மணக்கும் குர்ஆனை மனனம் செய்வோம்
மணக்கும் குர்ஆனை மனனம் செய்வோம்
“எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
(புகாரி: 6286)
இந்த மறுபதிவு ரமளான் மாதத்தில் ஒவ்வொரு இரவிலும் நடைபெறும் என்று மேற்கண்ட(புகாரி: 3554)ஹதீஸிலும் விரிவாக கூறப்பட்டுள்ளது.
ஏனிந்த மறுபதிவு? எதற்காக மறுபார்வை? அல்லாஹ்வின் இந்த அருள்மிகு குர்ஆன் எழுத்தளவில், ஏட்டளவில் இல்லாமல் உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இதைப் பாதுகாத்தது போன்று நபித்தோழர்களின் உள்ளங்களில் வைத்தும் அல்லாஹ் பாதுகாக்கின்றான்.
இந்த வசனத்தில் “சுதூர்’ – உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
இது “சத்ர்’ என்ற வார்த்தையின் பன்மையாகும். இதன்படி நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் மட்டுமல்லாமல் அந்த நபித்தோழர்களின் உள்ளங்களிலும் பாதுகாக்கப்பட்டது. அதன் பிறகு அது அடுத்த தலைமுறையினரின் உள்ளங்களில் பதியப்படுகின்றது; பாதுகாக்கப்படுகின்றது. அன்றிலிருந்து இன்று வரை இந்தப் புனிதக் குர்ஆன் இவ்வாறே பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
நபி (ஸல்) அவர்களால் அன்று ஓதப்பட்ட அதே ஒலி வடிவத்தில் ஓசை நயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எழுத்து வடிவிலான ஏடுகள், உள்ளங்களில் உள்ள குர்ஆனின் பிரதிபலிப்பாக அமைந்திருக்கின்றன.
முழுமையான, முதன்மையான பாதுகாப்பு, ஓசை வடிவக் குர்ஆனுக்குத் தான். தலைமுறை, தலைமுறையாக பதினான்கு நூற்றாண்டுகளைத் தாண்டி, கால வெள்ளத்தைக் கடந்து கலப்படம் இல்லாமல், கைச்சரக்கு கலக்காமல் மனித உள்ளங்களில் பயணித்து வருகின்ற தன்னிகரற்ற வேதம் இந்தக் குர்ஆன் மட்டும் தான்.
இப்படிக் குர்ஆனை தங்கள் மனப் பேழைகளில் மனனம் செய்வதன் மூலம் பாதுகாத்த மனிதர்கள் மகத்தானவர்கள் ஆவர். மாண்புறு குர்ஆனை சங்கிலித் தொடரில் பாதுகாப்பதற்காக மனனம் செய்து வரும் கன்னித் தலைமுறையினர் கண்ணியத்திற்குரியவர்கள் ஆவர். நபி (ஸல்) அவர்களும் இவ்வாறு மகிமை சூட்டுகின்றார்கள்; மதிப்பு கூட்டுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
(புகாரி: 4937)
அல்குர்ஆனை மனனம் செய்த மக்கள் மலக்குகளைப் போன்றவர்கள் என்றால் அதன் மகிமையையும் மாண்பையும் சொல்ல வேண்டியதில்லை. தொழுவிப்பதில் குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் முதல் மரியாதை அளிக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்‘ என்று சொன்னார்கள்
அறிவிப்பவர்: அம்ர் பின் ஸலமா (ரலி),
(புகாரி: 4302)
மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தொழுவிக்கட்டும். அவர்களில் தொழுவிப்பதற்கு மிகவும் தகுதியானவர் குர்ஆனை அதிகம் ஓதத் தெரிந்தவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),
(முஸ்லிம்: 1191, 1077)
இருக்கும் போது இந்த மரியாதை என்றால் இறந்த பின்னும் மரியாதை தொடர்கின்றது.
நபி (ஸல்) அவர்கள், உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடையில் கஃபனிட்டுவிட்டு, “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்டதும் அந்த ஒருவரது உடலைக் கப்ரின் உட்குழியில் முதலில் வைத்துவிட்டு, “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்” எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு பணித்தார்கள். இவர்கள் நீராட்டப்படவோ இவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவிக்கப்படவோ இல்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),
(புகாரி: 1343)
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன்னதத் திருக்குர்ஆன் உலக மக்களைத் தன்வயப்படுத்தி இதை சாத்தியமாக்குகின்றது. சத்தியம் என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றது.
தேனடையை மொய்க்கும் வண்டுகள் போன்று மக்கள் திருக்குர்ஆனை மொய்த்துக் கொண்டிருக்கின்றனர். அழகிய குரலில் குர்ஆன் ஒலி அலையாய் மாறும் போது, உருகாத உள்ளங்கள் இல்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி) ஆகியோர் ஓதும் போது ஆண்களும், பெண்களும் தங்கள் உள்ளங்களைப் பறி கொடுத்த அற்புத நிகழ்வை ஹதீஸ்களில் பார்க்க முடிகின்றது.
நபி (ஸல்) அவர்களும் குர்ஆனைக் கேட்கும் போது இவ்வாறு தங்கள் உள்ளத்தைப் பறி கொடுத்திருக்கின்றார்கள். ரீங்காரமிட்டு ஓதிய அபூமூஸா (ரலி) அவர்களை நபியவர்கள் பாராட்டுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) “அபூ மூசா! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது” என என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி),
(புகாரி: 5048)