மக்களைக் காக்கும் மரண தண்டனை

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

மக்களைக் காக்கும் மரண தண்டனை

கொலை நகரமாக மாறி வரும் இந்தியத் தலைநகராம் டில்லியில் 2012ல் ஓடும் பஸ்ஸில் காம வெறிகொண்ட கும்பலால் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மரணத்தையும் தழுவினாள். அதற்காக ஒட்டு மொத்த நாடே கொந்தளித்தது. கொதித்தது.  அதன் விளைவாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைத் தடுப்பு மசோதா  19, மார்ச் 2013 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கலானது.

* பெண்கள் மீது அமில வீச்சுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

* பாலியல் பலாத்காரம், குழுவாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகளுக்குக் குறையாத தண்டனை! இதை ஆயுள் தண்டனையாக நீட்டிக்கவும் செய்யலாம்.

* ஏற்கனவே பாலியல் பலாத்கார வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை.

இவை அந்த மசோதாவின் முக்கிய அம்சங்களாகும்.

ஆனால் இவை ஏதாவது ஓர் அச்சத்தையும் அசைவையும் குற்றவாளிகளிடம் ஏற்படுத்தியிருக்கின்றதா? பாலியல் பலாத்கார பாதகர்களிடம் ஏதேனும் ஒரு பாதிப்பை உருவாக்கியிருக்கின்றதா? கொலைகாரர்களைக் குலைநடுங்க வைத்திருக்கின்றதா? கொலைநகர் என்ற குற்றப் பெயரிலிருந்து தலைநகர் விடுபட்டிருக்கின்றதா? விடுதலை பெற்றிருக்கின்றதா?

அதற்கு 22/09/16 அன்று ‘இனியும் தாமதிக்கலாகாது’ என்று தமிழ் இந்து தீட்டியிருக்கின்ற தலையங்கம் பதிலளிக்கின்றது. அதைப் பார்ப்போம்:

டெல்லியில் வெறி கொண்ட ஒரு இளைஞரால், இளம் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசத்தையே பதைபதைக்க வைத்திருக்கிறது. பெண்கள் மீதான வன்முறையின் மிகக் கோரமான முகத்தை இச்சம்பவம் வெளிப்படுத்தியிருக்கிறது. வடக்கு டெல்லியின் புராரி பகுதியில், காலை 9 மணி அளவில் சாலையில் நடந்து சென்ற 21 வயது கருணாவை வழிமறித்துக் கொன்றார், 34 வயதான ஆதித்யா மாலிக் எனும் சுரேந்தர் சிங். நிலைகுலைந்து கீழே விழுந்த அந்த இளம் பெண்ணின் உடலில் 32 முறை கத்தரிக்கோலை அவர் பாய்ச்சியதை அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுசெய்திருக்கிறது.

இவ்வளவுக்கும் வெறி அடங்காமல் உயிரற்ற உடலை உதைத்ததுடன், அப்பெண்ணின் முகத்தைச் சிதைக்கவும், தலையைத் துண்டிக்கவும் அவர் முயன்றிருக்கிறார். கொலை செய்த கையோடு யாரையோ அலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபடி, சாவதானமாக முன்னும் பின்னும் நடந்த அவர், பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணின் உடலை அலைபேசியில் படமும் எடுத்திருக்கிறார்.

மனதை நடுங்கவைத்த இந்தக் கோர நிகழ்வை சாலையில் சென்ற வழிப்போக்கர்கள் தடுக்க முற்படவில்லை. பலர் சாதாரணமாக அந்நிகழ்வைக் கடந்து சென்றனர். சிலர் விலகி நின்று வேடிக்கை பார்த்தனர். ஒரேயொரு மனிதர் தடுக்கச் சென்றார் அவரும் ஆதித்யா விடுத்த எச்சரிக்கைக்குப் பயந்து பின்வாங்கிவிட்டார். எல்லாம் நடந்து முடிந்த பின்னர்தான், ஆதித்யாவைப் பிடித்து உதைத்திருக்கிறார்கள் அங்கிருந்தவர்கள்.

எவ்வளவு கொடுமை! தலைநகர் டெல்லியில் 48 மணி நேரத்தில், பெண்கள் மீது நடத்தப்பட்ட மூன்றாவது கொலைத் தாக்குதல் இது. மங்கள்புரியில் அமித் என்ற இளைஞரால் மாடியிலிருந்து வீசப்பட்ட 25 வயது சீமா கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை இந்தர்பூரில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 28 வயது லக்ஷ்மி பக்கத்து வீட்டைச் சேர்ந்த சஞ்சய் என்பவரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறார். இவை எல்லாவற்றையும் ‘காதல்’ எனும் பெயரால் அழைக்கும் துர்பாக்கியச் சூழலிலேயே நம் சமூகம் இன்னும் இருக்கிறது. கொடுமை!

பெண்ணுயிர் மீதான மதிப்பின்மை, தம் விருப்பங்கள் மறுதலிக்கப்படும்போது மனிதர்களின் மனதில் எழும் வெறி, பின்விளைவுகளைப் பற்றித் துளியும் அலட்டிக்கொள்ளாமல் குற்றத்தில் ஈடுபடும் அளவுக்கு அச்சமற்றதாகிவிட்ட சட்ட ஒழுங்குச் சூழல், பொது இடத்தில் ஆபத்தில் சிக்கியிருக்கும் சக மனிதரைக் காப்பாற்றத் தயங்கும் மனிதர்களின் சுயநலம் என்று ஒட்டுமொத்த சமூகம் மீதும் பல்வேறு விதமான கேள்விகளை ஒரே சமயத்தில் வீசுகிறது, கருணா என்ற இந்தப் பெண்ணின் கொலை.

பிரச்சனையின் வேர் வரை நாம் சென்றே ஆக வேண்டும். தேசிய அளவில் தீவிரமாக விவாதித்துச் செயலாற்ற வேண்டிய பிரச்சினை இது. இதற்கெனவே நாடளுமன்றம் விசேஷமாகக் கூடினாலும் தவறில்லை. ‘மகள்களைக் காப்போம்!’ – வெறும் கோஷமாகவே முடங்கிவிடக் கூடாது!

ஆம்! மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின் நாடாளுமன்றத்தில் தாக்கலான சட்டத்தின் தண்டனைகள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளிடம்  எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதைத் தான் இந்த தலையங்கம் தத்ரூபமாக எடுத்துக் காட்டுகின்றது.

டெல்லியில் அண்மையில் நடந்த இந்தக் கொலை முயற்சிகள், கொலைகள் எல்லாமே ஒரு தலைக் காதலால் ஏற்பட்டவையாகும். இந்த ஒரு தலைக் காதல் ஒரு பெண், இரு பெண்கள் உயிர்களை பதம் பார்க்கவில்லை. பல பெண்களின் உயிர்களைப் பதம் பார்த்து பலி கொண்டிருக்கின்றன.

அப்படிப் பலியான பெண்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்:

  • வினோதினி

காரைக்காலைச் சார்ந்த  ஐடி இளம்பெண் வினோதினி, தீபாவளிப் பண்டிகை முடிந்து சென்னை செல்வதற்காக கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி இரவு 10 மணியளவில் காரைக்கால் பேருந்து நிலையத்துக்கு தந்தை மற்றும் நண்பருடன் வந்தபோது, ஒரு தலைக் காதல் பிரச்சினையால் வினோதினி மீது சுரேஷ்குமார் என்ற அப்பு ஆசிட் வீசினார். விநோதினி ஆசிட் வீச்சிற்குள்ளான விவகாரம் டெல்லி மருத்துவப் பெண் பலாத்கார  சம்பவத்திற்கு முந்தி நடந்தது என்றாலும் இந்த இளம்பெண் 90 நாட்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி, 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இறந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

  • சுவாதி

 ஜூன் 13, 2016 காலை 6.30 மணி அளவில் சுவாதியை அவரது தந்தை இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். செங்கல்பட்டு மின்சார ரயிலுக்காக காத்திருந்த சுவாதி, 2-வது நடைமேடையில் மகளிர் பெட்டி நிற்கும் இடத்துக்கு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.

கடற்கரை மார்க்கத்தில் செல்லும் ரயிலுக்காகவும் நடை மேடையில் ஒருசிலர் காத்திருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தின் படி வழியாக ஓடிவந்த ஒருவர், சுவாதிக்கு அருகே சென்றார். கண் இமைக்கும் நேரத்தில், தன் பையில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து சரமாரியாக சுவாதியைக் குத்திவிட்டு ஓடி மறைந்தார். சம்பவ இடத்திலேயே சுவாதி, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கண் எதிரில் இளம் பெண்ணை ஒருவர் கத்தியால் குத்திவிட்டு ஓடுவதைப் பார்த்ததும், நடைமேடையில் காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.

  • சந்தியா

சென்னை சுவாதி கொலை சம்பவத்தைப் போன்றே, தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தில் சில நாட்களுக்கு முன் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. காதலிக்க மறுத்த 17 வயதுப் பெண் பலர் முன்னிலையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டம் பைன்ஸாவைச் சேர்ந்தவர் சந்தியா (17). இவரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த மகேஷ் (22) என்பவர் காதலித்துள்ளார். ஆனால், சந்தியா மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மதியம் ஏராளமான பொதுமக்கள் கண் எதிரில், காய்கறி நறுக்கும் கத்தியால் சந்தியாவை அவரது வீட்டு வாசலிலேயே சரமாரியாக கழுத்தில் குத்தினார் மகேஷ். இதில், சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகேஷ் அங்கிருந்து தப்பியோடினார். அவரை போலீஸார் கைது செய்தனர்.

  • மோனிகா

திருச்சி பிச்சாண்டார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார். இவரது மனைவி பாத்திமா, கன்டோன் மென்ட் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர். இவர்களது மகள் மோனிகா (21) திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (26) என்பவருக்கும் மோனிகாவுக்கும் பழக்கம் இருந்ததாகவும், பெற்றோர் அறிவுறுத்தலின்பேரில் பாலமுருகனுடனான பழக்கத்தை மோனிகா துறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பாலமுருகனோ, தன்னைக் காதலிக்குமாறு மோனிகாவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், மோனிகா நேற்று கல்லூரி முடிந்து பிச்சாண்டார்கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீடு நோக்கி நடந்து சென்றபோது, பாலமுருகன் அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில், மோனிகாவின் உடலில் 5-க்கும் அதிகமான இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது. மோனிகா திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பாலமுருகனைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அப்போது, தான் ஏற்கெனவே விஷம் அருந்தியுள்ளதாக பாலமுருகன் போலீஸாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, பாலமுருகன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

  • ஹீனோ டோனிஸ்

புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் ஊசுட்டேரியில் வசிப்பவர் மரியஜோசப். இவரது மகள் ஹீனோ டோனிஸ் (19), ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்தார். அதே கல்லூரியில் எழிலரசன் (19) என்பவர் பி.காம் படித்து வருகிறார். பள்ளியில் படிக்கும்போதே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் எழிலரசனின் நட்பு ஹீனோ டோனிஸுக்குப் பிடிக்காததால் பழக்கத்தைத் துண்டித்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கல்லூரி முடிந்து ஹீனோ டோனிஸ் வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த எழிலரசன், தனது இருசக்கர வாகனத்தில் ஏறுமாறு அவரை வற்புறுத்தியுள்ளார். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த எழிலரசன், கத்தியால் ஹீனோ டோனிஸை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

  • சோனாலி

கரூர்- ஈரோடு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி 3ஆம் ஆண்டு சிவில் இன்ஜினீயரிங் படித்து வந்தார் சோனாலி. அதே கல்லூரியில் படித்து வந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் வெங்களூர் அருகில் உள்ள ஆதியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் உதயகுமாரும் சோனாலியும் நட்புடன் பழகி வந்ததாகக் கூறுகின்றனர் சக மாணவர்கள்.

போதிய வருகைப் பதிவு இல்லாததால், கல்லூரி நிர்வாகம் பருவத் தேர்வை எழுத உதயகுமாரை அனுமதிக்கவில்லை. இதனால், தற்போது நடைபெற்று வரும் பருவத் தேர்வுக்கும் உதயகுமார் வரவில்லை. உதயகுமாரின் ஒழுங்கீன நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த சோனாலி, அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். நன்றாகப் பேசி வந்த சோனாலி, சில நாட்களாகப் பேசாதது உதயகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கல்லூரிக்குத் தேர்வு எழுத சோனாலி வந்திருப்பதை அறிந்த உதயகுமார், தனது கல்லூரி சீருடையை அணிந்துகொண்டு கல்லூரிக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு வகுப்பறையில் அமர்ந்து படித்துக் கொண்டு இருந்த சோனாலியிடம் கோபமாகப் பேசிவிட்டு, அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரது தலையில் தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவத்தால், வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தடுக்க வந்த பேராசிரியர் சதீஷ் குமாரையும் தாக்கிவிட்டு உதயகுமார் அங்கிருந்து தப்பியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சோனாலி மீட்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  • ஃபிரான்சினா

தூத்துக்குடி ஜார்ஜ் சாலை, இந்திரா நகரைச் சேர்ந்த நியூ மென் மகள் பிரான்சினா (24), ஒரு தலைக் காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவர், தூத்துக்குடி சண்முகபுரம் தூய பேதுரு தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள மழலையர் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

செப்டம்பர் 8ஆம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்ததால் நேற்றோடு பணியை விட்டுவிட அவர் முடிவு செய்திருந்தார். இதனால் உற்சாகத்துடன் காலையில் பள்ளிக்குப் புறப்பட்டு வந்த அவருக்கு இப்படி ஆகிவிட்டதே என, சக ஆசிரியைகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கண்ணீருடன் தெரிவித்தனர். நாம் இங்கு எடுத்துக் காட்டியிருப்பது ஒரு சில கொலைகளை தான். ஆனால் புள்ளி விவரம் தருகின்ற கொலைகளோ நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.

இதுகுறித்து மதுரை எவிடன்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குநர் கதிர் கூறும்போது, “தமிழகத்தில் காதல் விவகாரங்களில் கொடூரக் கொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. 2012ஆம் ஆண்டில் 622 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். காதல் விவகாரத்தில் அந்த ஆண்டில் 291 ஆண்கள், பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2013ஆம் ஆண்டில் 660 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். காதல் விவகாரத்தில் 316 ஆண்கள், பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

2014-ல் 581 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். காதல் விவகாரத்தில் 239 ஆண்கள், பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டில் 556 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் காதல் விவகாரத்தில் 175 ஆண்கள், பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் சராசரியாக 150 பெண்கள் கொல்லப்படுகின்றனர். காதல் விவகாரத்தில் கொலையாவதில் 60 முதல் 70 சதவீதம் பெண்களாகவே இருக்கின்றனர். காதல் விவகாரக் கொலைகளில் குற்றவாளிகள் தண்டனை பெற்ற சதவீதம் மிகக் குறைவாக இருக்கிறது. 5 முதல் 7 சதவீதம் குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை கிடைக்கிறது.

இவ்வாறு எவிடென்ஸ் கதிர் கூறுகிறார்.

குறைபாடு நிறைந்த  குற்றவியல் சட்டம்

மகளிருக்கு எதிரான குற்றங்கள் இவ்வளவு மலிவாக நடப்பதற்குக் காரணம் குறைபாடுள்ள குற்றவியல் சட்டம் தான். குற்றம் செய்தவர்கள் மிக எளிதாக சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பித்துக் கொள்கின்றனர். 5 முதல் 7 சதவீதம் குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை கிடைக்கிறது.

இதற்கு எடுத்துக் காட்டாக, ‘ஏமாற்றம் அளிக்கின்றது சவ்மியா வழக்கின் தீர்ப்பு’ என்ற பெயரில் இந்து தமிழ் ஏடு 21/09/16  அன்று தீட்டிய தலையங்கத்தை பார்ப்போம்.

கேரள மாநிலத்தில் இளம்பெண் சௌம்யா (23) ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொல்லப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. எர்ணாகுளம் – ஷோரனூர் பயணிகள் ரயிலில் 2011 பிப்ரவரி 1 அன்று பெண்களுக்கான பெட்டியில் தனியாகச் சென்றிருக்கிறார் சௌம்யா. அந்தப் பெட்டியில் ஏறிய கோவிந்தசாமி, சௌம்யா வைத்திருந்த கைப்பையைப் பறிக்க முயன்றிருக்கிறார். அவர் தடுக்க முற்பட்டபோது அவரைத் தாக்கியிருக்கிறார்.

பிறகு, ரயிலிலிருந்து தள்ளப்பட்ட நிலையில், சுயநினைவற்றுப் போன சௌம்யாவைப் பாலியல் வல்லுறவுக்கும் ஆட்படுத்தியிருக்கிறார் கோவிந்தசாமி. காணாமல்போன சௌம்யாவைப் பல இடங்களிலும் தேடிய போலீஸார், பிப்ரவரி 6 அன்று தண்டவாளத்தின் அருகே கிடந்த அவரை மீட்டு திருச்சூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சூர் விரைவு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. கேரள மக்களைக் கொந்தளிக்க வைத்த இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தது அரசு. பிரேதப் பரிசோதனை மருத்துவர், ‘சௌம்யா ரயிலிலிருந்து குதிக்கவில்லை, தள்ளப்பட்டிருக்கிறார்’ என்று காயங்களின் அடிப்படையில் அறிக்கை அளித்திருக்கிறார். ஆனால், இந்த வழக்கில் சாட்சிகளாக இருந்த வேறு சிலர் அளித்த முரண்பட்ட வாக்குமூலங்கள் காரணமாக, கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக மாற்ற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

தனிப்பட்ட நபர்கள் அளிக்கும் வாக்குமூலங்களைவிட, தடய அறிவியல்பூர்வமாகத் தரப்படும் ஆதாரங்கள் நம்பகத்தன்மை உள்ளவை. ஆனால், நீதிமன்றம் அதை ஏற்காமல்போனது துரதிர்ஷ்டம்.

விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர். கோவிந்தசாமி தரப்பில், அனுபவம் உள்ள பெரிய வழக்கறிஞர் வாதாடியிருக்கிறார். அவர் இந்த வழக்கில் காவல் துறையினர் விட்ட ஓட்டைகளை நன்கு பயன்படுத்தியிருக்கிறார். கேரள அரசோ, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் வாதாட புதிய வழக்கறிஞரை அமர்த்தியிருக்கிறது. அவருக்கு இந்த வழக்கின் முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள நேரம் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.

தீர்ப்பு சௌம்யா குடும்பத்தவருக்கு மட்டுமல்ல; நாட்டின் பெரும்பாலானோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அரிதினும் அரிதான இந்த வழக்கில் சந்தேகத்தின் பலனைப் பெறும் அளவுக்குத் தகுதியானவர் அல்ல குற்றம்சாட்டப்பட்டவர் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து. பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்படும் இந்நாட்களில் இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுப்பதாகத் தீர்ப்புகள் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் காவல் துறை, நீதித் துறை இரண்டும் ஒருங்கிணைந்து, விரைவாகச் செயல்பட வேண்டும். இது இந்து தமிழ் ஏடு சவ்மியா வழக்கின் தீர்ப்பைப் பற்றி செய்த விமர்சனம்.

குற்றங்களுக்கு எவ்வளவுதான் கடுமையான தண்டனைகளைச் சட்டப்புத்தகத்தில் எழுதி இருந்தாலும் உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். அப்போதுதான் குற்றங்களை நிரூபிக்க முடியும். ஒரு கொலைவழக்கில் தீர்ப்பளிக்க இருபது ஆண்டுகள் கூட ஆகின்றன. குற்றம் நடக்கும்போது அதை பார்த்த சாட்சிக்கு நாள் செல்லச் செல்ல ஆர்வம் குறைகின்றது. நாம் ஏன் ஆண்டுக்கணக்கில் அலைய வேண்டும் என்று அவன் நினைக்கிறான். இதனால் சாட்சி சொல்ல ஆள் இல்லாமல் குற்றவாளி தப்பிக்கிறான்.

மேலும் இருபது ஆண்டுகளில் மாற்றி மாற்றி சாட்சி சொல்லும் மனித பலவீனம் காரணமாக குற்றவாளி தப்பிக்கிறான். குற்றம் நடந்த போது இருந்த தீமைக்கு எதிரான வேகம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இருக்காது. இவ்வாறு உணர்வு மழுங்குவதாலும் சாட்சியம் வலுவிழந்து விடுகிறது. இந்த இழுத்தடிப்பின் காரணமாக சாட்சிகளில் பலர் வழக்கு முடிவதற்குள் செத்து விடுகிறார்கள். நீண்ட காலம் வழக்கு நடக்கும் போது சாட்சிகள் மிரட்டப்படுவதாலும் குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர்.

வழக்கை நடத்தும் காவல் துறை அதிகாரிகள் இருபது ஆண்டுகளில் மாறிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் இறுதியாக வழக்கை நடத்தும் அதிகாரிக்கு அந்தக் குற்றம் பற்றிய போதிய அறிவு இருப்பதில்லை. அரசு வழக்கறிஞர்களும் இருபது ஆண்டுகளில் மாறிக் கொண்டே உள்ளனர். இதனால் வழக்கு பற்றிய முழு அறிவு கடைசியில் வாதாடிய வழக்கறிஞருக்கு இருப்பதில்லை.

இருபது ஆண்டுகளில் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளும் மாற்றப்படுகின்றனர். முதல் நீதிபதி கேட்ட வாதங்கள் என்ன? அவர் புரிந்து கொண்டது என்ன என்பது அடுத்த நீதிபதிக்கும் முழுமையாகத் தெரியாது. எவ்வளவு கடுமையான தண்டனைகள் கொடுக்கும் வகையில் சட்டம் இயற்றினாலும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் விசாரித்துத் தீர்ப்பளிக்கும் நிலை ஏற்படாதவரை எந்தக் குற்றமும் நாட்டில் குறையாது.

அதிகப்பட்சம் ஒரு மாதத்துக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்ற காலக்கெடு நிர்ணயித்து அதற்கேற்ப நீதிமன்றங்களையும் நீதிபதிகளையும் அதிகரித்து, அதற்குத் தேவையான நிதிகளை ஒதுக்கினால் தவிர இக்குற்றங்கள் குறையப் போவதில்லை. காதலாக இருந்தாலும் வேறு விருப்பமாக இருந்தாலும் அது எல்லைக்கு உட்பட்டு இருக்க வேண்டும். எல்லை மீறி வெறிபிடித்து அலைவதை காதல் என்ற பெயரில் ஊக்குவிப்பதை அறிவு ஜீவிகள், காட்சி ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒரு பொருளை நாம் விரும்புகிறோம். அப்பொருள் கிடைத்தால் அதை வாங்குகிறோம். அப்பொருளை மற்றவர் வாங்கி விட்டால் அல்லது அதை வாங்கும் வசதி நம்மிடம் இல்லாவிட்டால் கிடைப்பதை வாங்கிக் கொள்கிறோம். குறிப்பிட்ட உணவை விரும்பலாம். அது கிடைக்காவிட்டால் பட்டினி கிடந்து சாவேன் என்று இருக்கக் கூடாது, கிடைப்பதைச் சாப்பிட்டு வாழ வேண்டும்.

காதல் என்பதும் இதுபோன்ற உணர்வுதான். ஒரு ஆண், ஒரு பெண்ணை விரும்புகிறான். அல்லது ஒரு பெண், ஒரு ஆணை விரும்புகிறாள். விரும்பியது கிடைத்தால் இணைந்து வாழலாம். கிடைக்காவிட்டால் கிடைப்பதில் திருப்தி அடைய வேண்டும் என்று எதார்த்த நிலையை இளம் பருவத்தினருக்குச் சொல்லிக் கொடுக்காமல் அவளை விட்டால், அவனை விட்டால் வேறு கதி இல்லை என்று காதலர் தினக் கொண்டாட்டங்களின் போதும் மற்ற நேரங்களிலும் இளைய சமுதாயம் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர். லைலா – மஜ்னு, அனார்கலி – சலீம் என்ற பைத்தியக்காரர்களை முன்னுதாரண்மாக எடுத்துக்காட்டி மதி மயக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாகவே தான் காதலித்தவள் தனக்குக் கிடைக்காவிட்டால் அவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற வெறி ஒருவனுக்கு ஏற்படுகிறது. அவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி என்ற யதார்த்த நிலை சொல்லிக் கொடுக்கப்பட்டால், கட்டாயம் ஒருதலைக் காதல் கொலைக்கு வழியே இருக்காது.

இது இன்றைய இந்தியாவுக்கு சிறந்த தீர்வாகும். இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனித நேயம் என்ற பெயரில் மரண தண்டனை கூடாது என்ற கோஷத்தை சிலர் முன்னெடுப்பதைப் பார்க்கிறோம். சட்டத்தின் பிடி கடுமையாக இருந்தால்தான் குற்றமிழைப்பவர்கள் உள்ளத்தில் அது கலக்கத்தையும் கவலையையும் பாதிப்பையும் பயங்கரத்தையும் ஏற்படுத்தும். குற்றங்கள் குறைந்து விடும்.

அறிவுடையோரே! பழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால் கொலை செய்வதிலிருந்து) விலகிக் கொள்வீர்கள்

(அல்குர்ஆன்: 2:179)