பிறமதக் கலாச்சாரத்தைப் புறக்கணிப்போம்
பிறமதக் கலாச்சாரத்தைப் புறக்கணிப்போம்
அன்பிற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!
முஸ்லிம்களாக இருக்கும் நம்மைச் சுற்றிலும், ஏராளமான பிறமத சகோதரர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று அவர்கள் கொண்டாடும் பண்டிகைகள் அடிக்கடி வந்து போகின்றன. அவற்றில் கலந்து கொள்ள அவர்களும் நம்மை ஆர்வத்துடன் அழைக்கிறார்கள். அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
ஒரே பகுதியில் வசிக்கிறோம்; ஒரே இடத்தில் வேலை செய்கிறோம்; அவர்களது அழைப்பை ஏற்று கொள்ள வேண்டும்; இல்லையெனில், எப்போதும் போன்று அவர்கள் நம்மிடம் நன்றாக பழகமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு, அவர்களின் பண்டிகைகளில் பல முஸ்லிம்கள் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். இன்னும் சில இடங்களில், அன்றைய தினங்களில் அவர்கள் செய்யும் காரியங்களை அப்படியே முஸ்லிம்களும் செய்கிறார்கள்.
இந்த நிகழ்வு, பிறமத மக்களின் உள்ளூர் திருவிழாக்கள் முதற்கொண்டு நாடுதழுவிய அளவில் நடைபெறும் பண்டிகைகள் வரையிலும் காணமுடிகிறது. இவ்வாறு இருக்கும் பெரும்பாலான முஸ்லிம்கள், இதுகுறித்து மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை கடுகளவும் தெரியாமல் இருக்கிறார்கள். சிலரோ, இதுவென்ன பெரும்பாவமா? என்று எண்ணிக் கொண்டு தெரிந்து கொள்ள கொஞ்சமும் தயாரின்றி இருக்கிறார்கள். எனவே, இது தொடர்பாக இருக்கும் மார்க்கத்தின் தகவல்களை தற்போது இந்த உரையில் அறிந்து கொள்வோம்,
இஸ்லாம் முழுமையான மார்க்கம்
இஸ்லாம் என்பது முழுமையான வாழ்க்கைத் திட்டம். ஆன்மீகம், அரசியல் என்று மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் தெளிவாகப் போதித்திருக்கும் சிறப்பான சித்தாந்தம். இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர்த்து இருக்கும் மற்ற மதங்கள், கொள்கைக் கோட்பாடுகள் அனைத்தும் குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் மையமாக வைத்து கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு மாற்றமாக இஸ்லாம் மட்டுமே, ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் சந்திக்கும் அனைத்து வாழ்வியல் நிலைக்கும் தேவையான தெளிவான வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறது.
இத்தகைய, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கு எந்த விஷயத்திலும் பிற கொள்கைகளிடம் கையேந்தி நிற்கவேண்டிய அவசியம் அறவே இல்லை என்பதே உண்மை. எந்தத் தருணத்திலும் பிறமத மக்கள் செய்யும் சடங்குகளை கடன் வாங்கிச் செய்ய வேண்டிய தேவை முஸ்லிம்களுக்கு இல்லவே இல்லை என்பதைப் பின்வரும் வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
(ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தைப் பற்றி (அழித்து விட முடியும் என்று) இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, “இது எந்த நாள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” எனக் கேட்டார்கள். நாங்கள் “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்!” என்றோம். அந்நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்துவிட்டு, “இது (குர்பானி கொடுப்பதற்குரிய) நஹ்ருடைய நாளல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்!” என்றோம். பிறகு “இது எந்த மாதம்?” என அவர்கள் கேட்டதும் நாங்கள் “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்!” என்றோம். அப்போதும் அம்மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள்.
பிறகு, “இது துல்ஹஜ் மாதம் அல்லவா?” என அவர்கள் கேட்க, நாங்கள் “ஆம்!” என்றோம். பிறகு “இது எந்த நகரம்?” எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள் “அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிவர்!” என்றோம். அப்போதும் அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தார்கள். பிறகு “இது புனிதமிக்க நகரமல்லவா?” எனக் கேட்க, நாங்கள் “ஆம்!” என்றோம். பிறகு “உங்களுடைய (புனிதமிக்க) இந்த நகரத்தில் உங்களுடைய (புனிதமிக்க) இந்த மாதத்தில் இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ அந்த அளவுக்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் இரட்சகனைச் சந்திக்கும் நாள் (மறுமை)வரை புனிதமானவையாகும்!” என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச்செய்திகள் அனைத்தையும்) சேர்ப்பித்து விட்டேனா?” எனக் கேட்டார்கள்.
மக்கள் “ஆம்!” என்றனர். பிறகு அவர்கள், “இறைவா! இதற்கு நீயே சாட்சியாயிரு! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! ஏனெனில், செவியேற்பவரைவிட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்துகொள்பவராயிருக்கலாம்; எனக்குப் பின்னால் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகிவிட வேண்டாம்!” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி),
(புகாரி: 1741, 4403)
இஸ்லாம் தனித்து விளங்கும் மார்க்கம்
மூடநம்பிக்கைகள், சமூகத் தீமைகள், அனாச்சாரங்கள் என்று எதையும் விடாமல் அனைத்தையும் அழித்து ஒழிக்கின்ற சமூகநலன் காக்கும் தலைச்சிறந்த கோட்பாடாக இஸ்லாம் திகழ்கிறது. எந்தவொரு பிரச்சனைக்கும் சிக்கலுக்கும் நிறைவான நிலையான தீர்வை இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே வழங்குகிறது. தனிமனிதனும் சமூகமும் சீரும் சிறப்பும் பெற்று எக்காலத்திலும் நலமுடன் வாழ இதன் வழிகாட்டுதல் தான் உகந்தவை; எல்லா வகையிலும் மேன்மை மிக்கவை.
ஏனைய எல்லா மார்க்கத்தையும் விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்.
இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.
இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்.
அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
இத்தகைய இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை விட்டுவிட்டு அடுத்தவர்களின் சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றும் முஸ்லிம்களை என்னவென்று சொல்வது? இவர்கள் இறை மார்க்கமான இஸ்லாத்தின் போதனைகளை விடவும் மற்ற கொள்கைகள் சிறந்தவை என்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும் செயலைச் செய்கிறார்கள். இப்படி சத்திய மார்க்கத்தை விடவும் அசத்திய வழிமுறைகளை மேலானதாகக் காட்டும் மாபாதகக் காரியத்தை விட்டும் இவர்கள் இனியாவது விலகிக் கொள்வார்களா?
பிற மதத்தினருக்கு மாற்றமாக நடப்போம்
மகத்துவமும் மாண்பும் கொண்ட ஏக இறைவன் கொடுத்திருக்கும் இஸ்லாம் எனும் வாழ்க்கைத் திட்டத்தையே மனிதர்களாகிய நாம் பின்பற்ற வேண்டும். இதற்கு மாற்றமாக, மனிதர்களால் உருவாக்கப்பட்ட கொள்கைக் கோட்பாடுகளைப் பின்பற்றும் மக்கள் எல்லா காலகட்டங்களிலும் இருக்கிறார்கள். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் யூதர்கள், கிறிஸ்தவர்கள், இணைவைப்பவர்கள் என்று எல்லா வகையான மக்களும் சுற்றி வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் முந்தைய நபிமார்களுக்கு வழங்கப்பட்ட சட்டங்களில் இருந்து மாற்றப்பட்ட, திரிக்கப்பட்ட இடைச்செருகல் செய்யப்பட்ட சட்டங்களும் இருந்தன.
இவ்வாறான மக்களின் மூடநம்பிக்கைகள், கற்பனைகள், கட்டுக்கதைகள் நிறைந்த காரியங்கள், முஸ்லிம் சமுதாயத்தில் கலந்துவிடக் கூடாது என்பதில் நபிகளார் கவனமாக இருந்தார்கள். இஸ்லாத்தைப் போன்று, அதைப் பின்பற்றும் முஸ்லிம்களும் எப்போதும் தனித்துவம் கொண்டவர்களாக இருக்கும் வகையில், பல்வேறு காரியங்களில் அவர்களுக்கு மாறு செய்யும்படி கட்டளையிட்டார்கள். அவற்றை அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
வணக்க வழிபாடுகளில் மாற்றம்
ஒரு மனிதனுடைய வாழ்வில் மற்ற எல்லா விஷயங்களைக் காட்டிலும், ஆன்மீக நம்பிக்கை என்பது பெரும் தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்நிலையில், அநேகமான மக்கள் அர்த்தமற்ற ஆன்மீகத்தை ஏற்று வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, தமது பெற்றோர்களிடம் இருக்கும் தவறான கடவுள் கொள்கையை, நம்பிக்கையை அப்படியே கடைப்பிடிக்கிறார்கள்.
தலைமுறை தலைமுறையாக செய்யப்படும் காரியங்கள் என்று அவற்றைச் செய்கிறார்களே தவிர, சரியா? தவறா? என்று ஒருபோதும் யோசிப்பதில்லை. இதன் விளைவாக வாழையடி வாழையாக, குருட்டுத்தனமான வணக்கங்களிலே வீழ்ந்து கிடக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் மக்களிடம் இருந்து முஸ்லிம்கள் வேறுபட்டு விளங்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்ற மார்க்கத்தின் ஆணையைப் பின்வரும் நபிமொழிகள் வாயிலாக விளங்கிக் கொள்ளலாம்.
(தொழுகை நேரம் வந்து விட்டதை அறிவிக்கும் முறை ஒன்று தேவை என்று மக்கள் கருதியபோது) அவர்கள் (நெருப்பு வணங்கிகளைப் போல்) தீ மூட்டலாம் என்றும், மணியடித்து கூப்பிடலாம் என்றும் சொன்னார்கள். (இவையெல்லாம்) யூதர்கள், கிறிஸ்தவர்கள் (ஆகியோரின் போக்காகும்) என்று (சிலர் மறுத்துக்) கூறினார்கள்.
அப்போது பிலால் (ரலி) அவர்களுக்கு “அதான்‘ எனும் தொழுகை அறிவிப்புக்குரிய வாசகங்களை (கற்றுத் தந்து) அவற்றை இருமுறை கூறும்படியும் இகாமத் (என்னும் தொழுகைக்காக நிற்கும் போது சொல்லும்) வாசகங்களை ஒரு முறை மட்டும் சொல்லும் படியும் உத்திரவிடப்பட்டது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(புகாரி: 3457)
சூரியன் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கு இடையே உதிக்கின்றது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(புகாரி: 583, 3273)
இந்த நேரங்களில் இறை மறுப்பாளர்கள் சூரியனை வணங்குகிறார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக(முஸ்லிம்: 1511)(1373) வது ஹதீஸில் இருக்கிறது.
(காலணிகளுடன் தொழுது) யூதர்களுக்கு மாறு செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் காலணிகளுடனும் காலுறைகளுடனும் தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
(அபூதாவூத்: 652, 556)
புனிதமான செயல்களைச் செய்யும் போது செருப்பு அணிவது பாவம் என்ற தவறான நம்பிக்கை யூதர்களுக்கு இருந்தது. இந்த மூடநம்பிக்கையை உடைத்தெறியும் வகையில் எப்போதாவது ஒருமுறையாவது செருப்பு அணிந்து தொழுது விட்டாலே யூதர்களுக்கு மாறு செய்ததாக ஆகிவிடும். எனவே தான், நபிகளார் அவர்கள் செருப்பணிந்தும் தொழுதுள்ளார்கள். அணியாமலும் தொழுதுள்ளார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர்.
அதற்கு நபியவர்கள், அல்லாஹ் நாடினால் அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.
மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(முஸ்லிம்: 2088, 2089, 1916, 1917)
உமர் (ரலி) அவர்கள் முஸ்தலிபாவில் ஃபஜ்ரு தொழுததை நான் கண்டேன். அங்கு தங்கிய உமர் (ரலி) அவர்கள், “இணை வைப்போர் சூரியன் உதயமாகும் வரை இங்கிருந்து திரும்பிச் செல்வதில்லை. மேலும் அந்த இணை வைப்பாளர்கள், “ஸபீரு மலை (சூரிய உதயத்தால்) ஒளிரட்டும்‘ என்று கூறுவார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களோ இணை வைப்போருக்கு மாற்றமாக நடந்துள்ளனர்” என்று கூறி விட்டு, சூரியன் உதிக்கும் முன்பே அங்கிருந்து திரும்பி விட்டார்கள்.
அறிவிப்பர்: அம்ரு பின் மைமூன் (ரஹ்)
(புகாரி: 1684)
மேற்கண்ட செய்திகளின் மூலம், தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற முதன்மையான கடமைகள் உட்பட எந்தவொரு வணக்க வழிபாடும் பிற மதத்தவரின் வணக்கத்திற்கு ஒப்பாக ஒருபோதும் இருந்துவிடக் கூடாது என்பதில் அல்லாஹ்வின் தூதர் கண்டிப்பாக இருந்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே, முஸ்லிம்கள் தங்களது மார்க்க செயல்களின் மீது பிற மதத்தினரைப் பின்பற்றுவது போன்ற சாயல்கூடப் படிந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆனால் முஸ்லிம்களோ, பிற மதத்தவர்களின் வணக்க வழிபாடுகளை, பெயரை மட்டும் மாற்றிவிட்டு அதை அப்படியே செய்யும் மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள். தேர் இழுப்பதை சந்தனக்கூடு என்றும், பொங்கலை பாச்சோறு என்றும், மந்திரிக்கப்படும் கயிறை தாவிஸ் என்றும், பிரசாதத்தை தபர்ருக் என்றும் எண்ணற்ற பிற மதச் சடங்குகளை இஸ்லாத்தின் பெயரால் செய்கிறார்கள். இனியாவது இத்தகையவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
குடும்பக் காரியங்களில் மாற்றம்
ஒரு சமுதாயம் சிறந்து விளங்க வேண்டுமெனில், அதன் அங்கமாக இருக்கும் குடும்பங்களும் சிறந்து விளங்க வேண்டும். எனவே, குடும்ப வாழ்க்கை சம்பந்தமாக இஸ்லாம் தெளிவாக வழிகாட்டியிருக்கிறது. கணவனுக்கும் மனைவிக்கும் உரிய உரிமைகளையும் கடமைகளையும் முழுமையாக விளக்கி இருக்கிறது.
அதிலும் குறிப்பாக, கணவன் மனைவி ஆகிய இருவருக்கு இடையே எத்தகைய தொடர்பு இருக்க வேண்டும்; அவர்கள் இருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் போதித்து இருக்கிறது. மேலும், இந்த விசயத்திலும் பிறமத மக்கள் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளை, தவறான நம்பிக்கைகளைத் தகர்த்து எறிந்ததோடு மட்டுமில்லாமல், அவ்வாறு முஸ்லிம்கள் இருந்துவிடக் கூடாது என்றும் எடுத்துரைத்து இருக்கிறது, இஸ்லாம்.
ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்தில் இருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே, “உங்கள் பெண்கள் உங்களுக்குரிய “விளை நிலம்‘ ஆவர். ஆகவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள்” எனும் (அல்குர்ஆன்: 2:223) ➚ ஆவது இறைவசனம் இறங்கியது.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
(புகாரி: 4528)
யூதர்கள் தங்களுடைய இனத்தில் ஒரு பெண் மாதவிலக்காகி விட்டால், அவளை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுவார்கள். அவளுடன் சேர்ந்து, அவர்கள் உண்ணவும், குளிக்கவும் மாட்டார்கள். எனவே, இதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக்கொள்ளுங்கள்! (அல்குர்ஆன்: 2:222) ➚ என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி அருளினான்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வீடுகளில் அவர்களுடன் ஒன்று கலந்திருங்கள். உடல் உறவைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். உடனே யூதர்கள், “இவர் (நபி(ஸல்) அவர்கள்) நம்முடைய காரியத்தில் எதையுமே விட்டு வைக்க விரும்பவில்லை. அதில் அவர் நமக்கு வேறுபாடு காட்டாமல் விட்டு வைப்பதில்லை” என்று பேசிக்கொண்டனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(முஸ்லிம்: 507, 455),(அபூதாவூத்: 225)
யூதர்களிடம் இருந்த தவறான சிந்தனை இன்றும் நம்மைச் சுற்றியிருக்கும் பிறமத மக்களிடம் பார்க்க முடிகிறது. ஒருபெண் மாதவிடாய் காலத்தில் இருந்தால் அவளுக்கென படுப்பதற்குத் தனியான பாய், சாப்பிடுவதற்குத் தனியான தட்டு என்று அனைத்திலும் தனிமைப்படுத்தி ஒதுக்கி வைக்கிறார்கள். மாதவிடாயின் போது காட்டும் மூடநம்பிக்கை மட்டுமின்றி இன்னும் பல்வேறு சடங்குகளையும் அவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள்.
கணவன் மனைவி என்ற பந்தத்தை ஏற்படுத்தும் திருமணத்திலேயே ஏராளமான சடங்குகளைத் துவக்கி விடுகிறார்கள். ஒரு பெண் தனது வயிற்றில் குழந்தையை சுமக்கும் போது, அதை பெற்றெடுத்த பிறகு, அந்தக் குழந்தை வளரும் போது என்று ஒவ்வொன்றிலும் இருக்கும் சடங்குகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில் அவர்களிடம் இருக்கும் வரதட்சனை வாங்குவது, பத்திரிக்கை அடிப்பது, பருவமடைந்த பெண்ணுக்கு நீராட்டு விழா நடத்துவது, பிறந்தநாள் விழா கொண்டாடுவது போன்ற காரியங்கள் முஸ்லிம்களிடம் தொற்றியிருப்பதை மறுக்கவே இயலாது. மற்ற மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய, எடுத்து சொல்ல வேண்டிய முஸ்லிம்களே அவர்களின் கலாச்சாரத்திற்கு அடிமையாக இருக்கும் நிலையைக் காணும் போது கவலையாக இருக்கிறது.
தனிமனித ஒழுங்குகளில் மாற்றம்
முஸ்லிம்களுடைய வணக்கங்கள், பண்புகள், பழக்க வழக்கங்கள் பற்றி இஸ்லாம் கூறியிருப்பது போன்று, அவர்களின் தோற்றம், தேவைகள் குறித்தும் விளக்கி இருக்கிறது. சாப்பிடுவது, பருகுவது, உறங்குவது, ஆடை ஆபரணங்களை அணிவது போன்ற அன்றாட விஷயங்களிலும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் நபிகளார் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இவ்வாறான தனி மனித ஒழுக்கம் சம்பந்தமான காரியங்களிலும் முஸ்லிம்கள் பிற மக்களை விட்டும் தனித்துத் திகழும் வகையில் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள். தாடிகளை வளர விடுங்கள். மீசைகளை ஒட்ட நறுக்குங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(புகாரி: 5892),(முஸ்லிம்: 434)
மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். நெருப்பு வணங்கிகளுக்கு (மஜூசிகளுக்கு) மாறு செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தம் தாடிகளுக்கும் தலைமுடிக்கும்) சாயமிட்டுக் கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (அவற்றிற்குக் கருப்பு அல்லாத சாயமிட்டு) அவர்களுக்கு மாறு செய்யுங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 3462, 5899)
நாங்கள், அல்லாஹ்வின் தூதரே, வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள்; மீசைகளை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது மீசைகளை நீங்கள் கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி),
(அஹ்மத்: 22283, 21252)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூத்த அன்சாரிகளைக் கடந்து சென்றனர். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது “அன்சார்களே (உங்கள் முடிகளை) மஞ்சளாகவோ, சிவப்பாகவோ ஆக்கிக் கொள்ளுங்கள். வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்” எனக் கூறினார்கள். “அப்படியானால் வேதக்காரர்கள் கால்சட்டை அணிகின்றனர். வேட்டி அணிவதில்லையே” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நீங்கள் கால்சட்டையும் அணியுங்கள். வேட்டியும் அணியுங்கள் வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்” எனக் கூறினார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே வேதக்காரர்கள் காலுறை அணிகின்றனர். செருப்பு அணிவதில்லையே” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நீங்கள் காலுறைகளும் அணியுங்கள். செருப்பும் அணியுங்கள். வேதக்காரர்களுக்கு மாறு செய்யுங்கள்” எனக் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே வேதக்காரர்கள் தங்கள் தாடிகளைக் கத்தரித்து மீசைகளை முழுமையாக வைக்கின்றனரே” எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நீங்கள் உங்கள் தாடிகளை முழுமையாக வைத்து மீசையைக் கத்தரியுங்கள்” எனக் கூறினார்கள்.
இந்த செய்திகளுக்கு மாற்றமாக, முழுக்க முழுக்க வெள்ளை வெளேரென்று தலைமுடியும் தாடியும் வைத்திருப்பது, அல்லது கருப்பு சாயம் பூசுவது, ஒட்டு முடி வைப்பது, பர்தாவை பெண்கள் பேணாமல் இருப்பது போன்ற காரியங்களை முஸ்லிம்கள் மக்களிடம் பார்க்க முடிகிறது. வெறும் பெயரை மட்டும் வைத்துத் தான் முஸ்லிம் என்று அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் தங்களது தனித்துவத்தை தொலைத்துவிட்டு பெயரளவிற்கு முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.
மறக்கக்கூடாத மார்க்கத்தின் எச்சரிக்கைகள்
இஸ்லாத்தை அடையாளம் இல்லாமல் ஆக்க வேண்டும் என்பதற்காக அன்று முதல் இன்று வரை பல்வேறு கூட்டங்கள் பல கட்டங்களில் முயற்சித்து வருகிறார்கள். தங்களின் கேடுகெட்ட சிந்தனைகளை, சீரழிக்கும் செயல்களை இஸ்லாத்திற்குள் நுழைப்பதற்கு, திணிப்பதற்குப் பல்வேறு தந்திரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படியிருக்க, இன்னொரு பக்கம் பிறமத மக்களிடம் மண்டியிருக்கும் குருட்டு நம்பிக்கைகள், தரமற்ற காரியங்களின் பக்கம் பல முஸ்லிம்கள் மயங்கி கிடக்கிறார்கள். இஸ்லாத்தில் இருந்து கொண்டு அதற்கு மாற்றமான கோட்பாடுகளில் வீழ்ந்து கிடக்கிறார்கள். இதுபோன்ற மோசமான நிலை முஸ்லிம் சமுதாயத்திற்குள் புகுந்துவிடும் அபாயம் குறித்து அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அனைத்து முஸ்லிம்களும் அவற்றை வாழ்நாள் முழுவதும் நினைவில் கொண்டு விழிப்புடன் வாழ வேண்டும்.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாத வரையில் உம்மைப் பற்றி திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வழி – அதுவே நேர்வழி என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.
(நிராகரிப்பவர்கள்) அவர்களுக்கு இயலுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களை மாற்றும் வரை உங்களுடன் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். “தாத்து அன்வாத்‘ என்று அதற்குச் சொல்லப்படும்.
நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் “அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து‘ என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “சுப்ஹானல்லாஹ்! அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்” என்று சொல்லி, “என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள்.
(அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், “மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்‘ என்று கேட்க, அதற்கு மூஸா (அலை) அவர்கள், “நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்‘ என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூவாக்கிதுல்லைசி (ரலி)
(திர்மிதீ: 2180, 2106),(அஹ்மத்: 20892)
“உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேறெவரை?” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
(புகாரி: 3456)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது தம் முகத்தின் மீது வேலைப்பாடுகள் கொண்ட கருப்புத்துணி ஒன்றைப் போட்டுக் கொள்ளலானார்கள். வெப்பத்தை உணரும் போது அதைத் தம் முகத்திலிருந்து விலக்கிவிடுவார்கள்.
அதே நிலையில் அவர்கள் இருந்துகொண்டிருக்க, “யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் தன் கருணையிலிலிருந்து அப்புறப்படுத்தவானாக! தம் இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை அவர்கள் வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்” என்று கூறி, அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்து விடாதீர்கள் என தம் சமுதாயத்தாரை) எச்சரித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(புகாரி: 435, 436)
பேய் பிசாசு இருப்பதாக நம்புவது, இறந்தவர்களை வழிபடுவது, முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவது, தீ மிதிப்பது, நல்ல நேரம் கெட்ட நேரம் பார்ப்பது, சகுனம் பார்ப்பது என்று பிறமத மக்களிடம் இருந்து இஸ்லாமியர்களிடம் புகுந்திருக்கும் காரியங்களைப் பெரும்பட்டியல் போடலாம். முன்சென்ற செய்திகளை மறந்தும் புறக்கணித்தும் முஸ்லிம்கள் வாழ்ந்ததின் விளைவால்தான் இந்த மார்க்க விரோதக் காரியங்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்குள் புகுந்திருக்கிறது என்பதே உண்மை.
மார்க்கத்தின் பகிரங்கமான கண்டனம்
பிற மக்களின் சடங்கு சம்பிரதாயங்களைப் பின்பற்றும் முஸ்லிம்களை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கின்றது. இத்தகைய மக்கள் தங்களை இஸ்லாத்தில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்கும் இதற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. இவர்கள் பின்பற்றும் கொள்கையை சார்ந்த மக்களாகவே கருதப்படுவார்கள் என்று கடுமையாகக் கண்டிக்கிறது.
எனவே எந்த வகையிலும் பிறமத மக்களின் கலாச்சாரங்களை செய்யாமல் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அவை அரங்கேற்றம் செய்யப்படும் இடங்களுக்கு அறவே போகாமலும் அவர்களுடன் அங்கு அமராமலும் புறக்கணித்து இருக்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லை என்று எச்சரிக்கிறது இஸ்லாம்.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.
யார் பிறமத மக்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களை சேர்ந்தவரே என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(அபூதாவூத்: 4031, 3512)
மார்க்கத்தில் நிலைத்திருங்கள்
ஒரு முஸ்லிம் எந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும்; எந்தக் காரியங்களைச் செய்யக் கூடாது என்பது குறித்து மார்க்கத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அதைக் கடைபிடிப்பதில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். எந்த விதத்திலும் அதன் வரம்புகளை மீறி விடக்கூடாது. இதற்கு மாற்றமாக, நட்பு, தோழமை, அண்டை வீட்டார், தெரிந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் செய்யும் மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை நாமும் செய்துவிடக்கூடாது. அவற்றில் பங்கெடுக்கவும் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
(ஏக இறைவனை) மறுப்பவர்களே!” நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு” என (முஹம்மதே!) கூறுவீராக!
தடுத்து நிறுத்த முடியாத ஒரு நாள் அல்லாஹ்விடமிருந்து வருவதற்கு முன் உமது முகத்தை நிலையான மார்க்கத்தை நோக்கி நிலை நிறுத்துவீராக! அந்நாளில் அவர்கள் பிரிந்து விடுவார்கள்.
(முஹம்மதே!) உண்மை வழியில் நின்று உமது முகத்தை இம்மார்க்கத்தை நோக்கி நிலைப்படுத்துவீராக! இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் அமைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றுதலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களைச் செய்ய மாட்டோம்; உலகக் காரியங்களிலும் மார்க்கக் கட்டளைகளை மீற மாட்டோம் என்று நாம் நமது பிற மத நண்பர்களிடம் தெளிவு படுத்த வேண்டும். அவர்கள் என்ன நினைப்பார்களோ? ஏது சொல்வார்களோ என்று தயக்கம் கொள்ளக் கூடாது.
பிறமத சகோதரர்கள் செய்யும் மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களைப் பின்பற்றாமலும், அந்தக் காரியங்களில் அவர்களுக்கு ஒத்துழைக்காமலும் அவர்களிடம் பழகுவதற்கும் நட்பு கொள்வதற்கும் மார்க்கத்தில் எந்தவொரு தடையும் இல்லை. வாழ்நாள் முழுவதும் இஸ்லாத்தில் முழுமையாக நிலையாக இருந்து ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.