03) பேச்சின் அங்கங்கள்
பேச்சின் அங்கங்கள்
எளிய வார்த்தைகளில் சொல்லவேண்டுமெனில், ஒரு பயான் என்பது ஒரு முன்னுரையும், நடுப்பகுதியும், முடிவுரையும் கொண்டதாகும்.
முன்னுரை | நான்கைந்து பகுதிகள் கொண்ட நடுப்பகுதி | முடிவுரை |
முன்னுரை பயானின் நோக்கத்தை தெரிவிக்கிறது. முடிவுரை, இதுவரை பேசிய செய்திகளை நினைவூட்டி மக்களை செயல்பட அழைப்பு விடுக்கிறது.
நடுப்பகுதி பயானின் அனைத்து செய்திகளையும் உள்ளடக்கியது. எளிதாக புரியவைப்பதற்காகவும், நினைவில் வைப்பதற்காகவும் நடுப்பகுதி ஒன்றிற்கும் மேற்பட்ட பகுதிகளாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பகுதியும் சில குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், அதன் விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் கொண்டதாக இருக்கும்.
v முன்னுரை
எந்த பயானுக்கும் முன்னுரை தருவது அவசியம். உதாரணமாக, பெற்றோர்களைப் பற்றி பேசுகிறீர்கள் எனில், ”நமக்கு உள்ள உறவுகளில், மிகமிக முக்கியமானது இந்த பெற்றோர் என்ற உறவு. இன்றைக்கு, மிகமிக அலட்சியம் செய்யப்படும் உறவாகவும், இந்த உறவுதான் உள்ளது. ஒருவன் எவ்வளவு நன்மைகளை செய்திருந்தாலும், பெற்றோரை பேணாமல் இருந்தால், மறுமையில் வெற்றி பெறமுடியாது…..” என்று இரண்டு நிமிடத்திற்கு, எடுத்த தலைப்பை பற்றி பேசிவிட்டு, பிறகு குர்ஆன் வசனம், ஹதீஸ், அதற்கு தேவையான விளக்கங்கள், உதாரணங்கள் என பேச்சை தொடர வேண்டும்.
நாம் என்ன சொல்ல வருகிறோம், என்று மக்கள் புரிந்துகொள்வதற்கு இந்த முன்னுரை மிகவும் அவசியமானது. அரைமணி நேர உரைக்கு 5 நிமிட முன்னுரையே அதிகபட்சமானது. முன்னுரை எதிர்பார்ப்பு நிறைந்த பகுதியாக இருப்பதால் கருத்துச் செறிவானதாக இருக்கவேண்டும்.
Ì Attention Grabber (அட்டென்ஷன் கிராப்பர்) என்பது என்ன?
ஒரு உரையின் ஆரம்பத்தில் முக்கியமான அறிவியல் உண்மை, புள்ளிவிபரம் அல்லது அறிஞர்களின் கூற்று என ஆரம்பத்திலேயே மக்களின் கவனத்தை தன்வசப்படுத்தும் செய்தியை சொல்வதற்கு, பேச்சுக்கலையில், கவனம்திருப்பி (Attention Grabber) என்று சொல்லப்படும். இதன் மூலம், அந்த உரையில் நல்ல தகவல்கள் இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
நபி(ஸல்) அவர்களின் உரையில் இதனை அதிகமாக பார்க்கமுடியும். ”அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவன் முஃமினே அல்ல” என்று மூன்று முறை கூறி, சஹாபாக்கள் ஆச்சர்யம் தாங்காமல் அவன் யார் என்று கேட்க, ”அண்டை வீட்டுக்காரனுக்கு துன்பம் தருபவன், முஃமினே அல்ல” என்று பதிலப்பார்கள்.((புகாரி: 6016)). எனவே, முன்னுரையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் எதாவது ஒரு செய்தியை சொல்வது நல்லது.
v முடிவுரை
ஆரம்பம் எப்படி முக்கியமானதோ அதே அளவுக்கு பயானின் இறுதிப்பகுதியும் முக்கியமானது. இடையிலெல்லாம் அருமையான கருத்துக்களை சொல்லிவிட்டு இறுதியில் திக்கித்தடுமாறி, எதையெதையோ பேசி சுறுசுறுப்பில்லாமல் உரையை முடித்தால், உரை முழுமையடைந்ததாக இருக்காது. எனவே முடிவுரையில் கவனம் செலுத்துங்கள். முடிவுரை இரண்டு வகையில் உள்ளது.
- இதுவரை சொன்ன செய்திகளையே மீண்டும் நினைவூட்டும் முடிவுரை.
- இதுவரை சொன்ன செய்தியின் மையக்கருத்தை வழியுறுத்தும் முடிவுரை.
முதலாவது வகை முடிவுரை, ஒருசில தலைப்புகளுக்குத் தவிர, பெரும்பாலான நேரங்களில் அவசியமற்றது. இரண்டாவது வகை முடிவுரை மிகமிக அவசியமானது. இதுவரை பேசியதன் மையக்கருத்தை வழியுறுத்தும், எதாவது ஒரு அதிரடியான செய்தியையோ, ஹதீஸையோ சொல்லி, உற்சாகமாக உரையை முடிக்கவேண்டும். முன்னர் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்லி வெறுப்பேற்றிவிடக்கூடாது.
செயல்படுவதற்கு அழைப்பு விடுத்தல் (Call to action):
முடிவுரையில் இருக்கவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் சொல்லிய அறிவுரையின் அடிப்படையில் இனி மக்கள் என்னசெய்யவேண்டும் என்பது. அதாவது இதுவரை சொன்னதை நினைவுபடுத்துவதோடு, மக்களை செயல்பட அழைக்கும் வேலையையும் முடிவுரை செய்கிறது.
v நடுப்பகுதி
நடுப்பகுதி ஒன்றிற்கும் மேற்பட்ட பகுதிகளாகவோ அல்லது உபதலைப்புகளாகவோ பிரிக்கப்படும். பேசவேண்டிய நேரத்திற்கு தகுந்தார்போல், சிறுபகுதிகளின் எண்ணிக்கை இருக்கும். ஒவ்வொரு சிறுபகுதியிலும் சில குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள் மற்றும் அதன் விளக்கங்கள் சொல்லப்படும்.
மேலதிகமாக, உதாரணங்கள், எதிர்கேள்விகள், அது சம்பந்தமான தவறான நம்பிக்கைகள், உலக செய்திகள், நகைச்சுவை என பல்வேறு அம்சங்களை நம் விருப்பத்திற்கு தகுந்தார்போல் இணைக்கலாம்.
v குர்ஆன் வசனத்தை பயன்படுத்தும் முறைகள்.
ஒரு குர்ஆன் வசனத்தையோ சொல்லிவிட்டு அதன் விளக்கத்தை சொல்லவேண்டும் என்று சொன்னோம் அல்லவா, இதனை பல்வேறு வழியில் செயல்படுத்தலாம்.
அதாவது, ஒரு கருத்தின் ஆரம்பத்திலும் குர்ஆன் வசனத்தை பயன்படுத்தலாம்.
போகிற போக்கில், சம்பவங்களோடு பின்ணிப்பினைந்த வகையிலும் குர்ஆன் வசனத்தை பயன்படுத்தலாம். அறிவுரைகளுக்கு, வியக்கக்கூடிய செய்திகளுக்கு பின்னால் முத்தாய்ப்பாகவும் குர்ஆன் வசனத்தை பயன்படுத்தலாம். சில பயன்பாடுகள் கவனத்தை மிகவும் ஈர்க்கும். உதாரணமாக)
1) அறிவுரையின் இறுதியில் முத்தாய்ப்பாக பயன்படுத்துவது : இந்த வகையில் குர்ஆன் வசனத்தை பயன்படுத்தினால், மெய் சிலிர்க்க வைத்து, கண் கலங்க வைக்கும். அதாவது ஒரு கருத்தை முதலில் விளக்கிவிட்டு, அதனுடைய அறிவுரையை போதித்துவிட்டு அல்லது ஒரு அறிவியல் கருத்தை விலாவரியாக சொல்லிவிட்டு அதன் இறுதியில், ”இதைத்தான் அல்லாஹ் குர்ஆன்-ல சொல்றான்……” என்று முத்தாய்ப்பாக பயன்படுத்துவது சில அனுபவமுள்ள பேச்சாளர்களின் கைவந்த கலை. அற்புதமான இந்த முறை, மக்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் நம்பக்கம் ஈர்க்கும்.
2) ஏதேனும் சம்பவம் சம்பந்தமாக, இறக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் : ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு, இதை கண்டிக்கும் விதமாக, அல்லாஹ் உடனே வசனத்தை இறக்கிவைக்கிறான். என்பது போன்ற ரீதியில் குர்ஆன் வசனத்தை பயன்படுத்துவதும், அதிக சுவாரஸ்யமானது.
உதாரணமாக, தனது மகள் ஆயிஷா மீது களங்கம் சுமத்தியவருக்கு இனி உதவி செய்யமாட்டேன்” என்று அபூபக்கர்(ரலி) கூறியபோது, அல்லாஹ் சில வசனங்களை உடனே இறக்கிவைத்தான்.
”அவர்களை மன்னியுங்கள். அல்லாஹ் உங்களை மன்னிப்பதை விரும்பமாட்டீர்களா?”. (அல்குர்ஆன்: 24:22) ➚ இதுபோல, ஏராளமான சம்பவங்களுக்காக, இறக்கப்பட்ட ஏராளமான குர்ஆன் வசனங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்துவது அதிக சுவாரஸ்யமானது. மக்கள் இது போன்ற செய்திகளை அதிகம் விரும்புவார்கள்.
Ì தேவையான இடங்களில் அரபி வசனத்தை பயன்படுத்துங்கள்.
குர்ஆனுடைய கிராத் ஈடில்லாத வகையில் மக்களை ஈர்க்கும் தன்மை உடையது. அதுபோல, ஹதீஸ் சம்பவங்களையும் அரபியில் வர்னணையாக கேட்பதற்கு சுவையாக இருக்கும். எனவே ஹதீஸையும், குர்ஆன் வசனத்தையும் முடிந்தஅளவு அரபி வரிகளோடு பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். பயான் உயிரோட்டமுள்ளதாக இருக்கும். மேலும், மார்க்கத்தை அறிந்தவரிடமிருந்து செய்திகளை கேட்கிறோம் என்ற உணர்வின் காரணமாக, பயானை ஆர்வத்தோடு கேட்கத்தூண்டும்.
இதில் கவனம் இல்லாமல் இருந்தால், உங்கள் உரை குறைவான தரத்தில் தான் மக்களால் மதிக்கப்படும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். தரமான பயான் என்றோ, குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அமைந்த உரை என்றோ மக்கள் கருத மாட்டார்கள். அவருக்கு தெரிந்ததை பேசுகிறார் என்றே கருதுவார்கள். எனவே அவ்வப்போது தேவைப்படும் குர்ஆன் வசனங்களை மனனம் செய்துகொள்ளுங்கள்.
மக்கள் தனக்கு அறிவுரை வழங்குபவர் தன்னைவிட சிறந்தவராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதில் எந்த தவறும் இல்லை. எனவே குணத்திலும், அறிவிலும் மற்றவர்களை விட சிறந்தவராக இருப்பது ஒரு பிரச்சாரகரின் அவசியமான தேவை.
v உதாரணங்களை கொண்டு விளக்குதல்
குர்ஆன், ஹதீஸை விளக்குவதற்கு உதாரணங்களை பயன்படுத்துவது புத்திசாலித்தனமான முறை. திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் அல்லாஹ், தனது கருத்துக்களை விளக்குவதற்கு, பல்வேறு உதாரணங்களை பயன்படுத்துகிறான். உண்மையிலேயே, நூறு தடவை சொன்னாலும் புரியாத விஷயங்களை ஒரே ஒரு உதாரணத்தை கொண்டு விளக்கி புரியவைக்கமுடியும். அவ்வளவு பெரிய ஆற்றல் உதாரணங்களுக்கு உண்டு. உதாரணமாக)
- கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை, மனைவி செய்யாவிட்டால்,
கணவன் வேறு பெண்ணை தேடிச்செல்ல வாய்ப்பிருக்கிறது. என்று வெறுமனே சொன்னால், அதை ஏற்றுக்கொள்ளாத மக்கள், ”வீட்டில் உணவு கிடைக்காவிட்டால், ஹோட்டலுக்கு தானே போவான்” என்று உதாரணத்தை சொல்லி விளக்கும் போது, ”சொல்றது சரி தான். நியாயம் தானே” என்று தலையாட்டுவதை பார்க்கலாம். - ஒரு இஸ்லாம் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில், ”பாபர் பள்ளிக்காக ஏன் முஸ்லிம்கள் இவ்வளவு போராடுகிறீர்கள். பரந்த மனப்பான்மையோடு, அதை இந்துக்களுக்கு விட்டுகொடுத்துவிடவேண்யது தானே” என்று. ஒரு இந்து சகோதரர் கேள்வி கேட்கிறார். இவருக்கு பதில் சொல்லும் போது, ஒரு அறிஞர் ஒரே ஒரு உதாரண எதிர் கேள்வியை மட்டும் கேட்கிறார். அவையெங்கும் அங்கீகார கைதட்டல் ஒலிக்கிறது. அவர் கேட்ட உதாரண எதிர்கேள்வி இதுதான். ”அய்யா உங்க பேரு”, (கேள்வி கேட்டவர்) : ”சதாசிவம்”
”சதாசிவம் அய்யாவுக்கு, திருச்சியில ஒரு வீடு இருக்கு. அதை ஒருத்தன் அநியாயமாக கைப்பற்றிவிடுகிறான். இதை விட்டுகொடுத்துவிட்டு அய்யா தெருவில போய் உட்கார்ந்து கொள்வீர்களா? அல்லது அநியாயத்திற்கு எதிராக போராடுவீர்களா?” என்றதும், கேள்வி கேட்டவர், வெட்கித் தலைகுனிகிறார்.
Ì ஆயிரம் வரிகளால் சொல்ல முடியாத கருத்தைக் கூட இந்த உதாரணம் சொல்லிவிடுகிறது.. எனவே சரியான இடத்தில் சரியான உதாரணத்தை பயன்படுத்துவது மிகமிக அவசியமான ஒன்று.
v கருத்துக்களை கொண்டு விளக்குதல்
குர்ஆனையும், ஹதீஸையும் உதாரணங்களை கொண்டு விளக்குவது போல, கருத்துக்களை கொண்டும் விளக்கவேண்டும். மலக்குகளின் துஆ கிடைக்கும் என்பதை விளக்கும் போது, வெறுமனே ”மலக்குகளே நமக்கு துஆ செய்வார்கள். எவ்வளவு பெரிய அந்தஸ்து பாருங்கள்.” என்று சொல்லிவிட்டு போகாமல்,
”மலக்குகள் சுயமாக செயல்படமாட்டார்கள். அல்லாஹ் கட்டளையிட்டால் தான் எதையும் செய்வார்கள். அவர்கள் துஆ செய்கிறார்கள் என்றால், அல்லாஹ்தான் செய்யச்சொல்லியிருக்கிறான். அல்லாஹ்வே சொல்லிவிட்டு, பிறகு அந்த துஆவை அங்கீகரிக்காமல் இருப்பானா?”
என்று எந்த குர்ஆன், ஹதீஸையும் அதில் பொதிந்திருக்கும் கருத்தை கொண்டு விளக்கவேண்டும். விளக்குதல் என்பது உதாரணம் மற்றும் கருத்துக்களோடு முடிந்துவிடுவதல்ல. சுவையான பல்வேறு வகைகளில் குர்ஆன், ஹதீஸை விளக்க முடியும். அவற்றை, ”பேச்சில் அலங்காரங்கள்” என்ற அடுத்த பகுதியில் வரிசையாக காண்போம்.