பெண்கள் கப்ர் ஜியாரத் செய்யலாமா?

முக்கிய குறிப்புகள்: மாற்றப்பட்ட நிலைப்பாடுகள்

பெண்கள் ஜியாரத் செய்யலாமா?

பெண்கள் கப்ர் ஜியாரத் செய்வது கூடாது என்பதுதான் முதலில் ஜமாஅத்தினுடைய நிலைப்பாடாக இருந்தது. இதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாக முன்வைக்கப்பட்டது.

۲۹۹ حدثنا قتيبة حدثنا عبد الوارث بن سعيد عن محمد بن جحادة عن أبي صالح عن ابن عباس قال لعن رشول الله صلى الله عليه وسلم زائرات القبور والمتخذين عليها المساجد والشرج قال وفي الباب عن أبي هريرة وعائشة قال أبو عيسى حديث ابن عباس حديث حسن أبو صالح هذا هو مولى أم هانئ بنت أبي طالب واشمه بادا وقال بادام أيضا رواه الترمدي

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : கப்ருகளை ஜியாரத் செய்யக் கூடிய பெண்களையும், கப்ருகளின் மீது வணக்கத் தலங்களையும் ஏற்படுத்திக் கொள்ளும் பெண்களையும், அதன் மீது விளக்குகளைத் தொங்கவிடுபவர்களையும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சபித்தார்கள்.

(நூல் : திர்மிதி 294) இதே செய்தி நஸாயீ (2016), அபூதாவூத் (2817), இப்னுமாஜா (1564), அஹ்மத் (1926, 2472, 2829, 2952) ஆகிய நூற்களிலும் இதே அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் அபூசாலிஹ் என்பார் இடம்பெறுகிறார். இவர் பலவீனமானவர் ஆவார். எனவே இந்த ஹதீஸ் ஆதாரத்திற்கு ஏற்றது அல்ல. பின்வரும் ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் கப்ரு ஜியாரத் செல்வதற்கு தடையில்லை என்பதே சரியானதாகும்.

மரண பயத்தையும் மறுமை சிந்தனையும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.

நான் “அல்லாஹ்வின் தூதரே! அடக்கத் தலங்களில் இருப்பவர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அஸ்ஸலாமு அலா அஹல்த் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ யர்ஹமுல்லாஹல் முஸ்தக்திமீன் மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லா{ஹ பிக்கும் ல லாஹிகூன் என்று சொல் என்றார்கள்.

(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (1774)

அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (1777)

அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுக்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தை சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளை சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். )

அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: (திர்மிதீ: 1054) (974)

மண்ணறைகளை ஜியாரத் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு சில பெண்கள் தர்ஹாக்களுக்கு செல்கிறார்கள். தர்ஹாக்களில் இணைவைப்பு அறங்கேற்றப்படுவதாலும் மார்க்கம் தடை செய்த ஏராளமான அம்சங்கள் அங்கு நடைபெறுவதாலும் அங்கு ஆண்களாக பெண்களாக இருந்தாலும் செல்வது கூடாது. பொது மையவாடிகளுக்குச் செல்லலாம்.