புலனடக்கம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

நல்லொழுக்கமான வாழ்க்கை வாழ ஆசைப்படுவோருக்கு சுய கட்டுப்பாடு அவசியமான ஒன்றாகும். நீரில்லா உலகை எப்படிக் கற்பனை செய்ய முடியாதோ அதுபோல சுய கட்டுப்பாடின்றி நல்லொழுக்கமுள்ள வாழ்வைக் கற்பனை செய்ய முடியாது.

சுய கட்டுப்பாடு என்பது ஒருவர் அவசியமற்ற – பாவச்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தம் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இன்றைக்கு நிகழும் பாவச் செயல்கள் அனைத்தும் புலன்களின் தூண்டுதலின் பெயராலேயே நடைபெறுகின்றன.

விபச்சாரம், திருட்டு, கொலை, பாலியல் சீண்டல்கள், அவதூறு என அத்தனைக்குமான அடிப்படை புலன்களின் தூண்டுதலாகவே உள்ளது. இத்தீமைகள் புரிவதிலிருந்து விலக விரும்புவோர் புலன்களின் தூண்டுதலுக்குப் பலியாகி விடாமல் அவைகளை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பழக வேண்டும்.

அனைத்து புலனடக்கம் குறித்தும் அல்குர்ஆனும், அண்ணல் நபியவர்களும் போதிக்கின்றார்கள். எந்தெந்த புலன்களால் தனக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கும் அதிகக் கேடுகள் உண்டாகுமோ அவற்றைக் கண்டிப்பாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மார்க்கம் அறிவுறுத்துகிறது. அவ்வாறு மார்க்கம் அறிவுறுத்தும் சில புலன்களை பற்றி இந்த உரையில் காண்போம். 

மறை உறுப்பும் – நாவும்

புலனடக்கம் பற்றி பேசினால் அதில் தவிர்க்க முடியாத இரு உறுப்புகள் நாவும், மறை உறுப்புமாகும். இவ்விரண்டு உறுப்புக்களை அடக்க வேண்டும். ஆனால் அது அத்தனை எளிதல்ல.

யார் இவ்விரண்டு உறுப்புகளின் கட்டுப்பாட்டிற்குள் செல்லாமல் இவற்றைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றாரோ அவர்கள் சொர்க்கம் செல்ல நபி (ஸல்) அவர்கள் பொறுப்பேற்கின்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الجَنَّةَ

தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளதற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளதற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருக்கு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
நூல்: (புகாரி: 6474) 

நாவையும், மறை உறுப்பையும் அடக்குவது எவ்வளவு சிரமம் நிறைந்த காரியம் என்பதை இதிலிருந்து அறியலாம். இவ்விரு உறுப்புக்களாலும் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் தீமைகளை யாராலும் பட்டியலிட முடியாது.

மனித சமுதாயத்திற்கு எழுதப்பட்ட அறிவுரை நூல்கள் பலவும் இவற்றை மையப்படுத்தியதாகவே உள்ளன. விபச்சாரத்திற்கு முறையான சட்ட அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற உரிமை (?) குரல்கள் எழுப்படுவதிலிருந்து மனிதர்கள் எதன் பிடியில் இருக்கிறார்கள்? எதன் கட்டுப்பாட்டில் இயங்குகிறார்கள் என்பதை விளங்கலாம்.

குடும்பத் தகராறு, சொத்துப் பிரச்சனை, ஏன் கொலைக்கான காரணமாகக் கூட நாவும், அதிலிருந்து வெளிப்படும் தடித்த வார்த்தைகளும் காரணமாகிறது என்பதை அன்றாடம் நாளிதழ்களில் வெளிவரும் செய்திகள் உணர்த்துகின்றன.

எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறை உறுப்பையும், நாவையும் கட்டுப்படுத்திக் கொள்வோருக்கு சொர்க்கத்திற்கான உத்தரவாதத்தை நான் அளிக்கின்றேன் என்கிறார்கள்.

இதிலிருந்து இவ்விரு புலனடக்கத்தின் மகிமையை அறியலாம். பின்வரும் செய்தியும் இவ்விரு புலன்களின் எல்லை மீறலை அடக்கத் தவறுவதால் ஏற்படும் மறுமை விளைவை கடுமையாக எச்சரிக்கின்றது.

سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الجَنَّةَ، فَقَالَ: «تَقْوَى اللَّهِ وَحُسْنُ الخُلُقِ»

மனிதனை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது இறையச்சமும், நன்னடத்தையுமே என்று பதிலளித்தார்கள்.

وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ، فَقَالَ: «الفَمُ وَالفَرْجُ»

நரகில் எது மனிதனை அதிகம் நுழைவிக்கும்? என்று கேட்கப்பட ‘நாவும் மறை உறுப்பும்’ என பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (திர்மிதீ: 2004) (1927)

பல இளைஞர்கள் தங்கள் பிரகாசமான எதிர்காலத்தைப் பாழாக்குவதன் பின்னணியில் இவ்விரு புலன்களுக்கும் மிக முக்கிய பங்குள்ளது.

அந்நியப் பெண்ணிடம் மணிக்கணக்கில் பேசக்கூடா பேச்சுக்களைப் பேசி இன்பம் அடைவதற்காக கேர்ள் பிரண்ட் என்ற நாகரீக பெயரில் அந்நியப் பெண் தொடர்பைப் பல இளைஞர்கள் விரும்புகிறார்கள். அப்படி கேர்ள் பிரண்ட் வாய்க்கப் பெறாதவர்கள் அதற்காகக் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்கிறார்கள்.

சிறிது நேர சிற்றின்பத்திற்காக உடலின்ப மோகத்தில் மூழ்கி தங்கள் எதிர்காலத்தை வீணாக்குகிறார்கள். ஒரு காலத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்ததும் மாணவச் செல்வங்கள் பைகளை வெளியில் இருந்தபடியே வீட்டுக்குள் வீசி விட்டு விளையாடச் செல்வார்கள்.

வியர்க்க விறுவிறுத்து ஓடியாடி விளையாடி மகிழ்வுறுவார்கள். இருள் சூழவும் விளையாட்டை முடித்து வீட்டிற்குச் சென்று சாப்பிட்டு நன்கு உறங்குவார்கள். இது யாவும் இரவு ஒன்பது மணிக்குள்ளாக நடந்து முடிந்து விடும். ஆனால் இன்று நள்ளிரவு தாண்டியும் உறங்காமல் போர்வைக்குள் போனை நோண்டுவதில் சுகம் காணும் இளைஞர்களை அதிகம் அறிகிறோம்.

யூசுப் நபி

புலனடக்கதிற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக யூசுப் நபி அவர்களைச் சொல்லலாம். உடலின்ப மோகத்தைத் தணிக்க, தான் வசிக்கும் வீட்டில் உள்ள ஒருத்தியே தனிமை எனும் சூழலைப் பயன்படுத்தி யூசுப் நபியைத் தவறு செய்ய அழைக்கின்றாள்.

நபி யூசுப் (அலை) அவர்களோ அதற்கு இணங்க மறுத்து மறை உறுப்பு எனும் புலனை அடக்கி ஒடுக்கி, விபச்சாரம் எனும் மகா பெரிய பாவத்திலிருந்து விலகி நிற்கின்றார்கள்.

சர்வ நிச்சயம் இது சாதாரண நிகழ்வல்ல.

யூசுப் நபி செய்தததைப் போன்று என்னாலும் முடியும் என்று இங்கே யாரும் மார்தட்டிக் கொள்ள முடியாது. அப்படி சொல்வோர் யாரும் இங்கே இருந்தால் யூசுப் நபியின் புலனடக்கத்தைப் பற்றி குர்ஆன் கூறும் அழகிய வரலாறை ஒரு கணம் வாசித்துப் பார்க்கட்டும்.

وَلَقَدْ هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَا أَنْ رَأَى بُرْهَانَ رَبِّهِ كَذَلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ (24) وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِيصَهُ مِنْ دُبُرٍ وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَى الْبَابِ قَالَتْ مَا جَزَاءُ مَنْ أَرَادَ بِأَهْلِكَ سُوءًا إِلَّا أَنْ يُسْجَنَ أَوْ عَذَابٌ أَلِيمٌ (25) قَالَ هِيَ رَاوَدَتْنِي عَنْ نَفْسِي وَشَهِدَ شَاهِدٌ مِنْ أَهْلِهَا إِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكَاذِبِينَ (26) وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ (27) فَلَمَّا رَأَى قَمِيصَهُ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ إِنَّهُ مِنْ كَيْدِكُنَّ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ (28) يُوسُفُ أَعْرِضْ عَنْ هَذَا وَاسْتَغْفِرِي لِذَنْبِكِ إِنَّكِ كُنْتِ مِنَ الْخَاطِئِينَ (29)

எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து ‘வா!’ என்றாள். அதற்கவர் “அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்’’ எனக் கூறினார்.

அவள் அவரை நாடினாள். அவரும் அவளை நாடி விட்டார். அல்லாஹ்வின் சான்றை மட்டும் அவர் பார்த்திராவிட்டால் (தவறியிருப்பார்). இவ்வாறே அவரை விட்டும் தீமையையும் வெட்கக்கேடான செயலையும் அகற்றினோம். அவர் தேர்வு செய்யப்பட்ட நமது அடியார்களில் ஒருவர்.

இருவரும் வாசலை நோக்கி விரைந்தனர். அவள் அவரது சட்டையைப் பின்புறமாகப் பிடித்துக் கிழித்தாள். அப்போது அவளது கணவனை வாசல் அருகே இருவரும் கண்டனர். “உமது மனைவியிடம் தீய செயல் செய்ய நினைத்தவருக்கு சிறையிலடைத்தல், அல்லது துன்புறுத்தும் வேதனை தவிர வேறு என்ன தண்டனை இருக்க முடியும்?’’ என்று அவள் கூறினாள்.

“இவள் தான் என்னை மயக்கலானாள்’’ என்று அவர் கூறினார். “அவரது சட்டை முன்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறுகிறாள்; அவர் பொய்யர். அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் கூறுகிறாள்; அவர் உண்மையாளர்’’ என்று அவளது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சான்றுரைத்தார்.

அவரது சட்டை பின்புறம் கிழிக்கப்பட்டதை அவ(ளது கணவ)ர் கண்டபோது, “இது உனது சூழ்ச்சியே. பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி மிகப் பெரியது’’ என்றார். “யூஸுஃபே! இதை அலட்சியம் செய்து விடு!’’ (என்று யூஸுஃபிடம் கூறி விட்டு மனைவியை நோக்கி) உனது பாவத்துக்கு மன்னிப்புத் தேடிக்கொள்! நீயே குற்றவாளி. (எனவும் கூறினார்).

(அல்குர்ஆன்: 12:23-29)

தவறிழைக்கத் தூண்டிய பெண்ணின் சதிவலையில் சிக்காமலிருக்க யூசுப் நபி நடத்திய போராட்டத்தைப் பாருங்கள்.

யூசுப் நபி அணிந்திருந்த சட்டையின் பின்பகுதி அப்பெண்ணால் கிழிக்கப்படுமளவு பெரும் போராட்டம் நடந்திருக்கிறது என்றால் இப்போது சொல்லுங்கள். யூசுப் நபியின் புலனடக்கம் சாதாரணமானதா? நம்மால் இயலக் கூடியதா?

இன்றைக்கு ஒரு பெண் ஒரு ஆணை அடைய விரும்பினால் கதவை அடைத்து இப்படியொரு போராட்டத்தை நடத்தவேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. ஜஸ்ட், ஒரு போன்கால் அல்லது ஒரு மெசேஜ் தட்டி விட்டால் போதும். மற்ற வேலைகள் தன்னால் நடக்கும். அந்த அளவில் தான் இன்றைய காலத்தில் பெரும்பாலான இளைஞர்களின் புலனடக்கம் இருக்கின்றது.

தனியறையில் அந்நியப் பெண்ணுடன் சில மணி நேரங்கள் இருந்து விட்டு வரும் ஒருவர், ‘நான் யூசுப் நபியைப் போன்று நடந்து கொண்டேன்’ என்று சொல்லும் போது அவரது சட்டையின் பின்புறம் கிழிக்கப்பட்டிருக்கின்றதா என்று தேடினால் நம்மை விட வெகுளிகள் யாருமில்லை.

உண்பதிலும் உண்டு நாவடக்கம்

நாவை அடக்குதல் என்பதை வெறும் தீய வார்த்தைகளைப் பேசுதல், அவதூறு கூறல் ஆகியவற்றிலிருந்து அடக்கி வாசிக்க வைக்க வேண்டும் என்று தான் புரிகிறோம். இவற்றையும் தாண்டி ஹராமானவைகளை உட்கொள்வதை விட்டும் நா எனும் புலனை அடக்கி ஒடுக்க வேண்டும்.

நபிகளார் இதனையும் நாவை அடக்குவதில் நமக்குக் கற்றுத்தருகிறார்கள்.

مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِتَمْرَةٍ مَسْقُوطَةٍ فَقَالَ: «لَوْلاَ أَنْ تَكُونَ مِنْ صَدَقَةٍ لَأَكَلْتُهَا

அனஸ் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் கீழே கிடந்த பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது, ‘இது ஸதகா பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்’ என்றார்கள்.

أَجِدُ تَمْرَةً سَاقِطَةً عَلَى فِرَاشِي

‘என்னுடைய படுக்கையில் விழுந்து கிடக்கும் பேரீச்சம் பழத்தை நான் பார்க்கிறேன்…’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நூல்: (புகாரி: 2055) 

அற்ப பேரீச்சம் பழம் தன் முன்னே கிடந்த போதும், ஹராமான பொருளாக இருப்பதற்கான சாத்தியங்கள் தெரிந்த நிலையில் அதை உண்ணாமல் தம் நாவு எனும் புலனை அடக்கி வெற்றி காண்கிறார்கள்.

இது இன்றைக்கு மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. வட்டி, வரதட்சணை போன்ற மார்க்கத்திற்கு எதிரான விருந்துகள், போதையூட்டும் பொருட்கள் போன்றவற்றை உண்பது நம் சமுதாயத்தில் மிக அதிகமாகவே காணப்படுகின்றது.

பொய், புறம் சொல்வதிலிருந்து மட்டும் நாவை காத்தால் அது போதாது. வட்டி, போதையூட்டும் பொருட்கள், தவறான விருந்துகள் போன்றவற்றை உண்பதிலிருந்தும் நா எனும் புலனைக் காக்க வேண்டும். நபிகளாரை இதிலும் பின்பற்ற வேண்டும்.

இம்மை, மறுமை வாழ்வு இனியதாய் அமைந்திட ஆசைகொள்வோர் இவ்விரு புலனடக்கத்தில் கவனம் செலுத்தி வாழ வேண்டும். 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு.