மக்கா காஃபிர்களும் தமிழக முஸ்லிம்களும் – ஒரு கொள்கை ஒப்பீடு
மக்கா காஃபிர்களும் தமிழக முஸ்லிம்களும் – ஒரு கொள்கை ஒப்பீடு
லா இலாஹ இல்லல்லாஹ்
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை இதுதான் இஸ்லாத்தின் கொள்கை முழக்க மந்திரமாகும். இதை சமரசமின்றி ஏற்றுக் கொள்பவர்களும், அதன்படி செயலாற்றுபவர்களுமே முஸ்லிம்கள் எனப்படுவர். குர்ஆன் எந்த மக்களை காஃபிர்கள் என்று அழைக்கின்றதோ அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள முக்கியக் கொள்கை வேறுபாடே இதை ஏற்றுக் கொள்வதில் தான் உள்ளது.
“அல்லாஹ்வும் ஒரு இறைவன்’ எனும் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லாம் முஸ்லிம்களாகி விட முடியாது. ஏனெனில் “அல்லாஹ்வும் ஒரு இறைவன்’ என்பதில் மக்கா காஃபிர்களுக்கு எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை. இதில் இன்றைக்கு உள்ள முஸ்லிம்களை விட அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குரிய இறைவன் – வேறு யாரும் வணக்கத்திற்குரிய இறைவன் அல்ல எனும் சித்தாந்தத்தை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே முஸ்லிம்கள் ஆவர்.
இந்த அளவீட்டின் படி, குர்ஆன் வசன சான்றுகளின் துணை கொண்டு அலசினால் அதற்கான விடை மக்கா காஃபிர்களுக்கும், தமிழக முஸ்லிம் களில் அனேகமானவர்களுக்கும் கொள்கை ரீதியாக எந்த வித்தியாசமும் இல்லை என்பதாகத்தான் உள்ளது. இறைக் கோட்பாடு தொடர்பாக மக்கா காஃபிர்களின் கொள்கை என்னவாக இருந்ததோ அதையே தான் இன்றைக்குப் பெரும்பாலான முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்வோர் கொண்டிருக்கின்றனர்.
ஒப்பீடு: 1
வானம் பூமியைப் படைத்தது யார்?
வானம் பூமியைப் படைத்தது யார் என்று இன்றைக்கு உள்ள முஸ்லிம்களிடம் கேட்டால் அல்லாஹ் என்பார்கள். இதையே மக்கா காஃபிர்களும் சொன்னார்கள் என்கிறது திருக்குர்ஆன்.
“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்‘ என்று அவர்கள் கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.
“வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்று கூறுவார்கள். அப்படியாயின் “எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?”
“வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்” எனக் கூறுவார்கள்.
ஒப்பீடு: 2
மழையைத் தருபவன் யார்?
வானிலிருந்து மழையைப் பொழிவித்து, மக்களை இரட்சிப்பவன் யார் என்று கேட்டால் இன்றைக்கு உள்ள முஸ்லிம்களிடம் கூட மாறுபட்ட பதில்கள் வெளிப்படலாம். ஆனால் மக்கா காஃபிர்கள் சந்தேமற அல்லாஹ் தான் மழையைப் பொழிவிக்கிறான் என்று உறுதியாக நம்பினார்கள்.
“வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் ‘அல்லாஹ்‘ என்றே கூறுவார்கள். “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.
மழையை இறக்குபவன் அல்லாஹ் தான் எனும் நம்பிக்கையில் முஸ்லிம்களுக்கு சற்றும் சளைக்காத வர்களாக மக்கா காஃபிர்கள் இருந்துள்ளனர் என்பதை இவ்வசனம் தெளிவாக்குகின்றது.
ஒப்பீடு: 3
மனிதர்களைப் படைத்தவன் யார்?
இந்த வினாவிற்கு மக்கா காஃபிர்கள், இன்றைய முஸ்லிம்கள் ஆகிய இரு சாராரும் அளிக்கும் பதில் அல்லாஹ் என்பது தான். இதோ மக்கா காஃபிர்களிடம் அவர்களைப் படைத்தது யார் என்று வினவினால் அவர்களும் அல்லாஹ் என்பார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப் படுகின்றனர்?
ஒப்பீடு: 4
பூமி யாருக்குச் சொந்தம்?
வானம், பூமியைப் படைத்தது மட்டுமின்றி அவற்றை நிர்வகிப் பவனும், அதற்கு உரிமை படைத்தோனும் அல்லாஹ்வே என்பதும் மக்கா காஃபிர்களின் நம்பிக்கையாக இருந்தது. இதிலும் இப்போதுள்ள முஸ்லிம்களுடன் ஒன்றுபடவே செய்கின்றனர்.
இதைப் பின்வரும் வசனத்தில் அறியலாம்.
“பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)” என்று (முஹம்மதே!) கேட்பீராக! ‘அல்லாஹ்வுக்கே‘ என்று அவர்கள் கூறுவார்கள். “சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக!
ஒப்பீடு: 5
அர்ஷின் அதிபதி யார்?
அர்ஷ் என்றால் என்னவென்று சில முஸ்லிம்களே அறியாத நிலையில் உள்ளனர். ஆனால் அர்ஷின் அதிபதி யார் என்று முஹம்மது நபியவர்கள் மக்கா காஃபிர்களிடம் கேட்டால் அதற்கும் அவர்கள் அல்லாஹ் என்பார்களாம்.
“ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷின் அதிபதி யார்?” எனக் கேட்பீராக! “அல்லாஹ்வே” என்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா?” என்று கேட்பீராக!
இவ்வசனத்தின் பிரகாரம் இப்போதுள்ள முஸ்லிம்களை விட சற்றுத் தெளிவு உள்ளவர்களாகவே மக்கா காஃபிர்கள் இருந்துள்ளனர் என்பது புலனாகிறது.
ஒப்பீடு: 6
பெரும் துன்பத்தைப் போக்குபவன் யார்?
மக்கா காஃபிர்களைப் பற்றி திருக்குர்ஆன் கூறும் இந்தத் தகவல் நம்மில் சிலருக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம். உலகில் தங்களுக்கு ஏற்படும் பேரிடரை, பெரும் துன்பத்தைப் போக்குபவன் அல்லாஹ் மட்டுமே என்று மக்கா காஃபிர்கள் உறுதியாக நம்பினார்கள். இந்த நம்பிக்கை இன்றுள்ள முஸ்லிம்களிடம் கூட சற்று குறைவாகத் தான் பார்க்க முடிகிறது. கல் தடுக்கி கீழே விழும்போது கூட, “அம்மா’ என்றோ “முஹ்யித்தீனே’ என்றோ அழைப்பவர்கள் நம்மில் அதிகம் உள்ளனர்.
அப்படியிருக்க பெரும் துன்பத்தின் போது மட்டும் இவர்களுக்கு அல்லாஹ்வா ஞாபகத்திற்கு வரப் போகிறான்? இதோ இந்த விஷயத்தில் மக்கா காஃபிர்களின் நம்பிக்கையைப் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடத் தெரிவிக்கின்றான்.
முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும்போது உளத் தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.
அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணைகற்பிக்கின்றனர்.
கடலில் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனைத் தவிர யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் மறைந்து விடுகின்றனர். அவன் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தவுடன் (அவனைப்) புறக்கணிக் கிறீர்கள். மனிதன் நன்றி கெட்டவனாகவே இருக்கிறான்.
ஒப்பீடு: 7
நம்பிக்கையின் உச்சம்
அல்லாஹ்வை பற்றிய மக்கா காஃபிர்களுடைய நம்பிக்கையின் உச்சமாகப் பின்வரும் வசனத்தைக் குறிப்பிடலாம்.
“பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)” என்று கேட்பீராக! ‘அல்லாஹ்வே‘ என்று கூறுவார்கள். “எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?” என்று கேட்பீராக!
எல்லாவற்றையும் அல்லாஹ்வே பாதுகாக்கிறான்
அல்லாஹ்வுக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை
அனைத்து பொருளின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே!
இவைகள் யாவும் மக்கா காஃபிர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது.
சுப்ஹானல்லாஹ்.
தமிழக முஸ்லிம்களிடம் அல்லாஹ்வைப் பற்றி என்னென்ன நம்பிக்கைகள் உள்ளனவோ அவற்றில் பெரும்பாலானவை மக்கா காஃபிர்களிடம் இருந்துள்ளன. சில விஷயங்களில் இன்றுள்ள முஸ்லிம்களை விட அதிகத் தெளிவு உள்ளவர்களாக அவர்கள் இருந்துள்ளார்கள் என்பது மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவாகிறது. அப்படியிருந்தும் அவர்களை இறைவன் முஸ்லிம்களாக அங்கீகரிக்கவில்லை. காஃபிர்களாகவே அடையாளப்படுத்துகிறான்.
திருக்குர்ஆனின் வழிநெடுக காஃபிர்களே, இறை மறுப்பாளர்களே என்று அல்லாஹ் அழைப்பது இந்த மக்களை நோக்கித் தான். அல்லாஹ்வைப் பற்றி பரவலான, அதிகமான நம்பிக்கைகள் அவர்களுக்கு இருந்தும் தாங்கள் அல்லாஹ்வின் அடிமைகளே என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டும் ஏன் இறைவன் அவர்களை முஸ்லிம் களாக ஏற்றுக் கொள்ளவில்லை?
இது தான் நாம் சிந்திக்க வேண்டிய முக்கியத் தருணமாகும்.
அல்லாஹ்வைப் பற்றிய பெரும் பாலான நம்பிக்கைகள் அவர்களிடம் இருந்தும் அல்லாஹ்வுக்கு இணை உண்டு என அவர்கள் நம்பியது தான் அல்லாஹ் அவர்களை முஸ்லிம்களாக அங்கீகரிக்காததற்கு முக்கியக் காரணமாகும்.
“காஃபிர்களே’ என்று இம்மக்களை நோக்கி அல்லாஹ் அழைப்பதன் பின்னணியிலும் இதுவே உள்ளது.
பரிந்துரையை வேண்டுதல்
அல்லாஹ்வுக்கு இணை உண்டு என்று அவர்கள் நம்பினார்கள்.
சில குட்டித் தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டு அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய வணக்கத்தை அவைகளுக்கு அவர்கள் செலுத்தினார்கள். அவர்களிடம் பரிந்துரையை வேண்டினார்கள். ஆகவே தான் இறைவன் அவர்களை முஸ்லிம்களாக அங்கீகரிக்காமல் காஃபிர்கள் என்கிறான்.
அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங் களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். “வானங் களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!
இதே ஒற்றுமை, காரணம் இப்போதுள்ள முஸ்லிம்களிடமும் உள்ளது. இவர்களும் அவ்லியாக்கள் மகான்கள் என்று சிலரை (குட்டித் தெய்வங்கள்) ஏற்படுத்திக் கொண்டு அவர்களை இறைவனுக்கு இணையாக்குகின்றனர். அவர்களிடம் பிரார்த்தனை புரிகிறார்கள்; ஸஜ்தா செய்கின்றனர்; பரிந்துரையை வேண்டுகிறார்கள்.
ஏன் இவர்களை வணங்குகிறீர்கள் என்று கேட்டால், “நாங்கள் இவர்களை வணங்கவில்லை; இவர்கள் அல்லாஹ் விடம் எங்களை நெருக்கி வைப்பார்கள்; அதற்காகத்தான் இந்த வழிபாடு’ என்கிறார்கள். இதே பதிலைத் தான் குட்டித் தெய்வங்களை வழிபட்டு வந்த மக்கா காஃபிர்களும் கூறினார்கள். இதோ திருக்குர்ஆன் கூறுகிறது.
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர் களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற் காகவே தவிர இவர்களை வணங்க வில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
ஆக இணைவைப்பிலும் அதை நியாயப்படுத்தக் காரணம் கூறுவதிலும் கூட அப்படியே மக்கா காஃபிர்களை இந்த முஸ்லிம்கள் ஒத்துள்ளனர்.
இடைத்தரகர் ஏற்படுத்தல்
இறைவனை நெருங்க வேண்டு மானால் ஒரு இடைத்தரகர் தேவை என்ற நம்பிக்கை மக்கா காஃபிர்களிடம் இருந்தது. அதனால் தான் அல்லாஹ் அம்மக்களிடம் நான் நெருக்கமாகவே இருக்கிறேன். என்னை நெருங்க எந்த இடைத்தரகரும் தேவையில்லை என்று அறிவிப்புச் செய்கிறான்.
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் “நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த் திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என் னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்” (என்பதைக் கூறுவீராக!)
தர்காவை வழிபடும் முஸ்லிம் களிடமும் மக்கா காஃபிர்களின் இந்த நம்பிக்கை உள்ளது. அல்லாஹ்வை நாம் நேரடியாக நெருங்க முடியாது. அவ்லியாக்கள், மகான்களின் பரிந்துரை தேவை என்று முஸ்லிம்கள் என்று கூறும் இவர்களும் கூறிக் கொண்டிருக்கின்றனர். தர்ஹா வழிபாட்டைக் கூட இறைவனை நெருங்குவதற்காகவே செய்கிறோம் என்று பிதற்றுகின்றனர்.
சிலை வழிபாடு
மக்கா காஃபிர்களிடம் சிலை வழிபாடு இருந்தது. பொய்யான கற்பனைக் கதாபாத்திரங்களை கற்சிலைகளாக வடித்து அவற்றை இணை தெய்வங்களாகக் கருதி வழிபட்டனர். கஃபாவினுள்ளே பல நபிமார் களின் சிலைகளை வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தார்கள் என்று ஹதீஸ்களில் பார்க்கிறோம்.
லாத், உஸ்ஸாவைப் பற்றியும் மற்றொரு மூன்றாவதான மனாத் பற்றியும் சிந்தித்தீர்களா? உங்களுக்கு ஆண்! அவனுக்குப் பெண்ணா? அப்படியானால் இது அநியாயமான பங்கீடு தான். அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை. நீங்களும், உங்கள் மூதாதையருமே அந்தப் பெயரைச் சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்த சான்றையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஅபாவுக்குள் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவச்சிலைகளைக் கண்டார்கள். அவற்றைத் தம் கைத்தடியால் அப்புறப்படுத்திய பின்பே உள்ளே நுழைந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
மக்கா காஃபிர்களிடம் இருந்த சிலை வழிபாடும் இப்போதுள்ள முஸ்லிம்களிடம் தன்மை மாறாமல் அப்படியே, நிறையவே உள்ளது.
பல இடங்களில் கற்பனை பாத்திரங்களைச் சொல்லி அவற்றின் பெயரில் அடக்கத்தலங்கள், தர்காக்கள். சில இடங்களில் நல்லடியார்கள், மகான்கள் என்று சொல்லி அவர்களின் பெயரில் பள்ளிவாசலிலேயே சமாதிகள். அவற்றின் மேல் போர்வை கள், பூமாலைகள், சந்தனங்கள், ஊதுபத்திகள், அவற்றுக்கு முன் ஸஜ்தா செய்வது, பிரார்த்தனை புரிவது என மக்கா காஃபிர்களிடம் இருந்த சிலை வழிபாட்டிற்கும் இந்த முஸ்லிம்களிடம் கொஞ்சமும் குறைவில்லை.
கூத்து, கும்மாளம்
வணக்கம் என்ற பெயரில் சீட்டியடிப்பது, கும்மாளமிடுவது என்பன போன்ற காரியங்களில் மக்கா காஃபிர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்று குர்ஆன் சொல்கின்றது.
சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) அந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. “நீங்கள் (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)
தர்காவை வழிபடும் முஸ்லிம்களும் வணக்கம் என்ற பெயரில் கூத்தடிக்கின்றனர்; கும்மாளமிடுகின்றனர். இருட்டு திக்ர், ராத்திபு ஜல்ஸாக்களில் இவர்கள் போடும் ஜல்சா ஆட்டம் உலகம் அறிந்த ஒன்றே! வணக்கம் என்கிற பெயரில் அவர்களாவது கைதட்டினர்; சீட்டி எழுப்பினர். இவர்களோ இசைக் கருவிகளை வைத்து இசைக்கின்றனர். இறை நம்பிக்கையில் இவர்களை அவர்கள் மிஞ்சினார்கள். கூத்தடிப்பதில் அவர்களை இவர்கள் மிஞ்சுகிறார்கள். என்னவொரு போட்டா போட்டி?
அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல்
அல்லாஹ்வின் பெயர்களைத் திரித்துக் கூறும் பாவச் செயலில் மக்கா காஃபிர்கள் ஈடுபட்டார்கள் என்றும் அதற்குரிய தண்டனையை அவர்கள் அனுபவிப்பார்கள் என்றும் அல்லாஹ் தெரிவிக்கின்றான்.
அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இன்றைய முஸ்லிம்கள் அதற்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் போன்று இதிலும் மல்லுக் கட்டிக்கொண்டு ஈடுபடுகின்றனர். அல்லாஹ்வின் அழகான பெயர்களை அநியாயத்திற்கு சிதைத்து சின்னாபின்னாமாக்கும் கண்டனத்திற்குரிய பாவத்தை மக்கா காஃபிர்களைப் போலவே இவர்களும் அரங்கேற்றுகிறார்கள்.
அல்லாஹ் என்பதை ஹூஹூ என்றும் அஹ் அஹ் என்றும் இன்னும் பல பெயர்களை, பலவாறாக திரித்துக் கூறி அதையும் வணக்கம் என்று சொல்லித் திரிகின்றனர். இப்படி இறை நம்பிக்கை, வழிபாடு என எல்லாவற்றிலும் மக்கா காஃபிர் களைப் பிரதிபலிக்கும் இவர்கள் யார்?
அல்லாஹ்வை ஒரே இறைவன் என்று நம்பிக் கொண்டே இத்தகைய காரியங்களில் ஈடுபட்ட அவர்கள் காஃபிர்கள் என்றால்… அதைத் தங்கள் வாழ்வில் அப்படியே ஒத்திருக்கும் இவர்கள் மட்டும் முஸ்லிம்களா?
இவர்களுக்கும் அவர்களுக்கும் ஒரே நம்பிக்கை, ஒரே செயல்பாடு, ஒரே வழிபாடு. ஆனால் அவர்கள் காஃபிர்கள், இவர்கள் முஸ்லிம்கள் என்றால் இது எப்படி நியாயம்? நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஒப்பீடுகளை மீண்டும் ஒருமுறை வாசித்து பாருங்கள்.
இன்னின்ன செயல்பாடுகளைக் கொண்டிருந்த மக்கா வாழ் மக்களை இறைவன் முஸ்லிம்களாக அங்கீகரிக் காமல் காஃபிர்கள் என பகிரங்க அறிவிப்புச் செய்கிறான் எனில் அவர்களது நிலையை ஒத்திருக்கும் முஸ்லிம்களுக்கும் இறைவனின் தீர்ப்பு இப்படித் தான் இருக்கும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக் கொள்கிறோம்.