பொருளாதாரத்தால் விளையும் கேடுகள்!
மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
பொருளாதாரத்தின் மூலம் ஏராளமான நன்மைகளை இவ்வுலகிலும், மறுமை வாழ்க்கையிலும் நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும் பொருளாதாரத்துக்கு இன்னொரு பக்கமும் உள்ளது. பொருளாதாரத்தினால் நன்மைகள் பல விளைவது போல் ஏராளமான தீமைகளும் ஏற்படுவதை நாம் காண்கிறோம். பொருளாதாரத்தினால் விளையும் கேடுகளைப்பற்றி இந்த உரையில் காண்போம்…
பொருளாதாரத்தை பற்றியும் மனிதர்களை இஸ்லாம் தக்க முறையில் எச்சரிக்கத் தவறவில்லை.
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சோதனைகள் இருக்கின்றன. என்னுடைய சமுதாயத்தின் சோதனை செல்வமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர் : கஅப் (ரலி),
நூல் : (அஹ்மத்: 17471)
உங்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!
செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும்.
பெண்கள், ஆண்மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மனவிருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்குக் கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது. இவை இவ்வுலக வாழ்க்கையின் வசதிகள். அல்லாஹ்விடம் அழகிய புகலிடம் உள்ளது.
மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ
كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ
إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ
فِي عَمَدٍ مُمَدَّدَةٍ
குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான்.
ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு அலா பின் ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். பஹ்ரைனிலிருந்து ஜிஸ்யா வரியை வசூலிக்க அபூஉபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் பஹ்ரைனிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஃபஜ்ருத் தொழுகை நேரத்தில் சென்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர்களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, அபூஉபைதா ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன் என்று கூற, அன்சாரிகள், ஆமாம், அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தார்கள். ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்சவில்லை.
ஆயினும் உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிடும்போது, அவர்களை அது அழித்து விட்டதைப் போல் உங்களையும் அது அழித்து விடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : (புகாரி: 3158) , 4015, 6425
اطَّلَعْتُ فِي الجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الفُقَرَاءَ، وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ
நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் ஏழைகளையே அதிகம் கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் பெண்களையே அதிகம் கண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : (புகாரி: 3241) , 5198, 6449, 6546
ஏழை முஹாஜிர்கள் செல்வந்தர்களை விட நாற்பதாண்டுகளுக்கு முன்பே மறுமை நாளில் சொர்க்கத்துக்குச் சென்று விடுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
நூல் : (முஸ்லிம்: 5699)
செல்வம் குவிந்தாலும் அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட்டும் தடுத்து விடாமல் பார்த்துக் கொள்வது முக்கியமானதாகும். செல்வம் சேர்வதற்கு முன் இறைவனின் கடமைகளையும் வணக்க வழிபாடுகளையும் சரியாகச் செய்து வந்தவர்கள் செல்வம் சேர்ந்த பின் அல்லாஹ்வை மறந்து விடுவதை நாம் பார்க்கிறோம்.
இதைப்பற்றி அல்லாஹ் பின்வருமாறு எச்சரிக்கிறான்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும் அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நமது காலத்தில் உள்ளது போன்று நினைத்த பொருளை நினைத்த நேரத்தில் வாங்கும் நிலைமை இருக்கவில்லை. வாரம் ஒரு முறை நடக்கும் சந்தையிலும் வெளியூரில் இருந்து வணிகக் கூட்டம் வரும்போதும்தான் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள முடியும். எனவே வணிகக் கூட்டம் ஒரு ஊருக்கு வந்து விட்டால் அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு தேவையானவற்றை வாங்கச் செல்வது அன்றைய மக்களின் வழக்கமாக இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு வெள்ளிக் கிழமை தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது மதீனாவுக்கு வணிகக் கூட்டம் வந்து விட்டது. பதினேழு முஸ்லிம்களைத் தவிர மற்றவர்கள் தொழுகையை விட்டு விட்டு வணிகக் கூட்டத்தை நோக்கிச் சென்று விட்டனர். அன்றைய காலத்தில் இதைக் குறை கூற முடியாது என்று இருந்தபோதும் அல்லாஹ் இதை ஏற்கவில்லை. இதைக் கண்டித்து பின்வரும் வசனத்தை அருளினான்.
(முஹம்மதே) அவர்கள் வியாபாரத்தையோ, வீணானதையோ கண்டால் நின்ற நிலையில் உம்மை விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர். அல்லாஹ்விடம் இருப்பது வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன் எனக் கூறுவீராக!
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) இறைவன் உங்களுக்காக வெளிப்படுத்தும் பூமியின் பரகத் எனும் அருளைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். பூமியின் பரகத்கள் எவை? என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள் (தாம் அவை) என்று பதிலளித்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா? என்று வினவினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.
எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் கேள்வி கேட்டவர் எங்கே? என்று வினவினார்கள். அம்மனிதர் (இதோ) நான் (இங்கிருக்கிறேன்) என்று கூறினார். (அவர் கேள்வி கேட்டதையடுத்து மக்களுக்குப் பயனளிக்கும்) அந்தப் பதில் வெளிப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும்.
வாய்க்கால் மூலம் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்று விடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க் கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.
இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது அருளாக அமையும். யார் இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.
நூல் : (புகாரி: 6427) , 2842
மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு வருகிறது.
இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். அதை முறைப்படி அடைந்து, அதை அல்லாஹ்வின் பாதையிலும், அனாதைகளுக்காகவும், ஏழை எளியவர்களுக்காகவும் செலவிட்ட முஸ்லிமுக்கு அந்தச் செல்வம் சிறந்த தோழனாகும். அதை முறைப்படி அடையாதவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவன் ஆவான். அச்செல்வம் மறுமை நாளில் அவனுக்கெதிராகச் சாட்சி சொல்லும் என்று கூறினார்கள்.
நூல் : (புகாரி: 2842)
பொருளாதாரத்தினால் ஏற்படும் கேடுகளை மேற்கண்ட ஆதாரங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
இறையச்சம் இல்லாமல் மனம் போனபடி வாழ்பவர்களுக்கு எந்த அறிவுரையும் பயனளிக்காது. ஆனால் மார்க்கத்தில் பேணுதலாக இருப்பவர்களும் பொருளாதாரம் குறித்த எச்சரிக்கைகளைப் பொருட்படுத்துவதில்லை. பொருளாதாரத்தைத் திரட்டுவதிலும் அதைச் செலவிடுவதிலும் மார்க்கத்தைப் பேணுவது சாத்தியமில்லை என்று இவர்கள் நினைக்கின்றனர்.
இந்த விஷயத்தில் மார்க்கத்தைப் பேணினால் உலகில் வாழ இயலாது என்றும் நினைக்கின்றனர். மற்ற விஷயங்களில் மார்க்கத்தைப் பேணுவது எப்படி எளிதானதாக உள்ளதோ அது போல் பொருளாதார விஷயத்திலும் மார்க்கத்தைப் பேணி நடப்பது எளிதானதுதான். பொருளாதாரம் குறித்த நம்முடைய பார்வையை இஸ்லாம் சொல்லக் கூடியவாறு மாற்றிக் கொண்டால் இது எளிதானதுதான். ஆகவே பொருளாதாரத்தை இஸ்லாம் கூறிய முறையில் திரட்டும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.