பெண்ணின் உடலை ஆண்கள் குளிப்பாட்டலாமா?
பெண்ணின் உடலை ஆண்கள் குளிப்பாட்டலாமா?
ஒரு பெண் உயிரோடு இருக்கும் போது அவருடைய மறைவிடங்களை மற்ற ஆண்கள் பார்கக் கூடாது என்று சட்டம் உள்ளதைப் போல் அவர் இறந்த பிறகும் இதே சட்டம் கடைபிடிக்கப்பட வேண்டும். பொதுவாக ஆண்களின் வெட்கத்தலங்களைப் பெண்களும் பெண்களின் வெட்கத்தலங்களை ஆண்களும் பார்ப்பதற்குத் தடை உள்ளது.
மய்யித்தைக் குளிப்பாட்டும் போது வெட்கத்தலங்களைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் ஆண் மய்யித்தை ஆண்களும் பெண் மய்யித்தை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும். கணவன் மனைவி விஷயத்தில் மட்டும் இது விதிவிலக்காகும்.
கணவன் இறந்து விட்டால் மனைவியோ, அல்லது மனைவி இறந்து விட்டால் கணவனோ விரும்பினால் குளிப்பாட்டலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் எனக்கு முன் நீ இறந்து விட்டால் உன்னை நான் குளிப்பாட்டுவேன் என்று கூறியதாக தாரமீ, இப்னுஹிப்பான், தாரகுத்னீ, பைஹகீ ஆகிய நூற்களில் ஒரு ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இது பலவீனமான ஹதீஸாகும்.
எனினும் உயிரோடு இருக்கும் போது கணவன் மனைவிக்கும் உள்ள சட்டம் தான் இறந்த பிறகும் என்பதால் அவ்வாறு குளிப்பாட்டுவதில் தவறில்லை.
ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றும் இந்தக் கருத்தை வலுப்படுத்துகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) இறந்த அந்தச் சந்தர்ப்பம் மீண்டும் வரும் என்றிருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்களின் மனைவியர் தான் அவர்களைக் குளிப்பாட்டுவோம் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
அன்று இருந்த கவலையில் இந்த வாய்ப்பை நழுவ விட்டதை ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.