பெற்றோரே! பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்!

பயான் குறிப்புகள்: குடும்பவியல்

பெற்றோரே! பொறுப்புணர்ந்து செயல்படுங்கள்!

நாளைய சமுதாயம் இன்றைய இளைஞர்கள் கையில் உள்ளது. ஆனால் இளைய தலைமுறையினரோ மிகவும் மோசமான பாதையில் பயணிக்கின்றனர். ஏன் இந்த அவல நிலை? எனக் கேள்வி எழுப்பினால் அடுத்த நொடிப் பொழுதில், இன்றைய நாகரீக வளர்ச்சியும், சமூகச் சீர்கேடுகளும் தான் என்று நாம் மறுமொழி பகர்கிறோம்.

சில தினங்களுக்கு முன் கோவையில் நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோவை சாய்பாபா காலனியில் வசிக்கும் ஹைதர் என்பவரது மகள் ருக்ஸானா (வயது 21) பி.எஸ்.சி. பட்டதாரி. பெற்றோர்களால் செல்லமாக வளர்க்கப் பட்டதால் ஆண்ட்ராய்ட் மொபைல் போன், பாய் ஃப்ரண்ட் என்று சுதந்திரப் பறவையாக சுற்றித் திரிந்தாள்.

கடந்த அக்டோபர் 16ம் தேதி ருக்ஸானா காணாமல் போனாள். பல இடங்களில் தேடிய பெற்றோர் சாய்பாபா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையே பவானி கல்லாறு அணை அருகே பாறை பொதும்பில் பிணமாக, நிர்வாண நிலையில் ருக்ஸானா கண்டெடுக்கப்பட்டாள்.

போலீசாரின் தீவிர விசாரணையில் ருக்ஸானாவின் பாய் ஃபிரண்ட் பிரசாந்த் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் அழைப்பின் பேரில் கல்லாறு சென்றவள் அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளாள். கீழே தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டாளா? அல்லது கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாளா? என்பதைப் போலீசார் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் உணர்த்துவது என்ன?

தவறு என்பது சமூகச் சீர்கேட்டில் மட்டுமல்ல! குழந்தைகள் வளரும் விதத்திலும் உள்ளது. எந்தவொரு பெற்றோரும் தம் குழந்தைகள் தடம்புரள வேண்டும் என்று எண்ணுவதில்லை. எனினும் அவர்களது வளர்ப்பு முறையில் செய்யும் சிறு சிறு தவறுகளே பெரும் தவறாக உருவெடுக்கின்றது.

குழந்தைகள் வாழ்க்கைப் பாடத்தைப் பெற்றோரிடமே கற்றுக் கொள்கிறார்கள். நல்லவராவதும் தீயவராவதும் கற்பிக்கப்படும் கல்வியைப் பொறுத்தும் கற்பிக்கும் ஆசிரியரை (பெற்றாரை)ப் பொறுத்துமே அமைகின்றது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

(புகாரி: 1359)

முதன்மைப் பொறுப்பாளி

குழந்தையை வளர்த்தெடுப்பதில் தாய், தந்தை ஆகிய இருவருக்கும் பங்கு இருந்தாலும், தந்தையைக் காட்டிலும் தாயே முழுப் பொறுப்பாளியாக இருக்கிறார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுஉமர் (ரலி)

(புகாரி: 2554)

குழந்தைகள் கண்ணாடி போன்றவர்கள்!

குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். அவர்கள் முன்னிலையில் எது செய்து காட்டப்படுகின்றதோ அதையே அவர்கள் பிரதிபலிக்கின்றனர். நமது சொல்லையும், செயலையும் மிக நுணுக்கமாகக் கவனித்து அதைப் போன்றே தாமும் நடந்து கொள்கின்றனர். அதனால் தான் சில நேரங்களில் அவர்களின் வயதுக்கு மிஞ்சிய பேச்சையும், செயல்பாடுகளையும் குழந்தைகளிடம் நம்மால் காண முடிகின்றது.

குழந்தைகளிடம் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் நம்மிடமிருந்து உருவானவை தான் என்பதைப் புரிந்து கொள்ளாத பெற்றோர், உபதேசம் எல்லாம் ஊருக்கு மட்டுமே, தங்களுக்கு அல்ல என்பது போன்று நடந்து கொள்கின்றனர். பொய் பேசக் கூடாது என்று குழந்தைகளுக்கு உபதேசம் செய்து விட்டு அக்குழந்தையின் முன்னிலையில் தாங்களே பொய் பேசுகின்றனர். டிவி பார்க்கக் கூடாது என்று தடை விதித்து விட்டு, குழந்தையின் முன்னிலையிலேயே அதில் மூழ்கிக் கிடக்கின்றனர்.

இப்படி சொல்லும், செயலும் வேறுபட்டதாக இருப்பின் அதைக் கவனிக்கும் குழந்தைகள் என்ன செய்வார்கள்? நேர் முரணான இரு காரியங்களில் அவர்கள் எதைத் தேர்வு செய்வார்கள்? சொல்லையா? அல்லது செயலையா? பெற்றோரே சிந்தியுங்கள்.

வாழ்க்கைப் பாடத்தைப் போதிக்கும் தலைசிறந்த ஆசான்களான பெற்றோரே தவறுக்குக் காரணமாக இருக்கும் போது குழந்தைகளைக் குறை கூறுவதில் என்ன பலன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு எதைப் போதித்தார்களோ அதை முதலில் தம் வாழ்வில் செயல்படுத்தினார்கள். அதனால் தான் அவர்களது உபதேசம் உயிரோட்டம் பெற்றது. இத்தகைய ஒரு நிலை இன்றைய பெற்றோரிடம் இல்லாமல் போனதால் தான் அறிவுரை அர்த்தமற்றதாக, சலிப்பானதாக மாறி விட்டது.

மனிதர்களின் மனதை அறிந்த இறைவன் கூறுவதைப் பாருங்கள்.

 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِمَ تَقُوْلُوْنَ مَا لَا تَفْعَلُوْنَ‏
كَبُرَ مَقْتًا عِنْدَ اللّٰهِ اَنْ تَقُوْلُوْا مَا لَا تَفْعَلُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.

(அல்குர்ஆன்: 61:2-3)

கண்மூடித்தனமான அன்பு

வீட்டிற்கு ஒரே ஒரு பிள்ளை என்பதால் அளவுக்கு அதிகமாக சில பெற்றோர் அன்பு காட்டி வளர்க்கின்றனர். அன்பின் பெயரால் நல்லது கெட்டது என எதையும் யோசிக்காமல் வயது வரம்பின்றி, பைக், ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கித் தந்து அழகு பார்க்கின்றனர்.

பருவ வயதை அடையாத குழந்தைகள் கூட பேஸ்புக், வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் ஒழுக்கச் சீர்கேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறோம். சைக்கிள் ஓட்டிப் பழக வேண்டிய சிறுவனுக்கு இரு சக்கர மோட்டார் வாகனம், கரும்பலகையில் எழுதிப் பழக வேண்டிய குழந்தைக்கு டேப்லெட் என்று அன்பின் பெயரால் அராஜகம் நீள்கின்றது.

இது ஒருபுறமிருக்க, கண்மூடித்தனமான அன்பினால் குழந்தைகள் தவறு செய்தாலும் அதைக் கண்டிக்காமல் – கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். தந்தை கண்டித்தாலும் கூட, தாய்மார்கள் இடையில் புகுந்து, தவறு செய்யும் குழந்தைக்குப் பரிந்து பேசிக் காப்பாற்றி விடுகின்றனர். குடும்பத்தார் யாராவது கண்டித்தாலோ, தவறைச் சுட்டிக் காட்டினாலோ அதையும் தாய்மார்கள் பொறுத்துக் கொள்வதில்லை. வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்குச் செல்கின்றனர்.

தாய்மார்களின் இந்தப் பாச உணர்வைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அடம் பிடித்து, மிரட்டி, தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொள்கின்றர். மேலும் சிறு தவறுகளைக் கண்டிக்காமல் விடுவதும், பரிந்து பேச ஆள் இருக்கிறது என்ற நம்பிக்கையும் பெரும் தவறுகள் செய்வதற்கு ஒரு காரணியாக அமைந்து விடுகின்றது.

தம் மகள் மீது கொண்ட பாசத்தை, என்னில் ஒரு பாதி என்று வர்ணித்த ஏந்தல் நபி (ஸல்) அவர்கள், அந்த நேசம் ஒருபோதும் தவறுக்குத் துணை போகாது என்பதையும் பிரகடனப்படுத்தினார்கள்.

“இறைவன் மீது ஆணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 3475)

அளவு கடந்த அன்பு வைத்திருந்த தமது பேரக்குழந்தைகள் அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தயவு தாட்சண்யமின்றி கண்டித்துள்ளார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள், தர்மப் பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சீ…சீ… கீழே போடு; நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?” என்றார்கள்.

(முஸ்லிம்: 1939)

தாய்மார்களே! அன்பு என்ற பெயரால் அளவு கடந்து போய்விடாமல், குழந்தைகள் சிறு சிறு தவறு செய்யும் போது, அதை அவர்களிடம் விளக்கி, அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறி, கண்டித்து வளர்த்தால், அவர்கள் வளர்ந்தாலும் தவறின் பக்கம் செல்லாமல் இருப்பார்கள்.

கருணையில்லா கண்டிப்பு

அன்பினால் பிள்ளைகளைத் தடுமாறச் செய்யும் பெற்றோர் ஒரு வகையினர் என்றால், கண்டிப்பு என்ற பெயரால் குழந்தைகளைத் தவறிழைக்கச் செய்யும் பெற்றோர் மற்றொரு வகையினர் ஆவர். இந்த சாராரின் கொள்கையே, “அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான், அடியாத மாடு பணியாது” என்ற பழமொழிக் குப்பைகளாகும்.

இதை ஏன் செய்தாய்? ஏன் செய்யவில்லை? என்று எப்போதும் விசாரணை! நின்றால் குற்றம்; நடந்தால் குற்றம்; உட்கார்ந்தால் குற்றம் என குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கின்றனர். கண்டிப்பு எனக் கூறி எதற்கெடுத்தாலும் அடி, உதை! வெளியிடம் என்று பாராமல் அடித்துத் துவைத்து, குழந்தைகளின் தன்மான உணர்வோடு விளையாடுகின்றனர்.

சிலர் எல்லை தாண்டிப் போய், குழந்தைகளைக் கட்டி வைத்து அடிப்பது, சூடு போடுவது, கூரிய ஆயுதங்களைத் தூக்கி எறிவது, உடல் முழுவதும் காயம் ஏற்படும் வகையில் அடிப்பது என கருணையில்லாமல் கரடு முரடாய் நடந்து கொள்கின்றனர். இத்தகைய செயல்கள் ஒருபோதும் உங்கள் குழந்தைகளை நேர் செய்யாது என்பதைத் தாய்மார்களே புரிந்து கொள்ளுங்கள்.

இந்த வன்முறை செயல்களினால் உங்கள் மீது குழந்தைகளுக்கு வெறுப்பு தான் வருமே தவிர அக்கறையால் தான் இவ்வாறு செய்கிறீர்கள் என்பதை அவர்களால் உணர முடியாது. எல்லா நேரமும் அடி, உதை, திட்டுக்கள் என வளரும் குழந்தைகள் வருங்காலத்தில் முரடர்களாக, சைக்கோவாக ஆகின்றனர். தம்மிடம் காட்டப்பட்ட அடக்குமுறைகளை அவர்கள் மற்றவர்களிடம் வெளிப்படுத்துகின்றனர்.

குழந்தைகள் தான் செய்ய விரும்பும் பல நல்ல காரியங்களைக் கூட பெற்றோர் மீதுள்ள பயத்தாலும், வெறுப்பாலும் செய்யாமலேயே விட்டு விடுகின்றனர். அதிகாரத்தால், அடக்குமுறையால் செய்ய முடியாத எத்தனையோ பல காரியங்களை அன்பினால் செய்து முடிக்க முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆட்சி, அதிகார பலம் இருந்த போதும் அவர்கள் தமது எதிரிகள் மீது கூட அடக்குமுறையைப் பிரயோகித்ததில்லை.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் எதையும் எப்போதும் அடித்ததில்லை; எந்தப் பெண்ணையும் எந்த ஊழியரையும் அடித்ததில்லை; அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்யும்போதே) தவிர.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொல்லாலோ செயலாலோ) தம்மைப் புண்படுத்திய எவரையும் அவர்கள் எப்போதும் பழிவாங்கியதில்லை; இறைவனின் புனித(ச் சட்ட)ம் ஏதும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இறைவனின் சார்பாக அவர்கள் நடவடிக்கை எடுத்தாலே தவிர (அப்போது மட்டுமே பழிவாங்குவார்கள்).

(முஸ்லிம்: 4651)

அனஸ்(ரலி) அறிவித்தார்: 

நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ’ என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்’ என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லை.

(புகாரி: 6038)

விரட்டியடிக்கும் வார்த்தைகள்

அடி, உதை மட்டுமல்லாமல் தாய்மார்கள், குழந்தைகளைத் திட்டுவதற்கென்றே அதிர வைக்கும் வார்த்தைகளையும் பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் மீதுள்ள கோபத்தால், “நாசமாய் போ, விளங்காமல் போ, நல்லாவே இருக்க மாட்டாய்…” என்பன போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி சாபமிடுகின்றனர். அத்துடன் காலை முதல் இரவு வரையிலும் அசிங்கமான வார்த்தைகளையெல்லாம் நாக்கூசாமல் சங்கோஜப்படாமல் சகட்டு மேனிக்குப் பேசுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மை எச்சரிக்கின்றார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்.

இதை அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

(புகாரி: 6138)

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் ‘ஆமீன்’ கூறுகின்றனர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(முஸ்லிம்: 1678)

தவறை உணர்த்த சிறந்த வழி

கண்டிப்பு என்ற பெயரில் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்வதற்குப் பதிலாக மாற்று வழியைக் கையாளலாம். குழந்தைகள் மீதுள்ள கோபத்தை அனல் கக்கும் வார்த்தைகளிலும் உடல் பலத்தின் மூலமும் காட்டுவதற்குப் பதிலாக கோபத்தை முக அறிகுறிகள் மூலம் காட்டலாம். உங்கள் முக மாற்றத்தின் மூலமே, நாம் தவறு செய்துள்ளோம், அதனால் தான் தாயின் முகம் மாறியுள்ளது என்பதைக் குழந்தைக்குப் புரிய வையுங்கள். குழந்தைகள் தவறிலிருந்து விடுபட இது ஓர் அழகிய வழியே!

‘நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களிடம் அது பற்றி அதிகமாகக் கேள்விகள் தொடுக்கப்பட்டபோது கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் ‘நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்’ எனக் கூறினார்கள். அப்போது ஒருவர். ‘யார் என்னுடைய தந்தை?’ என்று கேட்டதற்குவர்கள் ‘ஹுதாபா தான் உம்முடைய தந்தை’ என்றார்கள்.

உடனே வேறொருவர் எழுந்து ‘என்னுடைய தந்தை யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்க ‘உம்முடைய தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த சாலிம் என்பவர் தாம்’ என்றார்கள். (இக் கேள்விகளின் மூலம்) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம்’ என்றார்கள்’

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

(புகாரி: 92)

அலீ இப்னு அபீதாலிப் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் கோடுபோட்ட பட்டு அங்கியொன்றை எனக்கு வழங்கினார்கள். நான் அதை அணிந்துகொண்டு வெளியே புறப்பட்டேன். அப்போது அவர்களின் முகத்தில் கோபக் குறியைக் கண்டேன். எனவே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டு விட்டேன்.

(புகாரி: 5840)

தவறை உணர்த்த மற்றொரு வழி, வாய் ஓயாமல் பேசுவதற்குப் பதிலாக வாயே திறக்காமல் இருப்பதன் மூலமும் பாடம் நடத்தலாம். என்னதான் அடித்துக் கொண்டாலும், முறைத்துக் கொண்டாலும் அன்பு காட்டி அரவணைக்கும் ஒரு தாய் பேசாமல் மவுனம் காத்தால் அந்த மவுனமே குழந்தைகளுக்கு ஒரு வெறுமையை ஏற்படுத்தும். மீண்டும் தவறு செய்தால் நம்மிடம் தாய் பேச மாட்டார் என்ற அச்சம், அவர்களை விரும்பத்தகாத காரியங்கள் செய்வதை விட்டும் தடுத்து விடும். தாய்மார்களே! இந்த வழிமுறையை நீங்களும் கையாளுங்கள்.

உணர்வுக்கு மதிப்பளியுங்கள்

என் பிள்ளை என் சொல்லைக் கேட்பதில்லை, எனக்கு மரியாதை தருவதில்லை, அன்பாக நடந்து கொள்வதில்லை, நான் அன்பு காட்டினால் அதைப் புரிந்து கொள்வதில்லை என்றெல்லாம் புகார் கொடுக்கும் தாய்மார்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் அவர்களும் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

நீங்கள் நினைத்தவாறு வடிவம் செய்வதற்குக் குழந்தைகள் ஒன்றும் களிமண் அல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; உணர்வுள்ளவர்கள். சில நேரங்களில் அவர்களின் எதிர்பார்ப்புக்கிணங்க நீங்களும் உங்களை மாற்றிக் கொள்வது அவசியமானதாகும். பச்சிளங்குழந்தையாக இருந்த போது அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் நீங்களே முன்னின்று செய்தீர்கள். அதைப் போன்று அவர்கள் வளர்ந்த பின்பும் இருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமாகும்.

அனுபவமிக்க நீங்கள் அறியாப் பருவத்திலுள்ள பிள்ளைகளின் மனநிலையைக் கேட்டு நடந்து கொள்வதை விட்டு விட்டு, நான் தான் அவனைப் பெற்றேன், அவன் ஒன்றும் என்னைப் பெறவில்லை, என் சொல்லைக் கேட்டுத் தான் அவன் நடக்க வேண்டும் என்று உங்கள் உரிமையை உறுதி செய்து கொள்வதும், அதிகாரத் தோரணையில் அடம் பிடிப்பதும் ஒருபோதும் பயன் தராது.

பிள்ளைகளின் மனதைப் புரிந்து கொள்வதற்குச் சில விஷயங்களில் விட்டுக் கொடுப்பதும், விட்டுப் பிடிப்பதும் சகித்துக் கொண்டு பொறுமை காப்பதும் மிகவும் அவசியம்.

பெற்றோர்கள் செய்ய வேண்டியவையும்  செய்யக் கூடாதவையும்

  1. தான் படிக்காத படிப்பை எல்லாம் தமது குழந்தைகள் படித்துப் பெரிய பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆவலில் கோடிப் பணத்தைக் கொட்டி, உயர்ந்த கல்வியகத்தில் சேர்த்து விடுகின்றனர். மேலும் எல்லா நேரமும் படி, படி என்று படிப்பைத் திணிக்கின்றர். விளையாடக் கூட அவர்களை அனுமதிப்பதில்லை. இதனால் படிப்பின் மீது வெறுப்பு தான் ஏற்படும்.

பள்ளியிலிருந்து வந்தவுடன் குழந்தைகளின் அலுப்பைப் போக்குங்கள். விளையாட அனுமதியுங்கள். இதனால் அவர்களது உடலும் உள்ளமும் உற்சாகமடையும். முடிந்தால் அந்த விளையாட்டில் நீங்களும் பங்கேற்றுக் கொள்ளுங்கள். ஆசை தீர விளையாடி ஓய்ந்தவுடன் அவர்களுக்குப் படிப்பை நினைவூட்டுங்கள். இயன்ற வரை படிக்க வையுங்கள். வெறுப்புடன் அமர்ந்து மணிக்கணக்கில் படிப்பதை விட குதூகலத்துடன் கால் மணி நேரம் படித்தாலும் கூட அதுவே நிறைவானது என்று திருப்தி கொள்ளுங்கள்.

குழந்தைகளின் முன்னிலையில் தீய சொற்கள், தீய செயல்களை முற்றிலும் தவிர்த்திருங்கள். அவர்களின் கண் முன்னே நற்செயல்களை அதிகம் செய்யுங்கள். அதில் குழந்தைகளையும் கூட்டாக்குங்கள். நல்லுபதேசங்களை அதிகமாகச் செய்யுங்கள். நபிமார்கள் பற்றியும் நபித்தோழர்கள் பற்றியும் வரலாறுகளை, கதைகளைப் போன்று மனதில் பதியுமாறு எடுத்துரையுங்கள்.

என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

என் அருமை மகனே! தொழுகையை நிலைநாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதிமிக்க காரியமாகும்.

மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

“நீ நடக்கும்போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்’’ (என்று லுக்மான் அறிவுரை கூறினார்).

(அல்குர்ஆன்: 31:16-19)

ருபைய்யிவு பின்த் முஅவ்வித் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தில் காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, ‘யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!’ என்று அறிவிக்கச் செய்தார்கள்.

நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டும் அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும் வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.

(புகாரி: 1960)

  1. தாயின் உறவினர்கள் குறித்துத் தந்தையும், தந்தையின் உறவினர்கள் குறித்துத் தாயும் மாறி மாறி தமது பிள்ளைகளிடம் குறை கூறுகின்றனர். மேலும் தமது குழந்தைகள் முன்னிலையிலேயே நெருங்கிய உறவினர்களைப் பற்றி விமர்சிக்கின்றனர். இன்னும் சிலர், தமது உறவினர்களைக் குறிப்பிட்டு, அவர் எது தந்தாலும் வாங்கக் கூடாது என்று உறவை முறித்து விடப் பாடம் புகட்டுகின்றனர்.

இன்று பல குழந்தைகள் உறவினர்களை மதிக்காமல் நடந்து கொள்வதற்கு இதுவே முக்கியக் காரணம். இத்தகைய செயலைக் கைவிட்டு, உறவினர்கள் குறித்து நபிகளார் செய்த உபதேசத்தையும், உறவைப் பேணி வாழ்வதால் ஏற்படும் நன்மைகளையும், உறவைப் பேணாவிட்டால் ஏற்படும் விபரீதங்களையும் எடுத்துரைத்து, பகைமை தலைதூக்காத வகையில் உறவுகளைப் பசுமையாக்குங்கள். பெரியவர்களுக்கு மத்தியில் ஆயிரம் விவகாரம் இருந்தாலும் அதைக் குழந்தைகளிடம் காட்டாதீர்கள்.

  1. குழந்தைகளைப் பகட்டான வாழ்க்கையின் பக்கம் வழிநடத்தாமல் எளிமையான வாழ்க்கையை வாழ வையுங்கள்.

அலீ (ரலி) அறிவித்தார்.

(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி(ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா நபி (ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.

அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அவர்கள், ‘நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்’ என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்.)

அப்போது அவர்கள், ‘நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது முப்பத்து மூன்று முறை ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை ‘அல்ஹம்துலில்லாஹ்’ (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்’ என்று கூறினார்கள்.

(புகாரி: 5361)

பகட்டு வாழ்க்கை நிலையானது அல்ல என்ற பாடத்தையும் கற்றுத் தாருங்கள். நாம் படும் கஷ்டம் குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது என்று மறைப்பதற்குப் பதிலாக, வாழ்க்கை என்றால் இத்தனை கஷ்டங்களும், தாங்க முடியாத சோதனைகளும் வரும் என்ற வாழ்க்கைப் பாடத்தைப் போதியுங்கள். நம் முன்னோர்கள் பட்ட கஷ்டங்களையும் தியாகங்களையும் கூற மறந்து விடாதீர்கள்.

  1. குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் தனிப்பட்ட சிறப்பம்சங்கள் இருக்கின்றன. எனவே நாம் பெற்ற பிள்ளைகள் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். குழந்தைகளின் தகுதிக்கு மீறி எதிர்பார்க்காதீர்கள். பிள்ளைகளிடம் ஏற்றத் தாழ்வு பாராட்டாதீர்கள். உள்ளதை உள்ள வகையில் ஏற்றுக் கொள்ளுங்கள். ஒருபோதும் பிறருடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். ஒவ்வொருவரிடமும் உள்ள தனித்தன்மையை மனதாரப் பாராட்டுங்கள்.
  2. வெற்றியை மட்டும் நோக்கமாக வைத்துக் குழந்தைகளை வளர்க்காதீர்கள். வாழ்வில் வெற்றியும் தோல்வியும் இயல்பானதே! அதுவே இறைவனின் நியதி என்பதைக் குழந்தைகளின் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிவு செய்யுங்கள்.

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவராலும் வெல்ல முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது. (ஒரு பயணத்தின் போது) கிராமவாசி ஒருவர் தம் (ஆறு வயதுக்குட்பட்ட) வாட்டசாட்டமான ஒட்டகத்தின் மீது வந்து நபிகளாரின் அந்த ஒட்டகத்தை முந்திச் சென்றார்.

இது முஸ்லிம்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. முஸ்லிம்கள் ‘அள்பா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது’ என்று கூறினர். (இதை அறிந்த) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘உலகில் உயர்ந்துவிடுகிற எந்தப் பொருளாயினும் நிச்சயமாக (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டுவருவதே அல்லாஹ்வின் நியதியாகும்’ என்று கூறினார்கள்.

(புகாரி: 6501)

தேர்வில் தோல்வி, மதிப்பெண் குறைவு, ஆசிரியர் திட்டுதல் போன்ற அற்பக் காரணங்களுக்கெல்லாம் தற்கொலைகள் அதிகமாக நடப்பதற்கு இந்த எண்ணம் இல்லாததே காரணம்.

  • குழந்தைகள் எதைச் சொன்னாலும், எதைக் கேட்டாலும் வேண்டாம், முடியாது, இல்லை, தர மாட்டேன் என்று எதிர்மறையாகவே பதில் சொல்லாமல், அவர்கள் கேட்பது, கூறுவது நியாயமானதாக, நன்மை பயக்கக் கூடியதாக இருந்தால் அதை ஆதரியுங்கள்; நீங்களே அதிகம் ஆர்வமூட்டுங்கள்; அதை வாங்கிக் கொடுங்கள். குழந்தைகள் கேட்கும் விஷயத்தில் நன்மை இல்லாதபட்சத்தில் தயவு காட்டாமல் மறுத்து விடுங்கள். நாம் விரும்புவது நியாயமானதாக இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும்.

 

  • உன்னால் எதையுமே செய்ய முடியாது; மாடு மேய்க்கத் தான் லாயக்கு; வருங்காலத்தில் நீ எதற்கும் உருப்பட மாட்டாய் என்று அவர்களின் தன்மானத்திற்குச் சவால் விடும் வகையில் பேசி, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தாமல் இந்த வீட்டிற்கு நாளைய நட்சத்திரமே நீதான் எனக் கூறி ஆர்வமூட்டுங்கள்.

உன்னால் இதைச் செய்ய முடியுமா? இதற்கு நீ சரிப்பட்டு வருவாயா? வேண்டாம் விஷப்பரிட்சை என்றெல்லாம் ஐயப்பட பேசி, பிள்ளைகளைத் தளர்வடையச் செய்யாமல், உன்னால் முடியும், செய்து பார் என்று ஆர்வமூட்டி அருகிலிருந்து உதவுங்கள். சிறு சிறு பொறுப்புக்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். இதில் கவனிக்க வேண்டிய அம்சம், இந்தப் பயிற்சியில் சாதகம், பாதகம் இரண்டுமே இருக்கலாம். அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி (ஷாம் நாட்டுக்கு) ஒரு படைப்பிரிவை அனுப்பினார்கள். மக்களில் சிலர் (இளம் வயதைக் காரணம் காட்டி) உசாமா (ரலி) அவர்களின் தலைமையைக் குறை கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) நின்று, “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதல்ல.) இதற்கு முன்பு (மூத்தா போரின்போது) இவருடைய தந்தை (ஸைத்)யின் தலைமையையும்தான் நீங்கள் குறை கூறிக்கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராகவும் இருந்தார். அவருக்குப் பின் மக்களிலேயே இவர் (உசாமா) என் அன்புக்குரியவர் ஆவார்” என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 4809)

தாயே சிறந்த தோழி

நம்மைச் சுற்றி எத்தனை உறவுகள் இருந்தாலும் நட்புறவைப் போன்று விருப்பமான உறவு வேறெதுவும் இருக்க முடியாது. அதே போன்று நண்பர்களைத் தவிர வேறு யாராலும் நமது மனதை நெருங்க முடியாது. அதனால் தான் நபிகளார், நட்புக்கு மிகவும் தகுதியானவராக தாயைக் கூறுகிறார்கள்.

அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள்.

(புகாரி: 5971)

தாய்மார்களே! உங்கள் தாய்மையில் ஒரு தோழமை இருக்கிறது. அதனால் தான் தாய்க்குத் தோழி என்ற தகுதியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தருகின்றார்கள். அதை உணர்ந்து உங்கள் குழந்தைகளிடம் கலந்துறவாடுங்கள். ஒளிவு, மறைவு இல்லாமல் மனம் திறந்து பழகுங்கள். நான் தாய் மட்டுமல் அல்ல; உனது நெருங்கிய தோழி என்பதை உங்கள் செயலால் புரிய வையுங்கள். அவ்வாறு பழகும் போது தான் உங்கள் பிள்ளைகளின் மனநிலையைப் புரிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளைச் சரிவர பூர்த்தி செய்ய முடியும்.

தாய் என்ற அந்தஸ்தில் இருந்து அவர்களை வழிநடத்தும் போது, பிள்ளைகள் தங்கள் நியாயத்தை எடுத்துரைப்பது கூட எதிர்த்துப் பேசுவதாகவே தோன்றும். ஆனால் தோழியாகத் தோள் கொடுக்கும் போது அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடியும்.

ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைகளுக்கென்று நேரம் ஒதுக்கி அன்றைய நாள் பற்றிப் பேசுங்கள். நண்பர் வட்டாரம் பற்றிக் கேட்டறியுங்கள். சமூக சூழ்நிலைகள் பற்றி, தடுமாறும் இளைய தலைமுறை பற்றிக் கலந்துரையாடுங்கள். நகைச்சுவைக்கும் இடமளியுங்கள். அறிவுப்பூர்வமான. சிந்தனையைத் தூண்டும் வகையில் பல வினாக்களைத் தொடுத்து, விடை கூறுங்கள்.

பாலியல் ரீதியான மாற்றங்களையும், மார்க்கம் கூறும் தீர்வுகளையும் குறிப்பிடுங்கள். முடிந்தால் வயது வரம்பை மறந்து உங்கள் பிள்ளைகளுடன் விளையாடுங்கள். இத்தகைய தோழமை உணர்வு தான் ஆரோக்கியமான உறவு!

ஒருபோதும் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் மத்தியில் பிளவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். இளம் பருவத்தினர் தனிமையை எதிர்கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இதுவெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வி எழுந்தாலும் சாத்தியமான ஒன்று தான். நேரம் இல்லை, வேறு பொறுப்புகள் இருக்கின்றன என்று சமரசம் செய்யாமல் இதுவும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை தான், இது குறித்தும் அல்லாஹ்விடம் விசாரணை உண்டு என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் அங்கம் வகித்த ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கினார்கள். மக்களோடு மக்களாய் இருந்து தவறுகள் அரங்கேறாமல், தீமைகள் தலைவிரித்தாடாமல் முளையிலேயே கிள்ளி எறிந்தார்கள். மாமேதையான மாநபியிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது.

பெற்றோர்களே! தளர்ந்து வாடும் நேரத்தில் நீங்கள் அழைக்காமலேயே உங்கள் குழந்தைகள் உங்களுக்குக் கரம் தர வேண்டும் என்றால் நீங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.