போர்த்திக் கொண்டிருப்பவரே, எச்சரிக்கை செய்யுங்கள்!
யஹ்யா பின் அபீ கஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசலமா (ரஹ்) அவர்களிடம் முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது? என்று கேட்டேன். அதற்கு அன்னார், போர்த்தியிருப்பவரே! (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1ஆவது) வசனம் என்றார்கள். அப்போது நான் (நபியே!) படைத்த உங்களுடைய இறைவனின் பெயரால் ஓதுக! (இக்ரஃ பிஸ்மி ரப்பிக் கல்லஃதீ கலக்) எனும் (96:1ஆவது) வசனம் என்றல்லவா எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது! என்றேன். அதற்கு அபூ சலமா (ரஹ்) அவர்கள், நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், யா அய்யுஹல் முத்தஸ்ஸிர் எனும் (74:1ஆவது) வசனம் என்று கூறினார்கள். உடனே நான், இக்ரஃ பிஸ்மி ரப்பிக்கல்லஃதீ கலக் எனும் (96:1ஆவது) வசனம்தான் (முதன் முத-ல் அருளப்பட்ட வசனம்) என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதே! என்று கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் தெரிவிக்கப்போவதில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் ஹிரா மலைக் குகையில் தங்கியி ருந்தேன். நான் என் தங்குதலை முடித்துக் கொண்டு (மலையிலிருந்து) இறங்கி அங்கிருந்த பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்திருப்பேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டேன். உடனே நான் எனக்கு முன்புறத்திலும் எனக்குப் பின்புறத்திலும் எனக்கு வலப்பக்கத்திலும் எனக்கு இடப்பக்கத்திலும் பார்த்தேன். அப்போது அவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். உடனே நான் கதீஜாவி டம் சென்று எனக்குப் போர்த்திவிடுங்கள்! என் மீது குளிர்ந்த நீரை ஊற்றுங்கள்! என்று கூறினேன். மேலும் எனக்கு, போர்த்திக் கொண்டு (படுத்து) இருப்பவரே, எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். மேலும், உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள் எனும் (74:1-3) இறைவசனங்கள் அருளப்பெற்றன.