பிறருக்காகப் பிரார்த்திப்போம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 3

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இறைவனுக்கும் அடியானுக்கும் இடையேயான உறவையும் நெருக்கத்தையும் உயிரோட்டமாக வைத்திருப்பவற்றில் பிரார்த்தனைக்கு மிக முக்கிய பங்குண்டு. வறண்ட நிலமாகக் காட்சியளித்த, பாலைவன பூமியான மக்காவின் இன்றைய வளர்ச்சிக்கு இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையே காரணம் என்பதைப் புரிந்தால் பிரார்த்தனைக்கென்று உள்ள தனித்துவமிக்க வலிமையை அறியலாம்.

உறுதியான நம்பிக்கையோடு இறைவனிடம் செய்யப்படும் எந்தப் பிரார்த்தனையும் வலிமை மிகுந்ததே! இத்தகைய துஆவின் முக்கியத்துவத்தையும் அதன் சிறப்புகளையும் நாம் அறிந்து வைத்துள்ளோம். நமது பிரார்த்தனை இறைவனிடம் ஏற்கப்பட எத்தகைய ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் கூடப் பல நேரங்களில் நமக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. இதில் அதிகம் கவனத்தில் கொள்ளாதது பிறருக்காக துஆ செய்வது எனும் அம்சமேயாகும். அந்த சிறந்த அம்சத்தை பற்றி இந்த உரையில் காண்போம்.

நல்ல பண்பு

நமக்காக நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதைப் போல பிறருக்காகவும் பிரார்த்தனை புரிய வேண்டும். அதை அல்லாஹ் நல்ல பண்பாக, பாராட்டிக் கூறுகிறான். மார்க்கத்திற்காக சொந்த ஊரை விட்டு ஹிஜ்ரத் எனும் புனிதப் பயணம் மேற்கொண்டு மதீனா வந்த முஹாஜிர்களுக்காக மதீனாவை பூர்வீகமாகக் கொண்ட அன்சாரி நபித்தோழர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளதை அல்லாஹ் திருக்குர்ஆனில் சிலாகித்துக் கூறுகிறான்.

وَالَّذِيْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ

அவர்களுக்குப் பின் வந்தோர் “எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்’’ என்று கூறுகின்றனர்.

(அல்குர்ஆன்: 59:10)

பிறருக்காக துஆ செய்வது அல்லாஹ்வின் பாராட்டுக்குரியது என்பதை இந்த வசனம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. அதுமட்டுமில்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்தப் பண்பை உயரிய பண்பாகவும் இறைவனது அருளுக்கு நம்மை உரித்தாக்கும் பண்பாகவும் குறிப்பிடுகிறார்கள்.

பிறருக்காக நாம் நன்மை வேண்டி துஆ செய்தால் இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர் நமக்காக இறைவனிடம் நன்மையை வேண்டுவார் என்று நபிகளார் இதன் சிறப்பை எடுத்துரைக்கின்றார்கள்.

حَدَّثَتْنِي أُمُّ الدَّرْدَاءِ، قَالَتْ: حَدَّثَنِي سَيِّدِي أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
 مَنْ دَعَا لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ، قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ، وَلَكَ بِمِثْلٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், ‘‘ஆமீன் (இறைவா! ஏற்றுக்கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!’’ என்று கூறுகிறார். இதை என் தலைவர் (அபுத்தர்தா) என்னிடம் கூறினார் என (அபுத்தர்தா அவர்களின் மனைவி) உம்முத்தர்தா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: (முஸ்லிம்: 5280) 

قَدِمْتُ الشَّامَ، فَأَتَيْتُ أَبَا الدَّرْدَاءِ فِي مَنْزِلِهِ، فَلَمْ أَجِدْهُ وَوَجَدْتُ أُمَّ الدَّرْدَاءِ، فَقَالَتْ: أَتُرِيدُ الْحَجَّ الْعَامَ، فَقُلْتُ: نَعَمْ، قَالَتْ: فَادْعُ اللهَ لَنَا بِخَيْرٍ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: ” دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ، عِنْدَ رَأْسِهِ مَلَكٌ مُوَكَّلٌ كُلَّمَا دَعَا لِأَخِيهِ بِخَيْرٍ، قَالَ الْمَلَكُ الْمُوَكَّلُ بِهِ: آمِينَ وَلَكَ بِمِثْلٍ

ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் பின் ஸஃப்வான் அவர்கள் கூறுகிறார்கள்:
தர்தா அவர்கள், ஸஃப்வான் அவர்களின் மனைவியாக இருந்தார். ஸஃப்வான் கூறுகிறார்: நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா (ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், ‘‘இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?’’ என்று கேட்டார். நான் ‘‘ஆம்’’ என்றேன்.

அதற்கு அவர் சொன்னார்: அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘‘ஒரு முஸ்லிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார்.

அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும் போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், ‘இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக் கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்’’ என்று கூறினார்கள்.

நூல்: (முஸ்லிம்: 5281) 

பிறருக்காக துஆ செய்த நபிகளார்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் பிறருக்காக இறைவனிடம் நன்மையை வேண்டிப் பிரார்த்தனை புரிந்த நிகழ்வுகள் அதிகம் நடைபெற்றுள்ளன. பல நேரங்களில் நபிகளார் அடுத்தவர்களுக்காக துஆ செய்துள்ளார்கள்.

தொழுகையில் தவறிழைத்தவருக்காக…
عَنْ أَبِي بَكْرَةَ
أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلاَ تَعُدْ»

நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது ருகூவு செய்தார்கள். நான் வரிசையில் வந்து சேர்வதற்கு முன்பே ருகூவு செய்து விட்டேன். இது பற்றிப் பிறகு நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘அல்லாஹ் உன்னுடைய ஆர்வத்தை அதிகப்படுத்துவானாக! இனிமேல் இப்படிச் செய்யாதே!’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி),
நூல்: (புகாரி: 783) 

அபூபக்ரா (ரலி) அவர்கள் தொழுகையின் வரிசையில் வந்து சேர்வதற்கு முன்பே ருகூவு செய்து விடுகிறார்கள். தொழுகையின் ரக்அத் தவறி விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். நபிகள் நாயகத்திற்கு இது தெரியவந்த போது, இது தவறு இவ்வாறு செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள். அத்துடன் நன்மையின் மீதான அபூபக்ரா (ரலி) அவர்களின் ஆர்வத்தைப் பார்த்து, அது இன்னும் அதிகரிக்கட்டும் என்று அவருக்காக இறைவனிடம் துஆ செய்கிறார்கள்.

ஒருவரது தவறை உணர்த்தும் போது கூட அவருக்காக துஆ செய்யும் பண்பு நபிகளாரிடம் இருந்துள்ளது என்பதை இச்சம்பவம் எடுத்துரைக்கின்றது.

விபச்சாரத்திற்கு அனுமதி கேட்டவருக்காக…

நபிகளாரின் வாழ்வில் பிறருக்காக துஆ செய்த மற்றுமொரு சுவாரசியமான சம்பவத்தையும் பார்க்கலாம்.

إِنَّ فَتًى شَابًّا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، ائْذَنْ لِي بِالزِّنَا، فَأَقْبَلَ الْقَوْمُ عَلَيْهِ فَزَجَرُوهُ وَقَالُوا: مَهْ. مَهْ. فَقَالَ: «ادْنُهْ، فَدَنَا مِنْهُ قَرِيبًا» . قَالَ: فَجَلَسَ قَالَ: «أَتُحِبُّهُ لِأُمِّكَ؟» قَالَ: لَا. وَاللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ. قَالَ: «وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِأُمَّهَاتِهِمْ» . قَالَ: «أَفَتُحِبُّهُ لِابْنَتِكَ؟» قَالَ: لَا. وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ قَالَ: «وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِبَنَاتِهِمْ» . قَالَ: «أَفَتُحِبُّهُ لِأُخْتِكَ؟» قَالَ: لَا. وَاللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ. قَالَ: «وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِأَخَوَاتِهِمْ» . قَالَ: «أَفَتُحِبُّهُ لِعَمَّتِكَ؟» قَالَ: لَا. وَاللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ. قَالَ: «وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِعَمَّاتِهِمْ» . قَالَ: «أَفَتُحِبُّهُ لِخَالَتِكَ؟» قَالَ: لَا. وَاللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ. قَالَ: «وَلَا النَّاسُ يُحِبُّونَهُ لِخَالَاتِهِمْ» . قَالَ: فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ وَقَالَ: «اللَّهُمَّ اغْفِرْ ذَنْبَهُ وَطَهِّرْ قَلْبَهُ، وَحَصِّنْ فَرْجَهُ» فَلَمْ يَكُنْ بَعْدُ ذَلِكَ الْفَتَى يَلْتَفِتُ إِلَى شَيْءٍ

ஒரு இளைஞர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! விபச்சாரம் செய்ய எனக்கு அனுமதி தாருங்கள்’’ என்று கேட்டார். உடனே மக்கள் கூட்டம் அவரை முன்னோக்கி வந்து, ‘‘நிறுத்து நிறுத்து’’ என அவரைத் தடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை நெருங்கி வா என அழைக்க அவர் நெருங்கி வந்து அமர்ந்து கொண்டார்.

அப்போது நபியவர்கள், ‘‘இதை உன் தாய்க்கு விரும்புவாயா?’’ என்று கேட்க அவரோ, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் தாய்க்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.

‘‘உன் மகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்று கேட்க, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் மகள்களுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.

‘‘உன் சகோதரிக்கு இதை விரும்புவாயா?’’ என்று கேட்ட போது, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன் மக்களும் தம் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.

‘‘உன் தந்தையின் சகோதரிகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்ற போது, ‘‘அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, நான் அவ்வாறு விரும்ப மாட்டேன். மக்களும் தம் தந்தையின் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.

‘‘உன் தாயின் சகோதரிகளுக்கு இதை விரும்புவாயா?’’ என்ற போது அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக, அவ்வாறு நான் விரும்ப மாட்டேன். மக்களும் தம் தாயின் சகோதரிகளுக்கு இதை விரும்ப மாட்டார்கள்’’ என்றார்.

அப்போது நபியவர்கள் தனது கரத்தை அவர் மீது வைத்து, ‘‘இறைவா! இவரது பாவத்தை மன்னிப்பாயாக! இவரது உள்ளத்தை பரிசுத்தப்படுத்துவாயாக! இவரது கற்பைப் பாதுகாப்பாயாக!’’ என்று அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி),
நூல்: (அஹ்மத்: 22211) (22265)

ஒரு நபித்தோழர் நபிகளாரின் அவைக்கு வந்து பலர் முன்னிலையிலே தனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்கிறார். விபச்சாரம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை அவர் நன்கறிவார். இருப்பினும் தடை செய்யப்பட்ட விபச்சாரத்தை யாருக்கும் தெரியாமல் செய்து பாவத்தை சம்பாதித்துக் கொள்வதை விட, நபிகளாரிடம் அனுமதி பெற்று விட்டால் அது குற்றமாகாது அல்லவா? என்பது அவரது வெள்ளந்தியான எண்ணம்.

இவ்வாறு தனக்கு மட்டும் விபச்சாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று அந்த நபித்தோழர் கேட்கின்ற போது நபிகளார் அவர்களோ, இதே அனுமதியை உன் தாய்க்கும் வழங்கலாமா? உன் மகளுக்கும் வழங்கி விடவா? உன் சகோதரிகள், பெண் பிள்ளைகள் அவர்களுக்கும் விபச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்படுவதை விரும்புவாயா? என்று கேட்டு இது தவறான சிந்தனை என்பதை அவருக்குப் புரியும் படி உணர்த்தி விடுகின்றார்கள்.

அத்துடன் நில்லாமல் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தனை புரிகிறார்கள். இந்தத் தவறான சிந்தனைக்கு உள்ளத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் என்பதால் அவரது உள்ளத்தின் பரிசுத்தத் தன்மைக்கு அல்லாஹ்விடம் துஆ செய்கிறார்கள்.

அவரது கற்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் துஆ செய்கிறார்கள். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் நபிகளார் அடுத்தவர்களுக்காக துஆ செய்துள்ளார்கள். இதிலிருந்து பிறருக்கு துஆ செய்யும் வழக்கம் நபியிடம் அதிகம் காணப்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

நபிகளாரைப் பின்பற்றிய நபித்தோழர்கள்

நபித்தோழர்களிடையேயும் பிறருக்காக துஆ செய்த வழக்கம் இருந்துள்ளதை பல செய்திகளில் பார்க்கலாம். சாதாரண நிகழ்வின் போது மாத்திரம் என்றில்லாமல் உச்சக்கட்ட உணர்ச்சி ததும்பும் தருணத்திலும் கூட, பிறருக்கு துஆ செய்துள்ளார்கள். அப்படியொரு நிகழ்வை ஹுதைபா (ரலி) அவர்களின் வாழ்வில் பார்க்க முடிகின்றது. அந்தச் சம்பவம் இது தான்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
لمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ المُشْرِكُونَ، فَصَرَخَ إِبْلِيسُ لَعْنَةُ اللَّهِ عَلَيْهِ: أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ، فَرَجَعَتْ أُولاَهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ، فَبَصُرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ اليَمَانِ، فَقَالَ: أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي، قَالَ: قَالَتْ: فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ، فَقَالَ حُذَيْفَةُ: يَغْفِرُ اللَّهُ لَكُمْ ” قَالَ عُرْوَةُ: فَوَاللَّهِ مَا زَالَتْ فِي حُذَيْفَةَ بَقِيَّةُ خَيْرٍ، حَتَّى لَحِقَ بِاللَّهِ عَزَّ وَجَلَّ ” بَصُرْتُ: عَلِمْتُ، مِنَ البَصِيرَةِ فِي الأَمْرِ، وَأَبْصَرْتُ: مِنْ بَصَرِ العَيْنِ، وَيُقَالُ: بَصُرْتُ وَأَبْصَرْتُ وَاحِدٌ

உஹுதுப் போரின் (தொடக்கத்தின்) போது இணை வைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், அல்லாஹ் அவனைக் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்’ என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் போரிட்டுக் கொண்டனர்.

அப்போது ஹுதைஃபா (ரலி), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். எனவே, ‘அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!’ என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரை விட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),
நூல்: (புகாரி: 4065) 

உஹதுப் போரின் போது, தவறுதலாகத் தனது தந்தை கொல்லப்படுவதைப் பார்த்த நேரத்திலும் கொன்றவர்களை நோக்கி, ‘அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பானாக’ என்று ஹுதைபா (ரலி) அவர்கள் துஆ செய்துள்ளார்கள் என்றால் இது எத்தகைய குணம்? இது நபிகளாரிடம் பயின்ற பாடத்தின் வெளிப்பாடாகும்.

ஆயிஷா (ரலி) அவர்களின் வழக்கம்

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை எடுத்துக் கொண்டால் பிறருக்கு துஆ செய்வதில் தனிச்சிறப்புடன் விளங்கியுள்ளார்கள். பின்வரும் நபிமொழி இதை விளக்குகின்றது.

فَلَمَّا أُصِيبَ عُمَرُ دَخَلَ صُهَيْبٌ يَبْكِي يَقُولُ: وَا أَخَاهُ وَا صَاحِبَاهُ، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَا صُهَيْبُ، أَتَبْكِي عَلَيَّ، وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ المَيِّتَ يُعَذَّبُ بِبَعْضِ بُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»

قَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: فَلَمَّا مَاتَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، ذَكَرْتُ ذَلِكَ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَتْ: رَحِمَ اللَّهُ عُمَرَ، وَاللَّهِ مَا حَدَّثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَيُعَذِّبُ المُؤْمِنَ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»، وَلَكِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ لَيَزِيدُ الكَافِرَ عَذَابًا بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»، وَقَالَتْ: حَسْبُكُمُ القُرْآنُ: {وَلاَ تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [الأنعام: 164]…

உமர் (ரலி) அவர்கள், மரணக் காயமுற்றிருந்த போது ‘சகோதரனே! நண்பனே!’ எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) (வீட்டினுள்) நுழைந்தார். அப்போது உமர் (ரலி) ‘ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்களல்லவா?’ என்றார்.

உமர் (ரலி) இறந்தபோது, (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி), ‘‘அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ‘குடும்பத்தினர் அழுவதன் காரணமாக முஃமினை அல்லாஹ் வேதனை செய்வான்’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

மாறாக ‘குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் காஃபிருக்கு வேதனை அதிகமாக்கப்படும்’ என்றே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’’ என்று கூறி, ‘ஒருவரது பாவச் சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்’ (அல்குர்ஆன்: 6:164) என்ற குர்ஆனின் வசனமே உங்களுக்குப் போதுமே’ என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: (புகாரி: 1287) , 1288

புகாரியின் மற்றொரு (1289) அறிவிப்பில்

عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ
إِنَّمَا مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى يَهُودِيَّةٍ يَبْكِي عَلَيْهَا أَهْلُهَا، فَقَالَ: «إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا وَإِنَّهَا لَتُعَذَّبُ فِي قَبْرِهَا»

‘‘இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்; அவளோ கப்ரில் வேதனை செய்யப்படுகிறாள்’’ என்று யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளுடைய குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த போது தான் நபி (ஸல்) கூறினார்கள்’’ என்று ஆயிஷா (ரலி) கூறியதாக வருகின்றது.

இந்த செய்தியைப் பாருங்கள்.

நபியவர்கள் சொன்னதை உமர் (ரலி) அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டு சொல்லும் போது, அது ஆயிஷா (ரலி) அவர்களின் கவனத்திற்கு வந்ததும், ‘அல்லாஹ் உமருக்கு அருள் புரிவானாக’ என்று துஆ செய்து விட்டு தமது தரப்பு விளக்கத்தை அளிக்கின்றார்கள். உமர் (ரலி) கூறியது தவறு என்று புரிய வைக்கின்றார்கள்.

இது போன்று பல நேரங்களில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்க முன்வருவோர், ‘அவர் இவ்வாறு கூறினார்’ என்பதாகச் சொல்லும் போது, அது தவறாக இருக்கும் பட்சத்தில் ‘அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக’ என்று பிரார்த்தித்து விட்டுத் தனது விளக்கத்தை அளிக்கும் வழக்கத்தை ஆயிஷா (ரலி) கடைப்பிடித்துள்ளார்கள் என்பதைப் பல நபிமொழிகளில் பார்க்கலாம்.

இஸ்லாத்தின் கலாச்சாரம்

இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன? பிறர் நலனில் அக்கறை கொள்வதோடு, அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிவதுமே இஸ்லாமிய கலாச்சாரமாகும். அன்றாடம் கடைப்பிடிக்கத் தக்கவையாக இஸ்லாம் கற்றுத் தந்த பல நடைமுறைகளில் பிறருக்காக துஆ செய்யும் பண்பு மிளிர்வதைக் காணலாம்.

தும்மினால்…

தும்மிய ஒருவர் அல்ஹம்துலில்லாஹ் எனக் கூறினால் அவருக்காக நாம் யர்ஹமுகல்லாஹ் என்று பிரார்த்திக்க வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ، وَلْيَقُلْ لَهُ أَخُوهُ أَوْ صَاحِبُهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَإِذَا قَالَ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَلْيَقُلْ: يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் தும்மினல், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 6224) 

இஸ்லாத்தின் கலாச்சாரம் எதுவென்பதைப் படம் பிடித்துக் காட்டும் வகையில் இச்செய்தி அமைந்துள்ளது. நீங்கள் இப்படிக் கற்பனை செய்து பாருங்கள். ஒருவர் தும்மியதும் அல்ஹம்துலில்லாஹ் எனக் கூறுகிறார். அதைக் கேட்கும் அவரது பகைவர் இஸ்லாமிய போதனையின் படி ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்று கூற வேண்டும். அதாவது அவருக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

யர்ஹமுக்கல்லாஹ் என்று கூறியவருக்காக இப்போது தும்மியவர், ‘அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்’ என்று துஆ செய்ய வேண்டும். இப்படி ஒருவருக்கொருவர் அடுத்தவர் நலனுக்காகப் பிரார்த்திக்கும் இருவரின் உள்ளத்தில் அதற்குப் பிறகும் பகையுணர்வு எஞ்சி இருக்குமா?

பகையுணர்வை வேரோடு பிடுங்கி எறியும் வகையில் இஸ்லாம் கற்றுத் தரும் போதனை அமைந்துள்ளது. இதுவே இஸ்லாமியப் பண்பாடு. இப்படி திருமணத்தில் இணைவோருக்காக, நோயாளிக்காக, உணவளித்தவருக்காக என்று பிறருக்காகக் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் செய்ய வேண்டிய பிரார்த்தனை என்று மார்க்கம் கற்றுத் தந்தவற்றை ஆராய்ந்தால், பிறருக்காக துஆ செய்வது இஸ்லாமிய கலாச்சாரங்களில் ஒன்று என்பதைக் கண்ணை மூடிக் கூறிவிடலாம்.

நமக்காக இறைவனிடம் இறைஞ்சுவதோடு பிறருக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். அழகிய இஸ்லாமியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவோம். அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக.!

வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.