புகழ் எனும் போதை
தள்ளாத வயதில் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் தந்த எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என் இறைவன் பிராத்தனையை கேட்பவன்.
தாவுதுக்கும் சுலைமானுக்கும் நாமே ஞானத்தை கொடுத்தோம். தன்னை நம்பிக்கை கொண்ட அடியார்களில் மற்ற அனைவரையும் விட எங்களை சிறப்பித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்று அவர்கள் கூறினர்.
சொர்க்க சோலைகளில் அவர்கள் நுழைவார்கள். தங்கம் முத்து அணிகலன்கள்ஙளும் பட்டாடையும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். கவலையை எங்களுக்கு போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். எங்கள் இறைவன் மன்னிப்பவன். நன்றி பாரட்டுபவன்.
(அல்குர்ஆன்: 35:33,34)
தன் வாக்குறுதியை உண்மையாக்கி எங்களுக்கு சொர்க்க பூமியை கொடுத்து அதில் நாங்கள் விரும்பியவாறு வாழ செய்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். கூலி வழங்குவதில் அல்லாஹ் சிறந்தவன்.
(அல்குர்ஆன்: 39:74)
(மறுமை நாளில்) மலக்குமார்கள் தங்கள் இறைவனின் புகழை துதித்தவர்களாக அர்ஷை சுற்றி சூழ்ந்து வருபவர்களாக (முஹம்மதே) காண்பீர்……
(அல்குர்ஆன்: 39:75)
வானங்கள் பூமியுள்ளவை யாவும் அல்லாஹ்வை துதிக்கின்றன. அவனுக்கே ஆட்சி அதிகாரம். அவனுக்கே அனைத்து புகழும். அவனே அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
அல்லாஹ்வே தன்னை புகழும் படி நபிமார்களுக்கு கட்டளையிடுகிறான்.
நீரும் உம்மோடு இருந்தவர்களும் கப்பலில் ஏறும் போது, அநியாயக்கார கூட்டத்தினரிடமிருந்து எங்களை காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்று கூறுவீராக!
(அல்குர்ஆன்: 23:28)
வானங்களையும் பூமியையும் படைத்து இருள்களையும் ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் . பிறகு இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் இறைவனுக்கு மாறுசெய்கிறார்கள்.
(அல்குர்ஆன்: 6:1)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வேதத்தை அருளியதற்காக அல்லாஹ்வை புகழ வேண்டும்.
தனது அடியார் மீது இவ்வேதத்தை நேரானதாகவும், தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய கூலி உண்டு. அதில் என்றென்றும் தங்குவார்கள் என நற்செய்தி கூறுவதற்காகவும், ‘அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்’ என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும், (இவ்வேதத்தை) எவ்விதக் கோணலும் இன்றி அருளிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
(அல்குர்ஆன்: 18:1-4)
புற்பூண்டுகள் விளையாத நிலத்தில் பயிர்களை முளைக்க செய்ததற்காக புகழ வேண்டும்.
வானத்திலிருந்து நீரை இறக்கி செத்த பூமியை அதன் மூலம் உயிரூட்டுபவன் யார்? என்று அவர்களிடத்தில் கேட்டால் அல்லாஹ் என்றே உறுதியாக கூறுவார்கள். அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும் என்று (முஹம்மதே) நீர் கூறுவீராக! என்றாலும் அவர்களில் அதிகாமானோர் விளங்காதவர்களாகவே உள்ளனர்.
(அல்குர்ஆன்: 29:63)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉவிருந்து தமது முதுகை நிமிர்த்தி விட்டால் ”சமிஅல்லாஹு மன் ஹமிதஹ். அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வ மில்அல்அர்ளி வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையிம் பஅது” என்று கூறுவார்கள்.
(பொருள்: அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கின்றான். இறைவா! எங்கள் அதிபதியே! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிற பொருள்கள் நிரம்பப் புகழ் அனைத்தும் உனக்கே உரியது.)
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)
நூல் : (முஸ்லிம்: 819)
ஒரு நாள் இரவில் படுக்கை விரிப்பில் (என்னுடனிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணவில்லை. ஆகவே, அவர்களை நான் தேடினேன். அப்போது அவர்கள் பள்ளிவாசலில் (சஜ்தாவில்) இருந்தார்கள். எனது கை, நட்டுவைக்கப்பட்டிருந்த அவர்களது உள்ளங்காலில் பட்டது. அப்போது அவர்கள் ”அல்லாஹும்ம, அஊது பி ரிளாக்க மின் சகதிக்க, வபி முஆஃபாத்திக்க மின் உகூபத்திக்க, வ அஊது பிக்க மின்க்க, லா உஹ்ஸீ ஸனாஅன் அலைக்க அன்த்த கமா அஸ்னய்த்த அலா நஃப்சிக்க” என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
(பொருள்: இறைவா, உன் திருப்தியின் மூலம் உனது கோபத்திருந்தும், உன் மன்னிப்பின் மூலம் உனது தண்டனையிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! உன் (கருணையி)னைக் கொண்டு உன் (தண்டனையி)னைவிட்டுப் பாதுகாப்புக் கோருகிறேன். உன்னைப் புகழ என்னால் இயலவில்லை. உன்னை நீ புகழ்ந்துகொண்டதைப் போன்றே நீ இருக்கிறாய்.)
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : (முஸ்லிம்: 839)
அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைவிட ரோஷக்காரன் யாரும் இல்லை. அதனால் தான் மறைமுகமான வெளிப்படையான வெட்கக் கேடான செயல்களை தடுத்துள்ளான். அல்லாஹ்வை விட புகழ் விரும்புகிறவன் யாரும் இல்லை. அதனால் தான் அவன் தன்னையே புகழ்கிறான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல் : (புகாரி: 4637)
இந்த புகழ் நம்மை தேடி வரக்கூடிய சமயத்தில் அல்லாஹ் குர்ஆனில் ஒரு பிராத்தனையை கற்றுத் தருகிறான்.
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا
அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, (முஹம்மதே) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டகூட்டமாக நுழைவதை காணும் போது, உமது இறைவனின் புகழை துதிப்பீராக! அவனிடத்தில் பாவமன்னிப்பு தேடுவீராக! அவன் தான் பாவங்களை மன்னிப்பவனாக இருக்கிறான்.
ஒருவர் மார்க்க சமுதாய பணிகளில் வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்திருப்பார். ஆனால் அவற்றையெல்லாம் வீணாக்கும் வண்ணமாக நான் தான் இப்படி செய்தேன். அதை நான் செய்தேன். என்னால் தான் இவ்வாறு நடந்தது என்று அல்லாஹ்வை மறந்து சொல்ல கூடிய நிலையை காண்கிறோம். இவர்களுக்கு இந்த எச்சரிக்கை செய்தி.
சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், “பெரியவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், “ஆம் (தெரிவிக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்:
மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது அவருக்கு, தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார்.
பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார். இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, “மாவீரன்” என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.)”அறிஞர்” என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; “குர்ஆன் அறிஞர்” என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார்.
பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் “இவர் ஒரு புரவலர்” என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)” என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.
(நூல்: (முஸ்லிம்: 3865))
இதே மனிதர் இந்த புகழின் ஆசையின்றி இறைவனுக்காக, ஷஹீதாக விரும்பியிருந்தால், அவ்வாறு மரணமடையாவிட்டாலும் அதற்குரிய நன்மையை பெற்றுக் கொள்வார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீரமரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர்த் தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான்; அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே!
இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: (முஸ்லிம்: 3870))
அப்படியெனில் இந்த வீண் புகழ் மோகம் நமக்கு எதற்கு? என்பதை சிந்திக்க வேண்டும்.
قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ بَدْرٍ مَنْ يَنْظُرُ مَا فَعَلَ أَبُو جَهْلٍ فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ حَتَّى بَرَدَ فَأَخَذَ بِلِحْيَتِهِ فَقَالَ : أَنْتَ أَبَا جَهْلٍ قَالَ وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلَهُ قَوْمُهُ ، أَوْ قَالَ قَتَلْتُمُوه
பத்ருப் போர் (நடந்த) நாளில், “அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரப்)போனார்கள். அவனை அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக் கொண்டு, “அபூஜஹ்லே! நீயா?” என்று கேட்டார்கள். (அப்போது) அவன், “தம் (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப் பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக…. அல்லது நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக…. ஒருவன் உண்டா?” என்று கேட்டான்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : (புகாரி: 3963)
பத்ருப் போரில் அபூஜஹ்லின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த போது நான் அவனிடம் வந்தேன். அப்போது அவன், “நீங்கள் எவனைக் கொலை செய்தீர்களோ அவனை விடச் சிறந்தவன் ஒருவன் உண்டா?” என்று (தன்னைத் தானே புகழ்ந்தபடிச்) சொன்னான்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல் : (புகாரி: 3961)
நபி (ஸல்) அவர்கள் (புனிதப் போரிலிருந்து) திரும்பிச் செல்லும்போது மூன்று முறை ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று கூறிவிட்டு, ‘இறைவன் நாடினால் நாங்கள் பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும் வணக்கம் புரிபவர்களாகவும், (அவனைப்) புகழ்ந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்கே (நெற்றியை நிலத்தில் வைத்துச்) சிரம் பணிந்தவர்களாகவும் திரும்பிச் செல்கிறோம்.
அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிக் காட்டிவிட்டான்; தன் அடியாருக்கு உதவி புரிந்துவிட்டான்; தன்னந் தனியாக (அனைத்துக்) குலங்களையும் தோற்கடித்துவிட்டான்’ என்று கூறினார்கள்.
(நூல்: (புகாரி: 3084))
இது போன்ற வார்த்தையை நாமும் கூறி, புகழ் எனும் போதையிலிருந்து விடுபட்ட மக்களாக மாற இறைவன் அருள்புரிவானாக!