பிள்ளைகள் கைவிட்டதால் உணவின்றி உயிரிழந்த பெற்றோர்கள்

பயான் குறிப்புகள்: தற்காலிக நிகழ்வுகள்

பிள்ளைகள் கைவிட்டதால் உணவின்றி உயிரிழந்த பெற்றோர்கள்

பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டால் அவர்களை நோக்கி “சீ” என்று கூற வேண்டாம் என இறைவன், உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆனில் தெரிவிக்கின்றான்.

ஆனால் திருக்குர்ஆனைப் பின்பற்றுவதாகச் சொல்லும் இஸ்லாமியர்களிடத்தில் கூட அந்தப் பண்புகள் இருப்பதில்லை, அவ்வாறு இருந்திருந்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முதியோர் இல்லம் நடத்துவதற்கு எவ்விதத் தேவையும் இருக்காது. பெற்றோரைப் பேணுவது ஒருவகையான சுமை என நினைக்கும் சிலர் இஸ்லாமியர்களில் இருப்பது போல மற்ற சமுதாய மக்களிடத்திலும் பெற்றோர் பராமரிப்பு இன்மையின் காரணமாக பல முதியோர்கள் அநாதைகளாக விடப்படுகின்றனர். பத்து மாதம் சுமந்து பெற்ற பெற்றோர்களை, பிள்ளைகள்., சுமை என கருதுவதால் பல முதிய ஆண்களும் பெண்களும் நடுத்தெருவில் நடுரோட்டில் அநாதைகளைப் போல பிச்சையெடுப்பதை காண்கின்றோம்.

ஆதரவற்ற அநாதைச் சடலங்களாக நடுரோட்டில் இறந்து கிடக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. கடந்த வாரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. பிள்ளைகளால் பராமரிக்கப்படாத பெற்றோர்கள்., உண்பதற்கு உணவு இன்றி தங்களின் வீட்டுக்குள் அநாதையாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைப் பகுதிக்கு அருகில் உள்ள சாரோடு ஆனைசாஸ்தா பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 90), அவரது மனைவி ஞானம்மாள் (வயது 85). இந்த தம்பதிக்கு மொத்தம் மூன்று மகன்கள். மூத்த மகன் இறந்து விட்ட நிலையில் அடுத்த மகன் வெளிநாட்டிலும் மூன்றாவது மகன் தக்கலையிலும் உள்ளார்கள்.

செல்வத்தின் மகன்கள் யாருமே அவர்களின் பெற்றோர்களை கவனிக்காமல் இருந்துள்ளார்கள். இதனால் அடுத்தவேளை உணவிற்கு கூட இந்த முதிய தம்பதிகள் சிரமப்பட்டார்கள். இவர்களின் நிலையைப் பார்த்த அக்கம் பக்கத்தைச் சேர்ந்த மக்கள் ரூ. 5, ரூ.10 என தங்களால் இயன்ற பொருளுதவியை இவர்களுக்குச் செய்து வந்துள்ளார்கள்.

வயது முதிர்வின் காரணமாக இந்த முதியவர்களுக்கு சமைத்து உண்பதற்கு முடியவில்லை. பொதுமக்கள் கொடுத்து உதவும் பணத்தை வைத்து தக்கலை வரைக்கும் நடந்தே சென்று அங்குள்ள அம்மா உணவகத்தில் லெமன் சாதம், தயிர் சாதம் போன்றவைகளை வாங்கி வந்து அதைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளார்கள். இயலாமையின் காரணமாக தினமும் தக்கலை சென்று அவர்களால் உணவு வாங்கி வர முடியவில்லை.

அதனால், வாங்கிவரும் உணவை 2, 3 நாளைக்கு வைத்திருந்து சாப்பிட்டு வந்தார்கள். இதன் காரணமாக அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. ஞானம்மாள் படுத்த படுக்கையானார். செல்வம் தன்னால் இயன்ற அளவிற்கு தன் மனைவியை கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவர்களின் நடமாட்டம் அந்தப் பகுதியில் இல்லாததால் அங்கிருந்தவர்கள் முதியவர்களின் வீட்டிற்குச் சென்று பார்த்த போது இருவரும் இறந்துபோய் அழுகிய நிலையில் சடலங்களாகக் கிடந்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக அந்தப் பகுதி மக்கள் அருகில் இருந்த காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்து சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரமப்பட்டு பெற்றெடுத்த பெற்றோர்கள் முதியவர்களாக ஆகும் போது அவர்களை பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமையாகும்.

தங்களின் பெற்றோர்களை அநாதைகளாக விடுபவர்கள் தங்களின் குழந்தைப் பருவத்தை கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க வேண்டும். கஷ்டத்திற்கு மேல் கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்த பெற்றோர்களை கண்களைப் போல காக்க வேண்டும். உங்கள் பெற்றோர்களை நீங்கள் நல்ல முறையில் பராமரித்தால்தான் உங்கள் பிள்ளை உங்களை சிறந்த முறையில் கவனிப்பான் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டால் எவ்விதப் பிரச்சினைகளும் இருக்காது.

Source : unarvu *(07/12/18)