04) பேச்சில் அலங்காரங்கள்
பேச்சில் அலங்காரங்கள்
இதுவரை பேச்சின் பகுதிகளை பார்த்தோம். இனி மக்களை கவர்ந்திழுக்கும் பேச்சு முறைகளையும், அனுபவமுள்ளவர்களின் யுக்திகளையும், குர்ஆன் ஹதீஸை சுவைபட விளக்கும் முறைகளையும் காண்போம்.
v தகவல்கள் நிறம்ப பேசுங்கள் – (குர்ஆன், ஹதீஸில்)
சிறந்த பேச்சாளர்களின் பேச்சுக்கும், காலத்தை கடத்தும் பேச்சாளர்களின் பேச்சுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளில் மிக முக்கியமான ஒன்று, சிறந்தவர்கள், தகவல்கள் நிறம்பப் பேசுவார்கள், அவர்களின் பயானிலிருந்து குறிப்புகள் எடுத்துக்கொள்ள முடியும் அளவிற்கு, தகவல்கள் இருக்கும். ஏனோதானோ என்று பயானையும், காலத்தையும் ஒட்டுபவர்கள், பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு, நேரத்தை ஓட்டுவார்கள். எனவே ஹதீஸை சொல்லும்போது,
நபியிடத்தில் ஒரு சஹாபி வந்தார். அப்போது இன்னோரு சஹாபி அருகில் இருந்தார். முதல் சஹாபி இரண்டாவது சஹாபியை பார்த்தார்…… என்று அரைகுறை தகவலோடு எந்த ஹதீஸையும் சொல்லாதீர்கள். கேட்பதற்கு ஆர்வம் இருக்காது. மாற்றுமத புராணக்கதைகள் போல் ஆகிவிடும். எனவே, வரலாற்றை, சம்பவத்தை கூறும் போது சஹாபியின் பெயர், சில நேரங்களில், மிக சுருக்கமாக அவருடைய சிறப்பு, என சரியான தகவல்களோடு சொல்லுங்கள். அது தான் நீங்கள் சொல்லும் செய்தி சரி என்பதற்கு ஆதாரமாக அமையும்.
இந்த ஹதீஸை புகாரியில பார்க்கிறோம். நஸயீல 235 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. என்று சொல்வதும் ஆதாரமான செய்தியாக பார்க்கப்படும்.
v தகவல்கள் நிறம்ப பேசுங்கள் – (மற்றவற்றிலும்)
பொதுவான உலக சம்பவங்களை பற்றி பேசும் போதும், மேற்குறிப்பிட்ட அதே அளவுகோல் தான். விளக்கப்படும் எந்த சம்பவத்தையும், மொட்டையாக சொல்லாதீர்கள். சரியான பெயர், இடம், நடந்த காலம் போன்றவற்றை குறிப்பிட்டு சொல்லுங்கள். உதாரணமாக, இருவரது பேச்சை கவனியுங்கள்.
- வடமாநிலத்தில் ஒரு பள்ளிவாசலில், நடந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் சாமியார் கைதுசெய்யப்பட்டிருக்கிறார், இது காவி தீவிரவாதமில்லையா?
- கடந்த 2006-ல் மஹாராஷ்டிரா மாநிலம், மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டார்கள். அதுதொடர்பாக பெண் சாமியார் பிராக்யா சிங்கை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. இது காவி தீவிரவாதமில்லையா?
மேற்காணும் இரண்டு வகையான பேச்சில், இரண்டாவது பேச்சு அதிகமான தகவல்களை உள்ளடக்கிய பேச்சு. பொதுவாக பேசும் நேரங்களைத் தவிர, விளக்கப்படும் எந்த சம்பவத்தையும், இது போன்று தகவல்கள் நிறம்ப பேசுங்கள். தகவல்கள் அதிகமாக, அதிகமாக, பேச்சாளரின் தரமும் அதிகமாகிறது. இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளை மனனம் செய்து கொள்ளுங்கள். அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் தொடர்ச்சியாக நினைவில் வைத்துக்கொள்ளமுடியும்.
v கதை கேட்பதை விரும்பும் மனித இயல்பு.
எந்த வயது மக்களுக்கும் கதை கேட்பது பிடித்தமான செயல், என்பதை நினைவில் வையுங்கள். இது மனித இயல்பு. கதை என்றால் முயல் கதை, கொக்கு கதையெல்லாம் சொல்லலாம் என்று நினைத்துவிடக்கூடாது. இந்த கதைகளும் மக்களை கேட்கத்தூண்டும் என்றாலும், இது போன்ற கற்பனை கதைகளை ஒருபோதும், சத்தியத்தை சொல்லும் ஒரு அழைப்பாளர் பயன்படுத்திவிடக்கூடாது.
மாற்று மதத்திற்கும், இஸ்லாமிய பிரச்சாரத்திற்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடுகளில் இதுவும் ஒன்று. இஸ்லாமிய பிரச்சாரகர்கள், கற்பனைக் கதைகள் மூலமாக கொள்கையை சொல்வதில்லை. அப்படி சொல்வது சரியான முறையும் அல்ல. பிற மதத்தினர், இதைப்பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.
பொய் சொல்லக்கூடாது என்று யானை சொன்னது. பார்த்தீர்களா? யானைக்கு உள்ள அறிவு கூட மனிதனுக்கு இல்லை என்று நடக்காததை, நடக்க இயலாததைச் சொல்லி பாடம் நடத்துவார்கள். இது போன்ற அடிமுட்டாள்தனமான அறிவுரைகளை ஒருபோதும் பயன்படுத்திவிடாதீர்கள். கதை கேட்பதை மனித மனம் விரும்பும் காரணத்தினால், நடந்த வரலாற்று சம்பவங்களை சொல்லுங்கள். அல்லாஹ்வே திருமறையில், பல நபிமார்களின் வரலாறுகளை நமக்கு சொல்லித்தருகிறான்.
தூதர்களின் வரலாற்றில் உமது உள்ளத்தைப் பலப்படுத்தும் அனைத்தையும் உமக்குக் கூறுகிறோம். இதிலிருந்து சத்தியமும், நல்லுபதேசமும், முஃமின்களுக்கு போதனையும் உமக்கு வந்துள்ளது. (அல்குர்ஆன்: 11:120) ➚
எனவே, நபிமார்கள் வரலாறாக இருந்தாலும் சரி, சஹாபாக்கள், கலீஃபாக்கள், இஸ்லாமிய வரலாறாக இருந்தாலும் சரி, வரலாற்று கதைகளை சிறிதளவாவது பயன்படுத்துங்கள். வேறுவேறு அம்சங்களில் குறை இருந்தாலும், உங்கள் உரை குறைந்த பட்ச மதிப்பெண்ணாவது பெற்றுவிடும். மேலும், வரலாறுகள் ஒரு தகவலாக (டேட்டாவாக) இல்லாமல், கோர்வையான தொடர்நிகழ்வுகளாக இருப்பதால் எளிதில் மறக்காது. பலகாலம் நினைவில் நிற்கும்.
Ì கதைக்கே கதை கூடாது. எதாவது வரலாறை சொல்லிக்கொண்டிருக்கும் போது, அதில் வரும் நபர்களை விளக்க சிறுபீடிகை போடுவது தவறல்ல. அந்த பீடிகை ஒரு குட்டி கதையாக ஆகிவிடக்கூடாது. அதாவது ஒரு கதைக்குள் பலசிறுகதைகளாக ஆகிவிடக்கூடாது. பேசும் நமக்கு, எதைப்பேசுகிறோம் என்று நன்றாக புரியும். ஆனால் சாதாரண பொதுமக்களால் நாம் பேசுவதை பின்தொடர முடியாது. எனவே விதிவிலக்காகவே தவிர ஒரு கதைக்குள் மற்றொரு கதையை சொல்லாதீர்கள்.
வரலாறை சொல்லும் போது, முழுமையாக விளங்கி வர்ணித்தால் தான், கேட்பவர்களுக்கு நன்றாக புரியும். சரியாக படிக்காமல், ”இல்ல இல்ல. முதல்ல நபிதான் கேட்டாங்க. பிறகு தான் அவரு குடுத்தாரு. மாத்தி சொல்லிட்டேன்” என்ற கதையை யோசித்து யோசித்து சொன்னால், விளங்க கடினமாக இருக்கும். அரைகுறையாக தெரிந்துகொண்டு ஒப்பேற்றுகிறார் என்று மக்கள் நினைப்பார்கள்.
v பல்சுவையில் பேசவேண்டும்.
எந்த தலைப்பிலான உரையாக இருந்தாலும், அதில் மென்மையும், ஆக்ரோஷமும், நகைச்சுவையும், உணர்ச்சிபூர்வமான செய்திகளும், கலந்து இருக்கவேண்டும். அதாவது பல்சுவையில் இருக்கவேண்டும். குறிப்பிட்ட ஒரு சுவையில் மட்டும் பேசுவதை விட, அனைத்து சுவைகளையும் கலந்து பேசும் போது, அனைத்து தரப்பு மக்களையும் கவரமுடியும்.
v பல்சுவை – தேவைப்படும் இடங்களில், லோக்கல் பாஷையில் பேசுங்கள்.
சிலர் ஆரம்பம் முதல் கடைசிவரை சீரியஸாகவே முகத்தை வைத்துக்கொண்டு பேசுவார்கள். இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். நடுவில் ஒரிரு தடவை, சாதாரண செய்திகளை பேசி, தேவைப்படும் இடங்களில் லோக்கல் பாஷையை பயன்படுத்தி நகைச்சுவையோ அல்லது பொதுவிஷயமோ பேசுங்கள். லோக்கல் பாஷை என்பது, ஒரு மனிதன் இயல்பாக எந்த தொனியில், ஸ்டைலில் பேசுவானோ அந்த பேச்சு. உதாரணமாக)
இலக்கண பாஷை) ”எந்நேரத்திலும் என்னை ஏன் தொழச்சொல்கிறீர்கள்” என்று இன்றைக்கு பிள்ளைகள் கேட்கிறார்கள்..
லோக்கல் பாஷை) ”எப்ப பாத்தாலும், தொழு தொழு-னு, இம்சையை குடுக்காதப்பா”- னு புள்ளைங்க சொல்ல ஆரம்புச்சுட்டாங்க….
மேற்கண்டதில் உள்ளதை போல, லோக்கல் பாஷை பேச்சுக்களை உங்கள் உரையில், கலந்து பேசுங்கள். சீரியஸாக போகும் பயானை, கேஷுவலாக மாற்றுவதற்கு லோக்கல் பாஷை மிகவும் அவசியம்.
Ì பெண்கள் பயானில் பேசும்போது, கணவன் மனைவி இடையேயான உரையாடல்களை லோக்கல் பாஷையில் பேசிப்பாருங்கள். இதன் முக்கியத்துவம் எளிதில் விளங்கும். உதாரணமாக, பெண்கள் சீரியல் பார்ப்பது, கணவன் மனைவியை திட்டுவது, கணவன் ஆசையாய் கேட்ட பணியாரத்தை சமைக்க மனைவி படும் சிரமங்கள், அதை மூக்கு பிடிக்க தின்றுவிட்டு, அதில் எதாவது கோளாறு கண்டுபிடிக்கும் கணவனின் வீரச்செயல் போன்ற சம்வங்களை லோக்கல் நடையில் நகைச்சுவையாக சொல்லும்போது, மக்கள் அதிக ஆர்வத்தோடு கேட்பார்கள். உங்களுக்கும் அடுத்தடுத்து பேசுவதற்கு உற்சாகமாக இருக்கும்.
v பல்சுவை – ஏற்ற, இறக்கங்கள்.
முதல்வர்கள், மந்திரிகள் எழுதப்பட்ட ஸ்கிரிப்டை படித்துப்பேசுவதைப் போல, பயானில் ஒரே வேகத்தில் பேசுவது, கேட்பதற்கு சலிப்பாக இருக்கும். எனவே, சில வரிகளை மென்மையாகவும், சில வரிகளை கடுமையாகவும், வேகமாகவும், ஏற்றி, இறக்கி பேசும்போது, கேட்பதற்கு அதிக ஆர்வமாக இருக்கும். அதாவது,
(1) பேசும் வேகம் (Speed),
(2) ஒலி அளவு (Volume), –
(3) குரல் மாற்றம் (டோன் Tone)
போன்றவைகளில் மாற்றம் இருக்கவேண்டும். மேற்குறிப்பிட்டதில், பேசும் வேகம் என்றால், சிலவரிகளை விறுவிறுப்பாகவும், சிலவரிகளை நிறுத்தி நிதானமாகவும் பேசுவது. ஒலிஅளவு என்றால் சிலவரிகளை கத்தியும், சிலவரிகளை சப்தம் குறைவாகவும் பேசுவது.
குரல் மாற்றம் என்றால் மிமிக்ரி செய்வதல்ல. பேச்சில் வரும் மனிதர்களின் குரல் எந்த தொனியில் இருக்குமோ அதில் பேசுவது. உதாரணமாக, நபியிடம் ஒருவர், ”நான் உங்களை நேசிக்கிறேன்” என்று சொல்வார். இதை வீரமாக, கடுமையாக விரலை ஆட்டிக்கொண்டு பேசக்கூடாது. மென்மையாக அவர் எப்படி சொல்லியிருப்பாரோ கிட்டத்தட்ட அதே தொனியில் பேசவேண்டும்.
அதுபோல, தனது அடிமையை அடித்துக் கொண்டிருந்த அபூமஸ்ஊதை எச்சரிக்கும் விதமாக நபி பேசிய, ”அபூமஸ்ஊதே…. அபூமஸ்ஊதே… நீ அடிப்பதைவிடவும் கடுமையாக அல்லாஹ் உன்னை தண்டிக்கமுடியும்!!!” என்ற வரியை உச்சரிக்கும்போது, கடுமையாக பேசிக்காட்டவேண்டும். நபி(ஸல்) சிலநேரங்களில் நகைச்சுயைாகவும், மென்மையாகவும், உருக்கமாகவும் பேசியிருக்கிறார்கள். சிலநேரங்களில் கடுமையாகவும் பேசியிருக்கிறார்கள்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும். குரல் உயர்ந்துவிடும். கோபம் மிகுந்து விடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவது குறித்து “எதிரிகள் காலையில் உங்களை தாக்கப் போகின்றனர். மாலையில் உங்களை தாக்கப்போகின்றனர்’ என்று கூறி எச்சரிக்கை விடுப்பவரைப் போன்று அவர்கள் இருப்பார்கள்… முஸ்லிம் (1573)
எனவே செய்திகளுக்குத் தகுந்தார்போல மென்மை, உருக்கம், கடுமை என பல்சுவையில் ஏற்ற இறக்கங்களுடன் பேசவேண்டும்.
v இடைவெளி விடுதல்
ஏற்றி இறக்கி பேசும்போது, தேவையான இடங்களில் இடைவெளி விடுவது மிகவும் அவசியமானது. உதாரணமாக, கர்ஜனை பேச்சுக்களை தொடர்ந்து ஒரிரு நிமிடம் பேசிவிட்டு, 3 அல்லது 4 வினாடிகள் இடைவெளி விடுவது, ஆக்ரோஷமான பேச்சாளர்களின் ஸ்டைல். கேட்பதற்கு நன்றாக இருக்கும். அந்த இடைவெளியில் மக்கள் சொன்ன கருத்தை கிரகிப்பார்கள். சிந்திப்பார்கள். சொன்ன செய்தி உள்ளத்தை ஆக்ரமிக்கும். உதாரணமாக) குர்ஆனுடைய சிறப்பை பேசிவிட்டு,
(ஆக்ரோஷமாக) – ”இதுமாதிரி கொண்டு வா பார்க்கலாம்”
(மூன்று வினாடி இடைவெளி விட்டு, பிறகு மெதுவாக) – ”முடியாது!”
என்று ஏற்ற இறக்கமாக பேசுவது மக்களுக்கு உற்சாகத்தை தரும். அதாவது தொடர்ச்சியாக கர்ஜித்து முடித்துவிட்டு, மூன்று வினாடிகள் தாமதித்து அடுத்த பேச்சை பேசும் போது, அமைதியாக ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக, மேடையில் பேசுகிறவர்கள் இதை அதிகம் நினைவில் வைக்கவும். கர்ஜனை பேச்சுகளுக்கு மட்டுமல்ல, மென்மையாக பேசிவிட்டும் இதுபோன்று இடைவெளி விடலாம்.
உதாரணமாக, ”மனைவியின் வாயில் உணவை ஊட்டியிருக்கிறோமா?” என்று கேட்டுவிட்டு, புன்முறுவலோடு மக்களை நோக்கியவாறு, இரண்டு வினாடிகள் இடைவெளிவிடுவது. இந்த இடைவெளியில் மக்கள் தங்களின் நிலையை சிந்திப்பார்கள்.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحَدِّثُ حَدِيثًا لَوْ عَدَّهُ الْعَادُّ لَأَحْصَاهُ
நபி(ஸல்) அவர்கள் பிறருக்கு போதனை செய்யும் போது, நிதானமாக பேசுவார்கள். ”நீங்கள் ஹதீஸ்களை ஒன்றன்பின் ஒன்றாக வேகவேகமாக அறிவிப்பதைப் போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அறிவித்ததில்லை” என்று அன்னை ஆயிஷா அவர்கள் நபியின் பேச்சை பற்றி கூறுகிறார்கள். ((புகாரி: 3568)). எனவே, செய்திகளுக்கு மத்தியில் இடைவெளி விட்டு பேசுங்கள்.
Ì Power of Pause : சிந்தனையை தூண்டும் எதிர்கேள்விகள், ஆச்சர்யமான செய்திகளுக்குப் பின்னால் இடைவெளி விடுவதைப் பற்றி பேசாத பேச்சுக்கலை நூல்களே இல்லை எனலாம். பேச்சுக்கலை பற்றிய பெரிய புத்தகங்களில் இதனை Power of Pause (இடைவெளியின் சக்தி) என்று அழைக்கிறார்கள். இதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். எனவே, அவ்வப்போது இடைவெளி விட மறக்காதீர்கள்.
v பீடிகை (Preamble) என்றால் என்ன? பீடிகை எதற்கு?
பொதுவாக எந்த செய்தியையும் சொல்வதற்கு முன்னால், அந்த செய்தியின் சிறப்பைச் சொல்லி அறிமுகம் செய்துவிட்டு, பிறகு அந்த செய்தியை சொல்வதற்கு பீடிகை போடுவது என்று பெயர். பீடிகையுடன் ஒரு செய்தியை சொல்லும் போது, சொல்லப்படும் செய்தியின் மதிப்பு நன்றாக விளங்கும். பீடிகை ஒரு கருத்தாகவோ, ஒரு ஹதீஸாகவோ அல்லது ஒரு உலக சம்பவமாகவோ கூட இருக்கலாம்.
உதாரணமாக, இஸ்லாமிய குடும்ப சட்டதிட்டங்களை சொல்லும் நேரத்தில், மேலை நாடுகளில் எந்த பெண்ணும் ஆணுக்கு கட்டுப்படுவதில்லை, யார் சொல்வதை யார் கேட்பது என்ற வரையறை இல்லை. இதனாலேயே அங்கு அதிகமான விவாகரத்துகள் நடக்கின்றன. என்று சிறிதுநேரம் பீடிகை போட்டுவிட்டு பிறகு இஸ்லாமிய சட்டத்தையும் அதன் நியாயத்தையும் எடுத்துச் சொல்லும்போது, இஸ்லாம் கூறும் சட்டத்தின் மதிப்பு நன்றாக விளங்கும்.
சொல்லும் செய்தியின் மதிப்பை கூட்டுவது இந்த பீடிகை தான். எனவே தேவையான இடங்களில் பீடிகையை மறந்துவிடாதீர்கள். எந்த பயானுக்கும் முன்னுரை அவசியம் என்று பார்த்தோம். முன்னுரையும் ஒருவகையான பீடிகை தான்.
v துணைச்செய்தி சுருக்கமாக இருப்பது அவசியம்
பீடிகையாக இருந்தாலும் சரி, ஒரு செய்தியை சொல்லிக்கொண்டிருக்கும் போது, இடையிடையே சொல்லும் துணைச்செய்தியாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக, அதிக நீளமானதாக இருக்கக்கூடாது.
சில பேச்சாளர்கள் இதில் தவறு செய்வதனாலேயே, பலமக்களுக்கு இதில் வெறுப்பு ஏற்படுகிறது. “ஒரு சம்பவத்தை சொல்லும் போது, இடையே வேறுவேறு செய்திகளை சொல்லாதீர்கள்” என்று கூறுவதை பார்க்கலாம்.
இடையிடையே வேறுவேறு செய்திகள் சொல்லாமல், பேசுவது சாத்தியப்படாது. எனவே இடைச்செய்திகளை சுருக்கமாக சொல்லிவிட்டு, சொல்லவந்த செய்தியை தொடரவேண்டும்.
v 3 விஷயங்கள், 4 விஷயங்கள் போன்ற ஹதீஸ்களை பயன்படுத்துங்கள்.
இது ஒருவகையான ஈர்ப்பு. அந்த விஷயங்களை நினைவில் வைக்க மக்கள் விரும்புவார்கள். நபியின் உபதேசங்களில் இதுபோன்றவை நிறைய காண முடியும். உதாரணமாக) நபியவர்கள் கூறினார்கள்: பிற நபிமார்களை விட ஆறு விஷயங்களில் நான் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்.
- நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பட்டுள்ளேன்.
- (எதிரிகளின் உள்ளத்தில்) பயம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டது.
- போர் பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
- பூமிமுழுவதும் தூய்மையானதாகவும், தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
- நான் மனித இனம் முழுவதுக்கும் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
- என்னுடன் நபிமார்கள் முற்றுப் பெற்று விட்டார்கள். ((முஸ்லிம்: 907))
இது போன்ற ஹதீஸை சொல்லி, ஒவ்வொன்றையும் விளக்குங்கள். இதில் மற்றுமொரு நன்மையும் இருக்கிறது. இதை விளக்குவதற்கே பாதி பயான் நேரம் கழிந்துவிடும். புதிதாக பேசுபவர்கள், இந்த யுக்தியை பயன்படுத்தலாம். கொண்டு வந்த குறிப்புகள் முடியப்போகிறதே என்று பயப்படத்தேவையில்லை. இது போன்ற சில ஹதீஸ்களை கிடைக்கும் போதெல்லாம், மனனம் செய்துகொண்டு, தொடர்ந்து வரும் பயான்களில் உபயோகப்படுத்துங்கள்.
Ì உங்களுக்கு தெரியுமா? : பெரும்பாலான, உலகளாவிய இஸ்லாமிய அறிஞர்கள், உரை நிகழ்த்தும்போது, 4 விஷயங்கள், 5 விஷயங்கள் என்று ஒரு உரையை நான்காகவோ, ஜந்தாகவோ பிரித்து கொண்டு, பின்பு ஒவ்வொன்றையும் விளக்குகிறார்கள். நமது உரைகளிலும் இதுபோன்று பேசலாம்.
குறிப்பாக மாற்றுமத சகோதரர்கள் அமர்ந்திருக்கும் சபைகளில் உரை நிகழ்த்தும் போதும், கேள்விக்கு பதில் சொல்லும்போதும் முடிந்தஅளவு, கதைபோன்று பதில் சொல்லாமல் ”தீண்டாமையை அகற்ற இஸ்லாம் 4 வகையான செயல்திட்டங்களை கொண்டுள்ளது, அறியாமையை போக்க 3 விதமாக அறிவுரைகளை செய்கிறது” என்பது போன்று பாயிண்ட், பாயிண்ட்டாக பேசலாம். சிரமமின்றி விளங்கும் வகையில் நம் பேச்சு தெளிவான முறையில் இருக்கும்.
இதன் நன்மையை விளங்குவதற்கு, பேசி முடித்தபிறகு நீங்கள் என்ன பேசினீர்கள் என்று மக்களிடத்தில் கேட்டுப்பாருங்கள். 80 சதவீத மக்கள், நீங்கள் பேசிய 4 பாயிண்ட்களையும் சரியாக சொல்வார்கள். ஒவ்வொரு பாயிண்ட்டின் கீழும் என்ன பேசினீர்கள் என்பதையும் பலரால் சரியாக சொல்லமுடியும். நாம் கதைபோன்று உரை நிகழ்த்தும்போது, இவ்வாறு அவர்களால் சொல்லமுடியாது. எனவே தேவைப்படும் நேரங்களில், பாயிண்ட், பாயிண்ட்டாக பேசுங்கள்.
v தத்துவங்களை, கையில் வைத்துக்கொள்ளுங்கள்.
எந்த தலைப்பிற்கும், இரண்டு குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், சம்பவங்கள் தேவைப்படுவது போல, இரண்டு மூன்று தத்துவங்களும் தேவைப்படும்.
தத்துவங்களுக்கு ஞானிகளை தேடிப்போகவேண்டியதில்லை. குர்ஆன் வசனங்களை பொறுமையாக சிந்தித்து படித்தாலே, நிறைய கருத்துக்களை இலகுவாக பெறமுடியும். வாழ்க்கையில் அவ்வப்போது பெறும் அனுபவத்திலிருந்தும் கருத்துக்களை சேகரிக்கமுடியும். உரையின் நடுநடுவே இவற்றை பயன்படுத்தும் போது சொல்லப்படும் செய்தி, வெறும் ஏட்டுச்செய்தியாக இல்லாமல் சிந்திக்க தூண்டும் செய்தியாக இருக்கும்.
சிறந்த பேச்சாளர்கள், பல தத்துவங்களை, தகுந்த உதாரணங்களோடு ஸ்டாக் வைத்துக் கொண்டு, அவ்வப்போது பயன்படுத்துவதை பார்க்கலாம். இவைகளை எத்தனை தடவை கேட்டாலும் ரசிக்கும்படியாகத்தான் இருக்கும்.
சில உதாரணங்களை பாருங்கள்.
- யார் அல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று சொல்லி, பின்னர் அதில் உறுதியாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு, மலக்குகள் துணையிருப்பார்கள். ஒரு பஸ் விபத்திற்குள்ளாகும். அதில் இருந்த அனைவரும் இறந்து போய்விடுவார்கள். ஒரு குழந்தை மட்டும் எந்த சிராய்ப்பும் இல்லாமல் பிழைச்சுக்கும். அல்லாஹ், மலக்குகளை வைத்து காப்பாற்றும் போது, யாரால என்ன செய்யமுடியும்.
- ”எதைஎதை எங்க செய்யனுமோ, சொல்லனுமோ அங்கதான் செய்யனும். மவுத் செய்தி கேட்டவுன், அல்ஹம்துலில்லாஹ் சொன்னா என்ன ஆகும்? அல்ஹம்துலில்லாஹ் நல்ல வார்த்தை தான். சொல்லவேண்டிய இடம் என்று இருக்கில்ல!”
- பள்ளிவாசல்ல பயான் கேட்கும் போது, பத்தாயிரம் ரூபாய் தர்மம் கொடுக்கனும்னு நினைப்பான். வீட்டுக்கு போயிட்டா ஷைத்தான் வந்துடும். முதல்ல ஆரம்பத்துல ஆயிரம் கொடுப்போம்னு எண்ணத்தை போடுவான். பிறகு, நாமே கஷ்டப்படுறோம் என்று அதையும் குடுக்கமாட்டான்.
- ”பெண்களை பொறுத்தவரை சோறுதண்ணி இல்லாம கூட இருந்துடுவாங்க. ஆனா பகட்டு இல்லாம அவங்களால இருக்கவே முடியாது….”
என்பது போன்ற, ஏராளமான தத்துவங்களை நினைவில் நிறுத்தி பயன்படுத்தினால், உங்கள் உரை சிறந்த கருத்துச்செறிவான உரையாக இருக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகால பயான் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து மிகவும் சிறப்பான கருத்துக்களையும், தத்துவங்களையும், உளவியல் அறிவுரைகளையும் பெறமுடியும். புதியவர்கள் ஆரம்பத்தில் அவற்றை பயன்படுத்துங்கள்.
Ì அனைவரையும் குற்றம் சாட்டக்கூடாது : ”பெண்களை பொறுத்தவரை…. பகட்டு இல்லாம அவங்களால இருக்கவே முடியாது…” என்று அனைவரையும் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவது சரியான முறை அல்ல. மக்களும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
”பெரும்பாலானவர்கள், ஒருசில ஆண்கள், அதிகமான பெண்கள், பெரும்பாலும்” என்பன போன்ற விலக்கல் வார்த்தைகளை தேவையான இடத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நமது கொள்கைகளை அறியாத முஸ்லிம் அல்லாதோர் சபைகளில், விலக்கல் வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். பாதுகாப்பானது.
v சிந்தனையை தூண்டும் எதிர் கேள்விகள், வாதங்கள்.
உள்ளத்தை தட்டிஎழுப்பும் எதிர்கேள்விகள் குறைந்தபட்சம் இரண்டாவது, உங்களுடைய ஒவ்வொரு உரையிலும் இருக்கவேண்டும். ஒரு பயானில் நூறு சட்டங்களை அடுக்கடுக்காக சொன்னாலும், அதனால் தூண்டப்படாத மனிதன், ஒரே ஒரு விஷயத்தை, எதிர் கேள்வியை கொண்டு விளக்கிப்பாருங்கள். ”சரியா கேட்டாருய்யா…” என்பது போல அவருடைய ரியாக்ஷன் இருக்கும். உதாரணமாக)
- மேல்ஜாதிக்காரன் வாழ்ற தெருவில ஒரு நாய் போகும். பன்னி போகும். அதை அனுமதிப்பான். ஆனா, ஒரு கீழ்ஜாதிக்காரன் போனால், விடமாட்டான். அப்ப நாயை விட அவன் கேவலமா?
- அடே.. நீ எந்த ஷைகு-கிட்ட போனா உன் நோய் போகும்-னு நினைக்கிறியோ, அதே ஷைகு கைவிளங்காம, கால்விளங்காம அப்போலோ ஆஸ்பத்திரியில கிடந்தாரே. தன்னையே காப்பாற்ற முடியாத ஷைகு, உன்னை காப்பாத்துவாரா?
என்பது போன்ற அசத்தியத்திற்கு எதிரான எதிர்கேள்விகள், எதிர்வாதங்கள் நல்ல தாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்தும். எதிர் கேள்விகள், வாதங்கள் மூலமாக, தவறான கொள்கையில் உள்ளவரை திருத்த முடியும். குறைந்த பட்சம் அவர்களது வாயையாவது அடைக்க முடியும்.
நபி(ஸல்) அவர்கள் உலகரீதியாக செய்தவைகள் கூட, நமக்கு சுன்னத் தான் என்று கூறுபவர்களுக்கு எதிர்வாதமாக, ”ஓட்டகத்துல போறது சுன்னத்தா? அப்படீன்னா, சுன்னத்திற்கு மாற்றமானது பித்அத் என்ற அடிப்படையில, கார்ல போறது பித்அத்-தானே! அப்ப ஏன் நீங்க கார்-ல போறீங்க?” என்று கேட்கும் போது, பதில் சொல்லத்தெரியாமல், மௌனமாக இருப்பார்கள். சிந்திக்கத்தூண்டும் உரைக்கு இது கண்டிப்பாக தேவை.
Ì நினைவில் இருக்கட்டும் – இது போன்ற சிறப்பான எதிர்வாதங்கள் தான் ஒருவரை சிறந்த பிரச்சாரகராகவும் எடுத்துக்காட்டுகிறது. உங்களுடைய ஒட்டுமொத்த பயானுமே மறந்தாலும், இதுபோன்ற எதிர்கேள்விகள் மட்டும், அந்த பயானை கேட்டவரின் உள்ளத்தில் பலஆண்டுகளுக்கு இருக்கும். இதே வாதத்தை அவரும் தனது வாழ்க்கையிலும் பயன்படுத்துவார்.
v பழமொழிகள் பேச்சின் சுவையை கூட்டுகிறது.
”அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும், ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை, உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?” என்பது போன்ற அர்த்தமுள்ள பழமொழிகளை பயன்படுத்தும் போது பேச்சின் சுவை கூடுகிறது.
நாம் பேசும் நூறு வரிகளை முக்கியத்துவம் கொடுத்து கவனிக்காதவர்கள், ஒருவரி பழமொழியை முக்கியத்துவம் கொடுத்து ரசிப்பார்கள். அதிலும், ”ஓடுகிறவனை கண்டால் துரத்துகிறவனுக்கு கொண்டாட்டம்! ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுததாம், ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி” என்பது போன்ற ரசிக்கத்தக்க பழமொழியாக இருந்தால், அதையே நினைத்து சிறிது நேரம் அசைபோடுகிறவர்களும் உண்டு!
பலமொழிகளை ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போகாமல், (சில நேரங்களில்) விளக்கிப் பேசுவது நன்றாக இருக்கும். உதாரணமாக, ”தில்லிக்கு ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளைதான்” என்று சொல்லிவிட்டு, ”நீங்கள் இந்த நாட்டின் அதிபதியாக இருந்தாலும், உங்கள் தாயைவிட பெரிய ஆளா? தாய்க்கு பிள்ளை தானே!” என்று விளக்கும் போது, கேட்பதற்கு சுவையாக இருக்கும்.
பழமொழிகள் மக்களுக்கு பழக்கப்பட்டவையாக இருப்பதால், அவற்றை எளிதில் அங்கீகரித்துக்கொள்கிறார்கள். ஏற்கனவே அங்கீகரித்த பழமொழிகளுடன் சேர்த்து, ஒரு செய்தியை சொல்லும் போது, சொல்லப்படும் செய்தியும், எவ்வித மறுப்பும் இன்றி, அங்கீகரிக்கப்படுகிறது.
Ì தவறான பழமொழிகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. ”கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்யைாருக்கு உடைத்த கதையாக, யார் பணத்தையோ கொண்டு வந்து, பள்ளிவாசலுக்கு கொடுத்துவிட்டு போய்விடாதீர்கள்” என்று பேசினால், பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதை நீங்கள் ஆதரித்தது போல் ஆகிவிடும். பின்பற்றத்தகாத தவறான எந்த பழமொழியையும், உதாரணத்தையும் நபியவர்கள் பயன்படுத்தியதில்லை.
எனவே சரியான பழமொழிகளை மட்டும் பயன்படுத்துங்கள். அதையும், ஓன்றோ, இரண்டோ மட்டும் பயன்டுத்துங்கள். அதற்கு மேல் பயன்படுத்தினால், இஸ்லாமிய கருத்துக்கள் மிகைப்பதற்கு பதிலாக, முன்னோர்களின் கருத்துக்கள் மிகைப்பது போன்ற தோற்றம் ஏற்படும்.
v பிறமொழி பழமொழிகளுக்கு தனி மதிப்புண்டு.
அரபில ஒரு பழமொழி உண்டு. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. என்று அந்த பிறமொழி பழமொழியை சொல்லிவிட்டு, அதை விளக்கிப் பேசுங்கள். கேட்பதற்கு, சுவாரஸ்யமாக இருக்கும். உதாரணமாக,
”அன்னாஸு அஃதாஉ லிமா ஜஹிலூ” என்று கூறிவிட்டு ”மக்கள் தான் அறியாத விஷயத்திற்கு எதிரிகளாவர்” என்று அரபியில் ஒரு பழமொழி உண்டு – என பிறமொழி பழமொழிகளை பயன்படுத்தும் போது, பேச்சின் தரம் கூடுகிறது. (பிறமொழி) பழமொழியை சொல்லாமல், வெறுமனே அதன் தமிழாக்கத்தை மட்டும் சொல்வது சிறப்பாக இருக்காது. அப்படி சொல்வதைவிட, சொல்லாமலேயே இருக்கலாம்.
பழமொழிகள் மட்டுமல்ல, ”கையில் சுத்தியல் மட்டுமே வைத்திருப்பவனுக்கு எதைப்பார்த்தாலும் ஆணிபோல் தெரிகிறது(மேஸ்லோ), பன்றியோடு சண்டைக்கு நிற்காதே. நீங்கள் இருவரும் அசுத்தமாவீர்கள். பன்றி மட்டும் சந்தோஷப்படும். (காலேயார்போரஃப்)” என்பது போன்ற பிரபல்யமான மேற்கோள்கள் (Quotes), ஆய்வாளர்கள், இணையதள கட்டுரைகள், அகராதிகளில் உள்ள மேற்கோள்கள், ஆங்கில, அரபி, உருது அல்லது பிறமொழி மேற்கோள்கள் போன்றவற்றை ஓரிரு வரிகள் பயன்படுத்தி, அதன் பொருளை தமிழில் விளக்கிச் சொல்லலாம். கவனம். இது போன்ற நுனுக்கங்கள் பேச்சாளரின் தரத்தை உயர்த்துகிறது.
அறிஞர்கள், விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள் போன்றோரின் வார்த்தைகளை ஒன்றோ இரண்டோ அவ்வப்போது பயன்படுத்தலாம். ஆனால், பிறமத ஆன்மிக தலைவர்களின் தத்துவங்களை நல்லதாக இருந்தாலும் பயன்படுத்தக்கூடாது. இதுபற்றி ”தவிர்க்க வேண்டியவைகள்” என்ற பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
v உவமை வாக்கியங்கள் (Simile and Parable sentences)
ரசிக்கத்தகுந்த பேச்சாளரின் பேச்சில் அவ்வப்போது நல்ல உவமை வாக்கியங்களை காணமுடியும். ”காக்கை இருக்க பனைமரம் விழுந்தது போல, குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல” என்று உவமை கூறி, பிறகு தான் சொல்லவந்த செய்தியை சொல்லும்போது, அந்த செய்தி எளிதில் மக்களால் புரிந்து கொள்ளப்பட்டு விடுகிறது. அந்த செய்தியை விளக்குவதற்கு, நாம் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டியதில்லை. மேலும் செய்தியின் சுவையும் கூடிவிடுகிறது.
எனவே, ”ஆடு நரியானது போல, ஆண்டி மடம் கட்டியது போல, எட்டாப்பழம் புளித்தது போல, கடன்பட்டவர் நெஞ்சம் போல, கண்ணைக் காக்கும் இமைபோல, வேலியே பயிரை மேய்ந்தார்போல, இஞ்சி தின்ன குரங்கு போல, செவிடன் காதில் ஊதிய சங்கு போல, ஊமை கண்ட கனவு போல, திருடனுக்கு தேள் கொட்டியது போல, கிணற்றுத்தவளை போல, இறைமறை காய்போல, கரடி பிறை கண்டது போல, பசுத்தோல் போர்த்திய புலி போல” என்பது போன்ற உவமைகளை மனனம் செய்து பயன்படுத்துங்கள்.
திருக்குர்ஆனும் நிறைய உவமைகளையும் பயன்படுத்துகிறது. ”ஏடுகளை சுமக்கும் கழுதைகளைப் போல(62.5), தம் பிள்ளையை அறிவது போல(2.146), அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவளைப் போல(4.129), இருட்டில் சிக்கியவனைப் போல(6.122-ன் கருத்து)”, என்பன போன்று ஏராளமான உவமைகள் குர்ஆனில் உள்ளன. அவற்றை மனனம் செய்து பயன்படுத்துங்கள். உவமை என்பது கிட்டத்தட்ட உதாரணங்களைப் போன்றது தான். எனினும் அவை உதாரணங்களைப் போல் விரிவாக இல்லாமல், பழமொழியைப் போல சுருக்கமாக இருக்கும்.
v பிறமத அறிஞர்கள் இஸ்லாத்தை பாராட்டிதை சொல்லலாம்.
பிறமத அறிஞர்களின் அறிவுரைகளை சொல்லக்கூடாது. எனினும், பிறமத அறிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தலைவர்கள் இஸ்லாத்தை பற்றி பலநேரங்களில், மெய்சிலிர்த்து பாராட்டியதை சொல்வது தவறில்லை. மக்கள் அதை ஆர்வத்தோடு கேட்பார்கள். உதாரணமாக)
- (இந்துமத) இதிகாசங்கள், புராணங்கள் மலையேறிவிட்டன. இனி உலகிற்கு வழிகாட்ட குர்ஆன் வந்துவிட்டது – குருநானக்.
- உலகை ஆளப்போகும் ஒரு மதம் இருக்கிறதென்றால் அது இஸ்லாம் தான். முஹம்மது மனிதகுல இரட்சகர். இன்றைய உலகின் சர்வாதிகாரியாக அவர் பொறுப்பு ஏற்றால், உலகின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு சொல்லுவார் –
ஜார்ஜ் பெர்னார்ட்ஷா - பண்டைய மன்னர்கள் வெற்றி பெற்ற நாட்டில் நுழையும்போது செய்யும் எதையும் செய்யாமல், முஹம்மது நபி மக்காவில் நுழையும் போது மிககண்ணியத்துடன் நடந்துகொண்டார்கள் –(Philip.K.Hitty) ஹிட்டி
என நாம் கூட சிந்திக்காத வகையில் இஸ்லாத்தை பற்றி, மற்றவர்கள் சொன்னதை எடுத்துச்சொல்லுங்கள். இவற்றை கேட்கும் போது மெய் சிலிர்க்கும். வெறுமனே படித்துச் சொல்லாமல் விளக்கியும் சொல்லுங்கள். உதாரணமாக, ஹிட்டி சொன்னதை எடுத்துச் சொல்லும்போது, பிறமன்னர்கள் தோல்வியடைந்த நாட்டில் செய்யும் அட்டூழியங்களை விளக்கி விட்டு, பிறகு மாநபி நடந்துகொண்ட விதத்தைப் பற்றி சொல்லுங்கள்.
Ì பீடிகையை மறந்துவிடாதீர்கள்.
இதுபோன்ற கருத்தாழம் மிக்க பேச்சுக்களை, எடுத்துச்சொல்லும் போது, அந்த கருத்துக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, கருத்தை சொல்வதற்கு முன்னால் அவர் யார் தெரியுமா? என்று அவரின் சிறப்பை சுருக்கமாக சொல்லிவிட்டு, பிறகு அவர் இஸ்லாத்தை பற்றி சொன்னதை சொல்லுங்கள். உதாரணமாக,
அம்பேத்கர், முஹம்மது நபியை பற்றி ”பிறப்பில் உயர்வு தாழ்வுகளை நீக்கி, மனிதனை மனிதனாக வாழவைத்த முஹம்மதுவை புகழ என்னிடத்தில் வார்த்தைகள் இல்லை” என்று புகழ்கிறார். அதை எடுத்துச்சொல்லும் போது, அம்பேத்கர் யார் தெரியுமா? இந்திய அரசியல் சட்டத்தை வகுத்தவர், இன்றைய நீதிபதிகளுக்கெல்லாம் மேதை. என்று ஒரு நிமிடம் அவரின் மதிப்பை விளங்கச்செய்து, பிறகு அவர் நபியை பற்றி என்ன சொன்னார் என்பதை விளக்குங்கள். வெறுமனே அவர் அப்படி சொன்னார், இவர் இப்படி சொன்னார், என்று வரிசையாக பட்டியல் போடுவதில் எந்த ஈர்ப்பும் இருக்காது.
Ì கவனமாக இருங்கள் – பீடிகை போடும் போது காஃபிர்களை, காஃபிர் நிலையிலேயே வைத்து பாராட்டுங்கள். அவரை போல இதுவரை பிறந்ததும் கிடையாது, இனி பிறக்கப்போவதும் கிடையாது. என்பது போல பேசி, அவரை பின்பற்றத்தக்கவராக காட்டிவிடாதீர்கள். வாயில் வருவதையெல்லாம் பேசக்கூடாது. எந்நிலையிலும் சிந்தித்து பேசுங்கள்.
v நீதிமன்ற தீர்ப்புகள், நீதிபதிகளின் வார்தைகளை சுட்டிக்காட்டுங்கள்.
பிறமத தலைவர்களின் சொற்களுக்கு மக்கள் முக்கியத்துவம் தருவது போல, முன்னாள், இந்நாள் நீதிபதிகள், நீதிமன்ற தீர்ப்புகள், அனைவரும் ஏற்றுக்கொண்ட பெரும் தலைவர்களின் சொற்களுக்கும் முக்கியத்துவம் தருவார்கள். நீதிமன்ற தீர்ப்புகள் அதிகாரப்பூர்வமானவையாக இருப்பதால், அறிவாளிகள் சபையில், மற்ற அனைத்தையும் விட இவை முக்கியத்துவம் பெறுகின்றன. உதாரணமாக,
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேயன் கட்சு, மூடத்தனத்தத்திற்கு எதிராக (இஸ்லாத்தை சரிகாணும் வகையில்) பலநேரங்களில் பேசியிருக்கிறார். இவர்களது வார்த்தைகளை எடுத்துச்சொல்லுங்கள். முன்னர் சொன்ன விதி நினைவிருக்கட்டும். கட்சுவை பற்றி அறிமுகம் செய்துவிட்டு தான், அவர் சொன்னதை சொல்ல வேண்டும். அவர் பிரஸ்கவுன்சில் தலைவர், என்று அதன் மதிப்பை புரியவைத்துவிட்டு பிறகு, அவர் சொன்னதைச் சொல்லுங்கள்.
Ì மறந்துவிடாதீர்கள் – முஸ்லிம்களுக்கான சொற்பொழிவில் இவர்களது மேற்கோள்களை பயன்படுத்த மறந்தாலும், பிறமத மக்களுக்கு மத்தியில் பேசும்போது கண்டிப்பாக இதுபோன்ற மேற்கோள்களை பயன்படுத்தவேண்டும்.
v புதுமொழிகள் (பன்ச் டயலாக்) ஒன்றோ, இரண்டோ பயன்படுத்துங்கள்
மக்கள் எதனால் கவரப்படுவார்களோ, அதைக்கொண்டு, நாம் சொல்ல வரும் செய்திகளை புரியவைப்பது தான் அறிவுப்பூர்வமான வழி. நடுத்தர வயது மக்கள் மற்றும் முதியவர்கள் பழமொழிகளை எளிதில் அங்கீகரிப்பது போல, இன்றைய இளைஞர்கள் புதுமொழிகளை (பன்ச் டயலாக்குகளை) எளிதில் அங்கீகரிப்பார்கள். அதனால் கவரப்படுவார்கள். அதைதொடர்ந்து வரும் செய்திகளையும் அங்கீகரிக்கும் மனநிலையையும், தானாகவே ஏற்படுத்திக் கொள்வார்கள். உதாரணமாக)
- பத்தாயிரம் ரூபாய்க்கு செல்போன் வாங்குவான். ஆனா பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ண மாட்டான். இதுதான் நம்மாளுங்க புத்தி….
- எச்சில் கையால காக்கா விரட்டமாட்டான்….
- தொல்லையை தூக்கி தோள்ல போட்ட மாதிரி….
- கோழிக்கு வேலை கூவுறது, கொழுக்கட்டைக்கு வேலை வேகறது ….
இதுபோன்ற புதுமொழிகளை பயன்படுத்துங்கள். உங்கள் உரை இளவயது மக்களை கவருவதுடன், நவீன உரையாகயும் இருக்கும்.
v ஒப்பிட்டு பேசுவது சிந்திக்கத்தூண்டும்
ஒப்பிட்டு பேசுவது எப்போதுமே வரவேற்கப்படவேண்டியது. ஆழமான சிந்தனை அறிவு உள்ளவர்கள் அடிக்கடி இதுபோன்று பேசுவதை பார்க்கலாம்.
உதாரணத்திற்கு, ஒரு ஒப்பீடை பாருங்கள். |
இரண்டு மதங்கள் ஒரே விஷயத்தை பற்றி என்னென்ன கூறுகிறது என்பதை வேறுபடுத்தி சொல்வது, சிந்தனையை தூண்டும் பேச்சு. இரண்டு கொள்கைகள் ஒரே விஷயத்தை எப்படி அணுகுகிறது. அதில் எது சரி. எது தவறு. தவறு என்றால் ஏன் தவறு? என்று நறுக்குதெறித்தார்போல, எடுத்துரைப்பது மிகவும் பயனுள்ள பேச்சு. சிந்தனையை தூண்டும் பேச்சு. உதாரணமாக)
பாவம் செய்தால், கண்டிப்பாக அதற்குறிய தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்று, இந்து மதம் கூறுகிறது. நாம் இன்று செய்யும் பாவங்களுக்காக என்றைக்கோ ஒருவர், ஏற்கனவே மரணித்து, பரிகாரம் தேடிவிட்டார் என்று கிருஸ்தவ மதம் கூறுகிறது. இஸ்லாம் இதை எப்படி அழகாக கையாளுகிறது, என்பதை ஒப்பிட்டு பேசி, விளக்குவது, சுவாரஸ்யமாக இருக்கும்.
வெவ்வேறு மதங்கள் மட்டுமல்லாமல், மத்ஹப், தரீக்கா, சூஃபியிஸ கொள்கைகளில் ஒரு கருத்து எப்படி உள்ளது? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அது எப்படி உள்ளது? என்றோ, அல்லது வேறு எந்த வகையிலுமோ, ஒப்பிட்டு பேசுவது எப்போதுமே சிந்தனையை தூண்டக்கூடியது.
Ì ஏராளமான உலக முஸ்லிம் அறிஞர்கள், இஸ்லாமும் கிருஸ்தவமும், இஸ்லாமும் இந்துமதமும் என்பது போன்ற தலைப்புகளில் ஏராளமாக பேசியிருக்கிறார்கள். அதில் உள்ள ஒவ்வொரு வரியும் சிந்திக்கதக்கது. அதிலிருந்து குறிப்புகளை எடுத்து பயன்படுத்துங்கள்.
v குர்ஆன், ஹதீஸ் கூறும் அறிவியல் செய்திகள் அவசியம்.
இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் இன்றைய விஞ்ஞானம், குர்ஆன் கூறும் அறிவியல் செய்திகள் போன்றவற்றை சற்று விளக்கிக் கூறுவதை மக்கள் அதிகம் விரும்புவார்கள். அதிலும், ஆல்ஃபா, பீட்டா, காமா என்று அறிவியல் பெயர்களை, பயன்படுத்துவதையும் கூர்ந்து கவனிப்பார்கள்.
உதாரணமாக, எறும்பு பேசுவதை நவீன விஞ்ஞானம் மைக்ரோமைக்குகளை கொண்டு பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டுள்ளது. சுலைமான் நபி வரலாற்றில், எறும்பு பேசுவதை அல்லாஹ் குர்ஆனில் எடுத்துக்காட்டுவதை, விளக்கிப்பேசுங்கள். இந்த வீடியோவை எந்த இணையதளத்தில் காணமுடியும் என்பதையும் சொல்லுங்கள். கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
- அதுபோல, ஒட்டகத்தின் சிறுநீர் மருந்தாக பயன்படுவது எப்படி?
- பிரபஞ்சம் விரிவடைவதைப்பற்றி குர்ஆன் சொல்வது.
- தேன், பால் உற்பத்தியாகும் விதம் பற்றி குர்ஆன் சொல்வது
- இரும்பு விண்ணிலிருந்து இறக்கப்பட்டதாக குர்ஆன் சொல்வது.
என ஏராளமான அறிவியல் செய்திகள் உள்ளன. இணையத்தில் அவ்வப்போது, புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கும். www.QuranAndScience.com என்ற இணையதளம் குர்ஆனில் உள்ள அறிவியல் வசனங்களையும், அதற்குறிய ஆதாரங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவற்றை படித்துப் பயன்படுத்துங்கள்.
Ì இதுதவிர, பொதுவான அறிவியல் உண்மைகள், தற்போது இருக்கும் மற்றும் எதிர்காலத்தில் வரஇருக்கும் வியக்கத்தகு பொருட்கள் பற்றி பேசுவதையும் மக்கள் விரும்பிகேட்பார்கள். உதாரணமாக,
நாசாவின் உதவியோடு, வெளிவரவிருக்கும் பீஸா 3D பிரிண்டர். அதாவது, கனினியிலிருந்து கட்டுரைகளை (எழுத்துக்களை) பேப்பரில் பிரிண்ட் செய்வதைப்போல, இனிமேல் நாம் சாப்பிடக்கூடிய கேக்(Cake), பீஸா(Pizza) போன்ற உணவுப்பொருட்களை கனினியிலிருந்து பிரிண்ட் செய்து வெளியே எடுத்துக்கொள்ளலாம். (எதிர்காலத்தில் இட்லி, தோசை போன்றவையும் சாத்தியப்படலாம்) (Cbsnews,05/2013). இதுபோன்ற நூற்றுக்கணக்கான அறிவியல் செய்திகள் அடிக்கடி செய்தித்தாள்களிலும், இணையதளங்களிலும் வெளிவந்துகொண்டே இருக்கும். அவற்றை அவ்வப்போது பயன்படுத்துங்கள். இவையும் மக்களை ஈர்க்கும்.
v புள்ளிவிபரங்களை பயன்படுத்துதல்
பெரும்பாலான பேச்சாளர்கள் தங்களது எந்த உரையிலும் புள்ளிவிபரங்களையோ (Statistics), விஞ்ஞானிகளின் கூற்றுக்களையோ(Claims,Findings), ஆராய்ச்சி ஆதாரங்களையோ (Research) தருவதில்லை. புலால் உணவு மனிதஉடலுக்கு அவசியமானது என்று சொல்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அதற்குரிய அறிவியல் சான்றுகளையும் தந்தால் தான் நாம் சொல்லும் செய்தி அறிவியல் பூர்வமானது என்று திருப்தியடைய விளங்கமுடியும்.
பிரிட்டனில் அதிகமான மக்கள் இஸ்லாத்தை ஏற்கிறார்கள் என்ற பொதுவான வரியைவிட, கடந்த ஆறு ஆண்டுகளில், 19 லட்சத்திலிருந்து முஸ்லிம்களின் எண்ணிக்கை 37% உயர்ந்து, தற்போது 2010ல், 26 லட்சம் முஸ்லிம்கள் இங்கிலாந்தில் உள்ளதாக, இங்கிலாந்தின் டெய்லி மெயில் பத்திரிக்கை 2010 மார்ச் மாதம் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. (Http://www.dailymail.co.uk/news/article-2109488/) என்று புள்ளிவிபரத்தோடு பேசும்போது, பேச்சாளரின் நம்பகத்தன்மை அதிகரிக்கிறது.
மருத்துவர்கள். பட்டதாரிகள், வழக்குரைஞர்களள் இருக்கும் அறிவாளிகள் சபையில் இதுபோன்ற ஆதாரங்கள் இன்றி பேசினால், உங்கள் பேச்சு ஒரு பொருட்டாகவே மதிக்கப்படாது. எனவே ஆதாரங்கள் தரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். எனினும், அதிகமான முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் இருக்கும் சபைகளில் இதுபோன்ற புள்ளிவிபரங்கள் தேவைப்படாது என்பதையும் கவனத்தை வைக்கவும்.
Ì ஆதாரங்களை மக்களிடம் காட்டுதல் (Showing Evidence):
நாம் கூறும் அறிவியல் செய்திகளுக்கோ, வேறு ஏதாவது முக்கியமான தகவல்களுக்கோ, ஆதாரங்கள் காட்ட விரும்பினால் தாராளமாக காட்டலாம். கையில் வைத்து காண்பிக்கப்படும் பேப்பரையோ, புத்தகத்தையோ தூரத்தில் அமர்ந்திருக்கும் மக்களால் படிக்க முடியாதென்றாலும், நீங்கள் காட்டிய பேப்பரைக்கொண்டு என்ன சொல்லவருகிறீர்கள் என்று அதிக ஈடுபாட்டுடன் கேட்பார்கள்.
பல பெரிய பேச்சாளர்கள் மாற்றுமத மக்களிடத்தில் பேசும்போது, குர்ஆன் மற்றும் ஹதீஸ் கிதாபுகளை மேசையின் மீது முன்னரே எடுத்து வைத்துக்கொள்கின்றனர். உரையின் நடுவே, ”இது தான் குர்ஆன்.. இறைவனிடத்திலிருந்து முஹம்மது நபி பெற்ற வேதம்”, ”இது புகாரி ஹதீஸ், நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளும், வரலாறும் அடங்கிய புத்தகம்” என்று சொல்லி, அந்த புத்கத்தை கையில் எடுத்து மக்களுக்கு காண்பித்து ஒருவகை கவனஈர்ப்பை ஏற்படுத்துகின்றனர்.
Ì அதிகாரம் மூலம் முறையீடு (Appeal through authority) என்றால் என்ன?
ஒரு செய்தியை நிரூபிப்பதற்கு அதில் நிபுனத்துவம் பெற்றவரிடமிருந்து ஆதாரத்தை தராமல், மதிப்போ, அதிகாரமோ உள்ள (அல்லது அற்ற) மனிதரிடமிருந்து வந்த சொற்களை ஆதாரமாக தருவதற்கு பேச்சுக்கலையில் Appeal through authority என்று பெயர்.
உதாரணமாக, ”மதுவினால் கேன்சர் வரும் என்று எனது நண்பர் கூறுகிறார்” என்று பேசுவது, இது ஏற்கப்படாத பேச்சு முறை. இஸ்லாத்தை பொறுத்த வரையில், குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டாமல், சஹாபாக்கள், மத்ஹபுகள், இமாம்களிடமிருந்து ஆதாரம் காட்டுவதை Appeal through authority என்று அழைக்கலாம். இது ஆதாரமாக ஏற்கப்படாது.
v உதாரணங்களை பயன்படுத்துவதன் விதிகள்
கருத்துக்களை விளக்குவதற்கு உதாரணங்களை பயன்படுத்துவதை பற்றி ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டோம். ஒரே செய்தியை விளக்குவதற்கு இரண்டு உதாரணங்களை பயன்படுத்தலாமா? என்றால் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். ஒரு உதாரணம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதைவிட சிறந்த உதாரணம் வேறொன்று நினைவிற்கு வரும். அதையும் சொல்லலாம். இரண்டிற்கு மேல் பயன்படுத்துவது சலிப்பை ஏற்படுத்தும்.
சிலகருத்துக்களுக்கு உதாரணங்களே தேவைப்படாது, கருத்து விளக்கமே போதுமானதாக இருக்கும். ”மவுத் வருவதற்கு முன் செலவு செய்யுங்கள்” என்ற செய்தியை அதன் கருத்தைக் கொண்டு விளக்கினாலே போதுமானது. உதாரணத்தை பயன்படுத்தவேண்டுமே என்பதற்காக பயன்படுத்தினால், தெளிவிற்கு பதிலாக குழப்பம் தான் அதிகமாகும். எனவே, உதாரணங்களை சொல்வது சிறந்தது தான். எனினும் தேவையில்லாத இடத்திலெல்லாம் உதாரணங்களை சொல்லி, ஒரு உதாரண மன்னனாக ஆகிவிடாதீர்கள்.
அது போல, மேடையில் நின்று கொண்டு, உதாரணத்தை யோசித்து யோசித்து பயன்படுத்தாதீர்கள். பலநேரங்களில், அது பொருத்தமற்ற உதாரணமாக ஆகிவிடும். ஏற்கனவே தலைப்பு கொடுக்கப்பட்ட பயானுக்கு, பொறுமையாக அமர்ந்து, பொருத்தமான உதாரணத்தை யோசித்து மனதில் நிறுத்தி, பிறகு பயன்படுத்துங்கள். கேள்விக்கு பதில் சொல்லும்போது, ஏற்கனவே சொல்லிய உதாரணங்களை பயன்படுத்துவது, புதியவர்களுக்கு பாதுகாப்பானது. உதாரணங்கள் என்பது, புரிவதற்கு குழப்பமான செய்தியை எளிதாக புரியவைப்பதற்குத்தான். எளிதாக புரியக்கூடிய செய்தியை குழப்புவதற்கு அல்ல.
v எடுத்துக்காட்டுகளும் மிக முக்கியமானவை
எடுத்துக்காட்டுகளை சொல்வதில். பெரும்பாலான இளம் பிரச்சாரகர்கள் கவனம் செலுத்துவதில்லை. (உவமானம் என்ற பொருளில் பயன்படுத்துகிற) உதாரணங்கள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவிற்கு எடுத்துக்காட்டுகளும் முக்கியமானவை. ஒரு செயல் எப்படியெல்லாம் இருக்கமுடியும் என்று விளக்குவதே எடுத்துக்காட்டு எனப்படும். அதாவது, கோபப்படாதீர்கள் என்று சொல்லும்போது,
- மனைவி சரியாக சமைக்காவிட்டால் கோபப்படாதீர்கள்.
- கேட்டதை, கணவன் வாங்கித்தராவிட்டால் கோபப்படாதீர்கள்.
- யாராவது தெரியாமல் உங்கள்மீது இடித்துவிட்டால் கோபப்படாதீர்கள்.
என்று எந்த அறிவுரைக்கும், எடுத்துக்காட்டுகளைத் தர மறக்காதீர்கள். “சிறிய நற்செயலாக இருந்தாலும் அதற்கும் நன்மை உண்டு“ என்று செல்லும்போது, செய்யத்தகுந்த ஜந்தாறு சிறிய நற்செயல்களை எடுத்துக்கூறுங்கள். எடுத்துக்காட்டுகளை சொல்லும் போது தான், மக்களுக்கு, தான் செய்யும் தவறுகள் புரியும், செய்ய வேண்டிய நன்மைகளும் புரியும். சரியான எடுத்துக்காட்டுகள் தராத காரணத்தினால் தான், சாதாரண சட்டங்கள் கூட பலமக்களுக்கு சரியாக விளங்குவதில்லை.
Ì ”அல்லாஹ்வுக்காக வெறுக்கனும். அல்லாஹ்வுக்காக வெறுக்கனும்” என்று பத்து தடவை திரும்பத்திரும்பச் சொல்லும் பல பிரச்சாரகர்கள், அல்லாஹ்வுக்காக வெறுப்பது என்றால் என்ன, என்று எடுத்துக்காட்டுகளை சொல்வதில்லை. அப்படி சொல்லியிருந்தால், பலபேர், தீமை செய்யும் தனது உயிர் நண்பர்களின் நட்பை துண்டித்திருப்பார்கள். பர்தாவை பேணாத தன் மனைவியிடத்தில் பேசாமல் இருந்திருப்பார்கள்.
இப்படி எத்தனையோ தவறுகளை, தவறென்றே தெரியாமல் அங்கீகரிக்கும் அனைவருக்குமே, அல்லாஹ்வுக்காக வெறுக்கனும் என்பது நன்றாகவே தெரியும். எனவே எந்த அறிவுரையை சொன்னாலும், முடிந்தஅளவு அதை செயல்படுத்தத் தேவையான எடுத்துக்காட்டுகளை கூறுங்கள்.
v எடுத்துக்காட்டுகளையும், நடைமுறை கருத்துக்களையும் சேகரியுங்கள்.
பிரச்சார களத்திற்கு வந்து விட்டால், இனி நீங்கள் படிப்பது, கேள்விப்படுவது என நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு விஷயத்தையும், இதனை பயானுக்கு ஒரு பாயிண்டாக பயன்படுத்த முடியுமா? என்ற கோணத்தில் பார்க்க ஆரம்பித்துவிடுங்கள். மக்களை ஈர்க்கும் எதாவது ஒரு செய்தி கிடைத்துவிட்டால், ஒரு இலட்சிய பேச்சாளரின் உள்ளத்தில் அந்த செய்தி ரீங்காரமிட்டு, ஓலமிடவேண்டும். அதனை எதாவது பயானில் பயன்படுத்தும் வரை, அந்த செய்தி உள்ளத்தை விட்டு அகலக்கூடாது.
உதாரணமாக, ஒருவர் தன் மகனை மருத்துவக்கல்லூரியில் சேர்த்துவிட்டு அதற்காக சிரமப்பட்டதை சொல்லும்போது, ”என் மகன் ஒருநாள் மனித எலும்புக்கூடு வேண்டும்” என்றான், உடனே சுடுகாட்டிற்கு சென்று அன்று எரிக்கப்பட்ட ஒரு மனிதனின் எலும்புக்கூட்டை பத்தாயிரம் கொடுத்து வாங்கி வந்தேன்” என்று உங்களிடம் சொன்னால், இந்த தகவலை கேட்கும் நீங்கள், உடனே இதனை எப்படி அடுத்த பயானுக்கு பயன்படுத்த முடியும் என்று சிந்தித்து இந்த செய்தியை குறித்துக்கொள்ளுங்கள்.
”அமெரிக்காவில் ஒரு வீட்டில் திருடச்சென்ற ஒரு திருடன், டிவியை பார்த்துக்கொண்டே மறந்து தூங்கி மாட்டிக்கொண்டான்” என்ற செய்தியை படிக்கிறீர்கள் எனில், இதனை தொலைக்காட்சி மீது மோகம் என்ற ரீதியில் பயன்படுத்தலாம். உத்திரகாண்ட் மாநிலத்தில் வெள்ளம் எற்பட்டபோது, சாமியார்கள் திருடர்களாக மாறிய சம்பவத்தை படிக்கும் போது, இதனை ”இறையச்சம்” என்ற தலைப்பில் பேசும் போது பயன்படுத்தலாம், என்று உங்களுக்கு கிடைக்கும் எந்த செய்தியையும் பயானில் பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள்.
மனிதன் மறதியாளன். எனவே, உங்களுக்கென்று ஒரு பயான் நோட்டை(Diary) வைத்து அவ்வப்போது கிடைப்பதை அதில் எழுதிக்கொள்ளுங்கள். கனினியில் சேமிப்பது சிறந்தது. அவ்வப்போது கிடைக்கும் செய்திகள் மட்டுமல்லாமல், நீங்கள் ஆற்றிய உரையின் முழு குறிப்புகளையும் சேமிப்பது மிகவும் நல்லது. ”எனக்கு ஒரு செய்தி கிடைத்துவிட்டால், வருடங்கள் ஜம்பது கடந்தாலும், அந்த செய்தி என்னைவிட்டு போய்விடக்கூடாது” என்ற ரீதியில் சேமிக்க ஆரம்பியுங்கள்.
v வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள் – பேசுங்கள்
சொல்லும் செய்திகளில் பலவற்றில். ஒரிரு செய்திகளை வித்தியாசமான கோணத்தில் அறிமுகப்படுத்துங்கள். எந்த ஒரு ஹதீஸிலும் ஒரே ஒரு கருத்து மட்டும் இருக்காது. ஒன்றிற்கும் மேற்பட்ட கருத்துக்கள், சட்டங்கள் அடங்கியிருக்கும். அதை எடுத்துச்சொல்லுங்கள்.
ஆதம் நபியிடத்தில் அல்லாஹ் அந்த மரத்தை நெருங்காதே என்று சொன்ன செய்தி, என்றைக்கு பேசினாலும் ஒரே செய்தி தான். இறைவனின் பேச்சை கேட்காமல், ஷைத்தானின் பேச்சை கேட்டால் நமக்கு துன்பம் தான் வரும். என்பது தான் இதன் அடிப்படை அறிவுரை. இருப்பினும், இதே செய்தியை வேறுவேறு கோணத்தில் சிந்தித்து, புதுப்புது அறிவுரைகளையும், கருத்துக்களையும் பெறமுடியும். உதாரணமாக)
- ஆதம் நபிக்கு இறைவன் தந்தது, நமக்கு தந்தது போல பல நூறு கட்டளையா? ஒரே ஒரு கட்டளை. அதை அவரால் செயல்படுத்தமுடியவில்லை.
- கட்டளையை மீறுவார் என்று இறைவனுக்கு தெரியாதா? தெரியும். தெரிந்தே இறைவன் சோதித்திருக்கிறான். நம்மையும் இதுபோன்று சோதிப்பான்.
- இறைவனது கரத்தால் படைக்கப்பட்ட, இறைவனின் வல்லமையை நேரில் கண்ட ஆதம் நபியே தவறு செய்துவிட்டார். எனவே பாவம் என்ற இயற்கை குணத்திற்கு எந்த மனிதனும் அற்பாற்பட்டவனல்ல.
- கனி உண்ணப்படக்கூடாது என்று இறைவன் விரும்பியிருந்தால், அந்த மரத்தை படைக்காமலேயே இருந்திருக்கலாம். அந்த தோட்டத்தில் ஆதம் நபியை அனுப்பாமல் இருந்திருக்கலாம். குறைந்த பட்சம், அந்த மரத்தை பற்றி எதுவும் சொல்லாமலாவது இருந்திருக்கலாம். சொன்னால் தான், ”என்ன”-வென்று பார்க்கத் தோன்றும்.
- மரத்தை நெருங்குவது. கனியை உண்பது என்பது, கொலையை போல, விபச்சாரத்தை போல பெரிய பாரதூரமான விஷயமா என்று நாம் நினைப்போம். அல்லாஹ்வை பொறுத்த வரையில், இது அவனுடைய கட்டளை.
என்று தெரிந்த ஒரு செய்தியையே, பல கோணத்தில் சிந்தித்து விளக்கமுடியும். இப்படி செய்யும்போது, தெரிந்த செய்தியை கேட்பதனால் ஏற்படும் சலிப்பு குறையும். எனவே, எந்த சம்பவத்தையும் மக்அப் செய்த மாணவன், வாத்தியாரிடம் ஒப்பிப்பது போன்று சொல்லாதீர்கள்.
ஒவ்வொரு முறை பேசும் போதும், ஒவ்வொரு கோணத்தில் பேசுவது என்பது சிரமமான காரியமாக இருந்தாலும், குறைந்த பட்சம், உற்சாசமாக இருக்கும் போதாவது, அதிகமான மக்கள் கேட்கும் போதாவது, ஓரிரு செய்திகளை வித்தியாசமான கோணத்தில் அறிமுகப்படுத்திப் பேசுங்கள்.
பிரபலமான அறிஞர்களின் பேச்சை நுணுக்கமாக கவனிப்பவர்கள் இந்த முறையை விளங்க முடியும். ஒரே குர்ஆன் வசனத்தை 10 வருடத்திற்கு முன்னர் பேசிய பேச்சையும், இன்று பேசும் பேச்சையும் ஒப்பிட்டால் இரண்டிலும், ஒரே வசனத்தை விளக்கும் முறைகள் வேறுபட்டிருக்கும். உதாரணமாக,
- மரணம் வருவதற்கு முன்னர் செலவு செய் என்றால், இப்போதே செய்-னு அர்த்தம். ஏன்.. மரணம் எப்ப வரும்-னு யாருக்காவது தெரியுமா?
- பெண்களுக்கு தரவேண்டிய சொத்துரிமை தராதது கூட, வரதட்சனைக்கு காரணமாகி விடுகிறது. மனைவிக்கு, சொத்துல பங்கு வரும்னா, எதுக்கு வரதட்சனை கேட்குறான்?
என்று ஒரே தலைப்பை நேற்று ஒருகோணத்திலும், இன்று ஒருகோணத்திலும் பேசும்போது. புதுசெய்தியாக தோற்றமளிப்பதால் கேட்பதற்கு ஆர்வமாக இருக்கும். இதுபோன்று பல்வேறு அறிஞர்களின் ஏராளமான செய்திகள் உள்ளன. புதியவர்கள், ஆரம்பத்தில் அவற்றை எடுத்து பயன்படுத்துங்கள். அனுபவம் ஆகஆக நீங்களாக சிந்தித்து பேசுங்கள். வித்தியாசமான கோணத்தில் பேசத்தெரியாதவர்கள், புதியபுதிய உதாரணங்களை கொண்டு விளக்கிப்பேசுவது, இந்த இழப்பை ஈடுகட்டும்.
v அதிகம் கேள்விப்படாத ஹதீஸ்களை பயன்படுத்துங்கள்
கேட்டதையே திரும்பத்திரும்ப கேட்பதற்கு, யாருக்கும் லேசாக சலிப்புத் தட்டும், என்ற காரணத்தினால் சொன்னதையே திரும்பச்சொன்னாலும், வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை முன்னர் பார்த்தோம்.
அதே போல, புதுப்புது ஹதீஸ்களை அவ்வப்போது பயன்படுத்துங்கள். அரபி கிதாபுகளை பார்த்து, ஹதீஸ் தரம் பார்த்து, புதுப்புது ஹதீஸ்களை கூற இயலாதவர்கள், மக்கள் அதிகம் கேள்விப்படாத ஹதீஸ்களை, பழைய நூல்களிலிருந்தும், இணையத்தில் உள்ள கட்டுரைகளிலிருந்தும் படித்து, அவற்றை பயன்படுத்தலாம். சரியானது தானா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். கேள்விப்படாத ஹதீஸ்களை கேட்பதற்கு மக்கள் அதிகம் விரும்புவார்கள்.
Ì முக்கியமான உரைகளில், முடிந்தஅளவு ஒரேஒரு புது ஹதீஸையாவது பயன்படுத்துங்கள். புகாரி, முஸ்லிம் தழிழாக்கங்கள் இருக்கின்றன. அதில் உள்ள ஹதீஸ்களில் பாதிக்கும் மேற்பட்டவைகளை மக்கள் அறிந்திருந்தாலும், அதிகம் அறியப்படாத ஹதீஸ்களும் இருக்கின்றன. எனவே அதிலிருந்து கூட கேள்விப்படாத ஹதீஸ்களை எடுத்துப் பயன்படுத்த முடியும்.
v துணிச்சலாக, உறுதியாக பேசுவது, நம்பிக்கையை அதிகப்படுத்தும்.
எந்த கருத்தையும், துணிச்சலாக பேசுவதை மக்கள் விரும்புவார்கள். நாம் சொல்வது சரி என்று உறுதியாக நம்பி, அதனால் ஈர்க்கப்படுவார்கள். உதாரணமாக)
- சூனியம் இருந்தால் எனக்கு செய்யுங்க. என் முடி, ஆடை என எதை வேண்டுமானலும் தர்றேன். நானே வர்றேன். முடியுமா? கண்டிப்பாக முடியாது.
- எந்த சுடுகாட்டிற்கு எத்தனை மணிக்கு வந்து படுக்கனும். சொல்லுங்க. படுக்கிறேன். பேய் இருந்தால், என்னை கொல்லட்டும். பார்க்கலாம்.
- அல்லாஹ்விடத்தில் கண்ணீர்விட்டு, துஆ கேட்டுப்பாருங்கள். கண்டிப்பாக ஏற்றுக்கொள்வான். உள்ளத்தின் பாரம் கண்டிப்பாக குறையும்.
- ”அஊதுபில்லாஹி மினஷ்ஷத்தானிர் ரஜீம்” என்று சொல்லிப்பாருங்கள். ஷைத்தானின் ஊசலாட்டம் குறைவதை கண்கூடாக பார்ப்பீர்கள்.
- குர்ஆனில் உள்ளது போன்ற ஒரே ஒரு வசனத்தை யாராவது கொண்டுவரமுடியுமா? உலகமே ஒன்றுசேர்ந்தாலும் முடியாது.
என்பது போன்ற துணிச்சலான பேச்சுக்கள், பிரச்சாரத்தில் வீரியத்தை ஏற்படுத்தும். துணிச்சலான பேச்சுக்களை பேசும் போது, பேச்சு அதிரடியாக, கம்பீரமாக இருக்கவேண்டும். பொதுவாக, அதிரடியாக பேசுபவருக்கு எங்குமே தனிமதிப்பு உண்டு. அந்த மதிப்பை பயன்படுத்தி இஸ்லாத்தை போதிக்கவேண்டியது நம் கடமை.
Ì உறுதியான பேச்சு என்றதும் என் நினைவிற்கு வருவது, ஈரான் அதிபர் அஹமதுநிஜாத் அவர்கள், கடந்த 2012-ல் ஜ.நா சபையில் பேசிய பேச்சுக்கள் தான். உலகின் அனைத்து நாட்டு தலைவர்களும் கூடியிருக்கும் சபையில், அல்லாஹ்வை புகழ்ந்து, நபியை நினைவுகூர்ந்து, இஸ்லாத்தை முன்னிலைப்படுத்தி பேசியவர். அமெரிக்காவை தோலுரித்துக்காட்டியவர். உலகநாடுகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வரிசையாக சொல்லும் போது, ”முதலில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள்” என்று துணிச்சலாக பேசியதை காணும் எவரும், அவரை பாராட்டாமல் இருக்கமுடியாது. (Policymic (Michael Luciano) 26 Sept, 2012 Article)
v தவறான எதிர்கருத்தை சாடிப்பேசுவது
நாம் யாரை விரோதியாக நினைக்கிறோமோ அவரை பற்றி யாராவது நாலு வார்த்தை நறுக்குனு கேட்டால், நமக்கு உற்சாகமாக இருக்கும். இது எல்லோருக்குமே உள்ள இயல்பு. இந்த இயல்பை நல்ல செய்திகளை சொல்வதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்ஹப்களில், தரீக்கா – சூஃபியிஸ கொள்கைளில், உள்ள கருத்துக்களினால் ஏற்படும் தீமைகளை சாடிப்பேசுங்கள். சஹாபாக்களை பின்பற்றுவதால் ஏற்படும் விபரீதங்களை சாடிப்பேசுங்கள். இது மிகமிக அற்புதமான தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக)
- தான் காற்று விட்டுவிட்டு, பிறர் தான் காற்றுவிட்டார் என்று சொல்லி புளங்காயிதம் அடையும் அவ்லியாக்கள்.
- வலி தெரியக்கூடாது என்பதற்காக, தொழுகையில் ஆப்ரேஷன் செய்த பெரியார்கள், இஸ்லாத்திற்கு முரணான நாகூர் ஹனீஃபா பாடல்கள்.
- காய்ச்சலிடம் பேச்சுவார்த்தை நடத்திய அப்துல் காதிர் ஜீலானி.
- மத்ஹபுகள் கற்றுத்தரும் சிக்கலின்றி திருடுவதற்குறிய வழிமுறைகள், ஜகாத் கொடுக்காமலேயே காலத்தை ஓட்ட நெறிமுறைகள்(?), இமாமை தேர்ந்தெடுக்க இமாமின் மனைவிகளுக்கு அழகிப்பேட்டி! போன்றவை.
இதுபோன்ற சாடல் பேச்சுக்கள், மக்களை நன்றாக கவரும். உற்சாகத்தை தரும். உங்கள் பயானில் வெறும் சட்டங்களை மட்டும் வரிசையாக சொல்லிக் கொண்டிருக்காமல், இதுபோன்ற தவறான கொள்கைகளை சாடிப்பேசும் சாடல் பேச்சுக்களை மறந்துவிடாதீர்கள்.
அதே சமயம், மத்ஹபை சாடிப்பேசும்போது, மத்ஹப்பை எதிர்க்கும் மக்களுக்குத்தான் உற்சாகமாக இருக்கும். மத்ஹபை பின்பற்றும் மக்கள், அதை நேசிக்கும் மக்களுக்கு உங்களது பேச்சு வெறுப்பூட்டும். அதை சரிசெய்வதற்கும் ஒரு வழி இருக்கிறது. பொதுவாக யாரையாவது திட்டினால், தவறு அவரிடத்தில் இருந்தால் கூட, அவருக்கு கோபம் வரும்.
திட்டிவிட்டு, நான் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? சிந்தித்துப்பாருங்கள், என்பது போன்ற வரிகளை பயன்படுத்திவிட்டால், மத்ஹப்வாதிக்கு கோபம் வந்தாலும், நீங்கள் கேட்ட கேள்விகள் அவரை சிந்திக்கத்தூண்டும்.
Ì இப்படியும், விமர்சிக்கலாம் – யாரிடத்தில் பாராட்டுவதற்கு சில நல்லவிஷயங்கள் இருக்கிறதோ முதலில் அதனை பாராட்டிவிட்டு பிறகு, ”இது சரியாக இருந்தாலும், நீங்கள் செய்யும் பித்அத் சரியா?” என்ற வகையில் விமர்சனம் செய்வது, நியாயமான விமர்சனமாக காட்சியளிக்கும்.
உதாரணமாக) தப்லீக் ஜமாஅத்தை பற்றி விமர்சிக்கும் போது. அவர்கள் செய்யும் நல்ல செயல்களை பாராட்டி ஆரம்பித்து, பிறகு அவர்களின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும். இது, அவர்கள் திருந்த வழியாக அமையும். அதுபோல, மத்ஹப்வாதிகளை திட்டுவதற்கு முன்னால், ”இந்த பகுதி ஜமாத்தினர், ஏழைகளுக்கு உதவி செய்கின்றர். இவர்கள் நல்ல மக்கள்” என்று அவர்களிடத்தில் உள்ள நல்ல விஷயங்களை கூறிவிட்டு, பிறகு குறைகளை சுட்டிக்காட்டலாம். இது நடுநிலையான விமர்சனமாக இருக்கும். எல்லா நேரங்களிலும் இது சாத்தியப்படாது என்றாலும் வாய்ப்பு கிடைக்கும் போது, செயல்படுத்துங்கள்.
v இஸ்லாத்தின் மீதான அவதூறுகளை களையெடுப்பது அவசியம்.
தவறான எதிர்கருத்தை சாடிப்பேசுவதன் தொடர்ச்சியாக, இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் அவதூறான கருத்துக்களை களையெடுப்பது மிகமுக்கிய பணியாக உள்ளது. குறிப்பாக, அடிமைப்பெண்கள், நபியின் பலதிருமணம், போர்க்கள சட்டங்கள் போன்றவற்றை, அவற்றை படிக்கும் ஒருவர் இஸ்லாத்தை வெறுக்கும் அளவிற்கு, தவறான முறையில் சித்தரிக்கின்றனர்.
அதுபோல குர்ஆனின் அறிவியல் செய்திகளை பொறுக்கமுடியாமல், சில இணையதளங்கள் சேற்றை வாரி இறைக்கின்றன. உதாரணமாக, குர்ஆன் கூறும் ”கடல்களுக்கு மத்தியில் உள்ள தடுப்பை”, தவறு என்று விமர்சிக்கும் போது, ”நாம் பார்த்தவரை எந்த தடுப்பையும் காணவில்லை. இங்கிருக்கும் மீன் அங்கு செல்கிறது. அங்கிருக்கும் முதலை இங்கு வருகிறது” என்று சொல்லி, நம்மை மூக்கால் சிரிக்க வைக்கின்றனர். அதற்கு ”லைக்” போடுவதற்கும் பத்து லூசுகள் இருக்கின்றன.
எனவே, இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குரிய பதில்களை, அடிமைப்பெண்கள், பலதாரமணம் போன்றவற்றின் இஸ்லாமிய பார்வைகளை விளக்குவது எதிரிகளுக்குரிய பதிலடியாக இருப்பது மட்டுமல்லாமல், மக்களை ஈர்க்கும் செய்திகளாகவும் இருக்கும்.
Ì இவற்றை எடுத்துச்சொல்லும் போது, வெறுமனே ”இப்படியெல்லாம் எழுதுகிறார்கள்” என்று நிறுத்திக்கொள்ளாமல், அதற்குரிய நியாயமான பதில்களை தரவேண்டும். பதில் தர நேரம் இருக்காது எனில், அந்த செய்தியை தொடதீர்கள்.
v உணர்வுப்பூர்வமான, உருக்கமான செய்திகளை பயன்படுத்துங்கள்.
ஒரு உரை பிறரை கவருவதற்கும், பிறரால் அங்கீகரிக்கப்படுவதற்கும் உள்ள மிகஎளிய வழி, உணர்ப்பூர்வமான செய்திகளை பயன்படுத்துவது தான். உணர்வுபூர்வமான மற்றும் உருக்கமான செய்திகளை பயன்படுத்தும் போது, வயது வித்தியாசம் இல்லாமல் மக்களை ஈர்க்கமுடியும். நாற்காலியில் தொய்வாக சாய்ந்து உட்கார்ந்திருக்கும் மனிதன், அதன் விளம்பில் வந்து அமர்ந்து காதுகொடுத்து கேட்பான். நீங்கள் சொல்லும் செய்தியில் ஒரு வார்த்தை கூட விட்டுவிடாமல், கவனமாக கேட்பார்கள். உதாரணமாக)
- நோபாளத்தில் தலாக் கேட்ட மனைவியின் முகத்தில் ஆசிட் வீசியது.
- இங்கிலாந்தில், பள்ளிவாசல்களாக மாறிவரும் சர்ச்சுகள்.
- இங்கிலாந்து பிரமரின் வீட்டிற்குள் நுழைந்த இஸ்லாம்.
- அயோத்தி அகோரா இந்து துறவிகளின் இலட்சணம்.
- நபி தாயிஃப் நகரிலிருந்து துரத்தப்பட்ட நிகழ்வு, அன்சாரிகளிடம் ஆற்றிய உருக்கமான உரை, நபியின் மரணநேர சம்பவங்கள், ஆயிஷாவின் மீது சுமத்தப்பட்ட களங்கம், பிலால், அம்மார், அபூதர் போன்றோர் பட்ட துன்பங்கள், நம் ஜமாத் மக்கள் ஆரம்பத்தில் பட்ட சிரமங்கள்.
- பாலஸ்தீன காசாவில் கொன்று குவிக்கப்படும் முஸ்லிம் குழந்தைகள்.
- குஜராத்திலே முஸ்லிம் குழந்தைகளை கொன்று குவித்தது!
என்பது போன்ற கண்கலங்க வைக்கும் உணர்வுபூர்வமான இஸ்லாமிய செய்திகள் ஏராளமாக உள்ளன. அவற்றை பயன்படுத்துங்கள். உங்கள் பயான் விருவிருப்பானதாக ஆகிவிடும். இதில் உள்ள மற்றொரு நன்மை, இதன் மூலமாக சொல்லப்படும் அறிவுரையை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். மறக்கவும் மாட்டார்கள். நபியவர்களின் உரையைப் பற்றி அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள்.
قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطْبَةً مَا سَمِعْتُ مِثْلَهَا قَطُّ قَالَ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا
”(எங்களுக்கு) நபி(ஸல்) அவர்கள், ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. அதில் நான் கேட்டதை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாக சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள்” என்றார்கள். (புகாரி: 4621)
மக்களை கண்கலங்க வைக்கும் செய்திகளுக்கு என்றைக்குமே மதிப்புண்டு. எனினும், ஒருமணிநேர உரையில் இதுபோன்ற செய்திகள், அதிகபட்சம் ஒன்றோ, இரண்டோ சொல்லுங்கள். குறைவாக இருந்தால் தான் அதற்கு மதிப்பிருக்கும். அதை நினைவில் வைப்பார்கள். இதுபோல பத்து செய்திகளை பயன்படுத்தினால், எதுவும் நினைவில் இருக்காது. எதற்கும் மதிப்பிருக்காது.
v ஆச்சர்யமான செய்திகளை பயன்படுத்துங்கள்.
மக்களின் ரசனையைத்தூண்டும் விஷயங்களில் ஆச்சர்யமான செய்திகளும், ஆச்சர்யக்குறிகளை பயன்படுத்துவதும் ஒன்று. அதாவது முதலில், இறைவனது கருனையை பற்றியோ, படைப்பை பற்றியோ ஆச்சர்யமான செய்திகளை சுவைபட சொல்லவேண்டும். உதாரணமாக, இறைவன் நமக்கு தந்திருக்கும் கண்ணை பற்றி, அது வேலை செய்யும் விதம் பற்றி விளக்கவேண்டும். பிறகு, அந்த செய்தியின் சுவையை நாம் ரசிப்பது போல, ”சுப்ஹானல்லாஹ்….…… இந்த கண்ணுக்காக நாம என்ன நன்றி செலுத்துனோம்” என்று ஆச்சர்யப்பட்டு சொல்வது, கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். முக்கியமாக மக்களையும் அந்த செய்தியை ரசிக்க வைக்கும். இந்த கருத்தின் ஆழத்தை உணர, ஒரு உதாரணத்தைப் பாருங்கள்,
தென்அமெரிக்காவின் அமேசான் ஆற்றில் அதிகமாக வாழும் மின்சார ஈல் (ElectricEel) என்ற மீனின் உடலில் இன்றை நவீன எலெக்ட்ரிக்கல் சாதனங்கள் அனைத்தும் உள்ளன. Battery, Transformer, SurgeProducer, செல்போனில் உள்ளதுபோன்ற Signal transmitter, Receiver என நவீன யுகத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்புகள் என்று எதையெல்லாம் பிதற்றிக்கொள்கிறோமோ, அதையெல்லாம் என்றைக்கோ இறைவன் படைத்து, இந்த மீனுக்குள்ளே வைத்திருக்கிறான்.
இந்த மீன் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் விதம், அதை சேமிக்கும் பேட்டரி, தன் இரையை கொல்லப்பயன்படுத்தும் 650V மின்சாரம், செல்போன் டவர்களை போன்று சிக்னல்களை அனுப்பிப் பெறும் விதங்கள் போன்றவற்றை சொல்ல இந்த புத்தகம் போதாது. இதன் உடலில் உள்ள எலக்ட்ரானிக் மின்அழுத்தமாற்றி, மனிதனால் இன்றுவரை சாத்தியப்படாத விஷயம்.
இதையெல்லாம் சுவைபட சொல்லிவிட்டு, ”அல்லாஹு அக்பர்…. ……” என்று முகத்தில் சந்தோஷம் வெளிப்பட சொல்லும்போது, அந்த சுவையை பிறரும் உணரமுடியும். பிறகு, ”எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்பன போன்ற குர்ஆன் வசனங்களை சொல்லவேண்டிய விதத்தில் சொல்லிப்பாருங்கள். மேய்சிலிர்த்து. கண்கலங்காத எவருமே இருக்கமாட்டார். இதுபோன்ற செய்திகளும், ஆச்சர்யக்குறிகளும் சாதாரண பயானை, சுவைமிகுந்த பயானாக மாற்றுகிறது. ”எப்போது பார்த்தாலும் சொன்னதையே சொல்கிறார்” என்று உங்களை மீது விமர்சனம் இருந்தால், இதுபோன்ற வித்தியாசமான செய்திகளை சொல்லி அந்த விமர்சனத்திலிருந்து விடுபடுங்கள்.
Ì அருமை காரணி (Wow Factor – வாவ் ஃபேக்டர்) என்றால் என்ன?
ஆச்சர்யப்படத்தக்க செய்திகள் பயன்படுத்தப்பட்ட எந்த உரையும் மக்களை கவராமல் இருப்பதில்லை. ஒரு உரையில் பயன்படுத்தப்படும் ஆச்சர்யமான செய்திகளின் விகிதாசாரத்தை(அளவை) Wow Factor என்று அழைக்கிறார்கள். பேச்சுக்கலை பற்றிய நூல்களில் இதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.
v நகைச்சுவையை பயன்படுத்துவதில் தவறில்லை.
பேச்சின் நடுவே நகைச்சுவையை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. தூங்கிவழியத் தயாராகும் மக்களை விழிப்படையச் செய்யவும், மந்தமான மக்களுக்கு புத்துணர்ச்சியூட்டவும், நகைச்சுவை பயன்படுகிறது, நகைச்சுயை பயன்படுத்துபவர் மக்களின் விருப்பத்திற்கு உரியவராகிவிடுகிறார். நகைச்சுவை நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்துகிறது, சிரமமானதை இலகுவாக காண்பிக்க உதவுகிறது. சிலநேரங்களில் சிந்திக்கவும் தூண்டுகிறது. நகைச்சுவை இரண்டு வகைகளில் உள்ளது.
ã செய்தியோடு கலந்த நகைச்சுவை:
நகைச்சுவை, செய்தியோடு இணைந்ததாக இருந்தால், அது பாரட்டப்படவேண்டியது. ஏனெனில் நகைச்சுவைக்கென தனியாக நேரம் ஒதுக்கவேண்டியதில்லை. மேலும், நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட செய்தியும், மனதில் நன்றாக பதியும். உதாரணமாக, ”கெட்ட கனவு வந்து விழித்தால், பாங்கு சொல்ல வேண்டும் என்பதற்காக அருகில் உள்ள பள்ளிக்கு சென்று மைக்கை பிடித்து, நைட் 2 மணிக்கு பாங்கு சொல்லிவிடக்கூடாது” என்று, சொல்லும் சட்டத்தோடு கலந்து நகைச்சுவையை சொல்வது. இது செய்தியோடு கலந்த நகைச்சுவை முறை.
ã செய்தியோடு கலக்காத தனி நகைச்சுவை:
செய்திகளோடு கலக்காமல், ஏதோ இரண்டு நகைச்சுவையை படித்துக்கொண்டு வந்து செய்திகளுக்கு நடுவில் பயன்படுத்தினால், ஒட்டவைத்தது போல இருக்கும். இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இந்த போக்கையும் அங்கீகரித்துக் கொள்கிறார்கள். நகைச்சுவையை சொல்லும்போது கீழ்காணும் அறிவுரைகளை நினைவில் வையுங்கள். நகைச்சுவை பற்றி எழுதப்பட்ட பல்வேறு நூல்களிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் இரத்தினச்சுருக்கமாக இங்கே தரப்பட்டுள்ளன.
நகைச்சுவையை பயன்படுத்தும் வழிமுறைகள்:
- நகைச்சுவையை சொல்ல ஆரம்பிக்கும்போதே, முகத்தில் அதற்கு தேவையான முகமாற்றத்தை கொண்டு வாருங்கள். நகைச்சுவைதான் சொல்லப்போகிறோம் என்று அறிவிப்பது நல்லது. உதாரணமாக, ”ஒரு நகைச்சுவை சொல்லுவாங்க…, இப்டி தான் ஒரு ஊர்ல…..” என்பதுபோல ஆரம்பித்து, மக்களை நகைச்சுவையை ரசிக்கத் தயாராக்குவது பலஅனுபவசாலிகளின் வழிமுறை.
- நகைச்சுவை சொன்னவுடன், மக்கள் சிரித்தால் நாமும் சிரிக்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கக்கூடாது. முதலில் உங்கள் முகத்திலிருந்து தான் புன்னகை வெளிப்படவேண்டும். பலபேர் உங்களின் முகமாற்றத்தை பார்த்தபிறகே சிரிக்க ஆரம்பிப்பார்கள். எனவே புன்முறுவலோடு நகைச்சுவை சொல்லஆரம்பித்து, சொன்னபிறகு, மறக்காமல் சிரிப்பை வெளிப்படுத்துங்கள்.
- நகைச்சுவை சொல்லிமுடித்த உடனேயே அடுத்த செய்திக்கு போய்விடாமல், சொன்ன நகைச்சுவையை ரசிப்பதற்காக இரண்டு, மூன்று வினாடிகள் தாமதித்து அடுத்த செய்தியை சொல்லுங்கள்.
- நகைச்சுவையின் முக்கியபகுதியே அதன் இறுதிப்பகுதிதான். அதை பன்ச்லைன் என்று அழைப்பார்கள். அந்த பன்ச்லைனை மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். பன்ச்லைனை சரியான நேரத்தில் சரியான தொனியில் சொல்லும்போது தான் நகைச்சுவை ரசிக்கும்படியாக இருக்கும்.
- நகைச்சுவையில் பயன்படுத்தப்படும் கதாபாத்திரங்களின் பெயர்கள், ராமச்சந்திரன், மதியழகன், அன்வர்பாஷா என்பது போன்று சீரியஸாக இல்லாமல், சர்தார்ஜி, அம்மாவாசை, ஆல்இன்ஆல் அழகுராஜா, ஓனான்டி, மன்னரே-அமைச்சரே, கோனங்கி, சோனங்கி என்பது போல் இருக்கவேண்டும்.
- யோசித்து சொல்வதாக இருந்தால், நகைச்சுவையே சொல்லாதீர்கள். யோசித்து சொன்னால் நகைச்சுவை சிரிக்கும்படி இருக்காது.
- சில செய்திகளுக்குப் பின்னால் மக்களே நகைச்சுவையை எதிர்பார்ப்பார்கள். உதாரணமாக, தொழுகையில் வேறுநினைவு வந்தால் இடதுபுறம் துப்பவேண்டுமென்ற ஹதீஸ், நரகிலிருந்து கடைசியாக சொர்க்கம் செல்பவனின் ஹதீஸ், பிஸ்மில்லாஹ்வுக்கு பதில் 786, குடிகாரன் தெருவில் நடக்கும் விதங்கள், பெண்கள் டிவி பார்ப்பது, போன்ற செய்திகளில் மக்களே நகைச்சுவையை எதிர்பார்ப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் நகைச்சுவையை சொல்லாமல் இருப்பது, பயானில் குறையுள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
- ஒரு நகைச்சுவைக்குள் இன்னொரு நகைச்சுவை இடம்பெறலாம். ஆனால் நகைச்சுவைக்குள் தேவையில்லா வேறு தகவல்கள் இடம்பெறக்கூடாது. நகைச்சுவை சுருக்கமாக இருக்கவேண்டும்.
- எல்லா நகைச்சுவைக்கும் மக்கள் ஆரவாரமாக சிரிப்பது கிடையாது. பல நேரங்களில் லேசான புன்னகை மட்டும் தான் வெளிப்படும். எனவே மக்களின் சிரிப்பு சப்தம் இல்லாததை கண்டு நம்பிக்கையிழக்க வேண்டாம்.
- நகைச்சுவையை மெருகூட்டுவதற்கு, அந்த நகைச்சுவையை பலதடவை சொல்லிப்பார்த்து தகுந்த வார்த்தைகளை கொண்டு மறுஆக்கம் (Redefine) செய்யவேண்டும். உதாரணமாக,
முதல் ஆக்கம் | பெண்கள் பல்லை காட்டிக்கிட்டு, பால்காரன்ட பேசிட்டு இருப்பாங்க. |
மறு
ஆக்கம்-1) |
பெண்கள் பல்லை காட்டிக்கிட்டு, பால்காரன்ட, ”என்னன்னே! பால்ல தண்ணீ ஊத்துனிங்களா? இல்ல தண்ணியில பாலை ஊத்துனிங்களா?” னு பேசிட்டு இருப்பாங்க. |
மறு
ஆக்கம்-2) |
பெண்கள் காலைல ஈன்னு பல்லை காட்டிக்கிட்டு, பால்காரன்ட, ”என்ன பால்காரரே! சவுக்கியமா? வரவர பாலு மினரல் வாட்டர் மாதிரி இருக்கு. பால்ல தண்ணீ ஊத்துனிங்களா? இல்ல தண்ணியில பாலை ஊத்துனிங்களா?” னு கதைபேசிட்டு இருப்பாங்க. |
இவ்வாறு ரீடிஃபைன் செய்வது நகைச்சுவையை மெருகூட்டும். இதுபோன்ற விதிகளை கவனத்தில் கொண்டு நகைச்சுவை செய்தால், ரசிக்கும்படி இருக்கும். நகைச்சுவைக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. நகைச்சுவையில் நாட்டமுள்ளவர்கள், அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள். நேரமிருந்தால் அதற்கென்றே தனி நோட்டு போட்டு கொள்ளவும். அவ்வப்போது, கிடைக்கும் நல்ல நகைச்சுவையை அதில் எழுதிவைத்துக்கொண்டு, மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். பயானுக்கு கிளம்பும்போது பார்த்துக்கொள்ளுங்கள்.
Ì சிரிப்பு, மனிதனின் டி-செல்ஸ் மற்றும் ஹார்மோன்களை தூண்டி, அதன் மூலம் மனிதனை சுறுசுறுப்படையச் செய்கிறது, சிரிக்கும்போது, உடல் அதிகப்படியான ஆக்ஸிஜனை உள்வாங்குகிறது. இதனால் தசைகள் தளர்கின்றன. மன அழுத்தம் குறைகிறது. உடல் சோர்வு குறைகிறது. இரத்த ஒட்டம் சீராகிறது. எனவே சிரிப்பிற்கு பின்பு வரும் தகவல்களை, மூளை உடனடியாக கிரகித்துக்கொள்கிறது (மேற்கண்டவை, கலிபோர்னியாவின் லின்டா பல்கலைகழகத்தின் டாக்டர் லீ பெர்க் தலைமையிலான குழுவின் ஆய்வின் அடிப்படையில் திரட்டப்பட்ட தகவல்கள்)
v நகைச்சுவை சரி. படிப்பினை என்ன?
எப்போதுமே சீரியஸாகவே இருக்கும் ஒருசிலரும், முதியவர்களும் பெரும்பாலும் ஜோக் அடிப்பதை விரும்புவதில்லை. பயான்ல எதுக்கு ஜோக்கு என்று கேட்பார்கள். வாழ்க்கைக்கு பயன்படும் அறிவுரையோ, ஹதீஸோ சொல்லப்படும் என்ற எண்ணத்தில் பயானுக்கு வருவார்கள். பசிக்குத்தான் உணவு என்றாலும், ருசியும் தேவையாகத்தானே இருக்கிறது! எனவே, இவர்கள் விரும்பவில்லை என்பதற்காக, நகைச்சுவையை தவிர்க்க முடியாது.
இந்த பிரச்சனையை எதிர்கொள்ள, நகைச்சுவையை சொன்ன பிறகு, அது தொடர்பான அறிவுரையை உடனே சொல்லிவிடவேண்டும். நகைச்சுவை மற்றும் உலகச்செய்திகளின் இறுதியில் எந்த படிப்பினையும் இல்லாவிட்டால், ”சிரிக்க வைத்து நேரத்தை போக்குறாரு” என்று சிந்திப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். உண்மையும் அதுதான். கவனம் தேவை.
எனவே, நகைச்சுவைக்கு பிறகு அப்படியே அடுத்த செய்திக்கு போய்விடாமல், அந்த நகைச்சுவை போல் நம் நிலை ஆகிவிடக்கூடாது. கவனமாக இருங்கள். அல்லாஹ் இப்படி சொல்கிறான். ஹதீஸில் இப்படி இருக்கிறது, என்று அறிவுரை சொன்னால், ”ஜோக் அடிச்சாலும், மேட்டரை சரியா சொல்லிப்புட்டாரு” என்று ஒத்துக்கொள்வார்கள். ஜோக் அடித்ததை தவறென்று சொல்ல மனம் வராது. அதுபோல வெறும் நகைச்சுவையாக இல்லாமல், அறிவுரை கலந்த நகைச்சுவை சொல்வதையும் யாரும் தவறென்று கூறமாட்டார்கள்.
அதுபோல, மக்கள் நகைச்சுவையை வெறுக்கும் இன்னொரு சந்தர்ப்பம், சீரியஸான சம்பவம் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஜோக்அடிப்பது. நரகத்தை பற்றிய நகைச்சுவை தெரிகிறது என்ற காரணத்திற்காக, நரகத்தில் கிடைக்கும் தண்டனையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, ஜோக் அடிக்கக்கூடாது. சீரியஸான செய்தியை உள்வாங்கும் வகையில் தங்களை மாற்றிக்கொண்டு, பயானோடு ஒன்றி கவனிப்பவர்களுக்கு இந்த நகைச்சுவை வெறுப்பைத்தரும். கோர்வையில்லாத பேச்சுக்கு இது ஒரு உதாரணம். எனவே எதையும் இடமறிந்து பயன்படுத்துங்கள்.
v நகைச்சுவை பற்றிய மார்க்க சட்டங்கள்
நபி(ஸல்) அவர்கள் பிறரது நகைச்சுவையை கேட்டு சிரித்திருக்கிறார்கள். பிறரை சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள், எனவே சிரிப்பதற்கும் பிறரை சிரிக்க வைப்பதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது. எனினும், அதில் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ حُنَيْنٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُكْثِرُوا الضَّحِكَ فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ
அதிகமான நகைச்சுவை கூடாது – நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதிகமாக சிரிக்காதீர்கள் ஏனென்றால் அதிகமாக சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும். (இப்னுமாஜா 4183) எனவே, அதிகமாக சிரிப்பது மார்க்கத்தில் விரும்பத்தக்கதல்ல. மேலும் பயான் என்பது அறிவுரைக்காகத் தானேயன்றி சிரித்து நேரத்தை போக்குவதற்காக அல்ல.
எனவே செய்திகளோடு கலந்த நகைச்சுவையாக இருந்தால் ஒருமணிநேர உரையில் மூன்று, நான்கு பயன்படுத்தலாம். செய்திகளோடு கலக்காத நகைச்சுவையை, ஒரு பயானில் அதிகபட்சம் ஓன்றோ, இரண்டோ பயன்படுத்துங்கள். அதற்குமேல் கண்டிப்பாக வேண்டாம். பாயனை இனிப்பூட்டுவதற்காக மட்டும் நகைச்சுவையை பயன்படுத்துங்கள். மக்களை சிரிக்க வைத்து கைதட்டல் பெறுவதற்காக பயன்படுத்தக்கூடாது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ حَدَّثَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَيْلٌ لِلَّذِي يُحَدِّثُ بِالْحَدِيثِ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ فَيَكْذِبُ وَيْلٌ لَهُ وَيْلٌ لَهُ قَالَ وَفِي الْبَاب عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ
Ì பொய்யான சம்பங்கள் கூடாது – நடக்காத செயலை நடந்ததாக சொல்லி மக்களை சிரிக்கவைப்பவனை நபியவர்கள் எச்சரித்துள்ளார்கள். ”எவன் (ஒரு) கூட்டத்தினரை சிரிக்க வைப்பதற்காக பொய்யான செய்தியை கூறுகிறானோ அவனுக்கு கேடுதான். அவனுக்கு கேடுதான். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 2237)
நாம் சொல்லும் நகைச்சுவை சம்பவங்கள் பெரும்பாலும் நடந்தவையில்லையே! அவை பொய்யான செய்தியாக ஆகுமா? என்றால் ஆகாது. ”ஒரு ஊர்ல ஒரு சர்தார்ஜி இருந்தாராம். கடைக்கு போனாராம்” என்று நாம் சொல்லும் சம்பவங்களை, நடந்த உண்மை சம்பவம் என்று நாம் அவற்றை சொல்வதில்லை. மக்களும் அவ்வாறு நினைப்பதில்லை. ஒரு கற்பனை கதையாகவே நினைக்கிறார்கள். எனவே, நடக்காததை நடந்ததாக பொய் சொன்னதாக இது ஆகாது. மாறாக, ”நேற்று நான் பஸ்ல போகும் போது. ஓருத்தர் வந்தாரு…” என்று உண்மையாக நேற்று நடந்தது போலவே சொன்னால் அதுதான் பொய்யான செய்தி. அது கூடாது.
v நன்மை செய்யத் தூண்டிப் பேசுங்கள். (Persuasion)
பொதுவான சம்பவங்கள், வரலாறுகள், நாட்டுநடப்புகள் எல்லாம் சொல்லவேண்டும் தான். அதேநேரத்தில், அவற்றை சொல்லிவிட்டு, அதை பயன்படுத்தி நன்மை செய்யும்படி தூண்டிப்பேசவேண்டும். மக்களின் மீது அக்கறை கொண்ட பலஅழைப்பாளர்கள், ”இனிமேல் இந்த பாவத்தை செய்யமாட்டேன்னு சங்கல்பம் எடுங்கள்” என்பது போல மக்களை தூண்டிப்பேசுவதைப் பார்க்கலாம். இதை பலபேர் விரும்புவார்கள். உதாரணமாக,
- இனிமேல் புகைபிடிக்கமாட்டேன்னு சத்தியம் செய்யுங்க.
- முஸ்லிம் அல்லாத நண்பரை பள்ளிக்கு அழைச்சுட்டு வாங்க.
- முத்தவல்லி அடிச்சாலும் பரவாயில்லை-னு விரலசைங்க.
- பஸ்-ல சும்மா உட்கார்ந்திருக்கும் போது திக்ரு செய்யுங்க.
- நீங்க எத்தனை பேருக்கு இஸ்லாத்தை சொல்லியிருக்கீங்க?
- மாசத்துல ஒருத்தருக்காவது ஒரு குர்ஆன் வாங்கிக்கொடுங்க.
- லுஹர் தொழுதுட்டு போகும் போது, மிஸ்கீனுக்கு உணவு கொடுங்க.
- நபி கூட்டுதுஆ ஓதியிருக்காங்களான்னு உங்க ஹஜ்ரத்ட கேளுங்க.
- தொழாதவர்கள் மறுமையில் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகவேண்டும்!
என்பது போன்ற காரிய பேச்சுக்கள், மக்களை செயல்பட தூண்டும். எந்த பேச்சு அவர்களை செயல்பட வைக்கிறதோ, அதை விட நன்மை தரக்கூடிய பேச்சு வேறென்ன இருக்கிறது!
Ì உளவியல் ரீதியாக மற்றொரு நன்மையும் உண்டு. உங்கள் பேச்சினால் செயல்பட்ட மக்கள், இனிமேல் உங்கள் பேச்சை அதிகம் கவனம் செலுத்தி கேட்பார்கள். உதாரணமாக, நீங்கள் வழியுறுத்திய பிறகு, புகை பழக்கத்தை விட்டவர், சினிமா பார்ப்பதை விட்டவர், இனி நீங்கள் பேசும் பேச்சை அதிகம் விரும்பிக் கேட்பார்.
v கப்ரு, சொர்க்கம், நரகம், விசாரனையை பற்றி சொல்லுங்கள்
இஸ்லாமிய பயான் என்றாலே மறுமை, சொர்க்க நரகத்தை பற்றிபேசுவது தான். அதை தனியாக சொல்லவேண்டியதில்லை. ஆனால் தற்போது, நம்மவர்களின் உரைகளில் இதுபோன்ற அறிவுரைகள் குறைந்துவிட்டது. அறிவியல் செய்திகள், சட்டதிட்டங்கள், ஆய்வுக்கட்டுரைகள் போன்றவற்றையே அதிகமாக பேசுவதால், இதை தனியாக சொல்லவேண்டியிருக்கிறது.
இன்னும் சிலர் இதெல்லாம் பலநூறு தடவை கேட்டுகேட்டு புளித்தது தானே என்ற எண்ணத்தில் மேற்கண்டவற்றை சொல்வதற்கு தயங்குகின்றனர். இந்த எண்ணம் தவறானது. சொல்லுகிற விதத்தில் சொன்னால், இவையெல்லாம் எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது. நபியவர்கள் மனித உயிர் பிரியும் நேரத்தைப் பற்றி விளக்கிய போது, சஹாபாக்கள் தங்கள் தலையில் பறவைகள் அமர்ந்திருந்தால் எப்படி அசையாமல் இருப்பார்களோ, அப்படி அமைதியாக அந்த செய்தியை கவனித்தார்கள் என்று அஹமதில் வரும் ஹதீஸில் பார்க்கிறோம்.
பொதுவாகவே மனிதனுக்கு ஒரு இயல்பு உள்ளது. எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை கேட்பதற்கு விரும்புவார்கள். அது நல்லதாக இருந்தாலும் சரி, கெட்டதாக இருந்தாலும் சரி. நாம் அடுத்த வாரம் சவுதிக்கு போகலாம். விமானத்துல பறக்கலாம். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடலாம். என்று சொன்னால், அதை ஆர்வத்தோடு கேட்பார்கள். இந்த பண்பு மனிதனுக்கு இருப்பதால் தான் அல்லாஹ்வே, சொர்க்கம் கிடைக்கும் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு போகாமல், சொர்க்கத்தை பற்றி வர்ணிக்கிறான். ஆசையூட்டுகிறான்.
எனவே இந்த இயல்பிற்கு தீனிபோடும் விதமாக, இந்த அமல்கள் செய்தால், நாளை என்ன கிடைக்கும் தெரியுமா? என்று மறுமையில் கிடைக்கும் இன்பங்களை சுவைபட எடுத்துரைக்கவேண்டும். குற்றவாளிகளுக்குறிய தண்டனைகளை அச்சுறுத்தும் வகையில் சொல்வதையும் மக்கள் விரும்புவார்கள். குறிப்பாக பெண்கள் அதிகம் விரும்புவார்கள். எனவே அவ்வப்போது அதையும் சொல்லுங்கள்.
மறுமை நிகழ்வுகள் பற்றி பலநூறு சம்பவங்கள் ஹதீஸில் உள்ளன. அவற்றை அனைத்து வயது மக்களும் ஆர்வமாக கேட்பார்கள். எனவே முடியும் சந்தர்ப்பங்களில், அரைமணிநேர பயானில் ஜந்து நிமிடத்தை இதுபோன்ற செய்திகளுக்காகவே ஒதுக்குங்கள்.
v தவறான நம்பிக்கைகளை அகற்றுதல்.
ஒவ்வொரு ஜும்மா உரையிலும் சரி, பெண்கள் பயான், மேடைப்பேச்சு போன்ற இடங்களிலும் சரி, அந்த உரையில் ஒரே ஒரு தவறான நம்பிக்கையாவது அகற்றப்படவேண்டும் என்பதை குறிக்கோளாக ஆக்குங்கள்.
உதாரணமாக, பிரார்த்தனையை பற்றி பேசுகிறீர்கள் என்றால், துஆவின் ஆரம்பத்தில் அல்லாஹ்வை புகழ்ந்து, ஸலவாத் சொல்லி தான் துஆ கேட்கவேண்டும் என்று பொதுவான ஒரு நம்பிக்கை உள்ளது. இது தவறு என்பதையும், எப்படி தவறு என்பதையும் விளக்குங்கள். இத்தனை வருடமாக தாங்கள் செய்துவந்த தவறு, திருத்தப்பட்டதனால், பயனுள்ள பயானை கேட்ட திருப்தி மக்களுக்கு கிடைக்கும். ஏராளமான மக்களிடத்தில் உள்ள ஒரு அறியாமையை அகற்றிய நன்மையும் உங்களுக்கு கிடைக்கும். மேலும் சில உதாரணங்கள்,
- கஷ்டப்பட்டு இறந்தால் அது கெட்ட மவுத் இல்லை.
- வெட்டிய நகத்தை புதைக்க வேண்டியதில்லை.
- மஃக்ரிப் நேரத்தில் தலைவாரக்கூடாது என்றில்லை.
- உளுச்செய்யும் போது, பிடரியை கழுவுவது கட்டாயம் இல்லை.
- அல்லாஹ்வை தவிர மற்றவர்கள் மீது சத்தியம் செய்வது, இணைவைப்பு.
- இறைவன் எங்கும் இருக்கிறான் என்பது இஸ்லாமிய கொள்கை அல்ல.
- கருப்பு ஆடை, கெட்ட அல்லது துக்கத்தை வெளிப்படுத்தும் ஆடையல்ல.
- பள்ளியில் தூங்க, விளையாட இஸ்லாத்தில் தடையில்லை.
- தொழுகை அத்தஹியாத், சஜ்தாவில் தாய் மொழியில் துஆ கேட்கலாம்.
என்பது போன்ற ஏராளமான விஷயங்களின் உண்மை நிலையை விளக்கி, மக்களின் அறியாமையை போக்குங்கள். உண்மையில் பிரச்சாரத்தின் நோக்கத்தில், அறியாமையை அகற்றுவதும் மிகமுக்கியமான ஒன்று.
Ì பலஹீனமான ஹதீஸ்களை தெளிவுபடுத்துங்கள்.
நாம் இதுவரை சரியென்று நினைத்துவந்த ஹதீஸ்கள் மற்றும் மக்கள் பொதுவாக சரியென்று நினைக்கும் ஹதீஸ்களின் உண்மை நிலையை தெளிவுபடுத்துவதும், அறியாமையை அகற்றுவதில் அடங்கும். உதாரணமாக)
- தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது.
- சீனா சென்றேனும் சீர்கல்வியை தேடு.
- ஸவ்ர் குகையில் நபி தஞ்சடைந்தபோது, சிலந்தி வலை பிண்ணியது.
- உலக மக்களின் ஈமானைவிட அபூபக்கரின் ஈமான் தராசில் கனமானது.
- திருமணத்தை பிரகடனப்படுத்தங்கள். முரசு கொட்டுங்கள்.
இவையெல்லாம் பலஹீனமான ஹதீஸ்கள். இந்த நூலின் இறுதியில் மேலும் சில பலவீனமான ஹதீஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை நினைவில் வைத்து, அவ்வப்போது, இவற்றின் உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள்.
தொனியை மாற்றுதல்: இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணாக உள்ள, அறிவுக்கு பொருந்தாத பலஹீனமான செய்திகளை சொல்லும்போது, சிலபேச்சாளர்கள் அந்த செய்திகளை மட்டும், வித்தியாசமான தொனியில் பேசுவார்கள். உதாரணமாக,
”அல்லாஹ் ஆதமை படைக்கும்போது ஜிப்ரீலை அனுப்பினானாம். பூமி மண் தர மறுத்ததாம். பிறகு மலக்குல்மவ்தை அனுப்பினானாம். அவர் எடுத்தாராம்” என்று போனாராம், வந்தாராம் என தொனியை வித்தியாசமாக்கி பேசுவது. அதாவது சொல்லும் செய்தி பொய்யான செய்தி என பேச்சு ஸ்டைலிலேயே தெரியப்படுத்துவது, பல அனுபவமுள்ளவர்களின் நடைமுறை. இது போன்ற யுக்திகள், பேச்சையும் மெருகூட்டும். பயானை புரிந்துகொள்ளத் தேவையான மூளைப்பளுவையும் குறைக்கும்.
v நிகழ்கால பிரச்சனைகளை கலந்து பேசுங்கள்.
மக்களோடு, மக்களின் தற்போதைய பிரச்சனைகளோடு ஒன்றிப்பேசுங்கள். தண்ணீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை, விலைவாசி, தீவிரவாதம் போன்றவற்றின் தற்போதைய மற்றும் கடந்தகால நிலை, அவர்கள் படும் அவஸ்தை, நாம் என்ன செய்யவேண்டும், போன்றவற்றை மக்களோடு மக்களாக ஒன்றிப்பேசுங்கள்.
எப்போதுமே, நிகழ்கால பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு, அவர்கள் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றிப் பேசுவதும், அதற்கான இஸ்லாமிய தீர்வையும் சொல்வதும், நவீன பயானாகவும், பயனுள்ள பயானாகவும் இருக்கும். மேலும், அவர்களின் இன்ப, துன்பங்களை பற்றி பேசுவதால், உங்களுக்கும், மக்களுக்கும் மத்தியில் உள்ள இடைவெளியும் குறையும்.
பொதுவாக எப்போதுமே, பயானுக்கு போகும்போது அன்றைய செய்தித்தாள்களை படித்துவிட்டு போகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இஸ்லாம் இனிய, எளிய மார்க்கத்திற்கு இது மிகவும் முக்கியமானது. மறந்துவிடாதீர்கள்.
v தலைப்பை நினைவுபடுத்துதல்
தற்போது பயான் என்றாலே குறிப்பிட்ட தலைப்பின் கீழ் அமைந்த செய்திகளை மட்டுமே கோர்வையாக்கி பேசுவது என்று வழக்கமாகிவிட்டது. வெட்கம் என்ற தலைப்பின் கீழ் தர்மம் செய்வதன் சிறப்புகளை பற்றி பேசினால், ”பேச்சாளர் மாபாதக செயலை செய்துவிட்டார்!” என்று என்னும் அளவிற்கு தலைப்பிற்கு அப்பாற்பட்டு பேசுவதை மக்கள் கருதுகின்றனர்.
எனவே, நாம் தலைப்பிற்கு சம்பந்தப்பட்ட செய்திகளைத்தான் பேசுகிறோம் என்பதை மக்களுக்கு உணர்த்தும் விதமாக, அவ்வப்போது, தலைப்பை நினைவுபடுத்துவது பல பேச்சாளர்களின் ஸ்டைல். அதாவது, ”எதிர்காலம் இஸ்லாத்திற்கே” என்ற தலைப்பில் பேசுகிறீர்கள் எனில், ஒரு கொத்து செய்திகளை சொல்லிவிட்டு, ”ஆகவே, எதிர்காலம் இஸ்லாத்திற்கே என்று புரிந்துகொள்ளவேண்டும்” என்று ஒருமணிநேர உரையில் நான்கைந்து தடவை தலைப்பை நினைவுபடுத்த வேண்டும்.
நினைவிருக்கட்டும். இவ்வாறு செய்வதன் மூலம், உண்மையிலேயே நீங்கள் தலைப்பிற்கு அப்பாற்பட்டு இடையிடையே பேசியிருந்தாலும், கொடுக்கப்பட்ட தலைப்பை சுற்றித்தான் பேசுகிறார் என்றே மக்கள் எடுத்துக்கொள்வார்கள்.
v சரியான வார்த்தைகளை பயன்படுத்துதல்.
செய்திகளுக்கு தகுந்த வார்த்தையை பயன்படுத்துவது மேடைப்பேச்சின் சுவையை சரியான முறையில் உணரச்செய்யும். உதாரணமாக, ”அபூபக்கர் நபியை கடுமையாக நேசித்தார்கள். கெட்டவரை அதிகமதிகமாக வெறுத்தார்கள்” என்று சொல்லக்கூடாது. மாறாக, ”அபூபக்கர் நபியை அதிகமதிகமாக நேசித்தார்கள். கெட்டவரை கடுமையாக வெறுத்தார்கள்” என்று, செய்திகளுக்குத் தேவையான சரியான வார்த்தைகளை கொண்டு சொல்லவேண்டும்.
”இந்த மண்ணிலிருந்து ஷிர்கை வேரோடும் வேரடி மண்னோடு கிள்ளி எறியவேண்டும்” என்றால் சரி. ”அன்பளிப்பு தராத குணத்தை, இந்த மண்ணிலிருந்து வேரோடும் வேரடி மண்னோடும் கிள்ளி எறியவேண்டும்” என்று சொன்னால், வித்தியாசமாக காட்சியளிக்கும். அதுபோல, ”நபியின் டிரஸ் இப்படி இருந்தது, ரோட்டில் போனார்கள்” என்று சொல்லாமல் ”நபியின் ஆடை இப்படி இருந்தது, சாலையில் போனார்கள்” என்று காலத்திற்கு தகுந்த சரியான வார்த்தைகளை பயன்படுத்துவதும் பேச்சின் சுவையை உணரச்செய்யும்.
தமிழ் மொழியின் பலதரப்பட்ட வார்த்தைகளையும் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள், அகராதியை (டிக்ஸ்னரியை) அவ்வப்போது புரட்டிக்கொண்டே இருக்கலாம். இந்த பழக்கம், கருத்தை சரியாக வெளிப்படுத்தத் தேவையான மொழியறிவை வளர்க்கும்.
v செய்திகளுக்குத் தகுந்த நேரத்தை ஒதுக்குதல்
சிந்தனையற்ற பேச்சாளர் செய்யும் தவறுகளில் ஒன்று, முக்கியமான செய்திகளுக்கு போதிய நேரத்தை ஒதுக்காமல், முக்கியமற்ற செய்திகளுக்கு அதிக நேரத்தை ஒதுக்குவது. உதாரணமாக, ”ஈமான் என்னும் அடித்தளம் பலமாக இருக்கவேண்டும்” என்பதை விளக்குவதற்கு ஒருவர், கட்டிட அஸ்வாரத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசுகிறார். அருமையான ஒப்பீடு. பாராட்டப்படவேண்டியது தான்.
ஆனால் அதே செய்தியை, மணல், ஜல்லியில் ஆரம்பித்து கொத்தனார் படும் கஷ்டங்கள், இன்றைய சிமென்ட் விலைவாசி என கிட்டதட்ட 20 நிமிடத்திற்கு பேசிவிட்டு, பிறகு, ”அது போல நமது ஈமானும் உறுதியாக இருக்கவேண்டும்” என்று ஒரு நிமிடத்தில் சொன்னால், இவர் ”செய்திகளுக்குத் தகுந்த நேரத்தை ஒதுக்கவில்லை” என்று பொருள். தரமற்ற பேச்சாளரின் அடையாளம் இது.
சமீபத்தில் ஒருவரது உரையை கேட்டேன். ”தவ்ஹீத் எங்கள் உயிர் மூச்சு” என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். இந்த கொள்கை, நாம் எப்போதாவது உண்ணும் உணவைப்போல் அல்லாமல், உடையைப்போல் அல்லாமல், மூச்சைப்போல் எந்நேரத்திலும் நம்மிடம் இருக்கவேண்டும் என்று கம்பீரமாக பேசினார். ஆர்வத்தோடு கவனிக்க ஆரம்பித்து, கடைசியில் தலைவலியோடு திரும்பினேன். காரணம், இந்த ”மூச்சு” கதையை சுமார் 30 நிமிடத்திற்கு பேசுகிறார். இப்படி, இப்படி நடக்கவேண்டும் என்று, ஏற்று செயல்படத்தக்க ஒரே ஒரு அறிவுரையைக் கூட கடைசிவரை சொல்லவே இல்லை. இதுபோன்ற பேச்சு ருசிக்கு உதவும். பசிக்கு உதவாது. கவனம். இதுபோன்ற பேச்சு அதிரடியாக இருந்தாலும் இந்த பேச்சினால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
Ì பேசுவதற்கு செய்திகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம்: என்னிடம் ஏராளமான செய்திகள் இருந்தால், இதுபோன்று ஒரு செய்திக்கு அரைமணி நேரத்தை நான் வீணாக்கமாட்டேன். எனவே, இணையள செய்திகளை படியுங்கள், வார, மாத இதழ்களை புரட்டுங்கள். இரண்டு குர்ஆன் வசனங்கள், ஜந்தாறு ஹதீஸ்களை சேகரித்து, எதிர்வாதங்களை எழுப்பி, நகைச்சுவைகளை கலந்து பேசுங்கள். இந்த புத்தகத்தின் இறுதியில் உள்ள சரிபார்ப்பு பட்டியலை பயன்படுத்துங்கள். புதியவர்களுக்கு ஏற்படும் இதுபோன்ற பல சிக்கல்களுக்கு தீர்வாக இந்த பட்டியல் பயன்படும்.
v தலைப்பை முழுமையாக அலசுதல்
செய்திகளுக்குத் தகுந்த சரியான நேரத்தை ஒதுக்காமல் பேசுவதால் ஏற்படும் மற்றொரு பிரச்சனை, கொடுக்கப்பட்ட தலைப்பை பற்றிய அனைத்து தகவல்களையும் தரமுடியாமல் போய்விடுவது. அதாவது, ”தர்மம் செய்வோம்” என்ற தலைப்பு தரப்பட்டால், ஏதோ இரண்டு ஹதீஸ்களை மட்டுமே வைத்து, மேற்குறிப்பிட்டது போன்ற நீட்டல் பேச்சுக்களைக்கொண்டு முடித்து விடக்கூடாது.
மாறாக, தர்மத்தின் அவசியம், செய்தால் கிடைக்கும் கூலிகள், செய்யாவிட்டால் கிடைக்கும் தண்டனைகள், தர்மம் யார் செய்யவேண்டும்? யாருக்கு செய்யவேண்டும்? எதைச் செய்யவேண்டும்? யாருக்கு செய்யக்கூடாது? என்பன போன்ற உபதலைப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் உங்கள் உரை அமையவேண்டும். அதாவது, நீங்கள் ஒருமணி நேரம் பேசிமுடித்த பிறகு, மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு உங்கள் உரையிலிருந்து பதில்களை பெறமுடிய வேண்டும். அப்படி உங்கள் உரை அமையுமானால் அந்த உரைதான், தலைப்பை முழுமையாக அலசிய உரையாக இருக்கும். அறிந்து கொள்க. ஒரு தரமான பேச்சாளர் இதில் கவனம் செலுத்துவார்.
v புதுசெய்திகள் ஆர்வத்தை அதிகப்படுத்தும்.
மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, புது ஹதீஸ்களை பயன்படுத்த வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம். உலக விஷயங்களிலும், இது தான் விதி. பயானுக்கு குறிப்புகளை சேகரித்து ஒரு பேப்பரில் எழுதியபிறகு இறுதியாக, மறக்காமல் இணையதளத்திலிருந்தோ, சமீபத்திய செய்தித்தாள்களிலிருந்தோ ஒரிரு புது சம்பவங்களை குறித்துக்கொள்ளுங்கள். புதுபுது சம்பவங்களை சொல்லும் போது, மக்கள் ஆர்வமாக கேட்பார்கள். புது செய்திகளுக்கு எக்காலத்திலும் பஞ்சமேயில்லை. இன்று நேற்றைய செய்தித்தாள்கள், வார, மாத இதழ்களை புரட்டுங்கள். இணையத்தில் ஜந்து நிமிடம் உலாவுங்கள், ஏதாவது இரண்டு புதுசெய்திகள் கிடைக்கும். அவற்றை பயன்படுத்துங்கள். உதாரணமாக,
- சமீபத்தில் மும்பை வேளாங்கண்ணி சர்ச்சில், இயேசு சிலையின் காலில் இருந்து வடிந்த புனித நீர்வடிந்ததாக கிருஸ்தவர்கள் புருடாவிட்டார்கள். மக்கள் அதை எடுத்து முகத்தில் தடவிக்கொண்டார்கள். அது புனித நீர் அல்ல, செட்டிக்டேங்க் கழிவு என்று சணல்எடமருகு என்ற பத்திரிக்கையாளர் கண்டுபிடித்தார். (Source:BBC\Tamil\05-2012)
- சிலஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் முஸ்லிம்கள் பள்ளிவாசலுக்கு வாங்கிய நிலத்தில் திடீரென பிள்ளையார் முளைத்தார். ஆய்வு செய்ததில், அந்த சிலைக்கு கீழே, அதனை மேலேதள்ளும் விதமாக, சில கயவர்கள் செட்டப் செய்திருந்தார்கள். பிறகு மாட்டிக்கொண்டார்கள்.
- நாம் நினைப்பது போல, காய்ச்சல் என்பது ஒரு நோய் அல்ல. மாறாக நோய்கிருமிகள் உடலை அண்டவிடாமல் தடுக்கும் உடலின் எதிர்வினை தான் காய்ச்சல். எனவே சாதாரண காய்ச்சல் உடலுக்கு நல்லது தான்.
இந்த போன்ற, ஏதேனும் ஒரு தலைப்பிற்கு தொடர்புடைய உலகச்செய்தியை, பயானுக்கு நடுவே எந்த இடத்தில் நுழைக்கலாம் என்று பார்த்து, இடையில் நுழைத்துப் பேசுங்கள். பயான் வெறும் டேட்டாவாக இல்லாமல், நிகழ்கால சம்பவங்கள் இணைந்த பயானாக இருக்கும். பயான் மிகவும் ரசிக்கும்படியாகவும் இருக்கும். இது மிகவும் முக்கியமான அறிவுரை. இதை மறக்காமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்துகொள்ளுங்கள்.
v இஸ்லாத்தை ஏற்றவர்களின் வரலாறு
ஒரு இந்துவோ, கிருஸ்தவரோ, நாத்திகரோ சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லப்பட்டால் அதை கேட்க அனைவருக்குமே ஆர்வமாகத்தான் இருக்கும். அதுவும் அவர் எதனால் இஸ்லாத்திற்கு வந்தார் என்று தெரிந்துகொள்வதற்கு இன்னும் ஆர்வமாக இருக்கும். அதை சுவாரஸ்யமாக சொன்னால், கேட்போர் உள்ளத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பன்னும். உதாரணமாக,
- கிருஸ்தவ கண்ணியாஸ்திரி இரெனாஹன்டோனா, சர்ச்சில் இருந்துகொண்டு, யாருக்கும் தெரியாமல் குர்ஆனைப் படித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
- குர்ஆனில் தவறு கண்டுபிடித்து அதை தனது கிருஸ்தவ பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்காக குர்ஆனை ஆராய்ந்த கேரிமில்லரை குர்ஆன் தன்வசம் ஈர்த்துக் கொண்டது.
இப்படி மெய்சிலிர்க்கும் வகையில் இஸ்லாத்தை ஏற்ற வரலாறுகளை சொல்லிப்பாருங்கள். ஒரு உரையில் அதிகபட்சம் ஒருவரை பற்றி சொல்வது போதுமானது. உங்களது ஒவ்வொரு உரையிலும் ஒருவரை பற்றி சொல்லத் தேவையில்லை. இதுபோன்ற செய்திகள் மக்களை பன்மடங்கு ஈர்க்கும்.
v நிறைவேறிய, எதிர்கால முன்னறிவிப்புகள் மக்களை ஈர்க்கும்
நடந்தேறிய முன்னிவிப்புகளை சொல்லி, இஸ்லாம் இறைவனின் மார்க்கம் தான் என்பதை விளக்குவதன் அலாதியே தனிதான். உதாரணமாக ஒரு செய்தியை பாருங்கள், நபியவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளி கட்டப்பட்டது. அதற்காக அம்மார்(ரலி) கற்களை சுமந்துவந்தார்கள். மற்றவர்களெல்லாம் ஒவ்வொரு கல்லாக சுமந்து வந்தபோது, அம்மார் இரண்டிரண்டு கற்களாக சுமந்துவந்தார்கள். இதை கண்ட நபி(ஸல்) அவர்கள், அம்மாரின் முகத்தில் உள்ள புழுதியை துடைத்தவர்களாக, ”பாவம் அம்மார். வரம்பு மீறிய ஒரு கூட்டம் அம்மாரை கொலை செய்யும்” என்றார்கள்.
நபியின் மரணத்திற்கு பிறகு, அபூபக்கர், உமருக்கு பிறகு, அலீயின் ஆட்சிகாலத்தில், அலியின் ஆட்சியிலிருந்து வரம்புமீறி சிரியாவை தனிநாடாக அறிவித்து ஆட்சியை பிரித்த முஆவியா அவர்களின் படையால், அம்மார் கொலை செய்யப்பட்டார்கள். மாநபியின் முன்னறிவிப்பு நிறைவேறியது. நபி இறந்த பிறகும், அவர் இறைனின் தூதர் தான் என்று அல்லாஹ் நிரூபித்தான். இதுபோன்ற செய்திகளை சொல்லுகிற விதத்தில் சொன்னால், கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்கும். மக்களை உங்களை நோக்கி ஈர்க்கும்.
Ì இவை மட்டுமல்லாமல், பேய் பிசாசு, அது சம்பந்தமான அருகில் நடந்த சம்பவம் பற்றி பேசினால் மக்கள் ஆச்சர்யமாக கேட்பார்கள். கியாமநாளின் அடையாளங்கள் மக்களை வெகுவாக கவரும். இதுதவிர, முஸ்லிம் விரோதிகளின் சதிகள், இஸ்லாத்தின் தனித்தன்மையை உணர்த்தும் அறிவுரைகள், இஸ்லாம் கூறும் மனநல ஆலோசனைகள், இணையதளத்தில் வைக்கப்படும் வினோதமான வாதங்கள், அவற்றின் பதில்கள், மலேசியா, அரேபியா போன்ற வெளிநாடுகளில் உள்ள வினோதமான பழக்கவழக்கங்கள், உணவுமுறைகள், நமது சமுதாயம், ஜமாத் சமீபத்தில் பெற்ற அநீதிக்கு எதிரான வெற்றி போன்ற செய்திகளெல்லாம் மக்களின் கவனத்தை பன்மடங்கு ஈர்ப்பவை.
எனவே, ”எனது பேச்சை மக்கள் கவனிப்பதில்லை” என்று வருத்தப்படும் பிரச்சாரகர்கள், இதுபோன்ற பேச்சுக்களின் மூலம் மக்களை ஈர்க்கமுடியும். பிரச்சாரப்பணியைப் போன்ற நன்மைகளை கொள்ளையடிக்கும் பணி வேறெதுவும் இல்லை. இந்தப்பணியில் தொடர்ந்து இருப்பதற்கு தெளிவான, கவரக்கூடிய பேச்சு அவசியம் என்ற காரணத்தினாலேயே, கவனத்தை ஈர்க்கும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளக்கப்பட்டுள்ளது.
v முதல் ஈர்ப்பே, சிறந்த ஈர்ப்பு.
First Impression is the Best impression என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. முதல் ஈர்ப்பே சிறந்த ஈர்ப்பு என்பது அதன் பொருள். பயானில் மட்டுமல்ல. எந்த இடத்திலும், முதலில் சிறப்பாக செய்தால், அது உள்ளத்தில் ஆழமாக பதிந்துவிடும். பிறகு நீங்கள், சுமாராக செய்தாலும், அதை பொருட்படுத்த மாட்டார்கள்.
எனவே எந்த உரையிலும், முன்னுரையில் ஒரு நல்ல கருத்தையும், அதற்குத்தகுந்த குர்ஆன் ஹதீஸையும் அழகாக விளக்கிக்கூறுங்கள். புதியவர்களுக்கு உள்ள எளிய வழி, அனுபவம் உள்ள அறிஞர்கள் ஏற்கனவே பேசிய பேச்சில் உள்ள முன்னுரையை எடுத்துச்சொல்வது தான்.
இதுதவிர, புது இடத்திற்கு பேசப்போகும் போது, அதிக நேரம் ஒதுக்கி, சிரத்தை எடுத்து, குறிப்புகளை சேகரித்து பேசுங்கள். கவனமில்லாமல் ஏனோ, தானோ, என்று பேசிவிட்டு வந்தால், இவர் சரியாக பேசமாட்டார் என்று முடிவுகட்டிவிடுவார்கள். நல்ல இடங்களில், தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். ஜம்பது பேருக்கு பிரச்சாரம் செய்வதை விட, ஜநூறு பேருக்கு பிரச்சாரம் செய்வது, அதிக நன்மை தரக்கூடியது தானே!
Ì இஸ்லாமிய பயான் அல்லாத மேடைப்பேச்சுகளிலும், பட்டிமன்றங்களிலும், முதல் ஈர்ப்பை மிகப்பெரிய யுக்தியாகவே வைத்திருக்கிறார்கள். பிரபலமான பேச்சாளர்களின் பேச்சை கவனித்துப்பாருங்கள், பேச ஆரம்பிக்கும் போது, சமீபத்தில் அவர் சந்தித்த ஒரு சுவையான சம்பவத்தை சொல்லி, அதன் பிறகே, தான் சொல்லவந்த தலைப்பை பற்றிப் பேசுவார். இவ்வாறு செய்வதன் மூலம், ஆரம்பத்திலேயே மக்களின் கவனத்தை முழுமையாக நம் பக்கம் திருப்பிவிட்டு, பின்னர் நம்முடைய கருத்தை பதியவைக்க முடியும். இது மிகவும் பயனளிக்கக்கூடிய வழிமுறை.
v சத்தியமே வெல்லும்
முதல் ஈர்ப்பைக் கொண்டும், வித்தியாசமான செய்திகளைக் கொண்டும், நகைச்சுவையைக் கொண்டும், கம்பீரமான பேச்சுக்களைக் கொண்டும் மக்களை கவரமுடியும் தான். அதேசமயம் பேச்சு எவ்வளவு உறுதியாக இருந்தாலும் சரி, சத்தியமாக இருந்தால் தான் அது நிலைக்கும். கப்ருவணங்கிகளாக இருந்துகொண்டு, மைக் உடையும் அளவிற்கு கம்பீரமாக கத்தினாலும், அதனால் அக்கொள்கை வெற்றிபெற்றுவிடாது. எனவே, குர்ஆனும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் மட்டுமே மார்க்கம் என்பதை விளங்கி சத்தியத்தை மட்டுமே மக்களுக்கு போதிக்கவேண்டும் என்பதை அனைத்திற்கும் மேலாக நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
இதுவரை மக்களை கவரும் பேச்சு முறைகளை பார்த்தோம், இனி பேச்சாளர்கள் செய்யும் தவறுகளையும், தவிர்க்கவேண்டியவைகளையும் காண்போம்.