மது தடை தொடர்பான வசனம் இறக்கப்படல்

முக்கிய குறிப்புகள்: குர்ஆன் வசனம் இறங்கிய காரணம்

நான், அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்கள் சிலர் இருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அவர்கள், “வாரும்! நாங்கள் உமக்கு உண்பதற்கு உணவும் பருகுவதற்கு மதுவும் தருகிறோம்‘’ என்று கூறினர். இது மது தடை செய்யப்படுவதற்கு முன் நடைபெற்ற நிகழ்வாகும். அவ்வாறே நான் ஒரு தோட்டத்திற்கு அவர்களிடம் சென்றேன். அங்கு அவர்களுக்கு அருகில் பொரிக்கப்பட்ட ஒட்டக இறைச்சியும் ஒரு தோல் பையில் மதுவும் இருந்தது. அவர்களுடன் சேர்ந்து நான் அந்த இறைச்சியை உண்டேன்; (மதுவைப்) பருகினேன்.

அப்போது அவர்களிடையே முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிக(ளின் சிறப்புக)ள் குறித்துப் பேசப்பட்டது. அப்போது நான் “அன்சாரிகளை விட முஹாஜிர்களே சிறந்தவர்கள்’’ என்று சொன்னேன். அப்போது ஒருவர் ஒட்டகத்தின் தாடையெலும்பு ஒன்றை எடுத்து என்னை அடித்துவிட்டார்; எனது மூக்கில் காயமேற்படுத்திவிட்டார். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததை அவர்களிடம் தெரிவித்தேன்.

அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் என் விஷயத்தில் மது தொடர்பாக “நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும்’’ (5:90) என்று தொடங்கும் வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

(முஸ்லிம்: 4789)