மனிதகுல விரோதியும் பகிரங்க எதிரியும்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

திருமறைக் குர்ஆன் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒருவனைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த ஒருவன் தான் இறை விரோதியும் மனிதகுல விரோதியுமாகிய ஷைத்தான் ஆவான். மனிதர்களுக்கு நலம் நாடுவதைப் போல் நடித்து, அவர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போட்டு, அவர்களை வழிகெடுத்து, நிரந்தர நரகவாதிகளாக ஆக்குவதே இந்த இறைவிரோதியின் நோக்கமாகும்.

இந்த இறைவிரோதியின் சூழ்ச்சியில் சிக்குண்டு மனிதர்கள் நாசமாகி விடக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் அதிகமான இடங்களில் இவனைப் பற்றியும் இவனது வழிகேடுகளைப் பற்றியும் பல எச்சரிக்கைகளைச் செய்துள்ளான். அந்த எச்சரிக்கைகளை இந்த உரையில் காண்போம்.

اِنَّ الشَّيْطٰنَ لَـكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا ؕ اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِؕ‏

ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே ஆக்கிக் கொள்ளுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.

(அல்குர்ஆன்: 35:6)

وَلَا يَصُدَّنَّكُمُ الشَّيْطٰنُ‌ ۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏

(நேர்வழியிலிருந்து) ஷைத்தான் உங்களைத் தடுத்திட வேண்டாம். அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

(அல்குர்ஆன்: 43:62)

وَاَقُلْ لَّـكُمَاۤ اِنَّ الشَّيْطٰنَ لَـكُمَا عَدُوٌّ مُّبِيْنٌ

ஷைத்தான் உங்களுக்கு பகிரங்க எதிரியாவான்.

(அல்குர்ஆன்: 7:22)

اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلْاِنْسَانِ عَدُوًّا مُّبِيْنًا‏

ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான்.

(அல்குர்ஆன்: 17:53)

اِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ‏

ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரி.

(அல்குர்ஆன்: 12:05)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ؕ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.

(அல்குர்ஆன்: 2:208)

وَكَانَ الشَّيْطٰنُ لِلْاِنْسَانِ خَذُوْلًا

ஷைத்தான் மனிதனுக்குத் துரோகம் செய்பவனாகவே இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 25:29)

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ ؕ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ ؕ

நம்பிக்கை கொண்டோரே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ (அவர் வழிகெடுவார்). ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும் தீமையையும் தூண்டுகிறான்.

(அல்குர்ஆன்: 24:21)

اِنَّ الشَّيْطٰنَ كَانَ لِلرَّحْمٰنِ عَصِيًّا‏

ஷைத்தான், அளவற்ற அருளாளனுக்கு மாறுசெய்பவனாவான்.

(அல்குர்ஆன்: 19:44)

وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏

ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 17:27)

மேலே நாம் குறிப்பிட்டுள்ள இறை வசனங்களும் இன்னும் அதிகமான இறை வசனங்களும் ஷைத்தானைப் பற்றி மிகக் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றன.

மனிதர்கள் மீது ஷைத்தானின் அதிகாரம் என்ன?
وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ‌ؕ وَاِنْ يَّمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ‌ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ‏

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன். அவனே தன் அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன்.

(அல்குர்ஆன்: 6:17,18)

இது திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கும் தவ்ஹீதின் ஓர் அடிப்படையாகும். சத்திய இஸ்லாத்தின் பல அடிப்படைகள் சிதைக்கப்பட்டும், வழிகேடர்களால் தவறாகச் சித்தரிக்கப்பட்டும் மக்களின் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. அப்படித் தவறாகப் பதிய வைக்கப்பட்டுள்ள விஷயங்களில் ஒன்றுதான் ஷைத்தானால் மனிதனுக்கு உடல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையாகும்.

அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதே தவ்ஹீதின் அடிப்படையாகும். இந்த நம்பிக்கைக்கு நேர் எதிராக ஷைத்தான் தொடர்பான இந்த நம்பிக்கை அமைந்துள்ளது.

மார்க்கத்தை, இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான குர்ஆன் மற்றும் சுன்னாவிலிருந்து அறிந்து கொள்வதற்கு முன்வராத, முயற்சிக்காத எண்ணற்ற முஸ்லிம்கள் தவறான நம்பிக்கைகளையே இஸ்லாத்தின் அடிப்படையாக எண்ணி, நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஷைத்தானுக்கு இறைவன் வழங்கியுள்ள ஆற்றலையும், இறைவனின் வல்லமைகளையும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் தெளிவாகப் புரிந்து கொண்டால் இது விஷயத்தில் சத்தியத்தின் கருத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

மனிதர்களின் மீது ஷைத்தானுக்குரிய ஒரே ஆற்றல் அவர்களின் உள்ளங்களில் தவறான எண்ணங்களைப் போடுவது மட்டும்தான். இதைத் தவிர அவனுக்கு வேறு எந்த ஒரு ஆற்றலையும் மனிதர்களுக்கு எதிராக இறைவன் வழங்கவில்லை. இதைத் திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவுபடுத்துகின்றன.

மறுமை நாளில் ஷைத்தானும், அவனால் வழிகெடுக்கப்பட்டவர்களும் நரக நெருப்பில் கருகும் போது தன்னுடைய உண்மையான ஆற்றலைப் பற்றி அந்த நரகவாதிகளுக்கு ஷைத்தான் எடுத்துரைப்பான். இது பற்றித் திருமறைக் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

وَقَالَ الشَّيْطٰنُ لَـمَّا قُضِىَ الْاَمْرُ اِنَّ اللّٰهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَـقِّ وَوَعَدْتُّكُمْ فَاَخْلَفْتُكُمْ‌ؕ وَمَا كَانَ لِىَ عَلَيْكُمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّاۤ اَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِىْ‌ ۚ فَلَا تَلُوْمُوْنِىْ وَلُوْمُوْۤا اَنْفُسَكُمْ‌ ؕ مَاۤ اَنَا بِمُصْرِخِكُمْ وَمَاۤ اَنْتُمْ بِمُصْرِخِىَّ‌ ؕ اِنِّىْ كَفَرْتُ بِمَاۤ اَشْرَكْتُمُوْنِ مِنْ قَبْلُ‌ ؕ اِنَّ الظّٰلِمِيْنَ لَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏

“அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறிவிட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.

எனவே என்னைப் பழிக்காதீர்கள்! உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் நீங்கள் (இறைவனுக்கு) என்னை இணையாக்கியதை மறுக்கிறேன்’’ என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன்: 14:22)

“உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று ஷைத்தான் தன்னுடைய உண்மையான நிலையைத் தெளிவுபடுத்துகின்றான். இது போன்று ஷைத்தானுக்கும் நரக வாசிகளுக்கும் மத்தியில் நடைபெறும் உரையாடலை 37வது அத்தியாயமும் எடுத்துரைக்கின்றது. அவ்வசனத்திலும் தீய எண்ணங்களைப் போடுவதைத் தவிர தனக்கு வேறு எந்த ஆற்றலும் இல்லை என ஷைத்தான் கூறுவது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

اُحْشُرُوا الَّذِيْنَ ظَلَمُوْا وَاَزْوَاجَهُمْ وَمَا كَانُوْا يَعْبُدُوْنَۙ‏

مِنْ دُوْنِ اللّٰهِ فَاهْدُوْهُمْ اِلٰى صِرَاطِ الْجَحِيْمِ‏

وَقِفُوْهُمْ‌ اِنَّهُمْ مَّسْــٴُــوْلُوْنَۙ‏

مَا لَـكُمْ لَا تَنَاصَرُوْنَ‏

بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُوْنَ‏

وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ‏

قَالُوْۤا اِنَّكُمْ كُنْتُمْ تَاْتُوْنَنَا عَنِ الْيَمِيْنِ‏

قَالُوْا بَلْ لَّمْ تَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‌ۚ‏

وَمَا كَانَ لَنَا عَلَيْكُمْ مِّنْ سُلْطٰنِ‌ۚ بَلْ كُنْتُمْ قَوْمًا طٰغِيْنَ‏

فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ ۖ اِنَّا لَذَآٮِٕقُوْنَ‏

 فَاَغْوَيْنٰكُمْ اِنَّا كُنَّا غٰوِيْنَ‏

فَاِنَّهُمْ يَوْمَٮِٕذٍ فِى الْعَذَابِ مُشْتَرِكُوْنَ‏

اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ‏

“அநீதி இழைத்தோரையும் அவர்களுக்குத் துணை நின்றவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிவந்ததையும் ஒன்று திரட்டுங்கள்! அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் காட்டுங்கள்! அவர்கள் விசாரிக்கப்படுபவர்கள்; அவர்களைப் பிடித்து நிறுத்துங்கள்!’’ (என்று வானவர்களுக்குக் கூறப்படும்.) “உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாமல் இருக்கின்றீர்கள்?’’ (என்று கேட்கப்படும்.) அவ்வாறு நடக்காது. இன்று அவர்கள் சரணடைந்தவர்கள்.

அவர்களில் ஒருவர் மற்றவரை நோக்கி விசாரித்துக் கொள்வார்கள். “நீங்களே எங்கள் மீது ஆதிக்கம் செய்வோராக இருந்தீர்கள்’’ என்று (சிலர்) கூறுவார்கள். “இல்லை. நீங்கள் தான் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை’’ என்று (மற்றும் சிலர்) பதிலளிப்பார்கள்.

உங்கள் மீது எங்களுக்கு எந்த அதிகாரமும் இருந்ததில்லை. மாறாக நீங்களே வழிகெட்ட கூட்டமாக இருந்தீர்கள். எனவே எங்கள் இறைவனின் கட்டளை எங்களுக்கு எதிராக உறுதியாகி விட்டது. (அதன் பலனை) நாங்கள் அனுபவிக்கிறோம். “நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நாங்களும் வழிகெட்டவர்களாக இருந்தோம்’’ (என்றும் கூறுவார்கள்) அந்நாளில் அவர்கள் வேதனையில் பங்காளிகளாக இருப்பார்கள். குற்றவாளிகளை இப்படித்தான் நாம் நடத்துவோம்.

(அல்குர்ஆன்: 37:22-34)

“நீங்களே எங்கள் மீது ஆதிக்கம் செய்வோராக இருந்தீர்கள்” என்று நரகவாதிகள், தாங்கள் வணங்கிக் கொண்டிருந்த ஷைத்தான்களை நோக்கிக் கூறும்போது அவை “இல்லை. நீங்கள் தான் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை’’ என்று (மற்றும் சிலர்) பதிலளிப்பார்கள். ‘‘உங்கள் மீது எங்களுக்கு எந்த அதிகாரமும் இருந்ததில்லை. மாறாக நீங்களே வழிகெட்ட கூட்டமாக இருந்தீர்கள்’’ என்று பதிலுரைப்பார்கள்.

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَحَدَنَا يَجِدُ فِي نَفْسِهِ، يُعَرِّضُ بِالشَّيْءِ، لَأَنْ يَكُونَ حُمَمَةً أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَتَكَلَّمَ بِهِ، فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ كَيْدَهُ إِلَى الْوَسْوَسَةِ» قَالَ ابْنُ قُدَامَةَ: «رَدَّ أَمْرَهُ» مَكَانَ «رَدَّ كَيْدَهُ»

மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுவது மட்டும் தான் ஷைத்தானுக்குரிய அதிகாரம் என்பதற்கு இவ்வசனங்கள் மிக உறுதியான சான்றாக அமைந்துள்ளன. பின்வரும் நபிமொழியும் இந்த அடிப்படையை இன்னும் உறுதிப்படுத்துகின்றது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! எங்களின் உங்களில் சில (தீய) எண்ணங்கள் ஏற்படுகிறது. அதனை வெளியில் பேசுவதை விட கரிக்கட்டைகளாகி விடுவது எங்களுக்கு விருப்பத்திற்குரியதாகும்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹு அக்பர் (அல்லாஹ்வே மிகப் பெரியவன்), அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் (என்று கூறிவிட்டு ஷைத்தானாகிய) அவனுடைய சூழ்ச்சியை தீய எண்ணங்களைப் போடுவதன் பக்கம் திருப்பிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (அபூதாவூத்: 5112) (4448)

மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றள்ளது.

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَحَدَنَا يَجِدُ فِي نَفْسِهِ، يُعَرِّضُ بِالشَّيْءِ، لَأَنْ يَكُونَ حُمَمَةً أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَتَكَلَّمَ بِهِ، فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ كَيْدَهُ إِلَى الْوَسْوَسَةِ»

நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் உள்ளங்களில் சில விஷயங்களை நாங்கள் எண்ணுகின்றோம். அதனை வெளியில் பேசுவதை விட கரிக்கட்டைகளாகி விடுவது எங்களுக்கு விருப்பத்திற்குரியதாகும்” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்! உங்களிடம் தீய எண்ணங்களைப் போடுவதைத் தவிர (வேறு எதற்கும் ஷைத்தானாகிய) அவன் ஆற்றல் பெறவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (அஹ்மத்: 3161) (2995)

உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுவதைத் தவிர ஷைத்தானுக்கு வேறு எந்த ஆற்றலும் இல்லை என்பதைத் திருமறை வசனங்களும் நபிமொழிகளும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இவ்வாறு அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் எடுத்துரைத்த பிறகு நமது உடலில் நோய் உண்டாக்கும் ஆற்றல் ஷைத்தானுக்கு இருக்கிறது என்பது தவறான நம்பிக்கை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். இதனை இன்னும் விரிவாக நாம் காண்போம்.

வழிகெடுப்பதே ஷைத்தானின் நோக்கம்

மனித இனத்தை இறைவழியான நேர்வழியை விட்டும் வழிகெடுத்து, அவர்களை நிரந்தர நரகத்திற்குரியவர்களாக ஆக்குவதே ஷைத்தானின் லட்சியம் ஆகும். முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களைப் படைத்த போது வானவர்களையும், அவர்களுடன் இருந்த இப்லீஸையும் ஆதமுக்குப் பணியுமாறு அல்லாஹ் உத்தரவிட்டான். வானவர்கள் இறைக்கட்டளைக்கு அடிபணிந்து ஆதமுக்குப் பணிந்தனர். ஆனால் ஷைத்தான் அகந்தை கொண்டு மறுத்தான்.

அப்போது அவனை அல்லாஹ் அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டான். அப்போது ஷைத்தான் அல்லாஹ்விடம் சிறிது காலம் அவகாசம் கோரினான். மேலும் மனிதர்களில் அதிகமானோரை வழிகெடுப்பேன் என்றும் அல்லாஹ்விடம் கூறினான். இந்த நிகழ்வை திருமறைக் குர்ஆன் எடுத்துரைக்கிறது.

وَلَقَدْ خَلَقْنٰكُمْ ثُمَّ صَوَّرْنٰكُمْ ثُمَّ قُلْنَا لِلْمَلٰۤٮِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ‌ ۖ  فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِيْسَؕ لَمْ يَكُنْ مِّنَ السّٰجِدِيْنَ‏

‌قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ‌ ؕ قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ‌ ۚ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ‏

قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُوْنُ لَـكَ اَنْ تَتَكَبَّرَ فِيْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِيْنَ‏

قَالَ اَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏

قَالَ اِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَ‏

قَالَ فَبِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاَقْعُدَنَّ لَهُمْ صِرَاطَكَ الْمُسْتَقِيْمَۙ‏

ثُمَّ لَاَتِيَنَّهُمْ مِّنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ اَيْمَانِهِمْ وَعَنْ شَمَآٮِٕلِهِمْ‌ؕ وَلَاٰ تَجِدُ اَكْثَرَهُمْ شٰكِرِيْنَ‏

قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُوْمًا مَّدْحُوْرًا ‌ؕ لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَاَمْلَــٴَــنَّ جَهَنَّمَ مِنْكُمْ اَجْمَعِيْنَ‏

நாமே உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் “ஆதமுக்குப் பணியுங்கள்!’’ என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இல்லை.

“நான் உனக்குக் கட்டளையிட்டபோது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது?’’ என்று (இறைவன்) கேட்டான். “நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!’’ என்று கூறினான். “இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்’’ என்று (இறைவன்) கூறினான்.“அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பாயாக!’’ என்று அவன் கேட்டான். “நீ அவகாசம் அளிக்கப்பட்டவனாவாய்’’ என்று (இறைவன்) கூறினான்.

“நீ என்னை வழிகெட்டவனாக ஆக்கியதால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன்’’ என்று கூறினான். “பின்னர் அவர்களின் முன்னும் பின்னும், வலமும் இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காண மாட்டாய்’’ (என்றும் கூறினான்).

“இழிவுபடுத்தப்பட்டவனாகவும், விரட்டப் பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு! (மனிதர்களாகிய) அவர்களிலும் (ஜின்களாகிய) உங்களிலும் உன்னைப் பின்பற்றுவோர் அனைவரையும் போட்டு நரகத்தை நிரப்புவேன்’’ என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன்: 7:11-18)

قَالَ رَبِّ بِمَاۤ اَغْوَيْتَنِىْ لَاُزَيِّنَنَّ لَهُمْ فِى الْاَرْضِ وَلَاُغْوِيَـنَّهُمْ اَجْمَعِيْنَۙ‏

اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ‏

“என் இறைவா! என்னை நீ வழிகேட்டில் விட்டதால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்’’ என்று கூறினான்.

(அல்குர்ஆன்: 15:39-40)

قَالَ اَرَءَيْتَكَ هٰذَا الَّذِىْ كَرَّمْتَ عَلَىَّ لَٮِٕنْ اَخَّرْتَنِ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَاَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهٗۤ اِلَّا قَلِيْلًا‏

قَالَ اذْهَبْ فَمَنْ تَبِعَكَ مِنْهُمْ فَاِنَّ جَهَـنَّمَ جَزَآؤُكُمْ جَزَآءً مَّوْفُوْرًا

وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَاَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ وَعِدْهُمْ‌ ؕ وَمَا يَعِدُهُمُ الشَّيْطٰنُ اِلَّا غُرُوْرًا‏

اِنَّ عِبَادِىْ لَـيْسَ لَـكَ عَلَيْهِمْ سُلْطٰنٌ‌ ؕ وَكَفٰى بِرَبِّكَ وَكِيْلًا‏

“என்னை விட நீ சிறப்பித்த இவரைப் பற்றிக் கூறுவாயாக! கியாமத் நாள் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால் சிலரைத் தவிர இவரது சந்ததிகளை வேரறுப்பேன்’’ எனவும் கூறினான். “நீ போ! அவர்களில் யாரேனும் உன்னைப் பின்பற்றினால் உங்களுக்கு நரகமே கூலி. (அது) நிறைவான கூலி’’ என்று (இறைவன்) கூறினான். உனது குரல் மூலம் அவர்களில் உனக்கு முடிந்தோரை வழிகெடுத்துக் கொள்!

உனது குதிரைப் படையையும், காலாட்படையையும் அவர்களுக்கு எதிராக ஏவிக் கொள்! பொருட்செல்வத்திலும், மக்கட்செல்வத்திலும் அவர்களுடன் நீ கூட்டாளியாகிக் கொள்! அவர்களுக்கு வாக்குறுதியும் அளித்துக் கொள்! (என்றும் இறைவன் கூறினான்.) ஏமாற்றத்தைத் தவிர வேறெதனையும் ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. “எனது (நல்ல) அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை’’ (என்றும் இறைவன் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன்”

(அல்குர்ஆன்: 17:62-65)

மனிதர்களை வழிகெடுத்து அவர்களை நரகவாதிகளாக மாற்றுவதே ஷைத்தானின் லட்சியம் என்பதை மேற்கண்ட இறை வசனங்கள் அனைத்தும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

மறைந்திருந்து தீய எண்ணங்களைப் போடுபவன்

قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ‏

مَلِكِ النَّاسِۙ‏

اِلٰهِ النَّاسِۙ‏

مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ الْخَـنَّاسِ

الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ‏

ஷைத்தான் மறைந்திருந்தே மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகின்றான். மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும், மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.

(அல்குர்ஆன்: 114:1-5)

يٰبَنِىْۤ اٰدَمَ لَا يَفْتِنَـنَّكُمُ الشَّيْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَيْكُمْ مِّنَ الْجَـنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءاٰتِهِمَا ؕ اِنَّهٗ يَرٰٮكُمْ هُوَ وَقَبِيْلُهٗ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ‌ ؕ اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ‏

ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத் தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.

(அல்குர்ஆன்: 7:27)

மனித உடல் முழுவதும் ஒவ்வொரு விநாடியிலும் இரத்த நாளங்களில் இரத்தம் ஓடிக் கொண்டே இருக்கின்றது. ஆனால் அது நமது கண்களுக்குத் தெரிவதில்லை. அதுபோன்று ஷைத்தான் மறைந்திருந்து கொண்டு நம்முடைய உள்ளங்களில் எல்லா நேரங்களிலும் தீய எண்ணங்களைப் போடுவதற்கு முயற்சி செய்கின்றான். இதனைப் பின்வரும் சம்பவத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا، فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ فَانْقَلَبْتُ، فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي، وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ، فَمَرَّ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ، فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَعَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ» فَقَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ: ” إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الإِنْسَانِ مَجْرَى الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا سُوءًا، أَوْ قَالَ: شَيْئًا

ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். – உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது.

அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘‘நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்’’ என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட அவ்விருவரும், ‘‘அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)’’ என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான் …அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்… என்று நான் அஞ்சினேன்’’ என்று சொன்னார்கள்.

நூல்: (புகாரி: 3281)

அனைத்து மனிதர்களுடனும் ஷைத்தான் இருக்கிறான்

அல்லாஹ் மனிதர்களைச் சோதிப்பதற்காக ஒவ்வொரு மனிதனுடனும் ஒரு ஷைத்தானையும் ஒரு வானவரையும் நியமித்துள்ளான். ஷைத்தான் மனிதர்களை வழிகெடுப்பதற்காக அவர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுவான். அது போன்று வானவர்கள் மனிதர்களின் உள்ளங்களில் நல்ல எண்ணங்களைப் போடுகின்றனர். நமக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கும் ஷைத்தானையும் வானவரையும் நாம் காண இயலாது.

«مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ، إِلَّا وَقَدْ وُكِّلَ بِهِ قَرِينُهُ مِنَ الْجِنِّ» قَالُوا: وَإِيَّاكَ؟ يَا رَسُولَ اللهِ قَالَ: «وَإِيَّايَ، إِلَّا أَنَّ اللهَ أَعَانَنِي عَلَيْهِ فَأَسْلَمَ، فَلَا يَأْمُرُنِي إِلَّا بِخَيْرٍ»

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஜின்களிலுள்ள (ஷைத்தான்) கூட்டாளியொருவனும் வானவர்களிலுள்ள கூட்டாளியொருவரும் நியமனம் செய்யப்படாமல் உங்களில் எவரும் இல்லை’’ என்று கூறினார்கள். அப்போது, “தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?’’ என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், “என்னுடனும் தான். ஆயினும் அல்லாஹ், அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்து விட்டான். அவன் (எனக்குப்) பணிந்து விட்டான். ஆகவே, எனக்கு அவன் நல்லதையே கூறுவான்’’ என்று சொன்னார்கள்.

நூல்: (முஸ்லிம்: 5421) 

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ مِنْ عِنْدِهَا لَيْلًا، قَالَتْ: فَغِرْتُ عَلَيْهِ، فَجَاءَ فَرَأَى مَا أَصْنَعُ، فَقَالَ: «مَا لَكِ؟ يَا عَائِشَةُ أَغِرْتِ؟» فَقُلْتُ: وَمَا لِي لَا يَغَارُ مِثْلِي عَلَى مِثْلِكَ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَقَدْ جَاءَكِ شَيْطَانُكِ» قَالَتْ: يَا رَسُولَ اللهِ أَوْ مَعِيَ شَيْطَانٌ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: وَمَعَ كُلِّ إِنْسَانٍ؟ قَالَ: «نَعَمْ» قُلْتُ: وَمَعَكَ؟ يَا رَسُولَ اللهِ قَالَ: «نَعَمْ، وَلَكِنْ رَبِّي أَعَانَنِي عَلَيْهِ حَتَّى أَسْلَمَ»

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம் தங்கியிருந்த நாளில்) ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி) வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டுவிட்டாயா?’’ என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “என்னைப் போன்ற ஒருத்தி (பல துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?’’ என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?’’ என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?’’ என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “ஆம்‘ என்றார்கள். “ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?’’ என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் “ஆம்‘ என்றார்கள். நான், “தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்து விட்டான்’’ என்று சொன்னார்கள்.

நூல்: (முஸ்லிம்: 5422) 

சத்தியவாதிகளை அசத்தியவாதிகளாக்கும் ஷைத்தான்

இறைவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்ற இயற்கையான மார்க்கத்தின் மீதே அனைத்து மனிதர்களையும் அவன் படைத்துள்ளான். இதனைப் பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

فِطْرَتَ اللّٰهِ الَّتِىْ فَطَرَ النَّاسَ عَلَيْهَا ‌ؕ

இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான்.

(அல்குர்ஆன்: 30:30)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الفِطْرَةِ،

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 1385) 

ஆனால் இந்த இயற்கை நெறியிலிருந்து ஷைத்தான் மனிதர்களை வழிகெடுத்து அவர்களை அசத்தியவாதிகளாக மாற்றுகின்றான்.

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ ذَاتَ يَوْمٍ فِي خُطْبَتِهِ: ” أَلَا إِنَّ رَبِّي أَمَرَنِي أَنْ أُعَلِّمَكُمْ مَا جَهِلْتُمْ، مِمَّا عَلَّمَنِي يَوْمِي هَذَا، كُلُّ مَالٍ نَحَلْتُهُ عَبْدًا حَلَالٌ، وَإِنِّي خَلَقْتُ عِبَادِي حُنَفَاءَ كُلَّهُمْ، وَإِنَّهُمْ أَتَتْهُمُ الشَّيَاطِينُ فَاجْتَالَتْهُمْ عَنْ دِينِهِمْ، وَحَرَّمَتْ عَلَيْهِمْ مَا أَحْلَلْتُ لَهُمْ، وَأَمَرَتْهُمْ أَنْ يُشْرِكُوا بِي مَا لَمْ أُنْزِلْ بِهِ سُلْطَانًا…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:
அறிந்துகொள்ளுங்கள்! என் இறைவன் இன்றைய தினம் எனக்குக் கற்றுத் தந்தவற்றிலிருந்து நீங்கள் அறியாதவற்றை உங்களுக்குக் கற்றுத் தருமாறு எனக்குக் கட்டளையிட்டான். (இறைவன் கூறினான்:) நான் ஓர் அடியானுக்கு வெகுமதியாக வழங்கியுள்ள அனைத்துப் பொருட்களும் அவனுக்கு அனுமதிக்கப் பட்டவையே ஆகும். நான் என் அடியார்கள் அனைவரையும் (இயற்கையிலேயே) உண்மை வழி நின்றவர்களாகவே படைத்தேன்.

(ஆயினும்) அவர்களிடம் ஷைத்தான் வந்து அவர்களது இயற்கை நெறியிலிருந்து அவர்களைப் பிறழச் செய்துவிட்டான். நான் அவர்களுக்கு அனுமதித்துள்ளவற்றைத் தடை செய்யப்பட்டவையாக ஆக்கிவிட்டான்; நான் எனக்கு இணை கற்பிப்பதற்கு எந்தச் சான்றையும் இறக்காத நிலையில் எனக்கு இணை கற்பிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டான்.

அறிவிப்பவர்: இயாள் பின் ஹிமார் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 5498) 

ஒரு வழியைக் கெடுத்து, பல வழிகளின் பக்கம் அழைக்கும் ஷைத்தான்

பன்னெடுங்காலமாக முஸ்லிம்கள் இறைச் செய்தி மட்டுமே இறை மார்க்கம் என்ற சத்தியக் கொள்கையை விட்டும் வழிதவறி, கொள்கை ரீதியாகப் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு பிரிவினரும் தமது கொள்கையே சத்தியக் கொள்கை என வாதிட்டும் வருகின்றனர். இவ்வாறு மார்க்கத்தைப் பல பிரிவுகளாகப் பிரிப்பது மிகப் பெரும் வழிகேடாகும். நேர்வழியாக ஒரு வழியை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதை அல்லாஹ் கட்டளையிடுவதுடன் வழிகெட்ட பிரிவுகளில் அங்கம் வகிப்பதை மிகக் கடுமையாக எச்சரிக்கையும் செய்கின்றான்.

وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْ

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்!

(அல்குர்ஆன்: 3:103)

اَنْ اَقِيْمُوا الدِّيْنَ وَ لَا تَتَفَرَّقُوْا فِيْهِ‌ؕ

மார்க்கத்தை நிலைநாட்டுங்கள்! அதில் பிரிந்துவிடாதீர்கள்!

(அல்குர்ஆன்: 42:13)

اِنَّ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَـعًا لَّسْتَ مِنْهُمْ فِىْ شَىْءٍ‌ ؕ اِنَّمَاۤ اَمْرُهُمْ اِلَى اللّٰهِ ثُمَّ يُنَـبِّـئُـهُمْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ‏

தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (நபியே!) உமக்குச் சம்பந்தம் இல்லை. அவர்களின் விஷயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

(அல்குர்ஆன்: 6:159)

مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ‌ؕ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ‏

தங்களது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளாகி விட்ட இணை கற்பித்தோரில் ஆகி விடாதீர்கள்! ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர்.

(அல்குர்ஆன்: 30:32)

திருமறைக் குர்ஆன் எந்த ஒரு வழியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அதில் பிரிந்து விடக் கூடாது என்றும் உத்தரவிடுகிறதோ அவ்வழியை விட்டும் மக்களை வழிகெடுத்து, அவர்களை நரகவாதிகளாக்க வேண்டும் என்பதும் ஷைத்தானின் லட்சியமாகும்.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ
خَطَّ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا خَطًّا، وَخَطَّ عَنْ يَمِينِهِ خَطًّا، وَخَطَّ عَنْ يَسَارِهِ خَطًّا، ثُمَّ قَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ» ، ثُمَّ خَطَّ خُطُوطًا فَقَالَ: «هَذِهِ سُبُلٌ، عَلَى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ» ، وَقَرَأَ {أَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ} [الأنعام: 153] فَتَفَرَّقَ بِكُمْ

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களுக்கு ஒரு கோட்டை வரைந்தார்கள். அதன் வலது புறம் ஒரு கோட்டையும் இடது புறம் ஒரு கோட்டையும் வரைந்தார்கள். பிறகு “இதுதான் அல்லாஹ்வின் வழியாகும்” என்று கூறினார்கள். பின்னர் இன்னும் பல கோடுகளை வரைந்து “இவை (வழிகேடான) பலவழிகளாகும். இந்த வழிகள் அனைத்திலும் ஷைத்தான் இருந்து கொண்டு அவற்றை நோக்கி அழைத்துக் கொண்டிருக்கின்றான்.

பிறகு “இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்” (அல்குர்ஆன்: 6:153) என்ற இறைவசனத்தை ஓதினார்கள்.

நூல்: முஸ்னதுல் பஸ்ஸார்-1865 

தீய எண்ணங்களின் மூலமே ஆதி பிதாவை வழிகெடுத்தான்

ஷைத்தான் மனித உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுவதன் மூலமே அவர்களை நேர்வழியில் இருந்து வழிகெடுக்கின்றான். இதற்குரிய சான்றுகளில் ஒன்றுதான் முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களையும் அவர்களின் துணைவியார் அன்னை ஹவ்வா (அலை) அவர்களையும் ஷைத்தான் வழிகெடுத்த சம்பவமாகும். அவர்களிடம் ஆசை வார்த்தை கூறியே ஷைத்தான் ஏமாற்றினான். இது பற்றித் திருக்குர்ஆன் எடுத்துரைக்கிறது.

وَيٰۤاٰدَمُ اسْكُنْ اَنْتَ وَزَوْجُكَ الْجَـنَّةَ فَـكُلَا مِنْ حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هٰذِهِ الشَّجَرَةَ فَتَكُوْنَا مِنَ الظّٰلِمِيْنَ‏

 فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطٰنُ لِيُبْدِىَ لَهُمَا مَا وٗرِىَ عَنْهُمَا مِنْ سَوْاٰتِهِمَا وَقَالَ مَا نَهٰٮكُمَا رَبُّكُمَا عَنْ هٰذِهِ الشَّجَرَةِ اِلَّاۤ اَنْ تَكُوْنَا مَلَـكَيْنِ اَوْ تَكُوْنَا مِنَ الْخٰلِدِيْنَ‏

وَقَاسَمَهُمَاۤ اِنِّىْ لَـكُمَا لَمِنَ النّٰصِحِيْنَۙ‏

فَدَلّٰٮهُمَا بِغُرُوْرٍ‌ ۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ‌ ؕ وَنَادٰٮهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّـكُمَاۤ اِنَّ الشَّيْطٰنَ لَـكُمَا عَدُوٌّ مُّبِيْنٌ‏

“ஆதமே! நீயும் உமது மனைவியும் இந்தச் சொர்க்கத்தில் தங்குங்கள்! விரும்பியவாறு இருவரும் உண்ணுங்கள்! இந்த மரத்தை நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) இருவரும் அநீதி இழைத்தவர்களாகி விடுவீர்கள்’’ (என்றும் கூறினான்.)

அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். “இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை’’ என்று கூறினான். “நான் உங்கள் இருவருக்கும் நலம் நாடுபவனே’’ என்று அவர்களிடம் சத்தியம் செய்தான். அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான்.

(அல்குர்ஆன்: 7:19-22)

فَوَسْوَسَ اِلَيْهِ الشَّيْطٰنُ قَالَ يٰۤاٰدَمُ هَلْ اَدُلُّكَ عَلٰى شَجَرَةِ الْخُلْدِ وَمُلْكٍ لَّا يَبْلٰى‏

فَاَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْاٰ تُہُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ‌ وَعَصٰۤى اٰدَمُ رَبَّهٗ فَغَوٰى‌ۖ

அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.) அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே அவர் வழிதவறினார்.

(அல்குர்ஆன்: 20:120,121)

பிறகு ஆதம் (அலை) அவர்களும், ஹவ்வா (அலை) அவர்களும் தாங்கள் செய்த தவறுக்கு இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரினர். இறைவன் அவர்களை மன்னித்து நல்லடியார்களாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.

فَدَلّٰٮهُمَا بِغُرُوْرٍ‌ ۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءٰتُهُمَا وَطَفِقَا يَخْصِفٰنِ عَلَيْهِمَا مِنْ وَّرَقِ الْجَـنَّةِ‌ ؕ وَنَادٰٮهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّـكُمَاۤ اِنَّ الشَّيْطٰنَ لَـكُمَا عَدُوٌّ مُّبِيْنٌ‏

قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏

قَالَ اهْبِطُوْا بَعْضُكُمْ لِبَـعْضٍ عَدُوٌّ‌ ۚ وَلَـكُمْ فِى الْاَرْضِ مُسْتَقَرٌّ وَّمَتَاعٌ اِلٰى حِيْنٍ‏

அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது அவர்களின் வெட்கத்தலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர்.  அவர்களை அவர்களின் இறைவன் அழைத்து “இம்மரத்தை நான் உங்களுக்குத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் பகிரங்க எதிரி என்று உங்களிடம் நான் கூறவில்லையா?’’ எனக் கேட்டான்.

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நட்டமடைந்தோராவோம்’’ என்று அவ்விருவரும் கூறினர். “(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன’’ என்று (இறைவன்) கூறினான்.

(அல்குர்ஆன்: 7:22-24)

ثُمَّ اجْتَبٰهُ رَبُّهٗ فَتَابَ عَلَيْهِ وَهَدٰى‏

பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர்வழி காட்டினான்.

(அல்குர்ஆன்: 20:122)

ஆதம் (அலை) அவர்களையும், ஹவ்வா (அலை) அவர்களையும் தீய எண்ணத்தை ஏற்படுத்தி ஷைத்தான் வழிகெடுத்தது போன்றே நம்மையும் வழிகெடுப்பான் என அல்லாஹ் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளான்.

يٰبَنِىْۤ اٰدَمَ لَا يَفْتِنَـنَّكُمُ الشَّيْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَيْكُمْ مِّنَ الْجَـنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءاٰتِهِمَا ؕ

ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியது போல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம்.

(அல்குர்ஆன்: 7:27)

ஷைத்தான் மனிதர்களை எல்லா வழிகளிலும் வழிகெடுப்பான் என்பதை புரிந்து கொண்டு ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடத்தில் அதிகமாக பாதுகாப்பு கேட்கும் நன்மக்களாய் நாம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட்ட நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.