَنٌ فَلَمْ تُطْعِمْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِى يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِى. قَالَ يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ اسْتَسْقَاكَ عَبْدِى فُلاَنٌ فَلَمْ تَسْقِهِ أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِى

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில், “ஆதமுடைய மகனே! நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நீ அகிலத்தின் இறைவன். உன்னை நான் எப்படி நலம் விசாரிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான். ஆனால் நீ அவனை நலம் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் அங்கே நீ என்னைக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?

ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவு அளிக்கவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி என்னால் உணவளிக்க முடியும்?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் உணவு வேண்டி வந்தான். ஆனால் அவனுக்கு நீ உணவு கொடுக்கவில்லை. அவனுக்கு நீ உணவளித்திருந்தால் எனக்கு இதைச் செய்ததாகக் கண்டிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?

ஆதமுடைய மகனே! நான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை” என்று கூறுவான். அதற்கு அவன், “என் இறைவா! நீயோ அகிலத்தின் இறைவனாக இருக்க உனக்கு எப்படி நான் தண்ணீர் கொடுக்க முடியும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “என்னுடைய இந்த அடியான் உன்னிடத்தில் தண்ணீர் கேட்டான். ஆனால் நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. அவனுக்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அதை எனக்குக் கொடுத்ததாக நீ கண்டிருப்பாய்” என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 5021) (4661)

கடனாளிகளுக்கு உதவி

கடனில் தத்தளிப்பவர்களின் சிரமத்தைப் போக்கினால் அல்லாஹ் தனது அர்ஷின் நிழலை மறுமை நாளில் அவருக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளித்து மனிதநேயத்தைத் தழைக்கச் செய்யுமாறு போதிக்கின்றான்.

مَنْ أَنْظَرَ مُعْسِرًا أَوْ وَضَعَ عَنْهُ أَظَلَّهُ اللَّهُ فِى ظِلِّهِ

யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது (அர்ஷின்) நிழலில் நிழல் தருகின்றான்.

அறிவிப்பவர்: அபுல்யசர் (ரலி),
நூல்: (முஸ்லிம்: 5736) 

மனிதர்களிடம் இரக்கம்

மனிதர்களுடன் இரக்க உணர்வோடு நடந்தால் தான் இறைவன் நம்மிடம் இரக்கம் காட்டுவான் என்ற இஸ்லாத்தின் போதனை இஸ்லாத்தில் உள்ள மனிதநேயத்திற்கு மற்றுமொரு முத்திரை பதித்த சான்று.

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم
لاَ يَرْحَمُ اللَّهُ مَنْ لاَ يَرْحَمُ النَّاسَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்டமாட்டான்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி),
நூல்: (புகாரி: 7376) 

போரில் மனித நேயம்

போர் என்றாலே மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட களமாகப் பார்க்கும் உலகம் இது. போர் என்று வந்து விட்டால் சிறியவர், பெரியவர், குழந்தைகள், பெண்கள், அப்பாவிகள் என ஒருவர் விடாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் கொன்றொழிக்கும் அழிவுக் கலாச்சாரம் தான் இன்றைய போர்முறை. சர்வதேச நாடுகளில் எந்த ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஆட்சியாளர்களே அதை நியாயப்படுத்திப் பேசுவதையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் இஸ்லாம் மாத்திரம் தான் போர்க்களத்தையும் மனித நேயம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய களமாகப் பார்க்கிறது. ஆகவே பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், போருக்குத் தொடர்பில்லாத அப்பாவிகள் ஆகியோரைப் போரில் கொல்ல இஸ்லாம் தடைவிதிக்கின்றது. அவற்றைப் பெரும்பாவமாக அறிவிப்பு செய்கின்றது.

நடைமுறை உலகில் சிறு குற்றமாகக் கூட பார்க்காத ஒன்றை இஸ்லாம் பெரும்பாவம் என்று குறிப்பிடுவது மனித உயிர்களுக்கு இஸ்லாம் அளிக்கும் மதிப்பை மிகச்சரியாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

இன்னும் எண்ணற்ற செய்திகள், இஸ்லாம் மனிதநேயத்தைப் போதிக்கும் மார்க்கம் என்பதை சான்றளிக்கின்றது. அது எங்கேயும் தீவிரவாதத்தைப் போதிக்கவில்லை.

இப்படி தீவிரவாதத்திற்கு எதிராக, மனிதநேயத்திற்கு ஆதரவாக தனது சாட்டையைத் தீவிரமாக சுழற்றும் இஸ்லாத்தை தீவிரவாத மார்க்கம் என்று குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம்?

அறிவிலிகள், மனிதநேயமற்ற சில காட்டுமிராண்டிகள் செய்யும் தீவிரவாதச் செயலால் அவர்கள் சார்ந்த மதத்தை தீவிரவாத மார்க்கம் என்று முத்திரை குத்துவது எந்த வகையிலும் ஏற்க இயலாத, நியாயமற்ற செயலாகும்.

உண்மை சம்பவங்களை அறிந்தும், புரிந்தும், வாழும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.