பொருளாதாரத்தால் விளையும் நன்மைகள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3
பொருளாதாரத்தால் விளையும் நன்மைகள்

அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இஸ்லாத்தின் ஏராளமான கடமைகள் பொருளாதாரம் இருந்தால் தான் நிறைவேற்ற முடியும் என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஜகாத் இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாகும். பொருளாதாரம் இருந்தால் தான் இந்தக் கடமையைச் செய்ய முடியும். செல்வத்தைச் தேடவோ, சேர்த்து வைக்கவோ கூடாது என்றால் இந்தக் கடமையை நிறைவேற்ற முடியாது.

இஸ்லாத்தின் மற்றொரு கடமை ஹஜ். இந்தக் கடமையைச் செய்ய மக்காவில் உள்ளவர்களுக்குப் பெரிய அளவில் பொருளாதாரம் தேவைப்படாது என்றாலும் மற்றவர்கள் ஹஜ் செய்வதாக இருந்தால் பொருள் வசதி அவசியம். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் சுமத்தியுள்ள இன்னும் பல பொறுப்புகளை நிறைவேற்ற பொருளாதாரம் அவசியமாக உள்ளது.

பெற்றோரையும், உறவினர்களையும் கவனிப்பதை இஸ்லாம் கடமையாக்கியிருக்கிறது. இந்தக் கடமையைப் பணம் இல்லாமல் செய்ய முடியாது. திருமணம் செய்யும் போது மஹர் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. திருமணத்துக்குப் பின் மனைவிக்கு உணவும், உடையும் அளிக்க வேண்டும் எனவும் இஸ்லாம் கட்டளையிடுகிறது. இந்தக் கடமையைச் செய்வதற்கும் பணம் தேவை.

குழந்தை பிறந்தால் அதற்காக அகீகா கொடுக்க வேண்டும். குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க வேண்டும். இந்தக் கடமையைச் செய்யவும் பொருளாதாரம் தேவை. வசதி படைத்தவர்கள் ஹஜ் பெருநாளின் போது குர்பானி கொடுக்க வேண்டும். நோன்புப் பெருநாளின் போது ஃபித்ரா எனும் தர்மத்தை அளிக்க வேண்டும். அதற்கும் பொருளாதாரம் அவசியமாக உள்ளது.

நோன்பு காலத்தில் நோன்பை முறித்து விட்டால் அதற்குப் பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இதைச் செய்வதற்கும் பொருளாதாரம் தேவை.

ஒரு காரியத்தைச் செய்வதாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்துவிட்டு அதைச் செய்ய இயலாமல் போனால், அல்லது அல்லாஹ்வுக்கு நேர்ச்சை செய்துவிட்டு அதை நிறவேற்ற முடியாவிட்டால் அதற்குப் பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அல்லது பத்து ஏழைகளுக்கு உடை அல்லது உணவு அளிக்க வேண்டும். பொருளாதாரம் இல்லாமல் இதைச் செய்ய முடியாது.

மனைவியின் மீது வெறுப்படைந்து இனி நீ என் தாய் போன்று ஆகிவிட்டாய் என்று ஒருவர் கூறிவிட்டால் அதற்குப் பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அல்லது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. பொருள் இல்லாமல் இதைச் செய்ய முடியாது.

நோய் வந்தால் சிகிச்சை பெற வேண்டும்; பசித்தால் உண்ண வேண்டும்; ஆடை அணிந்து மானத்தை மறைக்க வேண்டும்; தூய்மையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பல கட்டளைகள் இஸ்லாத்தில் உள்ளன. இவையாவும் பொருளாதாரம் இல்லாமல் சாத்தியமாகாது.

இப்படி இன்னும் எண்ணற்ற காரியங்களை இஸ்லாம் வலியுறுத்துகிறது. அவை பொருளாதாரம் என்ற அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அதன் முழு விவரங்களை இந்த உரையில் காண்போம்..

பொருளாதாரம் ஓர் அருட்கொடை

என்று (அல்குர்ஆன்: 2:198, 3:174, 3:180, 4:32, 4:37, 4:73, 9:28, 9:59, 9:74, 9:75, 9:76, 16:14, 17:12, 17:66, 24:22, 24:32, 24:33, 28:73, 30:23, 30:46, 35:12, 45:12, 62:10, 73:20) ஆகிய வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

வியாபாரம் செய்வதையும், பொருள் திரட்டுவதையும் திருக்குர்ஆன் பல இடங்களில் ஊக்குவிப்பதை நாம் காணலாம்.

فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ

தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.             

(அல்குர்ஆன்: 62:10)

وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

நீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது.

(அல்குர்ஆன்: 28:73)

وَهُوَ الَّذِىْ سَخَّرَ الْبَحْرَ لِتَاْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْيَةً تَلْبَسُوْنَهَا‌ۚ وَتَرَى الْـفُلْكَ مَوَاخِرَ فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்.

(அல்குர்ஆன்: 16:14)

பொருளாதாரத்தின் மூலம் இவ்வளவு நன்மைகளை அடைய முடியும் என்பதால் பொருளாதாரம் இறைவனின் மகத்தான அருட்கொடை என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.

வாரிசுகளுக்கு செல்வத்தை விட்டுச் செல்லுதல்

நம்முடைய தேவைகளுக்கு மட்டுமின்றி நமது வாரிசுகளுக்காக பொருள் திரட்டும் கடமையும் நமக்கு இருக்கின்றது.

عَادَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ حَجَّةِ الوَدَاعِ مِنْ مَرَضٍ أَشْفَيْتُ مِنْهُ عَلَى المَوْتِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، بَلَغَ بِي مِنَ الوَجَعِ مَا تَرَى، وَأَنَا ذُو مَالٍ، وَلاَ يَرِثُنِي إِلَّا ابْنَةٌ لِي وَاحِدَةٌ، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَيْ مَالِي؟ قَالَ: «لاَ»، قَالَ: فَأَتَصَدَّقُ بِشَطْرِهِ؟ قَالَ: «الثُّلُثُ يَا سَعْدُ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَذَرَ ذُرِّيَّتَكَ أَغْنِيَاءَ، خَيْرٌ مِنْ أَنْ تَذَرَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ

விடை பெறும் ஹஜ்ஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்றுவிட்டிருந்தேன். (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்டதும்) அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு செல்வந்தன்; எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கைத் தர்மம் செய்து விடட்டுமா? என்று கேட்டேன்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வேண்டாம் என்று சொன்னார்கள். அப்படியென்றால் அதில் பாதியைத் தர்மம் செய்து விடட்டுமா? என்று நான் கேட்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மூன்றிலொரு பங்கு (போதும்.) சஅதே! மூன்றிலொரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும் என்று கூறினார்கள்.          

அறிவிப்பவர் : ஸஅது பின் அபீ வக்காஸ் (ரலி)
நூல்: (புகாரி: 3936) , 1296, 2742, 2744, 4409, 5354, 5659, 5668, 6373, 6733

பொருளாதாரத்திற்காக பிரார்த்தனை செய்தல்

இறைவனிடம் பொருளாதாரத்தை வேண்டுவதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது. இறைவனின் அன்பைப் பெறுவதற்கு பொருளாதாரம் தடையாக அமையும் என்று இஸ்லாம் கருதி இருந்தால் பொருளாதார வசதியை இறைவனிடம் வேண்டுமாறு வழிகாட்டி இருக்காது.

دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَلَى أُمِّ سُلَيْمٍ، فَأَتَتْهُ بِتَمْرٍ وَسَمْنٍ، قَالَ: «أَعِيدُوا سَمْنَكُمْ فِي سِقَائِهِ، وَتَمْرَكُمْ فِي وِعَائِهِ، فَإِنِّي صَائِمٌ» ثُمَّ قَامَ إِلَى نَاحِيَةٍ مِنَ البَيْتِ، فَصَلَّى غَيْرَ المَكْتُوبَةِ، فَدَعَا لِأُمِّ سُلَيْمٍ وَأَهْلِ بَيْتِهَا، فَقَالَتْ أُمُّ سُلَيْمٍ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي خُوَيْصَّةً، قَالَ: «مَا هِيَ؟»، قَالَتْ: خَادِمُكَ أَنَسٌ، فَمَا تَرَكَ خَيْرَ آخِرَةٍ وَلاَ دُنْيَا إِلَّا دَعَا لِي بِهِ، قَالَ: «اللَّهُمَّ ارْزُقْهُ مَالًا وَوَلَدًا، وَبَارِكْ لَهُ فِيهِ»، فَإِنِّي لَمِنْ أَكْثَرِ الأَنْصَارِ مَالًا،

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். என் தாயார் பேரீச்சம் பழங்களையும், நெய்யையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்கள் நெய்யை அதற்குரிய (தோல்) பாத்திரத்திலேயே ஊற்றுங்கள்; உங்கள் பேரீச்சம் பழங்களை அதற்குரிய பையில் போடுங்கள்; ஏனெனில், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்!” என்றார்கள்.

பிறகு வீட்டின் ஒரு மூலையில் நின்று கடமையல்லாத தொழுகையைத் தொழுதார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்காகவும், அவர்களுடைய குடும்பத்தாருக்காகவும் பிரார்த்தித்தார்கள்.

அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு விருப்பம் உள்ளது!” என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அது என்ன?” என்று கேட்டார்கள். “உங்கள் ஊழியர் அனஸ் தான்!” என்று உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறினார்கள். இம்மை மறுமையின் எந்த நன்மையையும் விட்டு விடாமல் (எல்லா நன்மைகளையும்) கேட்டு, எனக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிராத்தித்தார்கள். “இறைவா! இவருக்குப் பொருட்செல்வத்தையும் குழந்தைச் செல்வத்தையும் வழங்குவாயாக! இவருக்கு பேரருள் (பரக்கத்) புரிவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். இன்று நான் அன்ஸாரிகளிலேயே அதிகச் செல்வந்தனாக இருக்கிறேன்!

நூல் : (புகாரி: 1982) , 6334, 6344, 6378, 6380

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்காகவும் செல்வத்தைக் கேட்டு பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ كَانَ يَقُولُ
اللَّهُمَّ إِنِّى أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى

இறைவா! உன்னிடம் நான் நல்வழியையும், இறையச்சத்தையும், சுயக் கட்டுப்பாட்டையும், பொருளாதாரத் தன்னிறைவையும் வேண்டுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்து வந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)
நூல் : (முஸ்லிம்: 5265) 

என்னை ஏழையாக வாழச் செய்! ஏழையாகவே மரணிக்கச் செய் என்று அல்லாஹ்விடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்ததாகக் கூறப்படுவது ஆதாரமற்ற செய்தியாகும்.

நல்ல செல்வந்தர்கள் சிறந்தவர்கள்

வசதியில்லாதவனை விட செல்வத்தைப் பெற்று அதை நல்வழியில் செலவிடுபவன் சிறந்தவன் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் புகழ்ந்துரைக்கிறான்.

ضَرَبَ اللّٰهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوْكًا لَّا يَقْدِرُ عَلٰى شَىْءٍ وَّمَنْ رَّزَقْنٰهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ يُنْفِقُ مِنْهُ سِرًّا وَّجَهْرًا‌ؕ هَلْ يَسْتَوٗنَ‌ؕ اَ لْحَمْدُ لِلّٰهِ‌ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ

எதற்கும் சக்தி பெறாத, பிறருக்கு உடைமையான அடிமையையும், யாருக்கு நாம் அழகிய செல்வத்தை அளித்தோமோ அவனையும் அல்லாஹ் உதாரணமாகக் காட்டுகிறான். இவன் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் அதிலிருந்து (நல்வழியில்) செலவிடுகிறான். (இவ்விருவரும்) சமமாவார்களா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 16:75)

பொறாமைப்படலாம்.

பொதுவாக பொறாமை கொள்வது மார்க்கத்தில் வெறுக்கப்பட்டதாக இருந்தும் தர்மம் செய்யும் ஒருவனைப் பார்த்து பொறாமைப்படலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

قال النبي صلى الله عليه وسلم:
لَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ: رَجُلٌ آتَاهُ اللهُ مَالًا فَسُلِّطَ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ ، وَرَجُلٌ آتَاهُ اللهُ الْحِكْمَةَ فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا

அல்லாஹ் வழங்கிய செல்வத்தை நல்ல வழியில் செலவு செய்தவர், அல்லாஹ் வழங்கிய அறிவு ஞானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிக் கற்றுக் கொடுப்பவர் ஆகிய இருவரைத் தவிர மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்..

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : (புகாரி: 73) , 1409, 7149, 7316

جَاءَ الفُقَرَاءُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: ذَهَبَ أَهْلُ الدُّثُورِ مِنَ الأَمْوَالِ بِالدَّرَجَاتِ العُلاَ، وَالنَّعِيمِ المُقِيمِ يُصَلُّونَ كَمَا نُصَلِّي، وَيَصُومُونَ كَمَا نَصُومُ، وَلَهُمْ فَضْلٌ مِنْ أَمْوَالٍ يَحُجُّونَ بِهَا، وَيَعْتَمِرُونَ، وَيُجَاهِدُونَ، وَيَتَصَدَّقُونَ، قَالَ: «أَلاَ أُحَدِّثُكُمْ إِنْ أَخَذْتُمْ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ، وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَانَيْهِ إِلَّا مَنْ عَمِلَ مِثْلَهُ تُسَبِّحُونَ وَتَحْمَدُونَ وَتُكَبِّرُونَ خَلْفَ كُلِّ صَلاَةٍ ثَلاَثًا وَثَلاَثِينَ»، فَاخْتَلَفْنَا بَيْنَنَا، فَقَالَ بَعْضُنَا: نُسَبِّحُ ثَلاَثًا وَثَلاَثِينَ، وَنَحْمَدُ ثَلاَثًا وَثَلاَثِينَ، وَنُكَبِّرُ أَرْبَعًا وَثَلاَثِينَ، فَرَجَعْتُ إِلَيْهِ، فَقَالَ: تَقُولُ: «سُبْحَانَ اللَّهِ، وَالحَمْدُ لِلَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، حَتَّى يَكُونَ مِنْهُنَّ كُلِّهِنَّ ثَلاَثًا وَثَلاَثِينَ»

ஏழைகள் (சிலர்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “செல்வச் சீமான்கள் உயர்வான பதவிகளையும், நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய் விடுகின்றனர். நாங்கள் தொழுவது போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்.

ஆயினும் தங்களது அதிகப்படியான செல்வங்கள் மூலம் அவர்கள் ஹஜ் செய்கின்றனர்; உம்ராச் செய்கின்றனர்; அறப்போருக்காகச் செலவளிக்கின்றனர்; தான தர்மம் செய்கின்றனர். (ஏழைகளாகிய எங்களால் இவற்றைச் செய்ய முடிவதில்லையே)” என்று கூறினர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? அதை நீங்கள் கடைப்பிடித்தால் (இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்ட (செல்வர்)வர்களையும் நீங்கள் பிடித்துவிடலாம்.

உங்களுக்குப் பின்னால் வரும் எவராலும் உங்களைப் பிடிக்க இயலாது. நீங்கள் எந்த மக்களிடையே வாழ்கிறீர்களோ அவர்களில் சிறந்தவர்கள் ஆவீர்கள். உங்களைப் போன்று மற்றவரும் அதைச் செயல்படுத்தினால் தவிர. (அந்தக் காரியமாவது:) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் 33 தடவை ஸுப்ஹானல்லாஹ் என்று சொல்லுங்கள்; 33 தடவை அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுங்கள்; 33 தடவை அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் இது தொடர்பாக கருத்து வேறுபாடு கொண்டோம்.

எங்களில் சிலர் சுப்ஹானல்லாஹ் 33 தடவை, அல்ஹம்துலில்லாஹ் 33 தடவை, அல்லாஹு அக்பர் 34 தடவை (ஒவ்வொன்றையும் தனித் தனியாகக்) கூற வேண்டும்” என்றனர். ஆகவே நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமே திரும்பி(ச் சென்று இது பற்றி வினவி)னேன். அதற்கு நபியவர்கள், “சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி, வல்லாஹு அக்பர் என்று 33 தடவை சொல்! இதனால் அவற்றில் ஒவ்வொன்றும் 33 தடவை கூறியதாக அமையும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 843) , 6329

அர்ஷின் நிழல்
سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ

தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் நிழல் அளிப்பான்:

  • 1.  நீதி மிக்க ஆட்சியாளர்.
  • 2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞர்.
  • 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) உள்ளத்தால் தொடர்பு வைத்திருந்தவர்.
  • 4. அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொண்டு அந்த நிலையிலேயே பிரிந்து சென்ற இருவர்.
  • 5. தகுதியும், அழகும் உள்ள ஒரு பெண் தவறு செய்ய அழைத்தபோது “நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்” என்று கூறியவர்.
  • 6. தன் வலக்கரம் செய்த தர்மத்தை இடக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர்.
  • 7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 660) , 1423, 6806

பொருளாதாரத்தைச் செலவிடுவதன் மூலம் ஒரு முஸ்லிம் மறுமையில் மகத்தான தகுதிகளைப் பெற முடியும் என்பதை மேற்கண்ட நபிமொழிகளில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாம் வலியுறுத்தும் தானதர்மங்கள்

தான தர்மங்களால் மறுமையில் வெற்றி அடைய முடியுமென்று திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் அதிகமான இடங்களில் கூறப்பட்டுள்ளது. பொருளாதாரத்தினால் நன்மை விளைவதை இதில் இருந்தும் நாம் அறியலாம்.

இது குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

مَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ كَمَثَلِ حَبَّةٍ اَنْۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِىْ كُلِّ سُنْۢبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ‌ؕ وَاللّٰهُ يُضٰعِفُ لِمَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.                                   

(அல்குர்ஆன்: 2:261)

وَمَثَلُ الَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ وَ تَثْبِيْتًا مِّنْ اَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍۢ بِرَبْوَةٍ اَصَابَهَا وَابِلٌ فَاٰتَتْ اُكُلَهَا ضِعْفَيْنِ‌ۚ فَاِنْ لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏

அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல்வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத்தோட்டம் இரு மடங்காக அதன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழாவிட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.         

(அல்குர்ஆன்: 2:265)

لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى
الَّذِي كَذَّبَ وَتَوَلَّى
وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى
الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى

கொளுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு எச்சரிக்கிறேன். துர்பாக்கியசாலியைத் தவிர வேறு யாரும் அதில் கருக மாட்டார்கள். அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்தவன். இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப்படுவார். அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர்.

(அல்குர்ஆன்: 92:14-18)

قال رسول الله صلى الله عليه وسلم:
مَا مِنْكُمْ أَحَدٌ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلاَ يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ

(மறுமையில்) உங்களில் ஒவ்வொருவருடனும் அல்லாஹ் உரையாடுவான். அப்போது அவனுக்கும் உங்களுக்குமிடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். நீங்கள் உங்கள் வலப்பக்கம் பார்ப்பீர்கள். அங்கு நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள். உங்கள் இடப்பக்கம் பார்ப்பீர்கள். அங்கும் நீங்கள் முன்பே செய்து அனுப்பிய செயல்களையே காண்பீர்கள்.

உங்கள் முன்னால் பார்ப்பீர்கள். உங்கள் முகத்துக்கு எதிரே நரகத்தையே காண்பீர்கள். ஆகவே, ஒரு பேரீச்சம் பழத்துண்டை (தர்மமாக)க் கொடுத்தாவது நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி),
நூல் : (புகாரி: 7512) 

جَاءَ رَجُلٌ بِنَاقَةٍ مَخْطُومَةٍ فَقَالَ هَذِهِ فِى سَبِيلِ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لَكَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ سَبْعُمِائَةِ نَاقِةٍ كُلُّهَا مَخْطُومَةٌ 

ஒரு மனிதர் கடிவாளமிடப்பட்ட ஒட்டகமொன்றைக் கொண்டு வந்து, “இது அல்லாஹ்வின் பாதையில் (தர்மமாகும்)” என்று சொன்னார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உமக்கு மறுமை நாளில் இதற்குப் பகரமாக எழுநூறு ஒட்டகங்கள் கிடைக்கும். அவற்றில் ஒவ்வொன்றும் கடிவாளமிடப்பட்டதாக இருக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமஸ்ஊத் அல் அன்சாரீ (ரலி),
நூல் : (முஸ்லிம்: 3845) 

قال رسول الله صلى الله عليه وسلم:
مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ، وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ، وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ، كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ، حَتَّى تَكُونَ مِثْلَ الجَبَلِ

யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை- அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று மலைபோல் உயரும் அளவுக்கு அதை வளர்த்து விடுவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 1410) 

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். “எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் பதிலளித்தார்கள். ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “இவருக்கு விருந்தளிப்பவர் யார்?” என்று கேட்டார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர், “நான் (விருந்தளிக்கிறேன்)” என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தன் மனைவியிடம் சென்று, “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து” என்று மனைவியிடம் சொன்னார்.

அதற்கு அவருடைய மனைவி, “நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை” என்று சொன்னார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், “உன்னிடம் உள்ள உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு” என்று சொன்னார்.

அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள்.

பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த நபித்தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீங்கள் இருவரும் இன்றிரவு செய்ததைக் கண்டு அல்லாஹ் சிரித்தான்; அல்லது மகிழ்ந்தான்” என்று சொன்னார்கள். அப்போது

وَيُـؤْثِرُوْنَ عَلٰٓى اَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ ؕ وَمَنْ يُّوْقَ شُحَّ نَـفْسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‌ۚ

“தமக்கே தேவை இருந்தும்கூட, தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்” எனும் (அல்குர்ஆன்: 59:9) வது வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : (புகாரி: 3798) , 4889

சொத்தைக் காக்கப் போரிடுதல்

சொத்தைக் காப்பாற்ற உயிரையும் தியாகம் செய்யலாம் என்ற அளவுக்குப் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِى قَالَ « فَلاَ تُعْطِهِ مَالَكَ ». قَالَ أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِى قَالَ « قَاتِلْهُ ». قَالَ أَرَأَيْتَ إِنْ قَتَلَنِى قَالَ « فَأَنْتَ شَهِيدٌ ». قَالَ أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ قَالَ «هُوَ فِى النَّارِ» 

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவனுக்கு உமது செல்வத்தை விட்டுக் கொடுக்காதே! என்று கூறினார்கள்.

அந்த மனிதர், அவன் என்னுடன் சண்டையிட்டால்…? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீரும் அவனுடன் சண்டையிடு! என்று கூறினார்கள். அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்று விட்டால்? என்று அந்த மனிதர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்போது நீர் உயிர்த் தியாகி (ஷஹீத்) ஆவீர் என்றார்கள். நான் அவனைக் கொன்று விட்டால்? என்று அவர் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவன் நரகத்திற்குச் செல்வான் என்று பதிலளித்தார்கள்.

நூல் : (முஸ்லிம்: 225) (377) 

«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும்போது கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),
நூல் : (புகாரி: 2480) 

இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தியதை போல பொருளாதாரத்தை நல்ல முறையில் நன்மைக்காக பயன்படுத்தும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.