மது தடை வசனம் இறக்கப்பட்டவுடன்
அல்லாஹ் மதுவைத் தடை செய்தவுடன் நபித்தோழர்கள் மதுவை வீதியில் கொட்டி இறைக் கட்டளையை உடனடியாக அமலுக்குக் கொண்டு வந்தார்கள்.
”அபூஉபைதா (ரலி), அபூதல்ஹா (ரலி) மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு நிறம் மாறிய பேரீச்சங்காய்களாலும் பேரீச்சங்கனிகளாலும் தயாரித்த மதுவை நான் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘மது தடை செய்யப்பட்டுவிட்டது’’ என்று சொன்னார். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘எழுந்திரு, அனஸே! இவற்றைக் கொட்டிவிடு’’ என்று சொன்னார்கள். நான் அவற்றைக் கொட்டிவிட்டேன்.”
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(புகாரி: 5582),(முஸ்லிம்: 4006)
”நான் அபூ தல்ஹா (ரலி) அவர்கள் வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன். அந்த நாட்களில் பேரீச்சம் பழ மதுவை(பேரீச்ச மரக்கள்ளை)யே அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பட்டவுடன்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, (மக்களே!) மது தடை செய்யப்பட்டு விட்டது என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள்.
அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், வெளியே சென்று இதை ஊற்றிவிடு என்று கூறினார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது.
மக்களில் சிலர், ‘‘மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே! (அவர்களின் நிலை என்ன?)’’ என்று கேட்டார்கள். அப்போது தான், ‘‘நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்கள் மீது குற்றமில்லை’’ (5:93) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.”
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)