09) புதியவர்களுக்கான மேலும் சில அறிவுரைகள்

நூல்கள்: பயான் செய்யும் முறைகள்

v புதியவர்களுக்கான மேலும் சில அறிவுரைகள்
பிரச்சாரம் என்பது ஒரு கலை. புதிதாக பிரச்சாரம் செய்பவர்கள் அனுபவத்தின் மூலமாகவே ஒவ்வொரு தவறையும் சரிசெய்யவேண்டியிருக்கும். அதனால் தான் பத்துவருட அனுபவம் உள்ளவர்களின் பேச்சிற்கும், புதியவர்களின் பேச்சிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. இந்த பகுதியில் அனுபவமுள்ளவர்களின் சில அறிவுரைகள் தரப்பட்டுள்ளன. அவற்றை கவனித்து செயல்படுத்துங்கள்.

 

  • மேடைப்பேச்சு என்பது எளிதானது தான். எனினும் உங்களுக்கு மேடைப்பேச்சு வராவிட்டால், திக்கல் தங்கல் ஏற்பட்டால் பேசஆரம்பிக்கும் முதல் நான்கைந்து தடவைகள் சாதாரண லோக்கல் பாஷையிலேயே பேசுங்கள். தவறில்லை. இடையிடையே ஓரிரு வரிகள் மேடைப்பேச்சில் பேசிப்பாருங்கள்.

 

  • பேசும் போது, எதாவது வார்த்தையை தவறாக உச்சரித்துவிட்டால், அதை மீண்டும் சரியாக உச்சரித்துவிட்டுப்போய் விடவேண்டியது தான். அதற்காக, ஆங்கில செய்திச்சேனல்களில் சொல்வதுபோன்று, ”சாரி மன்னிச்சுக்கோங்க. தவறா சொல்லிட்டுடேன்” என்றெல்லாம் மன்னிப்பு கேட்கவேண்டியதில்லை. நா தடுமாறி வரும் வார்த்தைகளை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அதுபோல, பேசமறந்த செய்திகள், பேச்சின் இறுதியில் நினைவிற்கு வந்தால், ”சாரி. ஒரு ஹதீஸை சொல்ல மறந்துட்டேன்….…” என்றெல்லாம் சொல்லக் கூடாது. ”சாரி.. மன்னிச்சுக்கோங்க” என்ற வார்த்தையே வரக்கூடாது.

 

  • இதுதவிர, எந்த செய்தியை பற்றி முழுமையாக தெரியுமோ, அதைப்பற்றி மட்டுமே பேசுங்கள். உலக செய்தியாக இருந்தாலும், மார்க்க செய்தியாக இருந்தாலும், முழுமையாக தெரியாத செய்திகளை பேசி, அதனால் சிக்கி தடுமாறும் போதும், தன்னம்பிக்கை பெருமளவு குறைந்துவிடும்.

 

  • குர்ஆன் வசனங்களை முடிந்தஅளவு அரபியை ஓதி தமிழில் விளக்கவேண்டும் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அரபியில் மனப்பாடம் செய்வது சிரமமாக இருந்தால், பிறபேச்சாளர்கள் அரபியில் பேசுவதையோ, அல்லது அந்த வசனத்தின் கிராத்தை மட்டும் செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ திரும்பத்திரும்ப ஓடவிட்டோ, மனனம் செய்யலாம். மனனம் செய்வதற்கு இது மிகவும் எளிதான முறை.

 

சோதனை முறையில் வேண்டுமானலும், 30 வசனங்கள் உள்ள எதாவது ஒரு அத்தியாயத்தின் கிராத்தை ஒருமாதம் தினமும் நான்கைந்து தடவை கேட்டுப்பாருங்கள். நீங்கள் படிக்காமலேயே அந்த சூரா உங்களுக்கு மனப்பாடம் ஆவது உறுதி. எட்டு வசனம் உள்ள பய்யினா சூரா தெரியாத பலமக்களுக்கு, 80 வசனம் உள்ள யாஸீன் சூரா தெரிவதற்கு, (அதற்கு தனிச்சிறப்பு உள்ளது என்று நினைத்து) தினமும் அதன் கிராத்தை கேட்கிறது தான் காரணம்.

 

  • பேசும் பொது, அரபி வசனம் நினைவிற்கு வராது என்று நினைப்பவர்கள், அந்த வசனத்தின் முதல் ஒரிரு வார்த்தைகளை மட்டும் தமிழில் எழுதி கையில் வைத்துக்கொள்ளலாம்..உதாணமாக)
  • மஸலுல்லதீன யுன்ஃபிகூன அம்வாலகும் கமஸலி…
  • யாஅய்யுஹல்லதீன ஆமனூ, லாதுல்கிகும் அம்வாலக்கும்…

முதல் வரியை படித்து ஆரம்பித்துவிட்டால் மீதி உள்ளதை இலகுவாக பேசிவிடலாம். புதியவர்கள் பொதுவாகவே, பயானுக்கு கிளம்புவதற்கு அரைமணிநேரம் முன்னதாக பயானில் பேசப்போகும் அரபி வசனங்களை இரண்டு மூன்று தடவை காணாமல் சொல்லிப்பார்த்துக் கொள்வது நல்லது.

 

  • ஜும்மா உட்பட எந்த பயானுக்கும் சிறிதுநேரம் முன்னதாகவே வந்து அமர்ந்து, பயானில் பேசப்போகும் அரபி வசனங்களை ஜந்தாறு தடவை சொல்லிப் பார்த்துக்கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி பயன்படுத்தும் வசனங்களை ஒரு துண்டுச்சீட்டில் எழுதி வைத்துக்கொண்டு, வேலைக்கு மத்தியில் மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். இந்த முறையில் பாதி குர்ஆனை மனனம் செய்த பலபேர் உண்டு. ஓரளவு மனப்பாடம் செய்துவிட்டு, நஃபிலான தொழுகைகளில் ஓதிப்பார்ப்பதும் ஒரு நல்ல வழிமுறை.
  • பயானில் குர்ஆன் வசனங்களை சொல்லிக்கொண்டிருக்கும் போது, பாதியில் மறந்துவிட்டால், தொழுயைில் செய்வது போன்று அந்த வசனத்தையே திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருக்காமல், அந்த வசனத்தின் மொழிபெயர்ப்பை உடனே சொல்லிவிடுங்கள்.
  • எந்த ஹதீஸையும், குர்ஆன் வசனத்தையும் அரபியில் சொன்னபிறகு, முடிந்த அளவு அதன் மொழிபெயர்ப்பை சரியாக ஒருமுறை (அதன் கட்டுரை நடையில்) சொல்லிவிட்டு, பிறகு உங்கள் மொழியில் அதன் விளக்கத்தைச் சொல்லுங்கள். இல்லாவிட்டால், ”நீங்கள் சொன்ன வரிகள் குர்ஆனில் இல்லையே!” என்று குழம்புவார்கள்.

    ””உனக்குக் கீழே பலகோடி பேர் இருக்காங்க. அவர்களுடைய வீட்டைப் பாரு” என்று நபிகள்நாயகம் சொன்னார்கள்” – என்று ஒருவர் பேசுகிறார். நபிகள் நாயகம் ஒருபோதும் அப்படி சொன்னதில்லை. ”உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களை விட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள்” என்று தான் கூறினார்கள். (முஸ்லிம்: 5671).

    நபியின் கூற்றோடு, உங்களது கருத்தையும் சேர்த்து நபி கூறினார்கள் என்று கூறக்கூடாது. ஹதீஸை அப்படியே சொல்லிவிட்டு பிறகு உங்களது கருத்தை சொல்லுங்கள். அல்லது மேற்கண்டது போல சொல்லிவிட்டு, ”என்ற கருத்தில் சொன்னார்கள்”, ”என்ற ரீதியில் சொன்னார்கள்” என்று தகுந்த வார்த்தைகளை வைத்து, நீங்கள் பேசிய வார்த்தைகள் நபியின் அசல் வார்த்தைகள் அல்ல என்பதை உணர்த்துவது நல்லது.

 

  • இதுதவிர, அடிப்படையான சட்டங்களையும், அவசியமான துஆக்களையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். பயான் செய்து முடித்தவுடன், ”சாப்பிட்ட பிறகு போது ஓத வேண்டிய துஆ என்ன” என்று யாராவது கேட்டால், ”அது போன்ற பெரிய துஆக்களை இன்னும் மனப்பாடம் பன்னல!” என்று சொன்னால் தர்மசங்கடமாகிவிடும்.

 

  • அதுபோல, குறைந்தது பத்து இருபது சூராக்களையாவது சரியான உச்சரிப்போடு மனனம் செய்து கொள்ளுங்கள். தொழுகையில், அல்ஹம்து சூராவில், ”இஹ்தினஸ் சிராத்தல் முஸ்தகீம்” என்பதை, ”இஹ்தினஸ் சிராத்தல் முஸ்தகீன்” என்று உச்சரிப்பவர்கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஃபாத்திஹா சூரா கூட ஓதத்தெரியாதவருக்கு, மற்ற விஷயங்களில் என்ன தெரிந்திருக்கப்போகிறது என்று கருத வாய்ப்புள்ளது. எனவே உச்சரிப்பை சரிசெய்து கொள்ளுங்கள்.
  • பிரச்சாரப்பணியில் ஈடுபடுகிறவர்கள் கண்டிப்பாக தினமும் ஒருமணி நேரமாவது ஒதுக்கி குர்ஆன் ஓதுவதற்கும், சட்டங்களை நினைவுபடுத்துவதற்கும், புதியவற்றை படிப்பதற்கும் அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இந்த ஒரு செயலை நிரந்தமாக செய்தாலே உங்கள் அறிவு வளர்வது உறுதி.
  • எதிர்பாராத பதட்டத்தை குறைக்க, பயானுக்கு கிளம்பும் போது, பயான் செக்லிஸ்டை சரிபார்த்துக்கொள்ளுங்கள். செக்லிஸ்ட் என்பது ஒரு செயலை செய்வதற்கு முன்பு எதையெல்லாம் நினைவில் கொள்ளவேண்டும், எதையெல்லாம் எடுத்துச்செல்ல வேண்டும் என்று வரிசையாக எழுதப்பட்டிருக்கும் ஒரு சரிபார்ப்பு அட்டவனை. செக்லிஸ்ட் பயன்படுத்துவது ஒரு புத்திசாலித்தனமான செயல்.

 

  • மக்களின் அருகில் இருந்து பயான் செய்யும் போது, சட்டை பட்டனை சரிசெய்வது, சட்டை காலரை சரிசெய்வது, கர்சீப்பை மடித்து வைப்பது, கண்ணை சுத்தம் செய்வது, தலையை சீவிக்கொண்டிருப்பது போன்ற புறவேலைகளில் ஈடுபடாதீர்கள், தலையை சீவுவது நல்ல செயல்தான். ஆனால் அதை பயான் ஆரம்பிப்பதற்கு முன்னரே செய்யவேண்டும். மக்கள் முன்னிலையில் செய்தால், மக்களின் கவனம் திசை திரும்பும். உதாரணமாக, நீங்கள் சட்டையை சரிசெய்யும் போது, மக்கள் உங்கள் சட்டையை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். முகத்தில் வடியும் வியர்வையை துடைப்பது, தண்ணீர் அருந்துவது போன்றவை விதிவிலக்கானவை. தவிர்க்கமுடியாதவை.
  • பொதுக்கூட்டம் போன்ற இடங்களில் பேச்சை ஆரம்பிக்கும் போது, ”மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைவர் அவர்களே! சிந்தனைக்கும் சிறப்பிற்கும் உரிய செயலாளர் அவர்களே! ….” என்றெல்லாம் துதிபாடக்கூடாது. இது போன்ற தனிமனித துதிபாடல்கள் சில இஸ்லாமிய அமைப்புகளால் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பிக்கிறது. இது சரியான செயல் அல்ல. புதியவர்கள் கவனமாக இருங்கள். வித்தியாசமாக எதையாவது செய்கிறோம் என்று நினைத்துக்கொண்டு இதுபோன்று எதையாவது செய்துவிடாதீர்கள்.

 

  • நீங்களும், பிறபேச்சாளரும் பேசும் சபையில், பிறபேச்சாளர் நிகழ்த்தும் உரையை கவனியுங்கள். அவர் சொன்ன அதே சம்பவத்தை முடிந்தஅளவு சொல்லக்கூடாது. இதற்கு எப்போதுமே தயாராகவே அதிகப்படியான செய்திகளுடன் செல்லுங்கள். முன்னவர் சொன்ன அதே செய்தியை, கவனிக்காமல் நீங்களும் சொல்ல, அதை யாரேனும் சுட்டிக்காட்டும்போது, ”சாரி. அவர் பேசுனப்ப கவனிக்கல. (தூங்கிட்டிருந்தேன்)” என்று சொல்வது நன்றாக இருக்காது.

 

  • பிறபேச்சாளர்களின் உரைகளில் ஏதேனும் தவறு இருந்தால், துண்டுச்சீட்டின் மூலம் அவருக்கு தெரிவிக்கப்பட்டு, அது அவர் மூலமாகவே மக்களுக்கு திருத்தி சொல்லப்படுவது நன்று. அவர் ஒன்று சொல்ல, பிறகு நீங்கள் ஒன்று சொல்ல, பனிப்போர் நிகழ்வது, ஆரோக்கியமான பிரச்சாரத்திற்கு உகந்ததல்ல.

 

  • ஒருசிலரைப் பார்க்கிறோம். குறிப்புகள் எடுக்க சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு பேசிய தலைப்பையே மீண்டும் மீண்டும் உல்டா செய்து பேசிக் கொண்டிருப்பார்கள். முன்னேற முடியாது. சிரமப்படுங்கள். அறிவு தானாக வளராது. புதியபுதிய செய்திகளை படித்து சிரமப்பட்டால் தான் அறிவு வளரும்.

 

  • இன்னும் சிலர் பயான் செய்ய பழகியவுடன் ஆர்வமிகுதியால், தனது பள்ளியில் தினமும் பிரச்சாரம் செய்ய விரும்புவார்கள். அல்லாஹ் அவர்களது ஆர்வத்தை அதிகப்படுத்தட்டும். எனினும் மக்கள் சலிப்படையும் வகையில் பயான் செய்வது சரியல்ல.

      இப்னு பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள். (ஒரு நாள்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ”தாங்கள் தினமும் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும்” என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ‘உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவது தான் இதைச் செய்ய விடாமல் என்னைத் தடுக்கிறது. நான் உங்களின் சூழ்நிலைகளை கவனித்து அறிவுரை கூறுகிறேன். இவ்வாறு தான் நபியவர்கள், நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறி வந்தார்கள்’ என்று கூறினார்கள். (புகாரி: 70) எனவே, மக்கள் சலிப்படையாத வண்ணம் பயான் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வது அவசியம்.

 

  • சில புதியவர்கள், உடம்பு தெரியும் வகையில் இறுக்கமான ஆடை அணிந்து உரை நிகழ்த்தி விடுகின்றனர். இறுக்கமான ஆடை அணிவதை நபி(ஸல்) தடைசெய்திருக்கிறார்கள்,(புகாரி: 367). மக்கள் எந்த உடையை கண்ணியமாக கருதுகிறார்களோ, அதுபோன்றதை அணியுங்கள்.

    பெருமையில்லாமல் தரையை தொடும் ஆடைஅணியலாம் என்று பலர் நினைக்கிறார்கள். இது தவறு. பெருமையின்றியும் கூட தரையை தொடும் ஆடை அணிவதை நபி(ஸல்) தடை செய்துள்ளார்கள். (பார்க்க,(அபூதாவூத்: 3562),(புகாரி: 5787), அஹமது 19309). எனவே, பேண்ட் அணிபவர்கள் கணுக்கால் வரை அமைத்துக்கொள்ளுங்கள்.

  • புதியவர்களை நம்பிக்கையிழக்கச் செய்யும் விஷயங்களில் ஒன்று மக்கள் கூட்டம் குறைவாக இருப்பது. பத்து பேர், இருபது பேர் மட்டுமே இருக்கும் போது ஆர்வமாக பேசத்தோன்றாது. ”பத்து பேருக்காகவா இரண்டு மணி நேரம் பயிற்சி எடுத்துக்கொண்டு வந்தோம்!” என்று நினைப்பார்கள்.

 

ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்கவேண்டும், இன்று இரண்டாயிரம் பேர், ஜந்தாயிரம் பேர் கேட்கும் அளவிற்கு பெரிய பேச்சாளர்களாக இருக்கும்  அனைவருமே ஆரம்பத்தில் வெறும் இரண்டு மூன்று நபர்களுக்கு பிரச்சாரம் செய்தவர்கள் தான். அதுவும் அந்த மூன்று பேருக்கு பிரச்சாரம் செய்வதற்காக பலநூறு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து செல்வார்கள். அதற்காக தங்களது பொருளாதாரத்தை செலவு செய்திருக்கிறார்கள். தவ்ஹீதை சொன்னதற்காக பலஇடங்களில் அடிஉதை கூட வாங்கியிருக்கிறார்கள். இன்று நமக்கு அவ்வளவு சிரமம் இல்லை. எனவே, எடுத்த எடுப்பிலேயே ஜநூறு பேருக்கு பிரச்சாரம் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. சிறுகசிறுகத்தான் ஆடியன்ஸ் பெருகுவார்கள்.

 

 

v பேச்சாளர் பயிற்சி வகுப்பிற்கு முயற்சி எடுங்கள்

புதிதாக பிரச்சாரம் செய்ய விரும்புகிறவர்கள் தனியாக பயிற்சி எடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், தன்னைப்போன்ற நபர்களுக்கு மத்தியில் பத்து தடவை பேசிப்பழகினால் மிகஎளிதில் பேச்சுத்திறமையை வளர்த்துக்கொள்ளமுடியும். எனவே, உங்கள் பகுதியில் உள்ள ஜமாஅத் நிர்வாகத்திடம் ”பேச்சாளர் பயிற்சி முகாம்” ஏற்பாடு செய்யக் கேளுங்கள்.

உங்களைப் போன்ற நான்கைந்து நபர்கள் இருந்தாலே போதுமானது. ஏதேனும் ஒரு தலைப்பை தேர்வு செய்து, வாரம் ஒருமுறையோ, இருமுறையோ உங்களுக்கிடையே 10 நிமிடம் பேசிப்பாருங்கள். ஆரம்பத்தில் இரண்டு நிமிடம் கூட தாக்குப்பிடிக்காது. கவலையே படவேண்டாம். பத்து வகுப்புகளுக்குப் பிறகு, மக்களுக்கு பயான் செய்யும் அளவிற்கு தேர்ச்சி பெற்றுவிடுவீர்கள்.

பயிற்சி வகுப்புகளுக்கு கண்டிப்பாக எளிதான ஹதீஸ்களையும், குர்ஆன் வசனங்களையுமே எடுத்துச்சென்று விளக்கவேண்டும். மற்றவர்களை விட வித்தியாசமாக பேசவேண்டும் என்பதற்காக, சிரமான தலைப்பை தேர்வு செய்யாதீர்கள். பேசும் போது பார்வையாளர்கள் (ஏளனமாக) சிரிப்பதை நிர்வாகிகள் அனுமதிக்கக்கூடாது. பேசும் நீங்களும் அதை புறக்கணித்துவிட்டு, உங்கள் நண்பர்களிடம் பேசுவது போன்று, இயல்பாக பேச கற்றுக்கொள்ளுங்கள்.

பேச்சாளர் பயிற்சி வகுப்பை நடத்துவதற்கு எவ்வித பொருளாதாரமும் தேவையில்லை. எனவே, இன்றே அதற்குரிய வேலையில் ஈடுபடுங்கள். ஜந்தாறு வகுப்புகள் கடந்து சரளமாக பேசஆரம்பித்த பிறகு, இந்த நூலில் சொல்லப்பட்ட விஷயங்களை மீண்டும் படித்துப்பார்த்து உங்களது பேச்சை மெருகூட்டிக்கொள்ளுங்கள்.