பெண்கள் பேண்ட் அணியலாமா?

கேள்வி-பதில்: பெண்கள்

பெண்கள் பேண்ட் அணியலாமா?

ஆண்கள் பெண்களைப் போலவும் பெண்கள் ஆண்களைப் போலவும் நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

5885 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புஹாரி 5885

இது ஆடையை மட்டும் குறிப்பதல்ல. எல்லா வகையிலும் ஒரு பாலரைப் போல் இன்னொரு பாலர் இருக்கக் கூடாது என்று பொதுவாகக் கூறும் ஹதீஸ் ஆகும். இதில் ஆடையும் அடங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் இதைச் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்கள் அணியும் எந்த ஆடையையும் பெண்கள் அணியக் கூடாது என்று பொருள் கொள்வதா?

அல்லது மார்க்கத்தின் அடிப்படையில் ஆண்களுக்கு ஏற்ற ஆடையை பெண்களும் பெண்களுக்கு ஏற்ற ஆடையை ஆண்களும் அணியக் கூடாது என்று பொருள் கொள்வதா?

அணியும் ஆடை என்று பொருள் கொள்வதை விட அணியத்தக்க ஆடை என்று பொருள் கொள்வது தான் பொருத்தமானது.

இறுக்கமான பேண்ட்களாக இருந்தால் அது பெண்களுக்கு ஏற்றது அல்ல. தொய்வானதாக இருந்தால் அது பெண்களுக்கு ஏற்ற உடை தான்.

அதே நேரத்தில் சேலை ஜாக்கெட் போன்றவை பெண்களின் ஆடை என்று அறியப்பட்டாலும் அது பெண்களின் உடலை மறைக்காததால் (உள்ளாடையாக அல்லது வீட்டில் மஹ்ரம் மத்தியில் இருந்தால் தவிர) அது பெண்களின் ஆடை அல்ல.

ஆண்கள் அணிவதெல்லாம் ஆண்களின் ஆடை அல்ல. பெண்கள் அணிவதெல்லாம் பெண்கள் ஆடை அல்ல என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறையும் நமக்கு விளக்குகிறது.

பெரும்பாலும் ஆண்களும் பெண்களும் ஒரு போர்வையைத் தான் ஆடையாக அணிந்திருந்தனர்.

இன்னும் பல ஆடைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியாக நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இருந்துள்ளது.

கமீஸத் என்ற ஆடையை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தாமும் அணிந்தனர் (புஹாரி 373, 436, 572, 3454, 4444, 5816, 5817) உம்மு காலித் என்ற சிறுமிக்கும் அணிவித்துள்ளனர். புஹாரி 3874, 5823,

இஸார் எனப்படும் வேட்டி எப்படி ஆண்கள் அணிந்தார்களோ அது போல் பெண்களும் அணிந்துள்ளனர்.

ஆண்கள் வேட்டி அணிவது போல் பெண்களும் வேட்டி அணிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளனர் என்பதைப் பின்வரும் புஹாரி ஹதீஸில் இருந்து அறியலாம்

5121 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் தன்னை மணந்துகொள்ளுமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், இவளை எனக்கு மணமுடித்து வையுங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (இவருக்கு மஹ்ர் கொடுக்க) உம்மிடம் என்ன உள்ளது? என்று கேட்டார்கள். அவர், என்னிடம் ஒன்றுமில்லை என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், நீர் சென்று, இரும்பினாலான ஒரு மோதிரத்தையாவது தேடு! என்று சொன்னார்கள். அவர் போய் (தேடிப்பார்த்து)விட்டுத் திரும்பி வந்து, அல்லாஹ்வின்• மீதாணையாக! ஏதும் கிடைக்கவில்லை; இரும்பாலான மோதிரம் கூட கிடைக்கவில்லை. ஆனால், இதோ எனது இந்த வேட்டி உண்டு. இதில் பாதி அவளுக்கு (மஹ்ர்) என்றார். – அவரிடம் ஒரு மேல்துண்டுகூட இல்லை. (அதனால் தான், வேட்டியில் பாதியைத் தருவதாகச் சொன்னார்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், உமது வேட்டியை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்? அதை நீர் உடுத்திக் கொண்டால் அவள் மீது (அதில்) ஏதும் இருக்காது; அதை அவள் உடுத்திக் கொண்டால் அதில் உம் மீது ஏதும் இருக்காது. (உமது வேட்டியை கொடுத்துவிட்டு என்ன செய்யப்போகிறாய்?) என்று சொன்னார்கள். பிறகு அவர் நெடு நேரம் (அங்கேயே) அமர்ந்திருந்துவிட்டு எழுந்தார். அவர் செல்வதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், அவரை அழைத்தார்கள்’. அல்லது அவர் அழைக்கப்பட்டார்’. (அவர் வந்தவுடன்) அவரிடம், உம்முடன் குர்ஆனில் என்ன உள்ளது? என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் நபியவர்களிடம், (குர்ஆனில்) இன்ன அத்தியாயம் ,இன்ன அத்தியாயம் என்னுடன் (மனப்பாடமாக) உள்ளது என்று சில அத்தியாயங்களை எண்ணி எண்ணிச் சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக அவளை உமக்கு மணமுடித்து கொடுத்துவிட்டேன் என்று சொன்னார்கள்.61

தமது மகள் மரணித்த போது குளிப்பாட்டிய உடன் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது வேட்டியைக் கொடுத்து அணிவிக்கச் சொன்னார்கள் என்பதை புஹாரி 1253, 1257, பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் தமது புதல்வி இறந்துவிட்ட போது எங்களிடம் வந்து, அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக்கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தமது கீழாடையைத் தந்து, இதை அவரது உடலில் சுற்றுங்கள் எனக் கூறினார்கள்.

மிர்த் எனும் ஆடையை பெண்கள் அணிந்ததாக புகாரியில் பல ஹதீஸ்கள் உள்ளன.

இந்த மிர்த் எனும் ஆடையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்ததாக முஸ்லிமில் ஹதீஸ் உள்ளது. (முஸ்லிம்: 4227)

صحيح مسلم (3/ 1649)
36 – (2081) وحَدَّثَنِي سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، ح وحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، ح وحَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا، أَخْبَرَنِي أَبِي، عَنْ مُصْعَبِ بْنِ شَيْبَةَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ وَعَلَيْهِ مِرْطٌ مُرَحَّلٌ مِنْ شَعَرٍ أَسْوَدَ»

எனவே மார்க்க அடிப்படையில் ஆண்களுக்கு தகுதியான ஆடையைப் பெண்கள் அணியக் கூடாது. பெண்களுக்கே தகுதியான ஆடைகளை ஆண்கள் அணியக் கூடாது என்று தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்
மேலும் பேண்டை உள்ளாடையாகத் தான் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதில் தவறு இல்லை.