பேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

பேராசையை விட்டொழிக்க பரகத் எனும் மறைமுக அருளை நம்புதல்

மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! பின்பற்ற தகுந்த மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றும், நமது தூதர் நபி(ஸல்) அவர்களே என்றும் உறுதி கூறியவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

பொதுவாக செல்வத்தின் அளவைப் பொருத்தே தேவைகள் நிறைவேறும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நேரங்களில் இது பொய்யாகிப் போய் விடுவதை நாம் பார்க்கிறோம். சிலருக்கு அதிகமான செல்வம் கிடைத்தும் தேவைகள் நிறைவேறாமல் போவதையும், வேறு சிலருக்கு குறைந்த அளவு செல்வத்திலும் அதிகமான தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றி விடுவதையும் நாம் காண்கிறோம். பரக்கத்தை பெறுவதற்கான வழிமுறைகளை இந்த உரையில் காண்போம்..

இது பரக்கத் எனும் மறைமுக அருளாகும்.

100 ரூபாய் நமக்குத் தேவை என்று நினைக்கும்போது 50 ரூபாய்தான் கிடைக்கிறது என்றால் அது பற்றாக்குறை என்று நமக்குத் தோன்றும். ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை இப்படித் தோன்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் நூறு ரூபாயில் நிறவேற வேண்டிய தேவை 50 ரூபாயில் நிறைவேறலாம்.

பொதுவாக ஒருவேளை உணவுக்கு 200 கிராம் அரிசி ஒருவருக்குத் தேவைப்படுகிறது. ஆனால் சில குடும்பங்களில் 200 கிராம் அரிசியை இரண்டு பேர் வயிறார உண்ணுவைதை நாம் காணமுடிகிறது. அதாவது இந்த அரிசி இரு மடங்கு பயனளிக்கிறது. நம்முடைய கணக்கை மிஞ்சும் வகையில் மறைமுகமான அருள் இதில் ஒளிந்திருப்பதை நாம் உணர்கிறோம்.

ஒருவன் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான். அவனால் இரு குழந்தைகளைக்கூடப் படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் ஒருவன் இரண்டாயிரம் ரூபாய்தான் சம்பாதிக்கிறான். அதில் அவன் ஐந்து குழந்தைகளைப் படிக்க வைத்து, தனது ஏனைய தேவைகளையும் அதிலேயே பூர்த்தி செய்து விடுகிறான் என்றால் இதில்தான் பரக்கத் உள்ளது.

எண்ணிக்கையில் வேண்டுமானால் பத்தாயிரம் என்பது பெரிதாக இருக்கலாம். ஆனால் பயனளிப்பதில் இந்த இரண்டாயிரம்தான் சிறந்தது. பரக்கத் எனும் பேரருள் இருப்பதை ஒருவன் நம்பினால் அவன் பேராசைப்பட மாட்டான்.

பரக்கத் எனும் மறைமுகமான இறையருளைப் பின்வரும் ஆதாரங்கள் மூலம் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الصَّلَاةِ فِي مَبَارِكِ الْإِبِلِ فَقَالَ لَا تُصَلُّوا فِي مَبَارِكِ الْإِبِلِ فَإِنَّهَا مِنْ الشَّيَاطِينِ وَسُئِلَ عَنْ الصَّلَاةِ فِي مَرَابِضِ الْغَنَمِ فَقَالَ صَلُّوا فِيهَا فَإِنَّهَا بَرَكَةٌ

ஒட்டகம் கட்டுமிடத்தைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஒட்டகம் கட்டுமிடத்தில் தொழாதீர்கள்; ஏனென்றால் அவை ஷைத்தான்களைச் சேர்ந்ததாகும் என்று கூறினார்கள். ஆடுகள் கட்டுமிடத்தில் தொழுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அதிலே தொழுது கொள்ளுங்கள். ஏனென்றால் அதில்தான் பரக்கத் உள்ளது என்று கூறினார்கள்.

நூல் : (அபூதாவூத்: 493)   

عَنْ أُمِّ هَانِئٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا اتَّخِذِي غَنَمًا فَإِنَّ فِيهَا بَرَكَةً

உம்முஹானி (ரலி) அவர்களிடம் நீ ஒரு ஆட்டை வளர்த்துக் கொள்! அதில் பரக்கத் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : (இப்னு மாஜா: 2304) 

«الْإِبِلُ عِزٌّ لِأَهْلِهَا، وَالْغَنَمُ بَرَكَةٌ، وَالْخَيْرُ مَعْقُودٌ فِي نَوَاصِي الْخَيْلِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒட்டகம் வைத்திருப்போருக்கு பெருமையிருக்கிறது. ஆனால் ஆட்டில்தான் பரக்கத் என்றார்கள்.

நூல் : (இப்னு மாஜா: 2305) 

ஆடுகள் மிகக் குறைந்த அளவில் குட்டி போடுகிறது. செம்மறியாடுகள் ஒரு தடவை ஒரு குட்டிதான் போடும். வெள்ளாடுகள் சில நேரங்களில் இரண்டு குட்டிகள் போடும். மனிதனைப் போல பத்து மாதம் கருவைச் சுமக்கும்.

அதேபோல் அதிகம் உண்ணப்படும் பிராணிகளும் ஆடுகள்தான். அதன் குறைவான இனப் பெருக்கத்தையும், அதிகம் உண்ணப்படுவதையும் ஒப்பு நோக்கிப் பார்த்தால் அந்த இனம் இந்நேரம் அழிந்து போயிருக்க வேண்டும். டைனோசரைப் போல முடிந்து போன வரலாறாகி இருக்க வேண்டும். ஆனால் உலகில் ஆடுகள் மிக அதிக அளவில் உள்ளதைப் பார்க்கிறோம்.

சிங்கம், புலி போன்ற விலங்குகள் வலிமை வாய்ந்தவையாக உள்ளன. அவற்றுக்கு மனிதர்களாலோ, மற்ற விலங்குகளாலோ ஆபத்துகள் ஏற்படுவதில்லை. அவை உணவாகவும் உட்கொள்ளப்படுவதில்லை. இந்த அடிப்படையில் பார்க்கும்போது சிங்கம் புலிகள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆனால் உலகில் இந்த விவங்குகளின் எண்ணிக்கை சில ஆயிரங்களில் சுருங்கி இருப்பதும், அதிகம் உண்ணப்படும் ஆடுகள் அதிக எண்ணிக்கையில் பல்கிப் பெருகி இருப்பதும் பரகத் எனும் மறைமுகமான அருள் இருப்பதற்குச் சான்றாக உள்ளது.

இறைவனின் பரக்கத் எனும் மறைமுகமான பேரருள் இருப்பதை நாம் உணராமலே அதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

முஸ்லிமல்லாத சமுதாயங்களில் ஒரு குடும்பத்தில் ஏழு உறுப்பினர்கள் இருந்தால் ஏழு பேரும் சம்பாதிப்பார்கள். ஒரு நபர் தினமும் முன்னூறு ரூபாய் சம்பாதித்தால் ஏழு பேரும் சேர்ந்து ஒரு நாளைக்கு இரண்டாயிரத்து நூறு ரூபாய்கள் சம்பாதிக்கிறார்கள். இவர்களின் மாத வருமானம் அறுபத்து மூவாயிரம் ரூபாய்களாகும். இவ்வளவு அதிக வருமானம் வந்தும் இவர்களில் அதிகமானோர் குடிசைகளில்தான் வசிக்கிறார்கள்.

முஸ்லிம்களின் குடும்பங்களில் பெரும்பாலும் ஒருவர்தான் சம்பாதிக்கிறார். தாயையோ, மனைவியையோ, மகளையோ, தந்தையையோ பெரும்பாலும் முஸ்லிம்கள் வேலைக்கு அனுப்ப மாட்டார்கள். ஆனாலும் ஒருவரின் ஐயாயிரம் ரூபாய் வருமானத்தில் குடும்பத்தின் அனைத்துத் தேவைகளும் நிறைவேறுவதை நாம் பார்க்கிறோம்.

அல்லாஹ்வை அறைகுறையாக நம்பிய நாமே இந்தப் பயனை அடைகிறோம் என்றால் அல்லாஹ்வை முறையாக நம்பினால் எப்படிப்பட்ட அதிசயத்தை அல்லாஹ் நிகழ்த்துவான் என்பதை நாம் சற்றே சிந்திக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் பல சம்பவங்களை ஹதீஸ்களிலே நாம் பார்க்கிறோம்.

 الْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ

முஸ்லிம் ஒரு வயிறுக்கு சாப்பிடுகிறார். முஸ்லிமல்லாதவர் ஏழுவயிறுக்கு சாப்பிடுகிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நூல் : (புகாரி: 5393) , 5394. 5396. 5397

வெளிப்படையாகத் தெரியும் அருள் மட்டுமின்றி குறைந்த பொருளில் நிறைந்த பயனை அடையும் மறைமுகமான இறையருளும் உள்ளது என்பதை மேற்கண்ட ஹதீஸ் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
طَعَامُ الِاثْنَيْنِ كَافِي الثَّلَاثَةِ وَطَعَامُ الثَّلَاثَةِ كَافِي الْأَرْبَعَةِ

ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானது. இருவருடைய உணவு நான்கு நபர்களுக்குப் போதுமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : (புகாரி: 5392) 

ஒருவருக்கு உரிய உணவை இரண்டு பேர் உண்ணலாம் என்பது நம்முடைய கணக்குக்கு ஒத்து வராத தத்துவமாகத் தோன்றலாம். ஆனாலும் நம்முடைய கணக்கைப் பொய்யாக்கும் வகையில் இது நடந்தேறுவதை அதிகமான முஸ்லிம்கள் தமது வாழ்வில் அனுபவித்து வருகின்றனர். இந்த அருளுக்குத்தான் நாம் ஆசைப்பட வேண்டும்.

பரக்கத்தை அடைவதற்கான வழிமுறைகள்
أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كَانَ إِذَا أَكَلَ طَعَامًا لَعِقَ أَصَابِعَهُ الثَّلاَثَ. قَالَ وَقَالَ إِذَا سَقَطَتْ لُقْمَةُ أَحَدِكُمْ فَلْيُمِطْ عَنْهَا الأَذَى وَلْيَأْكُلْهَا وَلاَ يَدَعْهَا لِلشَّيْطَانِوَأَمَرَنَا أَنْ نَسْلُتَ الْقَصْعَةَ قَالَ فَإِنَّكُمْ لاَ تَدْرُونَ فِى أَىِّ طَعَامِكُمُ الْبَرَكَةُ

விரலைச் சூப்பி பாத்திரத்தை நன்கு வழித்து தட்டில் மீதம் வைக்காமல் சாப்பிடும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு விட்டு உணவில் எங்கே பரக்கத் இருக்கிறது என்று நீங்கள் அறிய மாட்டீர்கள் என்று கூறினார்கள்.

நூல் : (முஸ்லிம்: 4139) 

பரகத் எனும் மறைமுகமான பேரருள் உணவு முழுவதும் இருக்கும் என்று சொல்ல முடியாது. மாறாக அது கடைசிக் கவளத்தில்கூட இருக்கலாம். அல்லது கடைசிப் பருக்கையில்கூட இருக்கலாம். அல்லது நமது விரல்களிலும் உணவுத் தட்டிலும் ஒட்டிக் கொண்டுள்ள உணவுத் துகள்களிலும்கூட அந்த பரகத் இருக்கலாம்.

நாம் உண்ணும்போது மேலதிகமாகச் சாப்பாடு எடுத்து வைக்க வேண்டும் என்று விரும்பினால் உணவுத் தட்டில் ஓரளவு உணவு இருக்கும்போதுதான் வைக்க வேண்டும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகிறது. இது தவறான நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையின் காரணமாக பரகத் எனும் பேரருளை நாம் இழக்கும் நிலை ஏற்படும்.

உணவுத் தட்டில் உள்ள கடைசிப் பருக்கையில் நம்முடைய வயிற்றை நிரப்பும் பரகத் அமைந்திருக்கலாம். எனவே அதைச் சாப்பிட்டவுடன் வயிறும், மனதும் முழுமையாக நிரம்பி விடலாம். அதன் பிறகு மேலதிகமாகச் சாப்பாடு வைப்பது தேவை இல்லாமல் போகலாம்.

எனவே உணவில் எங்கே பரகத் உள்ளது என்பது நமக்குத் தெரியாததால் கடைசி உணவையும் சாப்பிட்ட பிறகு உணவு மேலும் தேவை என்று தோன்றினால்தான் உணவை மேலும் எடுக்க வேண்டும்.

இப்படி விரல்களையும், உணவுத் தட்டையும் வழித்துச் சாப்பிட்டு நாம் பழகி வரும்போது உணவுத் தட்டில் உணவை மீதம் வைத்து யாருக்கும் பயன்படாமல் உணவை வீணாக்கும் விரயம் செய்யும் பழக்கம் நம்மிடமிருந்து எடுபட்டுப் போய் விடும். இதன் காரணமாக பெருமளவு உணவுப் பொருள்கள் நமக்கு மீதமாகும். இதுபோன்ற நல்ல பழக்கங்கள் மூலம் அல்லாஹ்வின் பரகத் எனும் பேரருளை நாம் அனுபவிக்க முடியும்.

ஓரத்திலிருந்து உண்பதிலும் பரகத் உண்டு
 أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
الْبَرَكَةُ تَنْزِلُ وَسَطَ الطَّعَامِ فَكُلُوا مِنْ حَافَتَيْهِ وَلَا تَأْكُلُوا مِنْ وَسَطِهِ

நாம் உண்ணும் உணவின் நடுவில்தான் பரக்கத் இறங்குகிறது. எனவே அதன் ஓரத்திலிருந்து உண்ணுங்கள். நடுவிலிருந்து உண்ணாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : (திர்மிதீ: 1805) 

நமக்கு அருகில் உள்ள ஓரப் பகுதியில் இருந்துதான் உணவை எடுக்க வேண்டும். நடுப்பகுதியில் எடுக்காமல் ஓரப்பகுதியில் இருந்து எடுத்துச் சாப்பிட்டுப் பழகினால் குறைந்த உணவில் அதிகமான நபர்கள் சாப்பிட முடியும்.

உணவை அளந்து போடுவதிலும் பரகத் உண்டு
 عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
كِيلُوا طَعَامَكُمْ يُبَارَكْ لَكُمْ

உங்களுடைய உணவை அளந்து போடுங்கள்! உங்களுக்கு பரகத் செய்யப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : (புகாரி: 2128) 

எத்தனை பேர் சாப்பிட உள்ளனர்; அவர்களின் தேவை எவ்வளவு என்பதையெல்லாம் மதிப்பிட்டு அதற்குத் தக்கவாறு சமைக்க நாம் பழகிக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வின் பரக்கத்தை நாம் அடைய முடியும்.

இன்றைக்குப் பொருளாதாரப் பற்றாக்குறைக்கு குறிப்பாக உணவுப் பற்றாக் குறைக்குக் காரணம் இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாததுதான். எவ்விதத் திட்டமிடுதலும் இல்லாமல் தேவைக்கு அதிகமாக உணவு சமைத்து பெரும்பாலான உணவுப் பொருள்களைக் குப்பையில் கொட்டி வீணாக்குவதை நாம் காண்கிறோம்.

ஒரு மாதம் எவ்வளவு உணவை வீணாக்கி இருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டு வந்தால் அந்த உணவுப் பொருள் இன்னொரு மாதத்தின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அமைந்திருப்பதை ஒவ்வொருவரும் உணரலாம். இதை உணர்ந்து நடந்தால் ஆண்டுக்குப் பல ஆயிரம் ரூபாய்கள் இதனால் நமக்கு மீதமாவதையும் அறிய முடியும்.

வகைவகையான சத்தான உணவு உட்கொள்பவர்களை விட குறைந்த சத்துள்ள உணவு உட்கொள்ளும் சாமானிய மக்கள் உடல் வலிமை மிக்கவர்களாகவும் அதிக ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பதை நாம் பரவலாகக் காண்கிறோம். நமது கணக்கைப் பொய்யாக்கும் வகையில் அல்லாஹ்வின் மறைமுகமான பேரருள் ஒன்று இருக்கிறது என்பதற்கு இதுவும் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.

சஹர் நேர உணவில் பரக்கத்

நம்முடைய கணக்கைப் பொய்யாக்கும் வகையில் அல்லாஹ்வின் பரகத் உள்ளது என்பதற்கு இன்னொரு சான்றாக சஹர் உணவு அமைந்துள்ளது.

قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً

சஹர் நேரத்தில் உண்ணுங்கள்! சஹர் உணவில் பரக்கத் இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : (புகாரி: 1923) 

பொதுவாக நாம் அன்றாடம் எந்த நேரங்களில் சாப்பிட்டுப் பழகி இருக்கிறோமோ அந்த நேரங்களில்தான் நம்மால் தேவையான அளவுக்கு ஈடுபாட்டுடன் சாப்பிட முடியும். சஹர் எனும் வைகறை நேரம் நாம் வழக்கமாக உணவு உண்ணும் நேரம் அல்ல. தூக்கக் கலக்கத்துடன் இருக்கும் நேரம். பசி எடுக்காத நேரம். அந்த நேரத்தில் குறைந்த அளவுதான் யாராலும் சாப்பிட முடியும்.

நோன்பு வைத்திருப்பவர் வைகறையில் சாப்பிட்ட பின் சூரியன் மறையும் வரை சாப்பிடக் கூடாது என்பதால் அந்த நேரத்தில் வழக்கத்தை விட அதிகம் சாப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. ஆனாலும் வழக்கத்தை விட மிகவும் குறைவாகவே அவரால் சாப்பிட முடியும்.

இப்படிக் குறைந்த அளவு உணவு உட்கொண்டு விட்டு பத்து முதல் பதினான்கு மணி நேரம்வரை நாம் எதையும் உண்பதில்லை. பச்சைத் தண்ணீரும் அருந்துவதில்லை. ஆனாலும் இதனால் நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. வழக்கமான நமது செயல்பாடுகளில் எந்தக் குறைவும் நாம் வைப்பதில்லை.

இது எப்படிச் சாத்தியமாகிறது? சஹர் நேரத்தில் சாப்பிடுவதில் இறைவன் பரக்கத் எனும் பேரருளை நம்முடைய அறிவுக்கு எட்டாத முறையில் அமைத்து இருப்பதால் மட்டுமே இது சாத்தியமாகிறது.

குறிப்பிட்ட சில வகை உணவுகளை மட்டும் சில மணி நேரம் நாங்கள் தவிர்த்துக் கொண்டு மற்ற உணவுகளைச் சாப்பிட்டு விரதம் இருக்கிறோம். அதுவே எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. ஆனால் நீங்கள் பல மணி நேரங்கள் எந்த ஒரு பொருளையும் உட்கொள்ளாமல் ஒரு மாதகாலம் நோன்பிருப்பது நம்ப முடியாத அதிசயமாக உள்ளது என்று முஸ்லிம் அல்லாத நண்பர்கள் வியந்து பாராட்டுவதை நாம் அடிக்கடி செவியேற்கிறோம். மற்ற சமுதாய மக்களும் வியப்படையும் வகையில் சஹர் நேரத்தில் சாப்பிடும் உணவில் மறமுகமான பேரருள் குவிந்து கிடப்பதை இதில் இருந்து அறியலாம்.

பெருநாள் அன்று பரக்கத்
 عَنْ أُمِّ عَطِيَّةَ قَالَتْ
كُنَّا نُؤْمَرُ أَنْ نَخْرُجَ يَوْمَ الْعِيدِ حَتَّى نُخْرِجَ الْبِكْرَ مِنْ خِدْرِهَا حَتَّى نُخْرِجَ الْحُيَّضَ فَيَكُنَّ خَلْفَ النَّاسِ فَيُكَبِّرْنَ بِتَكْبِيرِهِمْ وَيَدْعُونَ بِدُعَائِهِمْ يَرْجُونَ بَرَكَةَ ذَلِكَ الْيَوْمِ وَطُهْرَتَهُ

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள குமரிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம்.

எந்த அளவிற்கென்றால் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக்கூடப் புறப்படச் செய்ய வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டோம். பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும்போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள்; ஆண்கள் பிரார்த்திக்கும்போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், தூய்மையையும் எதிர்பார்ப்பார்கள்.

நூல் : (புகாரி: 971) 

பெருநாள் தினத்தில் நாம் பல சுவையான உணவுகளைத் தயார் செய்கிறோம். கேட்பவருக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கிறோம். ஆனாலும் அன்றைய தினத்தில் உணவுப் பொருளுக்கு பற்றாக்குறை ஏற்படுவதில்லை. உணவுப் பொருள் மீந்து கிடப்பதை நாம் காண்கிறோம்.

பரக்கத்திற்காகப் பிரார்த்தனை செய்தல்

நாம் அனுபவித்து வரும் பரக்கத் எனும் பேரருளை இறைவனிடம் வேண்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

 أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ
أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا وَعَلَيْهِ دَيْنٌ فَاشْتَدَّ الْغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا تَمْرَ حَائِطِي وَيُحَلِّلُوا أَبِي فَأَبَوْا فَلَمْ يُعْطِهِمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَائِطِي وَقَالَ سَنَغْدُو عَلَيْكَ فَغَدَا عَلَيْنَا حِينَ أَصْبَحَ فَطَافَ فِي النَّخْلِ وَدَعَا فِي ثَمَرِهَا بِالْبَرَكَةِ فَجَدَدْتُهَا فَقَضَيْتُهُمْ وَبَقِيَ لَنَا مِنْ تَمْرِهَا

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது :
என் தந்தையார் உஹுதுப் போரின்போது, அவர் மீது கடன் இருந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்து விட்டனர்.

ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, நாம் உன்னிடம் காலையில் வருவோம் என்று என்னிடம் கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) துஆ செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாக இருந்தன.

நூல் : (புகாரி: 2395) 

عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ قَالَ مَا هَذَا قَالَ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் (ஆடையின்) மீது (வாசனை திரவியத்தின்) மஞ்சள் நிற அடையாளத்தைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இது என்ன? என்று கேட்டார்கள். அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், ஒரு பேரீச்சங்கொட்டையின் எடையளவு தங்கத்தை (மஹ்ராக)க் கொடுத்து, ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன் என்று பதிலளித்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பாரக்கல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்கு பரக்கத்தை வழங்குவானாக! என்று பிரார்த்தித்து விட்டு, ஓர் ஆட்டையாவது (அறுத்து) வலீமா – மணவிருந்து அளியுங்கள்! என்று சொன்னார்கள்.

நூல் : (புகாரி: 5155) 

அதிக அளவு செல்வம் இருந்தும் அவை போதாமலிருப்பதை விட குறைந்த செல்வம் இருந்து அவை தேவைகள் நிறைவேற போதுமானதாக இருப்பது சிறந்ததாகும். இதனால்தான் வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கும் தம்பதிகளுக்காக அல்லாஹ் உமக்கு பரக்கத் செய்வனாக என்ற இந்தப் பிரார்த்தனையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிமுறையாக்கியுள்ளனர்.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ اللَّهَ لَهُ قَالَ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயார் (உம்மு சுலைம்) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் சேவகர் அனஸுக்காகப் பிரார்த்தியுங்கள் என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ளவற்றில் பரகத் அளிப்பாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.

நூல் : (புகாரி: 6344) 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ قَالَ
نَزَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- عَلَى أَبِى – قَالَ – فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا وَوَطْبَةً فَأَكَلَ مِنْهَا ثُمَّ أُتِىَ بِتَمْرٍ فَكَانَ يَأْكُلُهُ وَيُلْقِى النَّوَى بَيْنَ إِصْبَعَيْهِ وَيَجْمَعُ السَّبَّابَةَ وَالْوُسْطَى – قَالَ شُعْبَةُ هُوَ ظَنِّى وَهُوَ فِيهِ إِنْ شَاءَ اللَّهُ إِلْقَاءُ النَّوَى بَيْنَ الإِصْبَعَيْنِ – ثُمَّ أُتِىَ بِشَرَابٍ فَشَرِبَهُ ثُمَّ نَاوَلَهُ الَّذِى عَنْ يَمِينِهِ – قَالَ – فَقَالَ أَبِى وَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ ادْعُ اللَّهَ لَنَا فَقَالَ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِى مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அப்துல்லாஹ் இப்னு பிஷ்ர் என்ற நபித்தோழர் கூறுகிறார்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு விருந்து உண்ண வந்தார்கள். அவர்களுக்கு உணவை வைத்தோம். அவர்கள் உண்டார்கள். உண்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியில் சென்றபோது என்னுடைய தந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாகனத்தின் கயிற்றைப் பிடித்து எங்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கேட்டபோது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! இவர்களுக்கு வழங்கியவற்றில் இவர்களுக்கு பரக்கத் செய்வாயாக! மேலும் இவர்களை மன்னித்து இவர்களுக்கு அருள் புரிவாயாக!” என்று கேட்டார்கள்.

நூல் : (முஸ்லிம்: 4149) 

பிரார்த்தனை செய்யுங்கள் என்று இந்தத் தோழர் கோரிக்கை வைத்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவருக்கு அதிகமான செல்வத்தைத் தருவாயாக என்று கேட்கவில்லை. மாறாக அவருக்கு நீ எதைத் தந்தாயோ அதிலே பரக்கத்தைத் தருவாயாக என்றுதான் கேட்டார்கள்.

இறைவன் நமக்கு குறைவான செல்வத்தைத் தந்தாலும் அதன் மூலம் நம் தேவைகள் நிறைவேறும் அளவுக்கு பரக்கத் செய்வான் என்று ஒருவன் நம்பி விட்டால் தவறான வழியில் பொருளீட்டத் துணிய மாட்டான். உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்வான்.

 عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
اللَّهُمَّ اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعْفَيْ مَا جَعَلْتَ بِمَكَّةَ مِنْ الْبَرَكَةِ تَابَعَهُ عُثْمَانُ بْنُ عُمَرَ عَنْ يُونُسَ

அல்லாஹ்வே! மக்காவிற்கு எவ்வளவு பரக்கத் செய்தாயோ அதைவிட இரண்டு மடங்கு மதினாவிற்கு பரக்கத் செய்வாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

நூல் : (புகாரி: 1885) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்றபோது அவர்களும், ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த தோழர்களும் உண்ணுவதற்கு உணவில்லாமல் கஷ்டப்பட்டார்கள். உள்ளூர்வாசிகளான மதினாவாசிகளும் கஷ்டப்பட்டார்கள்.

இந்த மக்களுக்கு அதிகமான செல்வத்தை வழங்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்யவில்லை. மாறாக மதீனாவாழ் மக்கள் பயன்படுத்தும் அளவுப் பாத்திரங்களில் அல்லாஹ் பரக்கத் செய்ய வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்தார்கள்.

 أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ وَبَارِكْ لَهُمْ فِي صَاعِهِمْ وَمُدِّهِمْ يَعْنِي أَهْلَ الْمَدِينَةِ

இறைவா! மதீனாவாசிகளின் முகத்தலளவையில் நீ பரக்கத் அளிப்பாயாக! குறிப்பாக அவர்களது ஸாஉ, முத்து எனும் அளவுப் பாத்திரங்களில் நீ பரக்கத் அளிப்பாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.

நூல் : (புகாரி: 2130) 

அதிகச் செல்வத்தை அல்லாஹ் வழங்கினாலும் அதில் பரக்கத் செய்யவில்லையானால் அதிகச் செல்வமும் ஒருவனது தேவைகளை நிறைவு செய்திடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வந்து மாதம் இரண்டு லட்சம் செலவிடும் அளவுக்கு நோயை அல்லாஹ் தருவதை விட மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வருமானம் வந்து எந்த நோயும் இல்லாமல் இருப்பது எவ்வளவு சிறந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பரக்கத்தைப் பெறுவதற்கான தகுதிகள்:

பரக்கத் எனும் பேரருள் ஒருவருக்குக் கிடைக்க வேண்டுமானால் அவர் அல்லாஹ்விடம் அதை வேண்டுவதுடன் சில தகுதிகளையும் அவர் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.

பேராசை கொள்ளக் கூடாது
أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ كَالَّذِي يَأْكُلُ وَلَا يَشْبَعُ الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنْ الْيَدِ السُّفْلَى

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன்; வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும்.

யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு இதில் பரக்கத் ஏற்படுத்தப்படும். யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ அவருக்கு அதில் பரக்கத் ஏற்படுத்தப்படாது. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவர் போலாவார். உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்தது என்று கூறினார்கள்.

நூல் : (புகாரி: 1472) 

செல்வத்தின் பின்னால் பேராசைப்பட்டு ஓடாமல் எது கிடைக்கிறதோ அதுபோதும் என்ற மனது யாருக்கு இருக்கிறதோ அவருக்குத்தான் அல்லாஹ் பரக்கத் செய்வான் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து நாம் அறியலாம்.

அனுமதிக்கப்பட்ட முறையில் அடைய வேண்டும்.
عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ
سَأَلْتُ النَّبِىَّ -صلى الله عليه وسلم- فَأَعْطَانِى ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِى ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِى ثُمَّ قَالَ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ فَمَنْ أَخَذَهُ بِطِيبِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ وَكَانَ كَالَّذِى يَأْكُلُ وَلاَ يَشْبَعُ 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வத்தை உரிய முறையில் யார் அடைகிறாரோ அவருக்கு அதில் பரக்கத் வழங்கப்படும். செல்வத்தை முறையற்ற வழிகளில் யார் அடைகிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார் என்று கூறினார்கள்.

நூல் : (முஸ்லிம்: 1874) 

நேர்மையற்ற வழிகளிலும், மார்க்கம் அனுமதிக்காத வழிகளிலும் ஒருவர் கோடி கோடியாகச் சம்பாதித்தாலும் அதில் அல்லாஹ்வின் பரக்கத் நிச்சயம் இருக்காது. ஹலாலான வழிகளில் பொருளீட்டுவோர் மட்டுமே இந்த மாபெரும் அருளை அடைய முடியும்.

இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
أَنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَبْتَلِي عَبْدَهُ بِمَا أَعْطَاهُ فَمَنْ رَضِيَ بِمَا قَسَمَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ بَارَكَ اللَّهُ لَهُ فِيهِ وَوَسَّعَهُ وَمَنْ لَمْ يَرْضَ لَمْ يُبَارِكْ لَهُ

அல்லாஹ் தன் அடியானுக்கு வழங்கியதில் சோதிக்கிறான். அல்லாஹ் பங்கிட்டுத் தந்ததை யார் பொருந்திக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் தந்தவற்றில் பரக்கத் செய்கிறான். மேலும் விசாலமாக்குகிறான். எவர் பொருந்திக் கொள்ளவில்லையோ அவருக்கு அல்லாஹ் பரக்கத் செய்ய மாட்டான்.

நூல் : (அஹ்மத்: 20279) (19398)

ஆகவே பரக்கத் பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்துக்கொண்டோம். அதன் அடிப்படையில் பரக்கத்தை பெற முயற்சி செய்யும் நன் மக்களாக அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக.! 

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.