பேஸ்புக் அறிமுகத்தால் சீரழிந்த பெண்கள்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

பேஸ்புக் அறிமுகத்தால் சீரழிந்த பெண்கள்

ஆண்ட்ராய்டு போன்களும் சமூக வலைதளங்களும் வந்தாலும் வந்தது, அதன்மூலம் அதிகமதிகம் பாதிக்கப்படுவது பெண்களாகத்தான் இருக்கின்றார்கள். சமூக வலைதளங்களின் பெருக்கத்தாலும் இணையப் பயன்பாடு அதிகரித்த காரணத்தாலும் ஒரு பக்கம் உலகம் மிக வேகமாகப் பயணம் செய்து வந்தாலும் மற்றொரு புறத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூகவலைத்தளங்களால் அப்பாவி பெண்களுக்கு ஆசையைக் காட்டி அவர்களை தங்களின் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசப் படமெடுத்து அவர்களிடம் இருக்கும் பணம் நகைகளைக் கொள்ளையடித்து இதற்கெல்லாம் உடன்படாத பட்சத்தில் அவர்களைக் கொலை செய்யும் கொடூரங்களும் நடைபெற்று வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் பொள்ளாச்சியில் நடந்துள்ள ஒரு சம்பவம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த பூபாலன் என்பவர் கடந்த வாரம் பொள்ளாச்சி சி1 கிழக்கு காவல்நிலையத்தில் ஒரு புகாரை அளித்தார்.

அதில் தன் தங்கையை சபரிராஜன் என்பவர் காதலிப்பதாக நடித்து ஏமாற்றி ஆபாசமாக படமெடுத்து வைத்து மிரட்டுவதாக புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பெயரில் சபரிராஜன், வசந்தகுமார், மணிகண்டன் மற்றும் சதீஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை போலீசார் தேடி வருகின்றனர். இந்தக் கும்பலை விசாரித்த போலீசார் அதிர்ந்தே போனார்கள். அவர்களிடம் இருந்து 200 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் சிக்கியுள்ள மணிகண்டன் என்பவன் அந்தப் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளான். தன்னிடம் வட்டிக்குப் பணம் வாங்கும் பெண்கள் குறித்து அறிந்து வைத்திருக்கும் மணிகண்டன் அவர்களிடம் ஆசை வார்த்தை பேசி அவர்களை மயக்கி தன் வலையில் விழ வைத்துள்ளான். பின்னர் அவர்களை தன் நண்பர்களுடன் இணைந்து ஆபாசமாக படமெடுத்து மிரட்டி அவர்களிடமிருந்து பணத்தை கறக்கும் வேலையைச் செய்து வந்துள்ளது இந்தக் கும்பல்.

இது ஒருபுறம் இருக்க, இந்தக் கும்பலைச் சேர்ந்த சபரிராஜன் என்பவன் பேஸ்புக்கில் தன் புகைப்படத்தை வைத்து, காரில் செல்வது போலவும் பங்களாவில் இருப்பது போலவும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்வதைப் போலவும் புகைப்படங்களை ஏற்றி வைத்து தன் நட்பு வட்டாரத்தில் வரும் பெண்களுக்கு பேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பி அவர்களுக்கு காதல் வலை விரித்துள்ளான். இவனது சொகுசு வாழ்க்கையைப் பார்த்து மயங்கும் பெண்கள் குறித்து கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்கும் இவன், ஒரு கட்டத்தில் அவர்களை நேரில் சந்திப்பான்.

அதன்பிறகு அந்தப் பெண்களைக் காதலிப்பதாகச் சொல்லி அவர்களை தன் வலையில் வீழ்த்தி தன் நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்களிடம் சில்மிஷம் செய்து அதை ஆபாசமாகப் படமெடுத்து அவர்களிடம் போட்டுக்காட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். பூபாலனின் தங்கை அந்தப் பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அவரின் பேஸ்புக் கணக்கிற்கு சபரிராஜன் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளான். அதைப் பார்த்த மாணவியும் அவனுக்கு பதில் அனுப்ப, மாணவிக்கு காதல் வலை விரித்துள்ளான் சபரிராஜன். ஒரு கட்டத்தில் சபரிராஜனின் காதல்வலையில் வீழ்ந்தார் மாணவி.

ஒருநாள் தன் காரில் வெளியே போய்விட்டு வரலாம் என்று மாணவியை அழைத்துள்ளான் சபரிராஜன். அவனை நம்பி அவனுடன் காரில் சென்றுள்ளார் மாணவி. அப்போது அந்தக் காரில் மேலும் இருவர் இருந்துள்ளார்கள். அவர்கள் யார் என்று கேட்க, தன் நண்பர்கள் என்றும் வழியில் இறங்கிக் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளான் சபரிராஜன். இதை நம்பி அவனுடன் பயணித்துள்ளார் மாணவி.

ஆள் அரவமற்ற இடத்திற்கு கார் சென்றதும் மாணவியிடம் சில்மிஷத்தை துவங்கியுள்ளான் சபரிராஜன், இதை முன்சீட்டில் இருந்த அவனின் நண்பன் தன் மொபைலில் வீடியோ எடுத்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தமிடவே அவரிடம் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு மாணவியை நடுரோட்டில் இறக்கி விட்டு இவர்கள் அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

உடனே இது குறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் மாணவி. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கவே அதில் ஈடுபட்ட கயவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை காவல்துறையினர் தேடி வருகின்றார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சியில் பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகரத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவம் தற்போது துவங்கியது அல்ல! கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வலை விரித்து அவர்களை மயக்கி ஆபாசப் படமெடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது இந்தக் கும்பல். இத்தனை காலமும் இவர்களிடம் சிக்கித் தவித்த பெண்களில் பள்ளி கல்லூரி மாணவிகள், குடும்பப் பெண்கள், கணவன் வெளிநாட்டில் இருக்கும் நிலையில் வசிக்கும் பெண்கள் போன்றவர்களையே இவர்கள் குறிவைத்து செயல்பட்டுள்ளனர்.

இந்தக் கும்பலிடம் இருந்து இருநூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த சில முக்கியப் பிரமுகர்கள் உதவி செய்வதாக தகவல் பரவியதையடுத்து, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

Source:unrvu (08/03/2019)