03) பிறை குறித்த திருக்குர்ஆன் வசனங்கள்
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம்
அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதிக்களமாகவும்,சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.
ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.
தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்.
அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன.
சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். முடிவில் அது காய்ந்த பேரீச்சம் பாளை போல் ஆகிறது. சூரியனால் சந்திரனை அடைய முடியாது. இரவு, பகலை முந்தாது. ஒவ்வொன்றும் ஆகாயத்தில் நீந்துகின்றன.
(அல்குர்ஆன்: 36:38) ➚, 39, 40
சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன.
பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்” எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன்,பின்வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை.
இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தினோம்.
வானத்தில் நட்சத்திரங்களை ஏற்படுத்தி, அதிலே விளக்கையும், ஒளி சிந்தும் சந்திரனையும் ஏற்படுத்தியவன் பாக்கியமானவன்.