06) மக்காவின் புனிதம் – தவாஃப் அல்குதூம்
தவாஃப் அல்குதூம்
அவரவருக்குரிய எல்லைகளில் இஹ்ராம் கட்டி, மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும். மக்காவில் பிரவேசித்தவுடன் தவாஃப்செய்ய வேண்டும். இந்த தவாஃப் தவாஃபுல் குதூம்என்று கூறப்படுகிறது.
குதூம்என்றால் வருகை தருவது என்று பொருள். மக்காவுக்கு வருகை தந்தவுடன் செய்யப்படுவதால் இதற்கு தவாஃப் அல்குதூம்என்று கூறப்படுகிறது.
இந்த நாளில் தான் தவாஃப் அல்குதூம்செய்ய வேண்டும் என்று வரையறை ஏதும் கிடையாது. ஒருவர் இஹ்ராம் கட்டி எப்போது மக்காவில் பிரவேசிக்கிறாரோ அப்போது இதைச் செய்ய வேண்டும்.
ஹஜ்ஜுக்குரிய மாதங்களான ஷவ்வாலில் அல்லது துல்கஃதாவில் இஹ்ராம் கட்டி மக்காவுக்குள் அவர் பிரவேசித்தால் அப்போதே இந்த தவாஃபைச் செய்து விட வேண்டும்.
மக்கா நகரின் புனிதம்
மக்கா நகரை இறைவன் புனித பூமியாக ஆக்கியிருக்கிறான். அதன் புனிதம் கெடாத வகையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்தப் புனிதத் தன்மை மக்கா நகருக்கு மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஹரம் எல்லை முழுவதற்கும் பொதுவானதாகும்.
ஹரம் எல்லையை அடையாளம் காட்டுவதற்காக ஐந்து இடங்களில் ஒரு மீட்டர் உயரத்தில் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஐந்து எல்லைகளுக்கும் உட்பட்ட இடங்கள் புனிதமான இடங்களாகும்.
மக்காவுக்குத் தெற்கே ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்யீம்என்ற இடம்
வடக்கே பனிரெண்டு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அளாஹ்என்ற இடம்
கிழக்கே பதினாறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஜியிர்ரானாஎன்ற இடம்
வடமேற்கே பதினான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வாதீ நக்லாஎன்ற இடம்
மேற்கே பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹுதைபியாஎனும் இடம்
ஆகியவையே அந்த ஐந்து எல்லைகளாகும். இந்த ஐந்து எல்லைகளுக்கு உட்பட்ட இடங்கள் ஹரம் எனும் புனிதமான இடங்களாகும்.
இந்த இடங்களின் புனிதத்தை எவ்வாறு மதிப்பது?
அல்லாஹ் மக்கா நகரைப் புனித பூமியாக்கியிருக்கிறான். மனிதர்கள் அதைப் புனிதமானதாக ஆக்கவில்லை. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் அங்கே இரத்தத்தை ஓட்டுவதும், அங்குள்ள மரங்களை வெட்டுவதும் ஹலால் இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
மக்காவுக்குச் செல்லும் ஒழுங்குகள்
மக்காவுக்குள் நுழைவதற்கு முன் குளிப்பது நபி வழியாகும். ஹரம் எல்லையை அடைந்ததும் தல்பியாவை நிறுத்திட வேண்டும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரமை அடைந்ததும் தல்பியாவை நிறுத்தினார்கள். தூ துவாஎன்ற இடத்தில் இரவில் தங்கி விட்டு அந்த இடத்திலேயே சுப்ஹு தொழுது, பிறகு குளித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: நாபிவு
தவாஃப் அல்குதூம்செய்யும் முறை
கஃபா ஆலயத்தை ஏழு தடவை சுற்றுவது ஒரு தவாஃப் ஆகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல்குதூம்செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
தவாஃப் செய்யும் போது (ஆண்கள்) தங்கள் மேலாடையை வலது தோள் புஜம் (மட்டும்) திறந்திருக்கும் வகையில் போட்டுக் கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக யஃலா முர்ரா (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்கள்:(திர்மிதீ: 787),(அபூதாவூத்: 1607)
கஃபாவின் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத்எனும் கறுப்புக் கல் பதிக்கப்பட்டுள்ளது. தவாஃப் செய்யும் போது ஹஜருல் அஸ்வத் அமைந்துள்ள மூலையிலிருந்து துவக்க வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதிலிருந்து ஹஜருல் அஸ்வத்வரை மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு சுற்றுக்கள் நடந்தும் தவாஃப்செய்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது
ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வதை அடைந்ததும் அதைத் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அந்தக் கல்லில் வாய் வைத்து முத்தமிடுவது என்பது இதற்கு அர்த்தமில்லை. கையால் அதைத் தொட்டு விட்டு கையை முத்தமிடுவது என்பதே இதன் அர்த்தமாகும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது கையால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு, கையை முத்தமிட்டதை நான் பார்த்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தது முதல் அதை நான் விட்டதில்லை என அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாபிவு
நூல்கள்:(புகாரி: 1606)
கையால் அதைத் தொட முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் கைத்தடி போன்றவற்றால் அதைத் தொட்டு அந்தக் கைத்தடியை முத்தமிட்டுக் கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஃபாவை தவாஃப் செய்யும் போது தம்மிடமிருந்த கைத்தடியால் அதைத் தொட்டு கைத்தடியை முத்தமிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆமிர் பின் வாஸிலா (ரலி)
கைத்தடி போன்றவற்றால் கூட அதைத் தொட முடியாத அளவுக்கு நெருக்கம் அதிகமாக இருந்தால் நமது கையால் அதைத் தொடுவது போல் சைகை செய்யலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(புகாரி: 1612, 1613, 1632, 5293)
ஹஜருல் அஸ்வதை முத்தமிடும் போது அது கடவுள் தன்மை கொண்டது என்ற எண்ணம் வந்து விடக் கூடாது.
நீ எந்த நன்மையும் தீமையும் செய்ய முடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்கா விட்டால் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்என்று உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடும் போது கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆபிஸ் பின் ரபீஆ (ரலி)
ஹிஜ்ரையும் சேர்த்து சுற்ற வேண்டும்
கஃபா ஆலயம் செவ்வகமாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அதன் ஒரு பகுதியில் அரை வட்டமான ஒரு பகுதியும் அமைந்திருக்கும். அதுவும் கஃபாவைச் சேர்ந்ததாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைப் பருவத்தில் மக்கா வாசிகள் கஃபாவைப் புணர் நிர்மானம் செய்த போது பொருள் வசதி போதாமல் செவ்வகமாகக் கட்டி விட்டனர்.
ஹிஜ்ர் எனப்படும் இந்தப் பகுதியும் கஃபாவில் கட்டுப்பட்டுள்ளதால் அதையும் உள்ளடக்கும் வகையில் தவாஃப் செய்வது அவசியம்.
நான் கஃபா ஆலயத்துக்குள் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்தனர். ஆலயத்தின் உள்ளே தொழ விரும்பினால் இங்கே தொழு! ஏனெனில், இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டிய போது அதைச் சுருக்கி விட்டனர். மேலும், இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்தி விட்டனர்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
பார்க்க:(புகாரி: 126, 1583, 1584, 1585, 1586, 3368, 4484, 7243)
கஃபாவின் உண்மையான வடிவம் செவ்வகமானது அல்ல என்பதையும், அரை வட்டமான பகுதியும் சேர்ந்ததே கஃபா என்பதையும் இதிலிருந்து அறியலாம்.
ருக்னுல் யமானியை முத்தமிடுதல்
கஃபாவுக்கு நான்கு மூலைகள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால், உண்மையில் இரண்டு மூலைகள் தான் இருக்க வேண்டும் என்பதை சற்று முன்னர் அறிந்தோம். அரை வட்டமான பகுதிக்கு எதிர்ப்புறம் அமைந்த இரண்டு மூலைகளில் ஒரு மூலையில் ஹஜருல் அஸ்வத் பதிக்கப்பட்டுள்ளது. மற்றொரு மூலை ருக்னுல் யமானி என்று கூறப்படுகின்றது. இந்த ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிடுவது நபி வழியாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் யமானிஎனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
தவாஃபுக்காக உளூச் செய்தல்
ஹஜ்ஜிலும், உம்ராவிலும் கஃபாவை தவாஃப் செய்யும் போது உளூச் செய்ய வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
ஷாஃபி, மாலிக் ஆகிய இமாம்கள் தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று கூறுகின்றனர். உளூவில்லாமல் தவாஃப் செய்தால் அது செல்லாது என்று இவர்கள் கூறுகின்றனர். அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் மாறுபட்ட இரு கருத்துக்களையும் கூறியதாக இரண்டு அறிவிப்புகள் உள்ளன. தவாஃப் செய்யும் போது உளூ அவசியம் இல்லை என்று அபூஹனீஃபா இமாம் கூறுகின்றார்கள்.
கஃபாவை தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக ஒரு ஹதீசும் இல்லை. தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கட்டளையிட்டிருப்பார்கள். எனவே தவாஃபுக்கு உளூ கட்டாயம் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.
முன்னோர்களான நல்லறிஞர்களில் மிக அதிகமானோரின் கருத்து இது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஏராளமான நபித்தோழர்கள் ஹஜ்ஜும், உம்ராவும் செய்துள்ளனர். அப்படியிருந்தும் ஒரே ஒரு தோழருக்குக் கூட உளூச் செய்து விட்டு தவாஃப் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இது அவசியமாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயமாக விளக்கியிருப்பார்கள்என்று இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் பலவீனமானவையாக அமைந்துள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. (புகாரி: 1615, 1642)
இதைத் தமது கருத்தை நிலைநாட்டும் ஆதாரமாக எடுத்து வைக்கிறனர். இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்றாலும் இதிலிருந்து எடுத்து வைக்கும் வாதம் பலவீனமானதாக உள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்தால் அந்தக் காரியம் கட்டாயக் கடமை என்ற பொருளைத் தராது. அவர்களின் காரியங்களில் கடமையானவைகளும் உள்ளன. விரும்பத்தக்கவைகளும் உள்ளன. அனுமதிக்கப்பட்டவைகளும் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒருவர் ஸலாம் கூறிய போது அவருக்குப் பதில் சொல்லாமல் தயம்மும் செய்த பின்னர் தான் பதில் ஸலாம் கூறியுள்ளார்கள்.
இதை ஆதாரமாக வைத்து ஸலாமுக்குப் பதில் கூற உளூ அவசியம் என்று முடிவு செய்ய முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த காரியங்களில் எவை குறித்து வலியுறுத்தி கட்டளை பிறப்பித்துள்ளார்களோ அவை மட்டும் தான் கட்டாயமானவையாகும்.
அவர்கள் கட்டளை பிறப்பிக்காமல் வணக்க வழிபாடுகள் தொடர்பான ஒன்றைச் செய்தால் அவை விரும்பத் தக்கவை என்று தான் கருத வேண்டும். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற முடிவுக்கு வர முடியாது.
ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ தூய்மையாகும் வரை கஃபாவில் தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்என்று கூறினார்கள்.
இது புகாரியில் 305, 1650 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் இதையும் தமது கருத்துக்குரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
இந்த ஹதீஸிலும் இவர்களின் வாதத்தை நிரூபிக்கும் கருத்து இல்லை.
மாதவிடாய் நின்று தூய்மையாகும் வரை தவாஃப் செய்யக் கூடாது என்பது தான் இதிலிருந்து பெறப்படும் கருத்தாகும். உளூவுக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
மாதவிடாய் நேரத்தில் தொழக் கூடாது என்பதைப் போல் தவாஃபும் செய்யக் கூடாது என்பது மட்டும் தான் இதிலிருந்து விளங்குகிறதே தவிர மாதவிடாய் அல்லாத போது பெண்கள் உளூச் செய்யாமல் தவாஃப் செய்யக் கூடாது என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து பெற முடியாது. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்ததால் அது விரும்பத்தக்கது என்று கூற முடியும்.
ஆயினும் தவாஃபுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதால் தவாஃபுக்கு முன்பே உளூச் செய்து கொள்வது நமது சிரமத்தைக் குறைக்கும். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்தைப் பேணிக் கொண்ட நன்மையும் கிடைக்கும்.
தவாஃப் செய்யும் போது கூற வேண்டியவை
ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே
அரபி 3
ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி)
நூல்கள்:(அஹ்மத்: 14851),(அபூதாவூத்: 1616)
நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால்
தவாஃப் செய்ய இயலாதவர்கள் வாகனத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்யலாம். இவ்வாறு செய்பவர்கள் நடந்து தவாஃப் செய்பவர்களுக்குப் பின்னால் தான் தவாஃப் செய்ய வேண்டும்.
நான் நோயுற்ற நிலையில் (மக்காவுக்கு) வந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குப் பின்னால் வாகனத்திலிருந்தவாறே தவாஃப் செய்என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
(புகாரி: 464, 1619, 1633, 4853)
தவாஃப் செய்து முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்
தவாஃப் செய்து முடித்தவுடன் மகாமே இப்ராஹீம்என்ற இடத்தில் இரண்டு ரத்அத்கள் தொழுவது அவசியம். இலட்சக்கணக்கான மக்கள் கூடும் போது அந்த இடத்தில் தொழுவது அனைவருக்கும் சாத்தியமாகாது. அவ்வாறு சாத்தியப்படா விட்டால் கஃபாவின் எந்தத் திசையில் வேண்டுமானாலும் தொழலாம். ஏனெனில், எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி இறைவன் சிரமப்படுத்த மாட்டான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
(பார்க்க(அல்குர்ஆன்: 2:233, 2:236, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7) ➚
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்து விட்டு மகாமே இப்ராஹீம்என்ற இடத்தை அடைந்த போது மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்என்ற (2:125) வசனத்தை ஓதினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தொழுகையில் குல்யாஅய்யுஹல் காஃபிரூன்சூராவையும், குல்ஹுவல்லாஹு அஹத்சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத் தொட்(டு முத்தமி)ட்டார்கள். பிறகு ஸஃபாவுக்குச் சென்றார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)