பெண்கள் ஸியாரத் செய்யலாமா?
மண்ணறைகளுக்கு சென்றுவரும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி) அபூஹுரைரா (ரலி) மற்றும் ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) ஆகிய மூவர் வழியாக இந்தக் கருத்தில் ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்படும் அறிவிப்பு பலவீனமானதாக உள்ளது. ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்களின் வழியாக வரும் அறிவிப்பு மாத்திரம் சரியானதாக உள்ளது.
மண்ணறைகளை சந்தித்து வரும் பெண்களையும் அவற்றின் மீது விளக்கு ஏற்றுபவர்களையும் பள்ளி எழுப்புபவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), (திர்மிதீ: 294) ➚
இது பலவீனமான அறிவிப்பாகும். இதில் அபூ சாலிஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு ஹஜர், இமாம் அபூ ஹாதிம், இமாம் நஸாயீ, இமாம் யஹ்யா பின் மயீன் மற்றும் பலர் கூறியுள்ளனர்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பும் பலவீனமாக உள்ளது.
மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்கைள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (திர்மிதீ: 976) ➚
இந்த அறிவிப்பில் உமர் பின் அபீ சலமா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, அலீ பின் மதீனீ, யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், ஷுஅபா, முஹம்மது பின் சஅத், இப்னு குஸைமா, இமாம் நஸாயீ ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.
ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்கள் வழியாக வரும் பின்வரும் அறிவிப்பு மட்டும் சரியாக உள்ளது.
மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி), (இப்னு மாஜா: 1563) ➚
இந்த ஹதீஸின் அடிப்படையில் பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என்று நாம் முன்னர் கூறி வந்தோம். இது தொடர்பாக வரும் மற்ற பல ஹதீஸ்களை பார்க்கும் போது பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லக்கூடாது என ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்திருந்தார்கள். பிறகு இதற்கு அனுமதியளித்தார்கள் என்பதை அறிய முடிகின்றது. இதை பின்வரும் நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றது.
ஆண்களும் பெண்களும் கப்று ஸியாரத் செய்யக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் முன்னர் தடைசெய்திருந்தார்கள். குறிப்பாக இந்த விசயத்தில் பெண்களுக்கு கடுமையான தடையை விதித்திருந்தார்கள். பின்னர் இருவருக்கும் அனுமதியளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி), (முஸ்லிம்: 3995) ➚
அப்துல்லாஹ் பின் அபீ முலைகா கூறுகிறார்:
ஒரு நாள் ஆயிஷா (ரலி) அவர்கள் மண்ணறைகளை சந்தித்துவிட்டு வந்துகொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் இறைநம்பிக்கையாளர்களின் தாயாரே நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என் சகோதரர் அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் அவர்களின் மண்ணறையிலிருந்து வருகிறேன் என்று பதிலளித்தார்கள். மண்ணறைகளுக்கு சென்றுவரக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்யவில்லையா? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் முதலில் தடைசெய்திருந்தார்கள். பிறகு அவற்றை சந்தித்துவருமாறு ஏவினார்கள் எனக் கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஜிப்ரீல் “உம் இறைவன் உம்மை “பகீஉ’வாசிகளிடம் சென்று அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரும்படி கட்டளையிடுகின்றான்’ என்று (என்னிடம்) கூறினார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் “அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அஸ்ஸலாமு அலா அஹ்லித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்” என்று சொல்” என்றார்கள்.
(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிலிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)
(முஸ்லிம்: 1774) ➚
மண்ணறைகளுக்கு செல்லக்கூடியவர்கள் அங்கே சொல்ல வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்துள்ளார்கள். இந்தப் பிரார்த்தனையை ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்துள்ளார்கள்.
பெண்கள் மண்ணறைகளுக்கு செல்லக்கூடாது என்றால் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இந்தப் பிரார்த்தனையை நபியவர்கள் கற்றுக்கொடுத்திருக்கமாட்டார்கள்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் பொது மையவாடிக்கு சென்று மண்ணறைகளை பார்த்து மறுமை சிந்தனையை வரவழைத்துக்கொள்ளலாம்.
ஆனால் ஆண்களானாலும் பெண்களானாலும் இறைவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் உரிய இடமான தர்ஹாக்களுக்குச் சென்றுவர அனுமதியில்லை.