28) பிள்ளைகளை சபிக்கக்கூடாது
பிள்ளைகள் தவறு செய்யும் போது தாய்மார்கள் காதால் கேட்க முடியாத கெட்ட வார்த்தைகளால் பிள்ளைகளை திட்டுகிறார்கள். சபிக்கிறார்கள். இதனால் தான் பெண்கள் அதிகமாக நரகத்திற்குச் செல்கிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கோபம் ஏற்படும் போது நிதானத்தைக் கடைபிடித்து குழந்தைகளைத் திருத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹஜ்ஜுப் பெருநாள்’ அல்லது “நோன்புப் பெருநாள்’ தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, “பெண்கள் சமூகமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது” என்று குறிப்பிட்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை, அறிவிலும் மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்” என்று கூறினார்கள்.
அறி : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : புகாரி (304)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு வாய்மையாளர் அதிகமாகச் சாபமிடுபவராக இருப்பது தகாது” என்று சொன்னார்கள்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் (5062)
அன்சாரிகளில் ஒருவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அதில் ஏறினார். பிறகு அதைக் கிளப்பினார். ஆனால், அது சிறிது (சண்டித்தனம் செய்து) நின்று விட்டது. அப்போது அவர் “ஷஃ’ என அதை விரட்டிவிட்டு, “உனக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!” என்று சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “தமது ஒட்டகத்தைச் சபித்த இந்த மனிதர் யார்?” என்று கேட்டார்கள். “நான்தான், அல்லாஹ்வின் தூதரே!” என்று அந்த அன்சாரி பதிலளித்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதிலிருந்து இறங்கிவிடு! சபிக்கப்பட்ட ஒரு பொருளோடு எங்களுடன் நீர் வர வேண்டாம். நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக் கெதிராகவோ உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)” என்று சொன்னார்கள்.
அறி : ஜாபிர் (ரலி),
நூல் : முஸ்லிம் (5736)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் “ஜுரைஜ்’ என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) “அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?’ என்று கூறிக் கொண்டார். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், “இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!” என்று கூறி விட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தமது ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்து விட்டார்.
ஆகவே, (அவள் அவரைப் பழிவாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு “இது ஜுரைஜுக்குப் பிறந்தது’ என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரது ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூ செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, “குழந்தையே! உன் தந்தை யார்?” என்று கேட்டார். அக்குழந்தை, “(இன்ன) இடையன்” என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்து கொண்ட அந்த மக்கள், “தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்று கூறிவிட்டார்.
அறி : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி (3436)
கோபத்தில் குழந்தைக்கு எதிராக தாய் கேட்கின்ற பிரார்த்தனையை அல்லாஹ் உடனே அங்கீகரித்துவிடுகின்றான். மேற்கண்ட செய்தியில் ஜ‚ரைஜ் என்வரின் தாய் “இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல் மரணிக்கச்செய்யாதே!” என்று கோபத்தில் பிரார்த்தித்துவிடுகிறார். இதை அல்லாஹ்வும் ஏற்றுக்கொண்டு விடுகிறான். மிக கவனமாக வார்த்தைகளை வெளியில் விட வேண்டும்.