பெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்யலாமா?
பெண்கள் தனியாக ஆட்டோவில் பயணம் செய்யலாமா?
பெண்களின் கற்புக்குப் பாதுகாப்பு நிலவும் நேரத்தில் மட்டும் திருமணம் முடிக்கத் தடைசெய்யப்பட்ட இரத்த பந்த உறவினர் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம்.
இன்றைய காலத்தில் மக்களுடன் சேர்ந்து பயணம் செய்வதில் பாதுகாப்பு இருப்பதால் பெண்கள் மஹ்ரமான துணையில்லாமல் பயணம் செய்யலாம்.
ஒரு பெண் மட்டும் தனியாக ஆட்டோவில் செல்வது பாதுகாப்பற்ற நிலையாகும். ஆட்டோ ஓட்டுபவன் அந்தப் பெண்ணை கடத்திக் கொண்டு போக நினைத்தால் சுலபமாகச் செய்துவிட முடியும்.
மேலும் பெண் எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்நிய ஆணுடன் தனித்திருப்பது கூடாது. பயணம் செய்தாலும் பயணம் செய்யாமல் ஊரில் இருந்தாலும் அந்நிய ஆணுடன் தனித்திருப்பது கூடாது.
ஒரு பெண் தனியாக ஆட்டோவில் பயணம் செய்தால் ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இதை இஸ்லாம் தடைசெய்துள்ளது.
ஒரு பெண்ணுடன் எந்த (அந்நிய) ஆடவனும் தனிமையில் இருக்க வேண்டாம். (மண முடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினருடன் அவள் இருக்கும் போதே தவிர என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
உங்களில் எவரும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்து இருக்க வேண்டாம்! ஏனெனில் ஷைத்தான் உங்களில் இருவரில் மூன்றாம் நபராக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனித்திருக்கும் நிலை ஏற்பவதால் தான் இது தடுக்கப்படுகிறது. ஆனால் பல ஆண்கள் பயணம் செய்யும் பேருந்தில் ஒரு பெண் பயணம் செய்வது தவறல்ல. அது போல் பல பெண்கள் சேர்ந்து ஒரு ஆட்டோவில் பயணம் செய்வதும் தவறல்ல. ஏனெனில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தனித்திருத்தல் என்பது இது போன்ற சந்தர்ப்பங்க்ளில் ஏற்படாது. பின்வரும் நபி மொழியில் இருந்து இதை மேலும் உறுதியாக நாம் அறியலாம்.
صحيح مسلم (4/ 1711)
22 – (2173) حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرٌو، ح وحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، أَنَّ بَكْرَ بْنَ سَوَادَةَ، حَدَّثَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرٍ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، حَدَّثَهُ أَنَّ نَفَرًا مِنْ بَنِي هَاشِمٍ دَخَلُوا عَلَى أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ، فَدَخَلَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ، وَهِيَ تَحْتَهُ يَوْمَئِذٍ، فَرَآهُمْ، فَكَرِهَ ذَلِكَ، فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: لَمْ أَرَ إِلَّا خَيْرًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ قَدْ بَرَّأَهَا مِنْ ذَلِكَ» ثُمَّ قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ: «لَا يَدْخُلَنَّ رَجُلٌ، بَعْدَ يَوْمِي هَذَا، عَلَى مُغِيبَةٍ، إِلَّا وَمَعَهُ رَجُلٌ أَوِ اثْنَانِ»
4385 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த (ஆண்கள்) சிலர் அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) (அவர்கள் தனிமையில் இருந்தபோது) அவர்களிடம் வந்தனர். அப்போது அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் வீட்டினுள் நுழைந்தார்கள். அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள் அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் வெறுப்படைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்துவிட்டு, “(ஆயினும்) நான் (என் துணைவி விஷயத்தில்) நல்லதையே கருதுகிறேன்” என்று அபூபக்ர் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை அல்லாஹ் நிரபராதியாக்கிவிட்டான்” என்று கூறி விட்டு, பிறகு சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று, “இன்றைய தினத்திற்குப் பின் எந்த ஆணும் தனிமையில் இருக்கும் எந்தப் பெண்ணிடமும் செல்ல வேண்டாம்; அவனுடன் மற்ற ஓர் ஆணோ, இரு ஆண்களோ இருந்தால் தவிர” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.