பெண்கள் ஸலாம் சொல்வது குறித்து
பெண்கள் ஸலாம் சொல்லலாமா?
பெண்களை இழிவு படுத்தும் வண்ணமும், அவர்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகளை மறுக்கும் வண்ணமும் உண்மைக்குப் புறம்பாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஹதீஸ்கள் என்ற பெயரில் பல்வேறு விதங்களில் இட்டுக் கட்டப்பட்டப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் ” பெண்களுக்கு ஸலாம் சொல்வது கூடாது” என்பதாகும்.
இன்றைக்கும் கூட பெரும்பாலான ஊர்களில் பெண்கள் ஸலாம் கூறும் பழக்கம் இல்லாமல் இருப்பதை காணமுடிகிறது. இவற்றை ஊக்குவிக்கும் வண்ணம் சில செய்திகள் நபிகளார் பெயரால் இட்டுக்கட்டி சொல்லப்பட்டுள்ளது.
” பெண்களுக்கு ஸலாம் சொல்லுதல் என்பதும் இல்லை. பெண்கள் மீதும் ஸலாம் சொல்வது கடமையில்லை.”
அறிவிப்பவர் : அதாவுல் ஹுராஸானி
நூல் : ஹுல்யதுல் அவ்லியா பாகம் : 8 பக்கம் : 58
இந்த செய்தி மிகவும் பலவீனமானதாகும். ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகும். ஏனெனில் இதில் பலவிதமான குறைபாடுகள் உள்ளன.
முதலாவது குறை :
இந்தச் செய்தி அறிவிப்பாளர் தொடர் முறிவுடையதாகும். முதல் அறிவிப்பாளரிடமிருந்து நபிகளார் வரை தொடர்ந்து இணைந்த வரவில்லை. இந்த செய்தியை நபியவர்களிடமிருந்து கேட்டவர் யாரென்று குறிப்பிடப்படவில்லை. இதனை அறிவிக்கக்கூடிய அதாவுல் ஹுýராஸானி என்பவர் நபித்தோழர் கிடையாது.
இரண்டாவது குறை :
இந்த செய்தியை அறிவிக்கும் அதா பின் அப்துல்லாஹ் பின் முஸ்லிம் அல்குராஸானீ என்பவரைப் பற்றி ஹதீஸ்கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ” இவர் மனன சக்தியில் மோசமானவர், தவறிழைக்கக் கூடியவர் , இவரை ஆதாரமாகக் கொள்வது தவறானதாகும்” என இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் கூறியுள்ளார்கள். ” இவர் விடப்படுவதற்கு தகுதியானவர் ” என்று இமாம் அஹ்மது அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள். மேலும் இவருடைய பெரும்பாலான ஹதீஸ்கள் குளறுபடியானவையாகும் என்றும் கூறியுள்ளார்கள்.
( அல் முஃனீ ஃபில் லுஅஃபா பாகம் : 2 பக்கம் : 434 )
மேலும் இவர் ஹதீஸ்களில் ”தத்லீஸ்” இருட்டடிப்பு செய்யக் கூடியவர் என்பது ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீபுத் தஹ்தீப் (பாகம் : 1 பக்கம் : 392) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
மூன்றாவது குறை :
இந்தச் செய்தியில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் ” ஸஹ்ல் பின் ஹிஷாம் ” என்பவர் யாரென்றே அறியப்படாதவர் ஆவார்.
நான்காவது குறை :
இந்தச் செய்தியைப் பதிவு செய்துள்ள இமாம் அபூ நுஐம் அவர்கள் தனக்கு அறிவித்தவர் யாரென்பதைக் கூறவில்லை. இவ்வாறு பலவிதமான குறைபாடுகள் நிறைந்து காணப்படுதால் இந்த செய்தி ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.
மேலும் இது நபியவர்களின் நடைமுறைக்கும், பல ஸஹீஹான ஹதீஸ்களுக்கும் மாற்றமானதாகும். ஸலாம் சொல்லுதல் என்பது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு கட்டளையாகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான கட்டளையாகும். இது பெண்களுக்கு மட்டும் பொருந்தாது எனக் கூறினால் அதற்கு தகுந்த ஆதாரங்களைக் காட்ட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாத வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை (முழுமையான) ஈமான் உள்ளவர்களாக ஆகமுடியாது. ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நபியவர்கள் ஸலாம் கூறுவதை இறைநம்பிக்கையையும், நேசத்தையும் வளர்க்கக் கூடிய நல்லறமாக சொல்லிக்காட்டுகின்றார்கள். இறைநம்பிக்கை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவசியமான ஒன்றாகும். எனவே ஸலாம் கூறுதல் என்பது பெண்களுக்கும் மிக அவசியமான ஒன்றாகும்.