பெண் தனியே பயணம் செய்யலாமா?

முக்கிய குறிப்புகள்: முக்கிய ஆய்வுகள்

பெண் தனியே பயணம் செய்யலாமா?

கணவன். அல்லது மஹ்ரமான உறவினர் துணை இல்லாமல் ஒரு பெண் செய்யலாமா? செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எதுவும் உள்ளதா என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் நீண்ட காலாமாகா கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இது   குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். பரவலாகா கோரிக்கை வந்ததன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் அறிஞர்கள் குழு சென்னையில் கூடி 15.022011 மற்றும் 16.02.2011 ஆகிய இரண்டு நாட்கள் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு குறிதது  விளக்குவதற்காக இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது.

ஒரு பெண்” திருமணம் முடிக்கத்தகாத ஆண் உறவினர் இல்லாமல் பயணம் செய்வது பற்றிப் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. குறிப்பிட்ட தூரம் வரை பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம். அதற்கு பயணம் மேற்கொண்டால் மஹ்ரமான துணை அவசியம் ஒரு சாரார் கூறுகின்றனர். பெண்ணின் உயிர், உடைமை, கற்பு ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு இருக்கும் காலத்தில் அவள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம் என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

மேலும் சிலர், ஒரு பெண் எந்தச் சூழ்நிலையிலும் இவ்வாறு பயணம் செய்யக் கூடாது என்று கூறுகின்றனர். இது தொடர்பாக வரும் செய்திகளில் ஒன்றை ஏற்று, மற்றதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதால் தான் கருத்து வேறுபாடு உருவாகின்றது. அனைத்து ஆதாரங்களையும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்தால் குழப்பமின்றி தெளிவான முடிவுக்கு வரலாம்.

இது தொடர்பாக வரும் செய்திகளை நாம் ஆய்வு செய்யும் போது ‘அச்சமற்ற காலத்தில் பெண் தனியே பயணம் மேற்கொள்வதில் தவறல்ல’ என்ற இரண்டாவது சாராரின் கருத்தே சரியானது என்ற முடிவுக்கு நாம் வரலாம். நமது நிலைபாட்டுக்குரிய ஆதாரங்களை அறிந்து கொள்வதற்கு முன்னால் ‘குறிப்பிட்ட தூரம் வரை பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம்’ என்று கூறுவோர் ஆதாரமாகக் கருதும் செய்திகளின் உண்மை நிலையை முதலில் அறிந்து கொள்வோம்.

முரண்பட்ட செய்திகள் 

பெண்கள் மஹ்ரமான துணை இல்லாமல் அதிகப்பட்சமாக எவ்வளவு தூரம் செல்லலாம் என்பது குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் வெவ்வேறான அளவுகள் கூறப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

1.ஒரு நாள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது.

2.இரண்டு நாட்கள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது.

3.மூன்று நாட்கள் தொலைவுடைய பயணத்தை ஒரு பெண் தனியே மேற்கொள்ளக் கூடாது.

4. ஒரு பரீத் தூரத்திற்கு ஒரு பெண் தனியே பயணம் செய்யக் கூடாது. ‘ஒரு பரீத் என்பது 12 மைல்களாகும். ஏறத்தாழ 19 கிலோ மீட்டார். இதன் தொலைவாகும்)

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் ஒரு நாள் தொலைவுடைய பயணத்தை மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் தனியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (1088)

ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி (1995)

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எந்தப் பெண்ணும் மூன்று நாட்கள் தொலைவுடைய பயணத்தை மணமுடிக்கத்தகாத நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் தனியாகப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம் (2382) ‘

ஒரு பெண் மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) ஒரு பரீத் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: சஹீஹ் இப்னி குஸைமா (2350)

இந்த நான்கு விதமான அறிவிப்புகள் ஒவ்வொன்றிலும் வெவ்வேறான தூர அளவுகள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றை ஏற்றால் மற்றவற்றை மறுக்கும் நிலை ஏற்படும். எனவே இந்தச் செய்திகள் ஒன்றுக்கொன்று முரணாக அமைந்துள்ளன. இவற்றில் ஒன்றை ஏற்று மற்றவற்றைப் புறக்கணிக்கவும் முடியாது. ஏனென்றால் இவை அனைத்தும் சமமான தரத்திலமைந்த செய்திகள்.

இரண்டு செய்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டால் அந்த முரண்பாடு நீங்கும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்க முடியாத வகையில் முரண்பாடு இருந்தால் அந்த இரண்டில் எது தரத்தில் உயர்ந்தது என்று பார்த்து உயர்ந்த தரத்தில் அமைந்த செய்தியை ஏற்று. தரத்தில் குறைந்த செய்தியை விட்டுவிட வேண்டும்.

முரண்பாடு நீங்காமலும் ஒன்றை விட மற்றொன்றை முற்படுத்த முடியாத வகையில் தரத்தில் சமமாகவும் அவை இருந்தால் இவற்றில் முந்தியது எது? பிந்தியது எது? என்று பார்க்க வேண்டும். முந்திய சட்டத்தை மாற்றப்பட்ட சட்டமாக முடிவு செய்து அதை விட்டுவிட வேண்டும். பிந்திய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,

முந்தியது எது? பிந்தியது எது? என்பதை முடிவு செய்ய முடியாவிட்டால் ஓரே தரத்தில் அமைந்த, முரண்படும் இந்தச் செய்திகளை அமல்படுத்தாமல் விட்டுவிட வேண்டும். பெண் தனியே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட தூரத்தைப் பற்றிப் பேசும் மேற்கண்ட செய்திகள் இணைத்து விளக்கம் கூற முடியாத வகையில் முரண்படுகின்றன.

இவை அனைத்தும் சமமான தரத்தைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் முந்தி கூறப்பட்டது எது? பிந்தி கூறப்பட்டது எது? என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை. எனவே இந்த செய்திகளில் எந்த ஒன்றையும் செயல்படுத்தாமல் இவை அனைத்தையும் விட்டு, வேண்டும்.

முரண்படாத செய்தி

ஒரு குறிப்பிட்ட தூரத்தை வரையறுக்காமல் பொதுவாக, பெண் எவ்வளவு தூரமானாலம் தனியே பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று ஒரு ஹதீஸ் கூறுகின்றது.

‘மணமுடிக்கத் தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மணமுடிக்கத்தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போது தான் ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (1862)

ஒன்றுக்கொன்று முரண்படுவதாக முன்பு நாம் எடுத்துக் காட்டிய நான்கு வகையான செய்திகளில் ஒரு பெண் தனியே பயணம் மேற்கொள்வது கூடாது என்ற அம்சம் மட்டுமே சரியானது. ஒரு குறிப்பிட்ட தூரத்தை வரையறுப்பது தவறு என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் இந்தச் செய்தி தெளிவுபடுத்துகின்றது. எனவே ஒரு பெண் தக்க துணை இல்லாமல் தனியே எவ்வளவு தூரமானாலும் பயணம் செய்யக்கூடாது என்பதே சரியான நபிமொழி.

அச்சமற்ற சூழ்நிலையில் அனுமதி உண்டு

மணமுடிக்கத்தகாத ஆண் துணை இல்லாமல் பெண் தனியே பயணம் செய்யக் கூடாது என்ற இச்சட்டம் பெண்ணுடைய பாதுகாப்புக் கருதியே பிறப்பிக்கப்பட்டுள்ளது. இயற்கையாக பெண் என்பவள் உடல் அளவிலும் மன அளவிலும் பலவீனமானவளாக இருக்கின்றாள். இவள் தனியே பயணம் செய்யும் போது இவளுடைய உயிர், உடைமை, கற்பு ஆகியவற்றுக்குத் தீயவர்கள் பங்கம் விளைவித்தால் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் இவளிடம் இல்லை. எனவே தான் இஸ்லாம் இந்தத் தடையை விதித்துள்ளது.

பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லாத அச்சமான காலகட்டத்தில் தான் இந்தத் தடை பொருந்தும். பாதுகாப்பு உள்ள அச்சமற்ற சூழ்நிலையில் ஒரு பெண் மஹ்ரமான ஆண் துணை இல்லாமல் தனியே பயணம் செய்தால் அதை இஸ்லாம் தடை செய்யவில்லை. மாறாக இதற்கு அனுமதி வழங்குகின்றது.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், ‘அதீயே! நீ ‘ஹீரா’வைப் ‘பார்த்ததுண்டா?” என்று கேட்டார்கள். ‘நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது” என்று பதிலளித்தேன். அவர்கள், “நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்” என்று சொன்னார்கள். நான் என் மனத்திற்குள். ‘அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட ‘தய்யி’ குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது எங்கே சென்ற விட்டிருப்பார்கள்?” என்று கேட்டுக் கொண்டேன்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி (3595)

மேற்கண்ட சம்பவத்தில் கூறப்படும் பெண் மஹ்ரமான ஆண் துணையில்லாமல் தனியே பயணம் செய்வாள். அப்போது வழிப்பறி கொள்ளை இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கின்றார்கள். இந்தப் பெண் இறையில்லமான கஅபாவை தவாஃப் செய்து இறைவனை வணங்கக்கூடியவள் என்றும், ஏக இறைவனுக்கு அஞ்சக்கூடியவள் என்றும் புகழாரம் சூட்டுகிறார்கள். அச்சமற்ற நிலையிலும் ஒரு பெண் தனியே பயணம் செய்யக் கூடாது என்று மார்க்கம் கூறுமேயானால் இந்தக் காரியத்தைச் செய்யும் இப்பெண்ணைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு புகழ மாட்டார்கள்.

இப்பெண் செய்த இந்தக் காரியத்தை நல்லாட்சிக்கு அடையாளமாக நபியவர்கள் கூறியிருக்கவும் மாட்டார்கள். ஆனால் நபியவர்கள் இப்பெண் இறையச்சமுள்ளவள் என்று சான்று தருவதிலிருந்து அச்சமற்ற பாதுகாப்பான சூழ்நிலையில் பெண் தனியே பயணம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது என்பதை அறிய முடிகின்றது.

மக்காவிற்கு மட்டும் உரிய அனுமதியா?

மேலுள்ள சம்பவத்தில் அந்தப் பெண் கஅபாவிற்கு வருகை தருவாள் என்று கூறப்பட்டுள்ளதால் பெண் தனியே பயணம் மேற்கொள்ளலாம் என்ற சட்டம் இறையில்லம் கஅபாவிற்குச் செல்வதற்கு மட்டுமே பொருந்தும். இதைத் தவிர மற்ற இடங்களுக்குச் செல்லும் போது பெண் மஹ்ரமான துணையுடனே செல்ல வேண்டும் என்று நாம் முன்னர் கூறி இருந்தோம் ஆனால் நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட முன்னறிவிப்பைப் போன்று இன்னொரு முன்னறிவிப்பையும் செய்துள்ளார்கள். இந்த முன்னறிவிப்பு இந்த அனுமதி மக்காவிற்கு மட்டும் உரியதல்ல என்பதை தெளிவுபடுத்துகின்றது.

பொதுவாக எந்த ஊராக இருந்தாலும் நாடாக இருந்தாலும் பாதுகாப்பு நிலவும் பட்சத்தில் மார்க்கம் இந்த அனுமதியை பெண்ணுக்கு வழங்குகின்றது. இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அதீ பின் ஹாதிமே! ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் அல்லாஹ்வையும் தனது ஆடுகள் விஷயத்தில் ஓநாயையும் தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் எமன் நாட்டுக் கோட்டையிலிருந்து ஹியராவிற்கு வருகை தருவாள்” என்று கூறினார்கள். நான், ‘வழிப்பறி கொள்ளையர்களான) தய்யி குலத்தினரும் அவர்களின் குதிரைப் படையும் இருக்குமே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘அப்போது அக்கூட்டத்தினரையும் வழிப்பறியில் ஈடுபடும் மற்றவர்களையும் அல்லாஹ் பார்த்துக் கொள்வான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாதிம் (ரலி), நூல்: தப்ரானீ (140392)

இந்த செய்தியில் யமன் நாட்டிலிருந்து ஹியரா வரை பெண் தனியே பயணம் செய்வதாக கூறப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு உள்ள காலத்தில் பெண் தனியே மக்காவிற்கு மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கும் ஊர்களுக்கும் பயணம் மேற்கொள்ள அனுமதி உண்டு என்பதை அறிய முடிகின்றது.

இன்றைக்கு ஒரு பெண் அச்சமில்லாமல் தனியே பயணம் மேற்கொண்டு தன் உயிர். உடைமை, கற்பு ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படாமல் திரும்பி வர முடியும். சில நேரங்களில் ஏதாவது ஒரு பகுதியில் இதற்கு மாற்றமான நிகழ்வு நடக்கலாம். ஆனால் இவை அரிதாக நிகழக் கூடியதாகும். பயணம் செய்யும் அனேக பெண்களைக் கவனத்தில் கொண்டால் அவர்கள் பாதுகாப்புடன் சென்று வருகிறார்கள் என்பதே உண்மை. எனவே தற்காலத்தில், திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட மஹ்ரமான உறவினர் இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்தால் அது மார்க்க அடிப்படையில் தவறல்ல. இதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது.

விமர்சனமும் விளக்கமும்

அச்சமற்ற காலத்தில் பெண் யாருடைய துணையுமின்றி தனியே பயணம் மேற்கொள்ளலாம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இதற்கு எதிராக பின்வரும் ஹதீஸை சுட்டிக் காட்டுகின்றனர்.

‘மணமுடிக்கத் தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது, மணமுடிக்கத்தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போது தான் ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அப்போது ஒரு மனிதர், ‘அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னின்ன இராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன், என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக!” என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (1862)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண் தனியே ஹஜ் செய்ய நாடிய போது அதை நபியவர்கள் அங்கீகரிக்கவில்லை , அப்பெண் தனது கணவனுடன் தான் ஹஜ்ஜுக்குப் புறப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள். எனவே பெண் மஹ்ரமான துணை இல்லாமல் பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று வாதிடுகின்றனர்,

நபி (ஸல்) அவர்கள், எதிர் காலத்தில் பெண்கள் அச்சமின்றி பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என்று முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். இதிலிருந்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் அச்சமின்றி தனியாகப் பயணம் செய்யும் நிலை ஏற்படவில்லை என்பதை அறியலாம். எனவே தான் அந்த நபித்தோழரை மனைவியுடன் ஹஜ்ஜுக்குச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அச்சமான காலத்தில் சொல்லப்பட்ட விதியை அச்சம் நீங்கிய காலத்திற்குப் பொருத்தக் கூடாது. அதாவது இந்த நிகழ்வு நடந்த போது பாதுகாப்பான, அச்சமற்ற நிலை இருக்கவில்லை. எனவே தான் தன் மனைவியுடன் சேர்ந்து ஹஜ்ஜுக்குப் புறப்படுமாறு அந்த நபித்தோமருக்கு நபியவர்கள் உத்தரவிட்டார்கள் என்று இதை முரண்பாடில்லாமல் பரிந்து கொள்ளலாம்.

பெண்கள் அச்சமற்ற காலத்தில் தனியாகப் பயணம் செய்யலாம் எனும் போது, அவர்கள் தவறான வழியில் செல்வதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று சிலர் காரணம் கூறுகின்றனர். இந்தக் காரணத்தை நாம் ஏற்க முடியாது.ஏனெனில் தவறான நடத்தையில் ஈடுபட நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற தேவை இல்லை. இருக்கும் இடத்திலிருந்தே தீய நடத்தையில் ஈடுபட முடியும், மேலும் ஒரு நாள், இரு நாள் அல்லது சில நாட்கள் தூரம் பெண்கள் தனியாகப் பயணம் செய்யலாம் என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர். ஒரு பெண் தீய நடத்தையில் ஈடுபட விரும்பினால் இது போதுமான அவகாசம் தான்.

எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தையிலிருந்து பெறப்படும் அனுமதியை இதுபோன்ற காரணங்களைக் கூறி தள்ளுபடி செய்ய முடியாது. மஹ்ரமான ஆண் துணையின்றி பெண் தனியாகப் பயணம் செய்யலாமா? என்பது குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மேற்கண்டவாறு முடிவு எடுக்கப்பட்டது.