பிறரின் மானமும், கண்ணியமும் புனிதமானது

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

பிறரின் மானமும், கண்ணியமும் புனிதமானது

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

ஸலாத்தும், ஸலாமும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மீதும், சஹாபாக்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும், குறிப்பாக நம் அனைவர் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக!

வட்டி, விபச்சாரம், கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் மிக பாரதூரமானவை என்று விளங்கியுள்ள இந்த முஸ்லிம் சமுதாயம், பிறருடைய மானம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்வதை பார்க்கிறோம். ஆனால் அது மறுமையில் மிகப் பெரிய பாவமாக வந்து நிற்கும் என்று இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது. நபியின் இறுதிப் பேருரையில்….

இறுதி ஹஜ் பேருரையில் எச்சரித்த செய்தி

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ஹஜ்ஜுக்குப் பிறகு (வரும் ஆண்டு) நான் ஹஜ் செய்வேனா என்று எனக்குத் தெரியாது” என்று கூறி விட்டார்கள்.

இதனால் பிரியப் போகும் தந்தையிடம் பிள்ளைகள் எப்படி நடப்பார்களோ அது போல் நபித்தோழர்களும், பிள்ளைகளிடம் விடை பெறப் போகும் தந்தை எப்படி நடந்து கொள்வாரோ அது போன்று நபி (ஸல்) அவர்களும் நடந்து கொண்டார்கள்.

அதனால் நபி (ஸல்) அவர்களின் இந்த ஹஜ் பயணம் நபித்தோழர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தோழர்கள் தங்கள் பார்வையில் இருந்து, நபி (ஸல்) அவர்களின் எந்தச் செயலும் தவறி விடாதவாறும், காதுகளில் விழாமல் எதுவும் தப்பி விடாதவாறும் பார்வைகளைக் கூர்மையாக்கி, காதுகளை நன்கு தீட்டிக் கொண்டு பதிவு செய்து கொண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருபத்து மூன்று ஆண்டு காலத்தில் ஆற்றிய தூதுப் பணியின் மொத்தத் தொகுப்பை தனது ஹஜ்ஜின் இறுதிக் கட்ட ஐந்து நாட்கள் பயணத்தில் சத்தாக, சாறாகப் பிழிந்து தந்தார்கள். அதனால் அது வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்தது.

மானம் புனிதமானது

நபி (ஸல்) அவர்கள் மினாவில் இருந்த போது “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும், அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். உடனே அவர்கள், “இது புனிதமிக்க தினமாகும்! இது எந்த நகரம் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்க மக்கள் “அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிவர்!” என்றனர். அவர்கள் “(இது) புனிதமிக்க நகரமாகும்!” என்றனர். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது எந்த மாதம் என்பதை அறிவீர்களா?” என்றதும் மக்கள், “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்” என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இது புனிதமிக்க மாதமாகும்” எனக் கூறிவிட்டு,

“உங்களுடைய இந்தப் புனித நகரத்தில், உங்களுடைய இந்தப் புனித மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அது போலவே அல்லாஹ் உங்கள் உயிர்களையும், உடைமைகளையும், உங்கள் மானம் மரியாதைகளையும் புனிதமாக்கியுள்ளான்!” எனக் கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் தாம் ஹஜ் செய்த போது நஹ்ருடைய நாளில் ஜம்ராக்களுக்கு மத்தியில் நின்று கொண்டு, “இது மிகப் பெரிய ஹஜ்ஜின் தினமாகும்” என்று கூறினார்கள். மேலும், “இறைவா! நீயே சாட்சி!” என்று கூறி மக்களிடம் இறுதி விடை பெற்றார்கள்.

எனவே மக்களும் “இது (நபியவர்கள் உலகை விட்டு) விடை பெற்றுச் செல்கின்ற ஹஜ்ஜாகும்” என்று பேசிக் கொண்டார்கள்.

அறி : இப்னு உமர் (ரலி),
நூல் : (புகாரி: 1742) 

மனித உரிமைகள்

فَلَيْسَ يَحِلُّ لِمُسْلِمٍ مِنْ أَخِيهِ شَيْءٌ إِلَّا مَا أَحَلَّ مِنْ نَفْسِهِ

மனமுவந்து தராத, தன் சகோதர முஸ்லிமின் பொருள் எதுவும் அடுத்த முஸ்லிமுக்கு ஆகுமானது அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அம்ர் பின் அல்அஹ்வல் (ரலி),
நூல் : (திர்மிதீ: 3087) (3012),(ஹாகிம்: 318)

«أُوصِيكُمْ بِالْجَارِ» حَتَّى أَكْثَرَ، فَقُلْتُ: إِنَّهُ لَيُوَرِّثُهُ

அண்டை வீட்டுக்காரனுக்குச் சொத்தில் பங்களித்து விடுவார்களோ என்று கூறுமளவுக்கு, அண்டை வீட்டுக்காரனைப் பற்றி அறிவுரை செய்கிறேன் என அதிகமாக நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள்.

நூல் : அல்முஃஜமுல் கபீர்-7523 பாகம்: 8. பக்: 111

நிறைவான முஃமின்

الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ،

எவரது நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகின்றார்களோ அவரே முஸ்லிம் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : பஸ்ஸார்-3752 (2435), தப்ரானீ 3444, பாகம்: 3, பக்: 293

 وَالْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى أَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ،

மக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் அபயம் அளிப்பவரே முஃமின் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : பஸ்ஸார்-3752 (2435),(இப்னு ஹிப்பான்: 4862), பாகம்:11, பக்:203

ஷைத்தானின் தந்திரம்

 أَلَا وَإِنَّ الشَّيْطَانَ قَدْ أَيِسَ مِنْ أَنْ يُعْبَدَ فِي بِلَادِكُمْ هَذِهِ أَبَدًا وَلَكِنْ سَتَكُونُ لَهُ طَاعَةٌ فِيمَا تَحْتَقِرُونَ مِنْ أَعْمَالِكُمْ فَسَيَرْضَى بِهِ

அறிந்து கொள்ளுங்கள். உங்களுடைய இந்த ஊர்களில் ஒரு போதும் தான் வணங்கப்பட மாட்டோம் என்று ஷைத்தான் நிராசையடைந்து விட்டான். எனினும் நீங்கள் கேவலமாகக் கருதும் அமல்கள் மூலம் அவனுக்கு ஒரு வழிபாடு உருவாகும். அதன் மூலம் அவன் திருப்தியடைவான்.

அறி : அம்ர் பின் அல்அஹ்வஸ்,
நூல் : (திர்மிதீ: 2159) (2085)

எனவே, இனி வரும் காலங்களில் பிறருடைய மானம், பொருளாதாரம் போன்ற விஷயங்களில் அதிக கவனத்துடன் நடந்து, முஸ்லிமாக வாழ்ந்து,  முஸ்லிமாக  மரணிப்போம். மறுமையில் வெற்றியடைவோம்!