மதீனா பிரவேசம்
நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தது முதல் அங்கு நடந்த பல்வேறு நிகழ்வுகளையும், வரலாற்று குறிப்பிடுகளையும் காண்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குபாவில் பதினான்கு நாட்கள் தங்கிய பிறகு மதீனாவிலிருந்த தனது உறவினர்களான பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வாட்களை தொங்கவிட்டபடி வந்து நபி (ஸல்) அவர்களிடமும், அபூபக்கர் (ரலி) அவர்களிடமும் ஸலாம் கூறினார்கள். பிறகு நீங்கள் இருவரும் அச்சம் தீர்ந்தவர்களாகவும், அதிகாரம் படைத்தவர்களாகவும் பயணம் செய்யலாம் என்று பனூ நஜ்ஜார் கூட்டத்தினர் கூறினார்கள்.
அதன் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்திருக்க அபூபக்கர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தினர் அவர்களைச் சுற்றிலும் சூழ்ந்தவர்களாக மதீனாவை நோக்கி புறப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி),(புகாரி: 3911, 3932) ➚
மதீனாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டது. அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள் என்று கூறத் தொடங்கினார்கள். சிறுவர்கள் சந்தோஷமாகக் குதித்தார்கள். அபிசீனிய வீரர்கள் போர்க்கருவிகளைக் கொண்டு வீரவிளையாட்டுக்களை விளையாடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வரவேற்றனர்.
ஐநூறுக்கும் மேற்பட்ட அன்சாரித்தோழர்கள் ஒன்று கூடி அவர்களை அழைத்து வந்தார்கள். அவ்வாறு அழைத்து வரும்போது நாங்கள் உங்களுக்குக் கட்டுப்படுகிறோம். உங்களுக்கு வழிபடுவோம் என்று கூறிக்கொண்டு வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் வீதிகளில் வரும்போது பெண்கள் தங்கள் மாடிகளின் மேல் ஏறிக்கொண்டு பார்த்தார்கள். இந்தக் கூட்டத்தில் முஹம்மது யார்? முஹம்மது யார்? என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டார்கள்.
(புகாரி அபூதாவுத் அஹமத்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவில் சிறிது தூரம் சென்று அங்கே அபூ அய்யூப் அல்அன்சாரீ என்பவரது வீட்டிற்கு அருகில் இறங்கினார்கள். அங்கே தமது குடும்பத்தாரிடம் உரை நிகழ்த்தினார்கள். அப்போது அங்கே பேரிச்சம் பழத் தோட்டத்தில் அப்துல்லாஹ் பின் ஸலாம் என்ற யூத அறிஞர் கனிகளை பறித்துக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் ஆற்றிக் கொண்டிருந்த உரையை கேட்டார். உரையைக் கேட்டதும் தான் வந்த வேலையை மறந்து நின்று விட்டார். பின்னர் தமது வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்கள் குடும்பத்தாரின் வீடுகளில் அருகில் இருப்பது எது? என்று கேட்டார்கள். அதற்கு அபூ அய்யூப் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இது என் வீடு. என் வீட்டு வாசலில் தான் நீங்கள் இருக்கின்றீர்கள். நான் தான் உங்கள் குடும்பத்தார்களில் மிக அருகில் இருப்பவன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் சென்று, நாங்கள் ஓய்வு கொள்வதற்காக உங்கள் வீட்டை தயார் செய்யுங்கள் என்று கூறினார்கள். அபூ அய்யூப் அல் அன்சாரீ (ரலி) உயர்ந்தவனான அல்லாஹ்வின் அருள் வளத்துடன் நீங்கள் இருவரும் எழுந்து வாருங்கள் என்று அழைத்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் (ரலி) அவர்களின் வீட்டிற்குள் வந்தபோது அங்கே நபி (ஸல்) அவர்களின் உரையை கேட்டுவிட்டுச் சென்ற அப்துல்லாஹ் பின் ஸலாம் வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் நான் மூன்று விஷயங்களை உங்களிடம் கேட்கப்போகிறேன். ஓர் இறைத்தூதர் மட்டுமே! அவற்றை அறிவார் என்று கூறினார். பிறகு இறுதிநாளின் அடையாளங்களில் முதல் அடையாளம் எது? சொர்க்கவாசி முதன்முதல் உண்ணும் உணவு எது? குழந்தை தன் தந்தையின் சாயலோ அல்லது தன் தாயின் சாயலோ இருப்பது ஏன்? என்று மூன்று கேள்விகளைக் கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் சற்று முன்பு தான் ஜிப்ரீல் அவர்கள் இது குறித்து எனக்கு விளக்கம் தந்தார்கள் என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் ஜிப்ரீலா அவர் தான் வானவர்களிலேயே யூதர்களுக்குப் பகைவரான வானவராயிற்றே! என்று கூறினார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கேள்விகளுக்கு விளக்கம் கூறத் துவங்கினார்கள். இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் நெருப்பாகும். அந்த நெருப்பானது மக்களை கிழக்கிலிருந்து துரத்திக்கொண்டு வந்து மேற்கு திசையில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகளின் முதலாவது உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியிலுள்ள அதிகப்படியான சதையாகும். ஒர் ஆண் தனது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடும் போது அவனது நீர் முந்திக் கொண்டால் குழந்தை தந்தையின் சாயல் பிறக்கின்றது. பெண்ணின் நீர் முந்திக் கொண்டால் குழந்தை தாயின் சாயல் பிறக்கின்றது என்று பதிலளித்தார்கள்.
இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் ஸலாம் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்றும் தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்றும் நான் உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்.
பிறகு அவர் அல்லாஹ்வின் தூதரே யூதர்கள் பொய்யில் உளறித் திளைத்த சமுதாயத்தினர் அவர்கள் என்னைப் பற்றி நான் யூதர்களின் தலைவன் என்றும், யூத அறிஞன் என்றும் யூத அறிஞர்களின் மகன் என்றும் எண்ணியுள்ளார்கள். நான் முஸ்லிமாகிவிட்டேன் என்பதை அவர்கள் அறியும் முன்பாக அவர்களிடம் என்னைப் பற்றிக் கேளுங்கள். ஏனெனில், நான் முஸ்லிமான விஷயம் தெரிந்தால் அவர்கள் என்னைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் கூறுவார்கள் என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து வர ஆளனுப்பினார்கள். யூதர்கள் அவர்களை நோக்கி வந்தபோது அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அந்த வீட்டிற்குள் சென்று ஒளிந்துகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர்களை நோக்கி யூதக் கூட்டத்தினரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இல்லையேல் உங்களுக்குக் கேடுதான். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதர் தான் எனவும் நான் சத்தியத்துடனேயே! வந்துள்ளேன் எனவும் நீங்கள் அறிவீர்கள். எனவே நீங்கள் முஸ்லிமாகிவிடுங்கள் என்று கூறினார்கள். ஆனால் யூதர்கள் ஏற்க மறுத்து அப்படிப்பட்டத் தூதரைப் பின்பற்ற எங்களுக்குத் தெரியாது என்று கூறினார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்க, யூதர்களும் அவ்வாறே கூறினார்கள்.
உங்களில் அப்துல்லாஹ் பின் ஸலாம் எத்தகைய மனிதர் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் அவர் எங்களின் தலைவரும், தலைவரின் மகனுமாவார் என்று கூறினார்கள். அவர் முஸ்லிமாகிவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் அல்லாஹ் காப்பாற்றட்டும். அவர் முஸ்லிமாகமாட்டார் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கேட்க யூதர்கள் அதையே கூறினார்கள்.
அப்போது அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் வெளியே வந்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் நான் உறுதியளிக்கிறேன் என்று கூறினார்கள். உடனே யூதர்கள் நீ பொய் சொல்லிவிட்டாய் என்று கூறி இவர் எங்களில் கெட்டவரும், கெட்டவரின் மகனுமாவார் என்று அவரைப் பற்றி குறை கூறத்துவங்கினார்கள். அல்லாஹ்வின் தூதரே! இதைத் தான் நான் அஞ்சினேன் என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),(புகாரி: 3938) ➚
இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் (ரலி) அவர்களின் வீட்டிலேயே தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் கீழேயும், அபூஅய்யூப் (ரலி) மாடியிலும் தங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்த முற்றத்தில் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டார்கள். இந்த நேரத்தில் அபூஅய்யூப் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் தலைக்கு மேல் நாம் நடக்கின்றோமோ என்று ஒருவித சந்தேகம் ஏற்பட்டது.
மறுநாள் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் மாடியில் தங்குங்கள். நான் கீழே தங்குகிறேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இல்லை கீழே தான் எனக்கு வசதியாக உள்ளது என்று கூறினார்கள். ஆனால் அபூஅய்யூப் (ரலி) தொடர்ந்து வலியுறுத்தி நபி (ஸல்) அவர்களை மேலே போய் தங்கச் செய்தார்கள்.
நூல்: முஸ்லிம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது ஒட்டகத்தில் ஏறி மதீனாவின் வீதியில் சென்றபோது அந்த ஒட்டகம் ஓர் இடத்தில் போய் மண்டியிட்டது. அந்நாளில் முஸ்லிம்கள் சிலர் அங்கு தான் தொழுது கொண்டிருந்தார்கள். அந்த இடம் பனூ நஜ்ஜார் கூட்டத்தைச் சேர்ந்த சஹ்ல் சுஹைல் என்ற இரண்டு அனாதைச் சிறுவர்களுக்கு சொந்தமான இடமாக இருந்தது. அந்த சிறுவர்கள் ஸஅத் பின் சுராரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்தார்கள். அந்த இடத்தை பேரீச்சம் பழத்தை உலரவைக்கும் களமாக பயன்படுத்தி வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் ஒட்டகம் அந்த இடத்தில் மண்டியிட்டபோது இன்ஷா அல்லாஹ் இதுதான் நமது தங்குமிடம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு இடத்தின் உரிமையாளர்களான இரண்டு சிறுவர்களையும் அழைத்து இந்தக்களத்தை பள்ளிவாசல் அமைப்பதற்காக விலைக்குத் தாருங்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதரே! அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் என்று கூறினார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அச்சிறுவர்களிடமிருந்து அன்பளிப்பாக வாங்க மறுத்து விலை கொடுத்தே வாங்கினார்கள்.
அறிவிப்பவர்: சுராகா இப்னு (மாலிக் இப்னி) ஜுஃஷும் (ரலி),
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் பள்ளிவாசலில் தான் தங்கினார்கள் என்று பிற்காலத்தில் யாரும் குறை கூற முடியாத அளவுக்கு மஸ்ஜிதுந் நபவீ கட்டுவதற்கான நிலத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விலைகொடுத்து வாங்கியுள்ளார்கள். அம்மக்கள் அன்பளிப்பாகக் கொடுப்பதற்குத் தயராக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் வாங்கிய அந்த இடத்தில் இணைவைப்பாளர்களின் மண்ணறைகளும், இடிபாடுகளும், சில பேரிச்சம்மரங்களும் இருந்தன. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இணைவைப்போரின் கல்லறைகளைத் தோண்டும்படியும் இடிபாடுகளை அகற்றி சமப்படுத்தும்படியும் உத்தரவிட்டார்கள். அவ்வாறே! சமப்படுத்தப்பட்டன. பிறகு நபி (ஸல்) அவர்களின் உத்தரவின் பேரில் பேரிச்ச மரங்களை வெட்டி கிப்லா திசையில் வரிசையாக நட்டினார்கள்.
பள்ளிவாசலின் நிலைக்கால்களாக கல்லை நட்டுவைத்தனர். பள்ளிவாசலை கட்டுவதற்காக நபி (ஸல்) அவர்களும் சேர்ந்து செங்கல் சுமந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒருவித யாப்பு வதைப் பாடலை பாடிக் கொண்டிருந்தார்கள்.
மேலும் யா அல்லாஹ் மறுமையின் பலனே! உண்மையான பலனாகும். அத்தகைய மறுமைக்காகப் பாடுபடும் அன்சாரிகளுக்கும், முஹாஜிர்களுக்கும் நீ கருணை காட்டுவாயாக என்று துஆச் செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம் மக்காவில் துவங்கி மதீனாவில் மஸ்ஜிதுந் நபவீயில் நிறைவடைந்தது.
அறிவிப்பவர்: சுராகா இப்னு (மாலிக் இப்னி) ஜுஃஷும் (ரலி),
இரண்டாவது கலீஃபாவான உமர் (ரலி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் மக்களை ஒன்று திரட்டினார்கள். வருடக்கணக்கை நாம் எதிலிருந்து கணக்கிடுவது என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அந்தக் காலக்கட்டத்தில் யானை வருடம் என்ற வருடக்கணக்கை மக்கள் கொண்டிருந்தார்கள். யானை வருடம் என்பது குர்ஆனில் சூரத்துல் ஃபீல் என்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்படும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும். கஃபாவை இடிப்பதற்காக அப்ரஹா என்ற மன்னன் யானைப் படையைத் திரட்டிக் கொண்டு வந்தபோது அல்லாஹ் பறவைக் கூட்டத்தைக் கொண்டு பொடிக்கற்களை வீசச் செய்து அந்தப் படையை அழித்தான். இந்தச் சம்பவம் நடந்த ஆண்டை ஆமுல் ஃபீல் யானை ஆண்டு என்று முஷ்ரிக்குகள் கணக்கிட்டு வந்தனர்.
உமர் (ரலி) அவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் அலி (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்போது ஹிஜ்ரத் செய்தார்களோ அதிலிருந்து கணக்கிடுவோம். இணைவைப்பாளர்கள் எடுத்துக் கொண்ட வரலாற்றை விட்டுவிடுவோம் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்களும் இதே கருத்தின் அடிப்படையில் முடிவு செய்தார்கள். அன்றிலிருந்து ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு ஹிஜ்ரீ என்ற ஆண்டுக் கணக்கை முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டார்கள்.
நூல்: புகாரி, ஹாகிம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் இனி (மக்கா வெற்றிக்குப் பிறகு) ஹிஜ்ரத் கிடையாது.
இந்த ஹதீஸிற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் விளக்கம் கூறும் போது இறைநம்பிக்கையாளர்கள் தமது மார்க்கத்தை பின்பற்ற முடியாமல் சோதிக்கப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சி அல்லாஹ்வையும், அவனது தூதரையும் குறிக்கோளாகக் கொண்டு ஹிஜ்ரத் செய்தார்கள். ஆனால் இன்றோ அல்லாஹ் இஸ்லாத்தை ஓங்கச் செய்துவிட்டான். இன்று இறைநம்பிக்கையாளர்கள் தான் விரும்பிய இடத்தில் தன் இறைவனை வணங்கலாம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதாஉ இப்னு அபீ ரபாஹ் (ரஹ்),(புகாரி: 3900) ➚