பிற மதத்தவரின் ஹோட்டலில் சாப்பிடலாமா?
பிற மதத்தவரின் ஹோட்டலில் சாப்பிடலாமா?
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத எந்த மாமிசத்தையும் உண்ணக் கூடாது. அப்படியானால் மாற்று மதத்தவர்களின் ஹோட்டலில் சாப்பிடுவது கூடுமா?
அல்லாஹ்வின் பெயர் கூறப் படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம். (அல்குர்ஆன்: 6:121) ➚
“அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத உணவுகளை உண்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே மாற்று மத ஹோட்டலில் மட்டுமல்ல; முஸ்லிம் ஹோட்டலாக இருந்தாலும் அங்கு அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத இறைச்சி பயன்படுத்தப் படுமானால் அவற்றை உண்ணக் கூடாது.
அதே சமயம் மாற்று மதத்தினர் நடத்தும் ஹோட்டல்கள் சிலவற்றில் முஸ்லிம்களிடம் இறைச்சி வாங்கி அதைச் சமைக்கின்றனர். அல்லது முஸ்லிம்களை அழைத்து ஆடு, மாடு, கோழி போன்றவற்றை அறுக்குமாறு கூறி அவற்றிலிருந்து உணவு தயாரிக்கின்றனர்.
எனவே இவ்வாறு முஸ்லிம்கள் மூலம் அறுப்பது தெளிவாகத் தெரிந்தால் அந்த ஹோட்டல்களில் இறைச்சி உண்பது தடையில்லை. அவ்வாறு உறுதியாகத் தெரியாத பட்சத்தில், சந்தேகத்திற்கு இடமானதைத் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அங்கு இறைச்சி உண்ணக் கூடாது.
பிஸ்மில்லாஹ் கூறி அறுக்க வேண்டும் என்று சொல்லும் போது, பிஸ்மில்லாஹ் சொல்லி யார் அறுத்தாலும் அதை உண்ணலாம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.
பிஸ்மில்லாஹ் என்று ஒரு இந்துவோ, கிருஸ்தவரோ, இறைவனே இல்லை என்று கூறுபவரோ கூறி அறுத்தால் அதை உண்ணக் கூடாது.
எனினும், அல்லாஹ் இருக்கிறான் என்று நம்பி, அவனுக்கு இணைவைக்கும் ஒருவர் அறுத்தல் உண்ணலாம்.
அதற்கான சான்று…
நீங்கள் அல்லாஹ்வின் வசனங் களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்!
அல்லாஹ்வின் பெயர் கூறப் பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமா னோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின் றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.
அல்லாஹ்வின் பெயர் கூறப் படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப் பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.
ஒருவன் திருக்குர்ஆனை நம்புகிறானா? இல்லையா? என்பதற்கான அளவுகோலில் ஒன்று அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்பதாகும் என்ற கருத்தை 6:118 வசனம் கூறுகிறது. “நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள்” என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்த பின் அதை உண்ண மறுப்பது குர்ஆனை மறுப்பதாகும் என்று இவ்வசனம் கடுமையான விஷயமாக குறிப்பிடுகிறது.
6:119 வசனம் இன்னும் அழுத்தமாக இக்கருத்தை முன்வைக்கிறது. அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பின்னர் அதை உண்ண மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.
6:121 வசனம், அல்லாஹ்வின் பெயர் கூறப்படாமல் சாகடிக்கப்பட்டதை உண்ணக் கூடாது என்று தடை விதிக்கின்றது.
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டால் உண்ணலாம்; உண்ண வேண்டும்; உண்பதை தடுக்கப்பட்டதாக கருதக் கூடாது. அல்லாஹ்வின் பெயர் கூறப் படாவிட்டால் அதை உண்ணக் கூடாது என்று இம்மூன்று வசனங்களிலும் கூறப்படுகிறது.
அல்லாஹ்வின் பெயரைக் கூறுபவனுக்குரிய தகுதி
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதைத் தான் உண்ண வேண்டும் என்பது தெளிவான சொற்களால் கூறப்பட்டு இருந்தாலும் இதில் ஒரு சந்தேகம் எழுகின்றது.
அல்லாஹ்வை நம்பும் சிலர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப் பவர்களாக உள்ளனர். இவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததாக ஆகுமா? என்பதுதான் இந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகத்துக்கு அடிப்படையும் இருக்கிறது.
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்கள் அல்லாஹ்வுக்காக எந்த வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ் ஏற்க மாட்டான். இணை கற்பித்தால் எல்லா நல்லறங்களும் அழிந்து விடும் என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது.
தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
இணை கற்பிப்போர் தமது (இறை)மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காத நிலையில் செய்யும் காரியங்கள் தான் இறைவனால் ஏற்கப்படும் என்பதை இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இதனடிப்படையில் பார்க்கும் போது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தாலும் அதை எப்படி உண்ண முடியும்? என்ற சந்தேகம் எழுகின்றது.
வணக்க வழிபாடுகளைப் பொறுத்த வரை இந்தச் சந்தேகம் சரியானது என்றாலும் பிராணிகளை அறுக்கும் விஷயத்துக்கு இது பொருந்தாது என்பது தான் சரியானதாகத் தெரிகிறது.
மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களில் அல்லாஹ்வின் பெயரை முஸ்லிம்களாகிய நீங்கள் கூறி அறுத்ததை உண்ணுங்கள் எனக் கூறவில்லை. மாறாக அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள் என்று செயப்பாட்டு வினையாகக் கூறப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்; கூறுபவர் யார் என்பது முக்கியமில்லை என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.