பொது வாழ்வில் தூய்மை
முன்னுரை
பொறுப்பில் உள்வர்களுக்கு கட்டுப்பாடு அதிகம்
يٰنِسَآءَ النَّبِىِّ لَسْتُنَّ كَاَحَدٍ مِّنَ النِّسَآءِ اِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَـطْمَعَ الَّذِىْ فِىْ قَلْبِهٖ مَرَضٌ وَّقُلْنَ قَوْلًا مَّعْرُوْفًا ۚ
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
இந்த வசனம் நபி (ஸல்) அவர்களின் மனைவிகளுக்குரிய தனிப்பட்ட கட்டளையைக் குறிப்பிட்டாலும், மற்ற முஃமினான ஆண், பெண்களுக்குரிய பொதுவான வழிகாட்டல்கள் இதில் அடங்காமல் இல்லை.
உயர் பொறுப்பில் உள்ளவர்கள் செய்யும் தவறுகள் சாதாரணமானவை அல்ல; சகித்துக் கொள்ளக்கூடியவை அல்ல. அது மக்களிடத்தில் பெரும் தாக்கத்தையும் தனிக் கவனத்தையும் ஏற்படுத்தும். இது தான் அந்த வசனம் சுட்டிக் காட்டும் வழிகாட்டலாகும்.
தவ்ஹீது ஜமாஅத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் – அது நகரப் பொறுப்பாக இருக்கட்டும்; அல்லது மாவட்ட, மாநிலப் பொறுப்புகளாகட்டும் – இந்த வசனத்தின் அடிப்படையில் தங்கள் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் இந்தத் தவ்ஹீது ஜமாஅத்தை மக்கள் உச்சத்தில் வைத்துப் பார்க்கிறார்கள். அதனால் அதை உன்னிப்பாகவும் கவனிக்கிறார்கள்.
மற்ற ஜமாஅத்தில் உள்ளவர்கள் என்ன தவறு செய்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் தவ்ஹீது ஜமாஅத்தில் உள்ளவர்கள் ஒரு சிறு தவறு செய்தாலும், நீயெல்லாம் ஒரு தவ்ஹீதுவாதியா? என்று கேட்பார்கள்.
இப்படிக் கேட்பதற்காக உண்மையில் நாம் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் தவ்ஹீதுவாதி என்றால் அவன் எல்லா விதத்திலும் சரியாக இருப்பான் என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள். அதனால் தான் இது போன்ற கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றார்கள்.
நம்முடைய ஜமாஅத்தும் பிற இயக்கங்களை விட்டும் எல்லா வகையிலும் தனித்தன்மையுடன் விளங்குகின்றது.
பிரச்சாரத்தில் தனித்தன்மை
“ஜாக்கும் தவ்ஹீதைச் சொல்கின்றது. திமுகவின் சிறுபான்மைப் பிரிவும் தவ்ஹீதைச் சொல்கின்றது. அதனால் இந்த இயக்கங்களிலிருந்து பேச்சாளர்களை அழைத்துக் கூட்டம் போடுகிறோம். நாங்கள் நடுநிலையாளர்கள்’ என்று சொல்லும் ஒரு சிலர் தமிழகத்தில் உள்ளனர். நம்முடைய பார்வையில் இது நடுநிலை அல்ல! நயவஞ்சகத்தனம்!
இந்த இரு இயக்கங்களும் சிந்தனையில், செயல்பாட்டில் வேறுபட்டவை. அடிப்படைக் கொள்கைகள், சட்டங்கள் அனைத்திலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டவை. நம்மை வேரோடு வீழ்த்தும் விஷயத்தில் மட்டும் தான் ஒன்றுபட்டவை என்று தெரிந்தும் இவர்கள் நடுநிலை என்கிறார்கள் என்றால் இதற்கு நயவஞ்சம் என்பதைத் தவிர வேறு என்ன பெயர் சூட்ட முடியும்?
இப்படிப்பட்டவர்கள் நம்மைப் பிரச்சாரத்திற்கு அழைத்தால் அதில் நாம் கலந்து கொள்வதில்லை. நம்முடைய மேடைகளை அவர்களுடன் நாம் பகிர்வதில்லை. இப்படி ஒரு தனித்தன்மையைப் பொது மேடைகளில் மட்டுமல்ல! ஜும்ஆ மேடைகளிலும் கடைப்பிடித்து வருகிறோம்.
நடுநிலை என்று சொல்லிக் கொள்பவர்கள் நம்மைப் பிரச்சாரத்திற்கு அழைத்த போதும் நாம் செல்லவில்லை. இதனால் அவர்கள் நம்மை எதிர்ப்பவர்களின் பட்டியலில் கூட இணைந்திருக்கிறார்கள்.
போராட்டங்களில் தனித்தன்மை
சமுதாயப் பிரச்சனைகளுக்காகப் போராடும் நாம், மற்ற எந்த இயக்கத்துடனும் சேர்ந்து போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களைக் காண்பதில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு.
உதாரணத்திற்கு, சுன்னத் ஜமாஅத்தினர், முஸ்லிம் லீக்கினர் நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்ளும் போது, அல்ஃபாத்திஹாவில் தொடங்கி, இறுதியில் ஆமீன் போடும் துஆ வரை அது பித்அத்திலேயே முடியும்.
ஆர்ப்பாட்டங்களில் மற்ற இயக்கத்தார் செய்யும் அத்துமீறல், அடாவடித்தனங்களுக்கும் நாமே பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
அடுத்து, நமது ஜமாஅத்தில் உள்ளது போன்று களமிறங்கிப் போராடும் மக்கள் சக்தி வேறு ஜமாஅத்துகளில் இல்லை. இதனால் நமது கூட்டத்தைக் காட்டி, பெயரை மட்டும் அவர்கள் தட்டிச் செல்வார்கள்.
இது போன்ற மார்க்க மற்றும் உலக ரீதியிலான, நியாயமான காரணங்களால் இந்தத் தனித்தன்மையைக் காத்து வருகிறோம்.
இப்படிப்பட்ட நமது தனித்தன்மையே நம்மை நோக்கிக் கவனத்தைத் திருப்ப வைக்கின்றது. அதனால் மற்ற இயக்கங்களின் ஆந்தைப் பார்வை அல்லும் பகலும் நம்மீது படிந்திருக்கின்றது.
இதல்லாமல் நமது ஜமாஅத், உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்காமல், குர்ஆன் ஹதீஸ் என்ற அறிவார்ந்த முடிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களைக் கொண்ட ஜமாஅத்தாகும்.
தூய்மையான இயக்கம் என்ற நம்பிக்கையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும், “இந்த இயக்கத்தின் துப்புரவும் தூய்மையும் கெட்டு விடக் கூடாது; அது கறைபட்டு விடக்கூடாது; களங்கப்பட்டு விடக்கூடாது”என்பதில் கண்ணும் கருத்துமாகக் கண் விழித்து, கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.
இறையச்சம்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற பயம் இந்த ஜமாஅத்தின் நிர்வாகிகளாக இருப்பவர்களிடம் மிகைத்து நிற்க வேண்டும்.
இந்த இயக்கத்தின் இலட்சியமே நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது தான். அந்தப் பணியைச் செய்யக் கூடியவர்கள் மற்றவர்களை விட இறையச்சத்தில் மிஞ்சி நிற்க வேண்டும். அதன் வெளிப்பாடு அன்றாடம் ஐந்து நேரத் தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதாகும். தொழுகை மட்டுமின்றி இதர வணக்க வழிபாடுகளிலும் பேணுதலாக இருக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால் இந்த இயக்கத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் மார்க்கம் கூறும் அனைத்து நன்மைகளையும் ஏற்று நடப்பவராகவும், மார்க்கம் தடுத்த தீமைகளை விட்டும் தவிர்ந்து நடப்பவராகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, தீமைகளைத் தவிர்ந்து நடப்பதில் கண்டிப்பானவராக இருக்க வேண்டும்.
1. ஷிர்க், பித்அத் நடக்கும் திருமணங்கள், வரதட்சணை வாங்கும் திருமணங்களில் இந்த இயக்கத்தின் நிர்வாகிகள் யாரும் கண்டிப்பாகக் கலந்து கொள்ளக் கூடாது. அவர்கள் எவ்வளவு நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரி!
2. இணை வைப்பவர்களைத் தானும் திருமணம் செய்யக் கூடாது. தனது பிள்ளைகளுக்கும் மணமுடித்துக் கொடுக்கக்கூடாது.
3. இணை வைப்புக் கொள்கையிலேயே இறந்து விட்டவர்களின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளக் கூடாது.
4. இணை வைப்பவர்களின் பின்னால் நின்று தொழக் கூடாது.
5. வங்கிக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன், அலுவலக் கடன் என்று எந்த வகையிலும் வட்டியில் போய் விழுந்து விடக் கூடாது.
6. பொருளாதார மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி விடக்கூடாது.
7. பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஒரு போதும் ஆளாகி விடக் கூடாது.
8. புகை, போதை போன்ற எந்தவிதமான கெட்ட பழக்கத்திற்கும் ஆளானவராக இருக்கக் கூடாது.
9. தாடி வைத்தல் போன்ற வலியுறுத்தப்பட்ட, வெளிப்படையான சுன்னத்துகளை நிறைவேற்றுபவராக இருக்க வேண்டும்.
இவையெல்லாம் கொள்கை அடிப்படையில் அமைந்தவை. இதில் இந்த ஜமாஅத்தின் சாதாரண உறுப்பினர் கூட சமரசம் செய்து கொள்ளக் கூடாது.
நிர்வாகிகளாக இருப்பவர்கள் கண்டிப்பாக சமரசம் செய்து கொள்ளக் கூடாது.
சுருக்கமாகச் சொல்லப் போனால் எல்லா வகைகளிலும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில், நபி (ஸல்) அவர்கள் தம் கண் முன் வளர்த்த நபித்தோழர்களைப் போன்ற சமுதாயமாகப் பரிணமிப்போமாக!