68) புதிய ஆடையில் கஃபனிடுதல்

நூல்கள்: ஜனாஸாவின் சட்டங்கள்

மேற்கண்ட நபிமொழியில் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்களின் பழைய ஆடையிலேயே கஃபனிடப்பட்டார்கள் என்பதை அறியலாம்.

ஆயினும் புதிய ஆடையில் கஃபனிடுவது தவறில்லை.

ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மேலாடையைக் கொண்டு வந்தார். ‘நீங்கள் இதை அணிய வேண்டும் என்பதற்காக என் கையால் நெய்து வந்திருக்கிறேன்’ என்று அவர் கூறினார். அதை ஆவலுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். பின்னர் அதைக் கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தார்கள். அப்போது ஒரு மனிதர் ‘இது எவ்வளவு அழகாக உள்ளது. எனக்குத் தாருங்கள்’ என்று கேட்டார். ‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை மிகவும் விருப்பத்துடன் அணிந்திருக்கிறார்கள். எவர் கேட்டாலும் மறுக்க மாட்டார்கள் என்பது தெரிந்திருந்தும் அவர்களிடம் இதைக் கேட்டு விட்டாயே!’ என்று மற்றவர்கள் அவரைக் கடிந்து கொண்டார்கள். அதற்கு அவர் ‘நான் இதை அணிவதற்காகக் கேட்கவில்லை; எனக்குக் கஃபனாக அமைய வேண்டும் என்பதற்காகவே கேட்டேன்’ என்றார். அதுவே அவரது கஃபனாக அமைந்தது. (சுருக்கம்)

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

(புகாரி: 2093, 1277, 5810, 6036)