பெருகிவரும் தற்கொலைகள்: தீர்வு என்ன?
பெருகிவரும் தற்கொலைகள்: தீர்வு என்ன?
நம் நாட்டில் கொலை கொள்ளை திருட்டு கற்பழிப்பு வழிப்பறி போன்ற குற்றங்களை பொறுத்தவரையில் இதுவெல்லாம் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு துன்பத்தைக் கொடுக்கும் வகையில் ஒரு பக்கம் நம் நாட்டிலே நடந்தாலும், மனிதன் தனக்குத் தானே தீங்கிழைக்கக் கூடிய ஒரு மூடப்பழக்கமும் மக்களிடத்திலே அதிகமாக உண்டாகியிருக்கிறது. மிக நீண்ட நெடிய காலமாக நம் நாட்டிலும் சரி இந்த ஒட்டுமொத்த உலகத்திலும் சரி தற்கொலைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
அந்த அடிப்படையில் சமீபத்தில் புதுடெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் மூட நம்பிக்கையால் தற்கொலை செய்தது சிசிடிவி காட்சி மூலம் உறுதியாகியுள்ளது. தற்கொலை என்பது இன்று நேற்று நடப்பதல்ல தொடர்ச்சியாக உலகளாவிய அளவில் நடந்து கொண்டேதான் இருக்கிறது அப்படி இருக்கும் பொழுது இந்த சம்பவத்தை மாத்திரம் மேற்கோள் காட்டுகிறோம் என்றால் ஏன்? எல்லா தற்கொலைச் சம்பவங்களை விடவும் இந்த தற்கொலை சம்பவம் முற்றிலும் வேறுபட்டதாக மாறுபட்டதாக வித்தியாசமானதாக இருக்கிறது.
தற்கொலை செய்து கொண்ட இந்த 11வது நபர்களும் தங்களது வீட்டிலேயே ஒரு வணங்கும் இடத்தை உண்டாக்கி அதிலேயே தனக்கென்று ஒரு கடவுளை தேர்வு செய்துகொண்டு வழிபட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களுக்கு என்று ஒரு குறிப்பையும் அந்த குறிப்பின் அடிப்படையிலேயே தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அந்த குறிப்புகளில் அவர்கள், ‘ஒருவர் இறக்கமாட்டார்’ எனவும், ஆனால் அதைவிட ‘பெரிய காரியத்தை’ செய்வார் எனவும் எழுதப்பட்டு இருந்தது. மேலும் ‘சொர்க்கத்தை அடையும் வழி’ மற்றும், தற்கொலை செய்வதற்கான வழிகளையும் அதில் எழுதி இருந்தனர்.
அதன்படி, தற்கொலை செய்வதற்கு அனைவரும் நாற்காலியை பயன்படுத்த வேண்டும். கை, கால்கள், வாய், கண்கள் கட்டப்பட்டு இருந்தால்தான் சொர்க்கத்தை அடைய முடியும். தற்கொலை செய்யும்போது விளக்குகள் குறைந்த வெளிச்சத்தில் இருக்க வேண்டும், நள்ளிரவு 12&1 மணிக்குள் தற்கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் அதில் எழுதப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில் குறிப்பை படித்து அதையே நடைமுறைப் படுத்தி பார்க்கலாம், நடைமுறைப்படுத்தினால் சொர்க்கம் செல்லலாம் என்று ஆசைப்பட்டு 11 பேரும் தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொண்டார்கள்.
இந்தச் சம்பவம் மட்டும் அல்ல இது போன்ற பல கோணங்களில் பல விதமாக அவ்வப்போது தற்கொலைச் சம்பவங்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்!. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேனீகனிக் கோட்டை பகுதியில் மகள் இறந்த சோகத்தில் நாட்டு துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை செய்த சம்பவம் (31.05.2018) காவலர் பயிற்சி மையம் காவலர் பணிச்சுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் (14.05.2018) கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்த காரணத்தினால் மெஸ்ஸியின் தீவிர ரசிகர் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் (24.06.2018)
இப்படியே பட்டிகளை தொடர்ந்து கொண்டு சென்றால் இந்த கட்டுரையை முடிக்க முடியாது அவ்வளவு தற்கொலைச் சம்பவங்கள் நம்முடைய நாட்டிலே வித விதமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது! புள்ளிவிபரம்: நேஷனல் க்ரைம் ரெக்கார்ட்ஸ் பீரோ (ழிசிஸிஙி)-வின் புள்ளிவிவரப்படி, 2015-ம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 1,33,623. இவர்களில் 93,586 பேர் (70 சதவிகிதம் பேர்) ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள். இதிலும் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகியவற்றோடு மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது தமிழ்நாடு. இன்னும் கடந்த 4 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டில் தற்கொலைகள் அதிகரித்திருப்பதும்,
அதாவது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே ஆண்டில் 1,921 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில் 1,268 பேர் ஆண்கள், 653 பேர் பெண்கள். 2016ல் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1,795 ஆகவும், 2015ல் 1,855 ஆகவும் இருந்துள்ளது. இப்படியே ஒவ்வொரு வருடத் திலேயும் தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. குறைந்தபாடில்லை! இந்த தற்கொலையை தடுப்பதற்கு அரசாங்கமும் சட்டத்தை வகுத்துக் கொண்டு தான் இருக்கிறது.
யார் யாரெல்லாம் தற்கொலை செய்யப்போவதாக தகவல் கிடைக்கிறதோ அவர்களை பிடித்து சிறையில் அடைக்கிற அந்த வேலையை அரசாங்கம் பார்க்கிறது. ஆனால் இந்த நடவடிக்கையின் மூலமாக இந்த தீமையை, தற்கொலைச் சம்பவங்களை அரசாங்கத்தால் ஒழிக்க முடிந்ததா? இல்லவே இல்லை! உலகத்தில் வாழுகிற எல்லோருக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் சில துன்பகரமான நிகழ்வுகள் நடக்கும் என்பதை அனைவரும் விளங்கி வைத்திருக்கிறோம். கண்டிப்பாக எல்லா மனிதனுடைய வாழ்க்கையிலும் சோதனை கட்டங்கள் வரத்தான் செய்யும்!
அப்படி வருகிற பொழுது அந்த சோதனையை தீர்த்துக் கொள்வதற்காக அதற்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக உயிரை இழப்பது தான் முடிவு என்று சொல்லி தற்கொலை செய்து கொள்கிறார்கள். உண்மையிலேயே இது சரியான முடிவு தானா? தற்கொலை செய்து கொண்டால் எல்லாம் சரியாகிவிடுமா? இது ஒன்றுதான் வழியா?அந்த சோதனைகளை கடப்பதற்கு,அந்த சோதனையில் இருந்து விடுபடுவதற்கு, மீண்டு வருவதற்கு தற்கொலை ஒன்றுதான் தீர்வா? என்று கேட்டால் அதற்கு இஸ்லாம் தீர்வு சொல்கிறது. வேறு ஒரு வழியை இஸ்லாம் காட்டித் தருகிறது.!
முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் அவர்களிடத்திலே இதுபோன்ற தற்கொலைச் சம்பவங்களை அதிகமான முறையில் காண முடியாது. காரணம் அவர்கள் ஒரு விஷயத்தை தெளிவாக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள், அது என்னவென்றால் மறு உலகம் ஒன்று உள்ளது, அதில் சொர்க்கம் நரகம் என்று பிரிக்கப்பட உள்ளது, நாம் சொர்க்கவாசியாக செல்ல வேண்டுமென்றால் தற்கொலை செய்யக்கூடாது தற்கொலை செய்து கொண்டோம் என்றால் நரகம் சென்று விடுவோம் என்கிற அந்த பயம் தான் அந்த நம்பிக்கைதான் அவர்களுக்கு எந்த சோதனை ஏற்பட்டாலும்
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை எல்லாம் இந்த ஒரு விஷயத்திற்காக வேண்டி தாங்கிக்கொண்டு கட்டுப்படுத்திக்கொண்டு அந்த சோதனைகளிலிருந்து கடந்து செல்கிறார்கள். இவர்களை அப்படி பக்குவப்படுத்தியது இஸ்லாமிய சட்டம், இஸ்லாமிய நம்பிக்கை, மறுமை நம்பிக்கை, சொர்க்கத்தைப் பற்றி உண்டான நம்பிக்கை, இவை யெல்லாம்தான் முஸ்லிம்களை அதிகமாக தற்கொலை செய்ய விடாமல் தடுத்து நிறுத்துகிறது! இந்த உலகத்திலே முஸ்லிமாகிய ஒருவனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அந்த நேரத்தில் அவன் அதை சகித்துக் கொண்டு பொறுமை காத்தால் இந்த சோதனைக்கு ஈடாக நாளை மறு உலகத்தில் அவனுக்கு பரிசு உள்ளது
என்று அந்தப் பரிசை காரணமாக காட்டி அவனை இஸ்லாம் தற்கொலை செய்ய விடாமல் பண்படுத்துகிறது. இப்படி பகுத்தறிவால் பயன்படுத்தக்கூடிய இஸ்லாமிய மார்க்கத்தின் அறிவுரைகளை மாற்று மத சகோதரர்களும் கூட புரிந்துகொள்கிறார்கள்! ஆகையால் எனக்கு படிப்பு ஏறவில்லை, உலகத்தில் வாழவே பிடிக்கவில்லை, பொருளாதாரம் இல்லை, குடும்பத்தில் சண்டை, மனைவி சரியில்லை,காதல் தோல்வி, இப்படி பல்வேறு விதமான பிரச்சனைகளை காரணமாக கொண்டு தற்கொலை செய்கிறவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்
நீங்கள் ஒரு முடிவு எடுத்து தற்கொலை செய்து விடுகிறீர்கள் ஆனால் உங்களை நினைத்து நினைத்து உங்களுடைய நண்பர்கள் உங்களுடைய உறவினர்கள் அழுகாத நாளில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்! நீங்கள் தற்கொலை செய்து விட்டு உங்களுடைய பிள்ளைகளையும் மனைவிமார்களையும் குடும்பத்தார்ளையும் உறவினர்களையும் நண்பர்களையும் இழந்துவிட்டு செல்கிறீர்கள். அவர்களையும் அனாதையாக்கிவிட்டு செல்கிறீர்கள். ஆனால் இப்படிப்பட்ட மாபாதகச் செயலை இஸ்லாமிய மார்க்கம் ஒருபோதும் அங்கீகரிக்காது.
இப்படி தற்கொலை செய்பவர்களில் புரிந்து கொள்ளும் விதமாக ஒரே ஒரு கேள்வி என்னவென்று கேட்டால் ஒருவனுக்கு ஒரு விரலில் காயம் பட்டு விட்டதென்றால் கை வலிக்கிறது என்று சொல்லி கையை யாரும் வெட்டிக்கொள்ள மாட்டோம்! இதேபோலத்தான் தற்கொலை பார்வை! வாழ்க்கையில் சில கஷ்டங்கள் வந்தால் அதை எவ்வாறு கடந்து செல்லவேண்டும் என்பதை தான் பார்க்க வேண்டுமே தவிர!
நம்முடைய உயிரை நாமே அளிப்பது மடமைத்தனம் என்பதை இந்த இஸ்லாமிய மார்க்கம் ஒட்டுமொத்த உலகத்தையும் பயன்படுத்தக்கூடிய ஒரு அறிவுரைகளை வழங்குகிறது. அனைவரும் இந்த அறிவுரையின் அடிப்படையில் நடைபோட்டால் ஆங்காங்கே நடைபெறுகிற தற்கொலை சம்பவங்கள் அறவே ஒழியும் என்பதை சொல்லிக் கொள்கிறோம்.
Source : unarvu ( 27/07/18 )