பெற்ற தாயை நடுரோட்டில் வீசிய கொடூரம்!
பெற்ற தாயை நடுரோட்டில் வீசிய கொடூரம்!
பத்துமாதம் சுமந்து பெற்ற தாயை நடுரோட்டில் வீசி விட்டுச் சென்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியு ள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள செங்குந்தர்புரம் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் 95 வயது மூதாட்டி பட்டம்மாள். கணவன் இறந்து போன நிலையில் தன் பிள்ளைகளுடன் வசித்து வந்தார் பட்டம்மாள். இவருக்கு ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளார்கள்.
பட்டம்மாளி ன் பிள்ளைகளில் ஒருவர் ஓய்வு பெற்ற ஆசிரியராக இருக்கின்றார். இன்னொரு மகள் ஸ்வீட் கடை வைத்துள்ளார். இரண்டு மகன்களும் தாயை பராமரிக்காத நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டம்மாளை அருகில் இருக்கும் முதியோர் இல்லத்தில் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால் தன் பிள்ளைகளைப் பிரிந்து பட்டம்மாளால் இருக்க முடியவில்லை. முதியோர் இல்லத்திலிருந்து தன் மகன்களின் வீட்டிற்கு வந்துள்ளார் பட்டம்மாள்.
ஆனால் தாய் பட்டம்மாள் மீண்டும் தங்களின் வீட்டிற்கு வந்தபோதும் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் வெளியே விட்டு கதவை அடைத்தார்கள். இதனால் வேறு வழியின்றி பட்டம்மாளை அவரது மகள் சகுந்தலா என்பவர் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார். சில நாட்கள் தாயை தன்னுடன் வைத்திருந்த சகுந்தலா அதன்பிறகு பட்டம்மாளை கொண்டு வந்த அவரது மகன் வீட்டுத் திண்ணையில் போட்டு விட்டுச் சென்றுள்ளார். தன் வீட்டு வாசலில் தாய் இருப்பதைப் பார்த்த மூத்தமகன் சண்முகம் தனது தாய் பட்டம்மாளை ஏற்றிச் சென்று இளையமகன் சதாசிவம் வீட்டு வாசலில் போட்டு விட்டுச் சென்று விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சதாசிவம் தன் தாய் பட்டம்மாளை காரில் ஏற்றிச் சென்று சாலையோரத்தில் வீசி விட்டுச் சென்று விட்டார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். மூதாட்டி பட்டமாளை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பட்டம்மாளின் மகன்கள் சதாசிவம் மற்றும் சண்முகத்தின் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெற்ற தாயை கவனிக்க முடியாமல் சாலையில் தூக்கி எறிந்த சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது..
பெற்றோர்களை பேணச் சொல்லும் இஸ்லாம்
பெற்றோர்களைப் பேணும் விடயத்தில் இஸ்லாம் அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றது. ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் வந்த ஒரு நபித்தோழர், நான் அதிகம் நன்றி செலுத்த வேண்டியது யாருக்கு? என்று கேட்கின்றார். அதற்கு பதிலளிக்கும் முகம்மது நபியவர்கள், அது உன் தாய் என்று சொல்கின்றார்கள், அடுத்தது யார்? என்று அவர் கேட்கிறார் அதற்கும் உன் தாய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளிக்கின்றார்கள். இப்படியாக நான்கு முறைகள் கேட்ட பிறகு ஐந்தாவது முறை உன் தந்தை என்று சொல்கின்றார்கள் நபிகளார்.
பெற்றோர்களில் ஒருவருக்கோ, அல்லது இருவருக்குமோ வயதாகி விட்டால் அவர்களை நோக்கி “ச்சீ” என்று கூடச் சொல்லாதீர்கள் என்று திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது. பெற்றோர்களுக்கு வயதாகி விட்டால் அவர்களுக்காக உங்களின் சிறகுகளைத் தாழ்த்துங்கள் என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது. பலகீனத்திற்கு மேல் பலகீனத்துடன் உங்கள் தாய் உங்களைச் சுமந்து பெற்றெடுத்தால் என்று தாய்மையின் தியாகத்தை திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது.
அந்த அளவிற்கு பெற்றோர்களைப் பேணுவது குறித்து இஸ்லாம் மார்க்கம் அறிவுறுத்துக்கின்றது. நீங்கள் குழந்தையாக இருக்கும் போது உங்களை எப்படி உங்களின் பெற்றோர்கள் கவனித்துக் கொண்டார்களோ, அதே போல அவர்கள் முதியவர்களான பிறகு அவர்களை கவனிக்க வேண்டிய பொருப்பு உங்களுக்கு உள்ளது என்று பெற்றோர்களைப் பேணுவதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது.
Source: unarvu (அக்டோபர் :11 – 17, 2019.)