பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு தீர்வு என்ன?
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு தீர்வு என்ன?
காஷ்மீரில் கயவர்களால் நாசம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவின் விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை, அந்த இரத்தம் காய்வதற்குள் அடுத்து இன்னொரு மோசமான பாலியல் தாக்குதல் நடந்துள்ளது. இம்முறை சென்னை நகரில். சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் டெல்லியைச் சேர்ந்த ஒரு நடுத்தர குடும்பத்தினரும் வசித்து வருகின்றார்கள்.
அந்தக் குடும்பத்தார்கள் அப்பகுதியில் ஒரு எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகின்றார்கள். அவருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கல்லூரியில் படித்து வருகின்றார். இளைய மகளுக்கு வயது 12. அருகில் உள்ள ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு வாய் பேச வராது, காதும் கேட்காது. இந்த நிலையில் பள்ளி முடிந்து தன் வீட்டிற்கு செல்லும் இச்சிறுமி லிப்ட் வழியாக ஏறிச் செல்வது வழக்கம்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 66 வயது ரவிக்குமார் என்பவன் லிப்ட் ஆபரேட்டராக இருந்துள்ளான். இந்த மாணவி தினசரி லிப்ட் வழியாக செல்வதால் அந்தப் பிள்ளையுடன் பழகியுள்ளான் இந்த ரவிக்குமார். தாத்தா வயதுடைய நபர் என்பதால் சிறுமியும் ரவிக்குமாருடன் சகஜமாக பழக ஆரம்பித்தாள். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்தக் கயவன் நாளடைவில் சிறுமியை தொட்டு விளையாடத் துவங்கியுள்ளான். பாலியல் தொந்தரவுகளை அந்தச் சிறுமிக்கு தொடர்ந்து கொடுத்துள்ளான் ரவிக்குமார்.
அதுமட்டுமின்றி அந்த அப்பார்ட்மெண்ட்டில் வேலை செய்யும் எலக்ட்ரீசியன், பிளம்பர், தண்ணீர் கேன் போடுபவர், பக்கத்து அப்பார்ட்மெண்ட்டைச் சேர்ந்த காவலாளிகள், தோட்டத் தொழிலாளிகள் என 17 க்கும் மேற்பட்ட நபர்கள் அந்தச் சிறுமியை சிதைத்துள்ளனர். விளையாட்டு விளையாட்டு என்று சொல்லி அந்தச் சிறுமியிடம் அத்துமீறிய இந்த மிருகங்களின் செயல்களை ஒரு கட்டத்தில் இந்தக் குழந்தை உணர ஆரம்பித்தது. இவர்களின் காட்டுமிராண்டித்தன செயல்களை அறிந்து இவர்களின் பிடியில் இருந்து சிறிது சிறிதாக ஒதுங்க ஆரம்பித்தாள் அப்பாவி சிறுமி.
இந்த அசிங்கங்களையெல்லாம் செல்போன் மூலம் எடுத்து வைத்து அந்தக் குழந்தையை மிரட்டத் துவங்கியது சதிகார கும்பல். அதைவிடக் கொடூரம் சிறுமிக்கு போதை ஊசி மற்றும் மரப்புத் தன்மையுள்ள ஊசிகளையும் வயிறு மற்றும் தொடைப் பகுதியில் போட்டு குழந்தையைச் சீரழித்துள்ளார்கள். லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் ஏற்கனவே அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தவன். அதனால் அந்த மருத்துவமனையில் பிரசவத்திற்கு மரத்துப் போக வைக்கப் பயன்படுத்தப்படும் ஊசி மருந்துகளைக் கொண்டு வந்து அந்தப் பிள்ளைக்குப் போட்டு விட்டு பிள்ளையைச் சீரழித்துள்ளார்கள்.
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அதாவது 6 மாத காலங்கள் இந்தப் பிஞ்சுக் குழந்தையை தங்களின் மிருகத்தனத்திற்குப் பயன்படுத்தியுள்ளது இந்த கும்பல். கடந்த வாரம் இந்தக் குழந்தையின் சகோதரி ஊருக்கு வந்து இந்தக் குழந்தையை கவனித்துள்ளார். சிறுபிள்ளையின் கழுத்துப் பகுதியில் நகக்கீறல்கள் இருந்ததால் அது பற்றி தங்கையிடம் விசாரிக்க, ஒவ்வொன்றாக சொல்லியுள்ளார் சிறுமி. தாத்தா வயதுடைய ரவிக்குமார் தொடங்கி அந்த அப்பார்ட்மெண்ட்டில் வேலை செய்யக்கூடிய அனைத்து கயவர்களும் பிள்ளையை வேட்டையாடியதை உணர்ந்த அந்தச் சிறுமியின் சகோதரி உடனடியாக தன் தாயிடம் சொல்ல, அப்போதுதான் பிள்ளையை கவனிக்கிறார் தாய்.
அதன்பிறகு அயனாவரம் காவல்நிலையத்தில் இவர்கள் அத்தனை பேர் மீதும் புகார் கொடுக்க அதிர்ச்சியடைந்தது காவல்துறை. ஒவ்வொருவராக மொத்தம் 17 பேரை அள்ளிக்கொண்டு வந்து சிறையில் அடைத்து வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. இந்த வழக்கில் சிக்கியவர்களை உயர்நீதிமன்றத்தில் நேர் நிறுத்துவதற்காக போலீசார் அழைத்து வந்தனர். இந்த கொடூர எண்ணம் கொண்டவர்களை நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து வழக்கறிஞர்கள் தாக்கத் துவங்கினார்கள்.
இவர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் வாதாடப் போவதில்லை என்ற தீர்மானத்தை சென்னை வழக்கறிஞர்கள் கவுன்சில் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது, இது அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டோம் என்ற அறிவிப்பை ஒரு முந்தைய சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் கோவில் கருவறைக்குள் வைத்து பல நாட்கள் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவின் வழக்கில் ஆசிபாவின் குடும்பத்தாருக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது என மிரட்டப்பட்டனர். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி துவக்கத்தில் எந்த வழக்கறிஞரும் ஆசிபாவின் பெற்றோருக்கு ஆதரவாக ஆஜராகவில்லை.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் செயல்பட்டார்கள். ஆனால் அதேநேரம் பாதிக்கப்பட்ட சிறுமி வெளிமாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட மாட்டோம் என தமிழக வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளது பாராட்டுக்குரிய விசயம். இந்த கொடுஞ் சம்பவத்திற்கு அந்தச் சிறுமியின் பெற்றோரும் ஒரு காரணம் ஆவார்கள்.
பெண் பிள்ளைகளை படிக்க அனுப்பும் பெற்றோர்கள் குறிப்பாக பிள்ளைகளின் தாய், பெண் பிள்ளைகளை தினசரி கவனிக்க வேண்டும். எத்தனை மணிக்கு பிள்ளை பள்ளிக்குச் செல்கிறது, எத்தனை மணிக்கு திரும்ப வருகின்றது என்பதை கண்காணிக்க வேண்டும். வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்லும் பிள்ளை பள்ளிக்கூடம் வந்ததா என தினசரி பெற்றோர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக அப்பார்ட்மெண்ட் மற்றும் குடித்தன வீடுகளில் குடியிருப்பவர்கள் அவர்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் போது பெற்றோர்கள் அல்லது யாரேனும் உறவினர்கள் கூட்டி வந்து பள்ளி வாகனங்களில் ஏற்றி அனுப்ப வேண்டும்,
அதுபோல திரும்பி வரும்போதும் சரியான நேரத்தில் யாரேனும் வந்து அழைத்துச் செல்ல வேண்டும். அதுபோல தங்களின் குழந்தைகளுக்கு மற்றவர்களின் தொடுதல் குறித்த விபரத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். நல்ல தொடுதல் (good touch ), கெட்ட தொடுதல் (bad touch) பற்றி தங்களின் பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்தச் சிறுமியின் ஒவ்வொரு நடத்தையையும் அவளின் பெற்றோர்கள் கண்காணிக்கத் தவறியதால்தான் இத்தனை கொடுமையும் நடந்துள்ளது.
இஸ்லாமிய சட்டமே தீர்வு:
சிறுமி சீரழிக்கப்பட்ட செய்தியைக் கேட்டு கொதிக்கும் ஒவ்வொரு சமூக ஆர்வலரும், பெண்ணுரிமை காப்பாளர்களும் இந்த குற்றவாளிகளை அரபுநாடுகளில் செய்வது போல நடுரோட்டில் வைத்து கல்லால் அடித்தே கொல்ல வேண்டும் என்றும், அனைவரும் பார்க்கும் படி வெட்டிக் கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் பேசி வருகின்றனர். இதைத்தான் இஸ்லாமிய சட்டம் சொல்கின்றது. குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்படும் தண்டனை அனைவரும் பார்க்கும் வண்ணம் இருந்தால் தான் அடுத்தவன் இதுபோன்ற குற்றத்தைச் செய்ய பயப்படுவான்.
அதுபோல அந்தக் குடும்பத்தாருக்கும் ஆறுதலாக இருக்கும். அதற்கு ஒரே மருந்து இஸ்லாமிய குற்றவியல் தண்டனை சட்டத்தை அமுல்படுத்துவது மட்டுமே. அதுமட்டுமின்றி இந்தச் சிறுமியின் சீரழிப்புக்கு மற்றொரு முக்கிய காரணம் அந்தப் பெண் அணிந்து சென்ற பள்ளிச் சீருடை. பள்ளிகளில் படிக்கும் ஆண் பிள்ளைகளுக்கு முழுக்கால் சட்டையைக் கொடுக்கும் பள்ளி நிர்வாகம், பெண் பிள்ளைகளுக்கு குட்டைப்பாவாடையுடன் இறுக்கமாக ஆடையை யூனிஃபார்மாக கொடுத்து விடுகின்றது. இதுபோல் இறுக்கமாக மற்றும் அரைகுறையுடன் ஆடை அணியும் பள்ளி மாணவிகள் சிறுமிகளாக இருந்தாலும் அது பார்ப்பவரை கவராமல் இருக்காது.
அதேநேரம் இஸ்லாம் சொல்லும் ஆடை கலாச்சாரம் பெண்களுக்கு முழு பாதுகாப்பாய் அமைகின்றது. இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தாலும் அது உடனடியாக கிடைப்பதில்லை. நீதிமன்றத்திற்குச் செல்லும் வழக்குகள் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை இழுத்தடிக்கப்பட்டு வழக்கின் சாரமே மறந்து போகும் நிலையும் வந்து விடுகின்றது.
ஏற்கனவே டெல்லி நிர்பயா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் 17 வயதுடையவன் என்பதை காரணம் காட்டி அவனை தண்டனையில் இருந்து விடுவித்து அவனுக்கு 10 ஆயிரம் பணமும், ஒரு தையல் மிஷினும் பரிசாகக் கொடுத்தது நினைவிருக்கலாம். அதுபோல இந்த வழக்கும் ஆகிவிடக்கூடாது என்பதே அனைவரின் எண்ணமும்.
Source : unarvu ( 27/07/18 )