47) மக்காவிலோ, மதீனாவிலோ மரணித்தல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது

இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.

(மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை கட்டாயமாகி விட்டது

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் தப்ரானியின் அல்கபீர் (6/240) நூலில் உள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் அப்துல் கபூர் பின் ஸஅது என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.

இரண்டு புனிதத் தலங்களில் ஒன்றில் யார் மரணிக்கிறாரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவராக எழுப்பப்படுவார்

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் தப்ரானியின் அல்அவ்ஸத் (6/89) நூலில் உள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் மூஸா பின் அப்துர் ரஹ்மான் அல்மஸ்ரூகி இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர் ஆவார்.

பைத்துல் முகத்தஸில் யார் மரணிக்கிறாரோ அவர் ஆகாயத்தில் மரணித்தவர் போன்றவராவார்

என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக பஸ்ஸார் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளரான யூசுப் பின் அதிய்யா அல்பஸரி என்பவர் பலவீனமானவர். வானத்தில் மரணித்தவர் என்பன போன்ற சொற்களில், நபிமார்களின் சொற்களில் காணப்படும் கருத்தாழம் எதுவும் இல்லை.

இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் பலவீனமானவையாக இருப்பதுடன் இதன் கருத்தும் ஏற்புடையதாக இல்லை.

இரண்டு புனிதத் தலங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எத்தனையோ எதிரிகள் மரணித்துள்ளனர். முனாஃபிக்குகள் எனப்படும் வேடதாரிகள் பலரும் மதீனாவில் தான் இறந்தனர்.

அது போல் எத்தனையோ நபித்தோழர்கள் இரண்டு புனிதத் தலங்களை விட்டு வெளியேறி உலகின் பல பாகங்களிலும் மரணித்தனர். நபித்தோழர்களில் பெரும்பான்மையினர் புனிதத் தலங்களில் மரணிக்கவில்லை.

குறிப்பிட்ட இடத்தில் மரணமடைவது எவரது அதிகாரத்திலும், விருப்பத்திலும் உள்ளது அல்ல. நல்லவர் கெட்டவர் என்ற அடிப்படையில் மரணிக்கும் இடம் தீர்மானிக்கப்படுவதில்லை.

மேற்கண்ட காரணங்களால் இதன் பலவீனம் மேலும் அதிகரிக்கின்றது.