03) பெண்கள், சிறுவர்கள், நோயாளிகளின் ஹஜ்
பெண்கள் மீதும் ஹஜ் கடமை
அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.
(அல்குர்ஆன்: 3:97) ➚
அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் மீது ஜிஹாத் கடமையா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரிடுதல் இல்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமையாக உள்ளது. அது தான் ஹஜ்ஜும், உம்ராவும்என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்:(அஹ்மத்: 24158), இப்னுமாஜா 2892
சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமைஎன்ற வசனத்தின் அடிப்படையிலும், இந்த ஹதீஸின் அடிப்படையிலும் பெண்கள் மீதும் ஹஜ் கடமையாகும் என்பதை அறியலாம்.
(உம்ராச் செய்வது கடமையா என்பதைப் பின்னர் நாம் அறிந்து கொள்வோம்.)
தக்க துணை அவசியம்
பெணகள் மஹ்ரம் துணையில்லாமல் ஹஜ் செய்யக் கூடாது என்று முன்னர் நாம் கருதி வந்தோம். அதனடைப்படயில் பின்வருமாறு இந்த நூலில் நம் எழுதினோம்.
திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண்மணி பயணம் மேற்கொள்ளக் கூடாதுஎன்பது நபிமொழி.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
கணவன், அல்லது திருமணம் செய்யத் தடுக்கப்பட்ட ஆண் உறவினர் துணையுடன் தவிர இரண்டு நாட்கள் பயணத் தொலைவு கொண்ட இடத்துக்கு பெண்கள் பயணம் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)
திருமணம் செய்யத் தகாத ஆண் உறவினருடன் தவிர பெண்கள் பயணம் மேற்கொள்ளக் கூடாதுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்ட போது ஒரு மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்ய நாடுகிறார். நான் இன்னின்ன போர்களில் பங்கெடுக்க நாடுகிறேன்என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராகஎன்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(புகாரி: 1862, 3006, 3061, 5233).
பெண்கள் தக்க துணையின்றி ஹஜ் பயணம் உட்பட மூன்று நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களைக் கொண்ட பயணம் மேற்கொள்ளக் கூடாது என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.
எனவே தக்க துணையில்லா விட்டால் பெண்கள் மீது ஹஜ் கடமையாகாது.
சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா?
சிறு குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் அதைக் காரணம் காட்டி ஹஜ் பயணத்தைத் தள்ளிப் போட வேண்டியதில்லை. சிறு குழந்தைகளையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரவ்ஹாஎன்ற இடத்தில் ஒரு பயணக் கூட்டத்தைச் சந்தித்தார்கள். இந்தக் கூட்டத்தினர் யார்? என்று விசாரித்தனர். முஸ்லிம்கள்!என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் நீங்கள் யார்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். நான் அல்லாஹ்வின் தூதர்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி சிறு பையனை (குழந்தையை) தூக்கிக் காண்பித்து இவனுக்கு ஹஜ் உண்டா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்! கூலி உனக்கு உண்டுஎன்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நான் ஏழு வயதுடையவனாக இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் என் தந்தை என்னையும் ஹஜ் செய்ய வைத்தார்கள்
அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)
சிறுவர்கள் மீது ஹஜ் கடமையில்லாவிட்டாலும் அவர்களையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.
சிறு வயதில் ஹஜ் செய்தவர்கள் பருவ வயதை அடைந்து ஹஜ் செய்வதற்கான வசதி வாய்ப்பைப் பெற்றால், அப்போது அவர் ஹஜ் செய்வது கடமையாகும். சிறு வயதில் இவனுக்கு ஹஜ் உண்டா? என்ற கேள்விக்கு, ஆம்! உனக்குக் கூலி உண்டுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்துள்ளனர். சிறு வயதில் செய்த ஹஜ்ஜின் கூலி அவரை அழைத்துச் சென்ற பெற்றோருக்குச் சேர்வதால் சிறுவரின் கணக்கில் அது சேர்க்கப்படவில்லை என்று அறியலாம்.
ஹஜ்ஜுக்குரிய கூலியை அவர் அடைய வேண்டுமானால் பருவ வயதை அடைந்த பிறகு அவர் வசதி வாய்ப்பைப் பெற்றால் மீண்டும் ஒரு முறை ஹஜ் செய்தாக வேண்டும்.
முதியவர்கள், நோயாளிகள் மீது கடமையா?
ஆரம்பமாக நாம் குறிப்பிட்ட வசனத்தில் அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமைஎன்று கூறப்படுகிறது. சென்று வரும் சக்தி என்பது வெறும் பொருளாதார வசதி மட்டுமல்ல. பிரயாணம் செய்வதற்கான உடல் நிலையையும் உள்ளடக்கியதாகும்.
பிரயாணமே செய்ய முடியாத முதியவர்கள், நோயாளிகள் போன்றோர் எவ்வளவு வசதிகளைப் பெற்றிருந்தாலும், அவர்கள் மீது ஹஜ் கடமையாகாது என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
ஒருவர் இளமையுடனும், திடகாத்திரத்துடனும் இருக்கும் போது ஏழையாக இருந்து, தள்ளாத வயதில் பொருள் வசதியைப் பெற்றால் அவர் மீதும் ஹஜ் கடமையாவதில்லை.
இளமையுடனும், திடகாத்திரத்துடனும் இருக்கும் போது பொருள் வசதியைப் பெற்றவர், வேண்டுமென்றே தாமதப்படுத்தி முதிய வயதை அடைந்தால் அவர் மீதுள்ள ஹஜ் கடமை நீங்கி விடாது. அல்லாஹ் மன்னிக்கவில்லையானால் அவர் குற்றவாளியாக இறைவனைச் சந்திக்க நேரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அது போல் ஒருவருக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமையாவதாக வைத்துக் கொள்வோம். இந்த ஆண்டே ஹஜ் செய்யாமல் மரணிப்பதற்குள் அதைச் செய்து விட அவருக்கு அவகாசம் உள்ளது என்றாலும் தாமதப்படுத்தக் கூடாது.
ஏனெனில், அடுத்த ஆண்டு வருவதற்குள் அவருக்கு மரணம் ஏற்படலாம். அல்லது பயணம் மேற்கொள்ள இயலாத அளவுக்கு அவர் பலவீனப்படலாம். அவ்வாறு ஏற்பட்டால் கடமையான பின்பும் அதை நிறைவேற்றத் தவறிய குற்றம் அவரைச் சேரும். நல்ல பலத்துடன் இருக்கும் போதே அவர் மீது ஹஜ் கடமையாகி விட்டால் இப்போதைய பலவீனம் அவருக்கு எந்தச் சலுகைகளையும் தராது.
முதிய வயதில் தான் ஹஜ் செய்ய வேண்டுமா?
முதிய வயதில் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்ற தவறான நம்பிக்கை பலரிடம் நிலவுகின்றது. பல லட்சம் மக்கள் கூடும் அந்தச் சமயத்தில் இளமையானவர்கள் தான் எல்லாக் காரியங்களையும் சரியாகச் செய்ய முடியும். முதிய வயதில் பல காரியங்களைச் சரியாகச் செய்ய முடிவதில்லை.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஹஜ் கடமையானவுடனேயே அதை நிறைவேற்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஹஜ் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டால்?
இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும்என்று கங்கணம் கட்டியுள்ள நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழலாம். அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அந்த நாடுகளால் அல்லது வேறு சக்திகளால் தடுக்கப்படலாம். இத்தகையவர்கள் மீதும் ஹஜ் கடமையாகாது. சென்று வர சக்தியுள்ளவர்கள் மீது ஹஜ் கடமையாகும்என்று இறைவன் கூறுவதிலிருந்து இதனை நாம் அறியலாம்.